இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(22.06.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

வேர்க்கடலை உருண்டை!. இதுதான், ஷோபா சிறுவயதில் கடையில் விரும்பி வாங்கிக்கொள்ளும் தின்பண்டம்!. நான் ஷோபாவை கடைக்கு அழைத்துச் சென்றாலும் சரி; அல்லது அவளாக கடைக்குப் போனாலும் சரி கடலை உருண்டை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். முதலில் ''ஒன்று" என்று கேட்பாள். அது கிடைத்ததும் இடக் கையை நீட்டுவாள். அதையும் வாங்கிக்கொண்டு, பிறகு வாயைப் பிளப்பாள். வாயிலும் ஓர் உருண்டை வைக்க வேண்டும். இவ்வளவு ஆசைப்படுகிறவள், இதே பொருளை வேறு யார் வாங்கிக் கொடுத்தாலும், கை நீட்டி வாங்கமாட்டாள்.

காரணம்

இதற்குக் காரணமும் இருந்தது!. ஷோபா குழந்தையாக இருந்தபோது, அவளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கடைக்குச் செல்வேன். ஒருநாள், ஷோபாவின் துடுதுடுப்பைப் பார்த்த கடைக்காரர், ஒரு மிட்டாயை எடுத்து அவள் கையில் கொடுத்தார். அதை ஷோபா "லபக்", என்று வாங்கிக்கொண்டாள். உடனே நான், “யார் எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது" என்று அவள் கையில் அடித்தேன். அது முதல் ஷோபா யாரிடமும் எதையும் கை நீட்டி வாங்கமாட்டாள். நாங்களாகப் பார்த்து "வாங்கிக்கொள்" என்று சொன்னால் மட்டுமே வாங்குவாள்.


மகிழ்ச்சி, வெகுளியான பார்வை என இருமாறுபட்ட தோற்றங்களில் ஊர்வசி ஷோபா

மாம்பழம்

ஷோபாவுக்கு சிறு வயதில் மாம்பழம், பலாப்பழம் என்றால் உயிர். யாராவது மாம்பழம், பலாப்பழம் கொடுத்தால் மட்டும் "வாங்கிக்கொள்ளட்டுமா?" என்று கேட்பது போல என்னைப் பார்ப்பாள். நானும் குழந்தையின் ஆசையை அறிந்து "வாங்கிக்கொள்” என்பேன். ஷோபா, பழத்தை வாங்கிக்கொண்டு, "நல்ல மம்மி; நல்ல மம்மி” என்று என் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி முத்தம் கொடுப்பாள்.

அவளையே கொஞ்ச வேண்டும்

ஷோபாவிடம் சிறு வயதில் இன்னொரு குணம் இருந்தது. நான் அவளையே கொஞ்ச வேண்டும்; அவளையே முத்தமிட வேண்டும். வேறு குழந்தைகளை தூக்குவதோ, கொஞ்சுவதோ அவளுக்கு அறவே பிடிக்காது. அவளைத் தூக்கி வைத்துக்கொண்டு, மற்றவர்களுடன் சிரித்துப் பேசினால், என் முகத்தை இழுத்து தன் பக்கம் வைத்துக்கொள்ளுவாள். நாய்க்குட்டியை தடவிக் கொடுத்தால்கூட ஷோபாவுக்குக் கோபம் வந்துவிடும். ஒரு குழந்தையைப் பார்த்து, "அது அழகாக இருக்கிறது என்று சொல்லிவிட்டால் போதும். ''நான் அழகாக இல்லையா? என் மேல உங்களுக்கு அன்பு இல்லை” என்று ஷோபா கோபித்துக்கொண்டு போய்விடுவாள்! "போ, எங்காவது போ!" என்று நானும் விளையாட்டுக்குக் கூறுவேன். உடனே வீட்டுக்குள் வந்து, அவள் துணிகளில் இரண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, வீட்டு வாசலில் போய் உட்கார்ந்து கொள்வாள். “டாடா… டாடா…!" என்று அழுவாள்.("டாடி" என்பதை ஷோபா "டாடா" என்றுதான் சொல்லுவாள்.


‘நாயர் பிடிச்ச புலிவால்’ என்ற மலையாள படத்தில் ஷோபாவின் அம்மா பிரேமா மேனன்

மாமி

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஸ்டெல்லா என்று ஒரு பெண் இருந்தாள். ஸ்டெல்லாவை, ஷோபா "மாமி...மாமி" என்று அழைப்பாள்!. அந்த ஸ்டெல்லா வந்து ஷோபாவை தேற்றுவாள். "ஷோபா கண்ணு!, நீதான் அழகு. உன் மேலதான் அம்மாவுக்கும் பிரியம் அதிகம்" என்று கூறி, அவளை வீட்டுக்குள் அழைத்து வருவாள்!.

தெய்வ பக்தி

ஷோபா அப்பாவுக்கு தெய்வ பக்தி அதிகம்!. எங்கு சென்றாலும், வழியில் உள்ள எல்லாக் கோவிலையும் வணங்கிவிட்டுத்தான் போவார். இந்தப் பழக்கம் அப்படியே ஷோபாவிடமும் இருந்தது!. வீட்டில் இருக்கும் சாமி படத்தை அடிக்கடி தொட்டுக் கும்பிடுவாள். அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே செல்லும்பொழுது, வழியில் கோவிலை பார்த்துவிட்டால் போதும், விடுவிடு என்று இடுப்பில் இருந்து இறங்கி, ஓடுவாள். சாமியை வணங்கி, தொட்டு கும்பிட்டுவிட்டுதான் திரும்புவாள். இந்த தெய்வப்பக்தி, ஷோபாவிடம் கடைசிவரை இருந்தது!. வீட்டில் உள்ள எல்லா சாமி படத்தையும் தொட்டு வணங்கிவிட்டுதான் அவள் எதையும் செய்வாள். படப்பிடிப்புக்குக் கிளம்பும்போதும், சாமி கும்பிட்டுவிட்டுதான் புறப்படுவாள்.


ஷோபாவுக்கு தெய்வ பக்தி அதிகம் - தாயார் பிரேமா

தாங்கும் சக்தி

ஷோபா சிறுவயதில், எந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளுவாள்!. ஷோபாவின் மாமி(ஸ்டெல்லா) எப்பொழுதும் சைக்கிள் விட்டுக்கொண்டு இருப்பாள். ஒரு நாள் ஷோபாவை பின்னால் வைத்து, சைக்கிள் ஓட்டினாள். ஷோபாவின் கால் ஒன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. காலில் கம்பி அறுத்து இரத்தம் வடிந்தது! அதைப் பார்த்து, சைக்கிளை ஓட்டிய ஸ்டெல்லா "ஓ" என்று அலறினாள். நாங்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினோம். ஷோபாவின் காலை கஷ்டப்பட்டு வெளியே எடுத்தோம். அந்த நிலையிலும், ஷோபாவிடம் அழுகையோ, கண்ணீரோ, இல்லை "கல்லுளி மங்கன்" என்பார்களே, அப்படி விழித்துக்கொண்டு இருந்தாள்.

அவளை தூக்கிக்கொண்டு டாக்டரிடம் ஓடினோம்..! (தொடரும்)

Updated On 26 Aug 2024 6:39 PM GMT
ராணி

ராணி

Next Story