தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்து யார் அந்த இடுப்பழகி பட்டத்தை பிடிப்பார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறிமுகமானார் ஸ்ரேயா என்கிற ஸ்ரியா சரண். இந்தியை தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு தென்னிந்திய மொழிகள் பேசத் தெரியாவிட்டாலும் தனது நளினம் மற்றும் அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். “ஒவ்வொரு மொழிக்கும் பேச்சு நடை மற்றும் அர்த்தங்கள் மாறினாலும் நடிப்பு என்பது அனைத்து மொழிக்கும் பொதுவானது. அதனாலேயே என்னால் பல மொழிகளிலும் நடிக்க முடிகிறது” என்று கூறிய ஸ்ரியா, அதை செய்தும் காட்டினார். தெலுங்குடன் ஒப்பிடுகையில் தமிழில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் இங்கும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. திருமணமாகி கணவர், குழந்தை என செட்டிலாகிவிட்டாலும் 41 வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் இவர், அவ்வப்போது படங்களில் தலைகாட்டினாலும், போட்டோஷூட்களை மட்டும் நடத்த தவறுவதே இல்லை. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இவர், திருமணத்திற்கு பிறகும் நிறையப் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரிரு படங்களில் மட்டுமே, அதிலும் சிறப்புத் தோற்றங்களிலேயே நடிப்பதால் இவருடைய ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இருப்பினும் இன்றும் ஸ்ரியாவுக்கு மவுசு குறையவில்லை என்பதை அவருடைய சமூக ஊடக பக்கங்களின் கமெண்ட்ஸுகளிலிருந்து காணமுடிகிறது.
நடனத்தால் கிடைத்த நடிப்பு வாய்ப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரியா சரண். பள்ளி ஆசிரியரான இவருடைய தாயார், நடனத்தின்மீது ஆர்வம் கொண்டவர். அதனால் தனது மகளுக்கும் சிறுவயதிலிருந்தே கதக் மற்றும் ராஜஸ்தானி நடனங்களை கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, கதக் மீது கொண்ட ஆர்வத்தால் உலகின் சிறந்த கதக் நடன கலைஞர்களில் ஒருவரான ஷோவனா நாராயணிடம் பயிற்சி பெற்றார் ஸ்ரியா.
திரைத்துறையில் அறிமுகமான ஆரம்ப காலங்களில் ஸ்ரியா
டெல்லியில் கல்லூரியில் படிக்கும்போது, நடனக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றிய இவருக்கு, ஒருமுறை ராமோஜி ஃபிலிம்ஸ் நடத்திய மியூசிக் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்மூலம், தெலுங்கு திரையுலகிலிருந்து ஸ்ரியாவை வாய்ப்பு தேடிச்சென்றது. அப்படித்தான் முதன்முதலாக ‘இஷ்டம்’ என்ற படம் மூலம் 2001ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த படத்தைவிட அடுத்த ஆண்டு நாகர்ஜூனா ஜோடியாக நடித்த ‘சந்தோஷம்’ திரைப்படம்தான் ஸ்ரியாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் கமிட்டான இவருக்கு 2003ஆம் ஆண்டு இந்தியிலும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாலிவுட்டில் காதல் பறவைகளாக சுற்றிவந்த ரித்தீஷ் தேஷ்முக் - ஜெனிலியா ஜோடி சேர்ந்த ‘துஜே மேரி கசம்’ என்ற படத்தில் கிரிஜா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரியா. ஆரம்பத்திலிருந்தே படு கவர்ச்சியாக திரையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரியாவை திரையில் காணவே தெலுங்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுவதாக பத்திரிகைகளில் எழுதப்பட்டன. அதனாலேயே ஸ்ரியா நடித்தாலே அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்தான் என்ற நற்பெயரை தயாரிப்பாளர்களிடம் பெற்றார். இப்படி தெலுங்கில் ஹிட் கொடுத்துவந்த ஸ்ரியா, 2003ஆம் ஆண்டு தருண் - திரிஷா நடித்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் இவர் நடித்த ‘மழை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என இரண்டுமே மாஸ் ஹிட்டடித்தன. இப்படி தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்த வாய்ப்பே ஜாக்பாட்தான்.
‘சிவாஜி’ படத்தில் தமிழ்ச்செல்வியாக...
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி!
ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என பல கதாநாயகிகள் போட்டி போட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட உருவாக்கமான ‘சிவாஜி’ திரைப்படத்தில் ஒருபுறம் தாவணி - பாவாடை கட்டிக்கொண்டு தமிழ்ச்செல்வியாகவும், மற்றொரு பக்கம் க்ளாமர் நடனங்களாலும் மக்கள் மனங்களை கவர்ந்தார். அதனால் அடுத்ததே விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’ படத்தில் ஜோடிசேரும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் ‘சிவாஜி’ படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்றபோது ஸ்ரியா அணிந்திருந்த ஆடை பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. தமிழ், தெலுங்கு தவிர ‘அரசு’ திரைப்படம்மூலம் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து கன்னடத்திலும் அறிமுகமானார். இடையிடையே அவ்வப்போது இந்தி படங்களிலும் நடித்துவந்தார். குறிப்பாக, விக்ரமுக்கு ஜோடியாக ‘கந்தசாமி’ படத்தில் நடித்தபோது உச்சகட்ட கவர்ச்சி காட்டியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக, அந்த படத்தில் ‘அலேக்ரா’ பாடலில் இவர் அணிந்திருந்த செருப்பு பல லட்சம் மதிப்புடையது என்றும், அந்த செருப்பை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் அவருடைய நளினமிக்க நடனங்களை பாராட்டி வழங்கியதாகவும் ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். தமிழில் பிஸியான ஸ்ரியாவுக்கு தெலுங்கு வாய்ப்புகள் குறைந்ததால், தொடர்ந்து இந்தி மற்றும் தமிழில் கவனம் செலுத்திவந்தார். அப்படி தமிழில், விஷால் ஜோடியாக நடித்த ‘தோரணை’ மற்றும் தனுஷ் ஜோடியாக நடித்த ‘குட்டி’ போன்ற படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டுசென்றன. இந்திய மொழிகள் தவிர, ‘The Other End of the Line’, ‘Cooking with Stella’, ‘Midnight's Children’ போன்ற ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார். எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் தனது நடனத் திறமையை வெளிப்படுத்த தவறாத ஸ்ரியா, தான் ஒரு நடிகை ஆகாவிட்டால் கண்டிப்பாக, நடன ஆசிரியராக உருவாகியிருப்பேன் என்று பல நேர்காணல்களில் அவரே தெரிவித்திருக்கிறார்.
கணவர் மற்றும் குழந்தையுடன் ஸ்ரியா
காதல் கல்யாணம்
இப்படி தொடர்ந்து படங்களில் நடித்துவந்த ஸ்ரியா, 2018ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ராதா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த இவர், ரஷ்ய தொழிலதிபரை காதலித்தது எப்படி? என்பது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். அதில், “திடீரென நான் மாலத்தீவுக்குச் சென்றிருந்தேன். அங்கு எதிர்பாராதவிதமாக டைவிங் ட்ரிப்பிற்குச் சென்றேன். அங்குதான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஆண்ட்ரியை சந்தித்ததுடன், அவருடன் ஒரே படகு இல்லத்தில் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த படகு புறப்பட்ட கடைசி நிமிடத்தில் நான் அதில் ஏறினேன். இப்படி ஒருவாரம் அவருடன் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது நண்பர்களுடன் வந்திருந்தார். நான் தனியாகச் சென்றிருந்தேன். அதன்பிறகு ஒரு வருடம் இருவரும் நன்றாக பேசி பழகி, அடுத்த ஆண்டு நாங்கள் சந்தித்த அதே நாளில் திருமணமும் செய்துகொண்டோம்” என்று கூறியிருந்தார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை கணிசமாக குறைத்துக்கொண்ட ஸ்ரியா, அவ்வப்போது ஓரிரு படங்களில் மட்டும் தலைகாட்டுகிறார். குறிப்பாக, இந்தி மற்றும் தெலுங்கில் மட்டுமே நடித்துவரும் இவர் தமிழில் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என்பது இங்குள்ள ரசிகர்களுக்கு சற்று வருத்தம்தான்.
ஸ்ரியாவின் க்ளாமர் ஃபோட்டோஷூட்
ஃபோட்டோஷூட்களால் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரியா
41 வயதான ஸ்ரியா, எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாகவே இருக்கிறார். தனது குழந்தை மற்றும் கணவருடன் செல்லும் சுற்றுலாக்கள் மற்றும் தனது தனிப்பட்ட ஃபோட்டோஷூட்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இன்றும் மிகவும் ஃபிட்டாகவும், இளமையாகவும் இருக்கும் இவர், கவர்ச்சியான புகைப்படங்களையே அதிகம் பதிவிடுவதால் ஸ்ரியா ஏன் மற்றொரு ரவுண்டு சினிமா பக்கம் வரக்கூடாது? என அவரது ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.
சினிமாவில் நடிப்பது குறைந்துவிட்டாலும் சமூக பணிகளில் இன்றுவரை தனது அயராத உழைப்பை போட்டுவருகிறார். குறிப்பாக, மும்பையில் பார்வையற்றவர்களுக்கென ஒரு ஸ்பாவை நிறுவினார். அந்த ஸ்பா முழுவதுமே பார்வையற்றவர்களாலேயே நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு. இதுபோக, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு உதவிகளை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செய்துவருகிறார்.