இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(17.08.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஷோபா மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கிய பொழுது, நாங்கள் வறுமையில் வாடாவிட்டாலும், சிறிது கஷ்டம் இருந்தது. நாங்கள் நடத்திவந்த தொழில் நலிந்துபோனதால், அவர் மனம் நொடிந்து போயிருந்தார். அப்போதும் அவர் “நம் மகள் நடித்துதான் ஆகவேண்டுமா?" என்று அடிக்கடி கேட்பார். "ஷோபாவிடம் திறமை இருக்கிறது; ஆர்வம் உள்ளது. நடித்து, சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது?" என்று நான் அவரை ஆறுதல்படுத்துவேன்.

ஷோபா, பள்ளிக் கூடத்தில் விடுமுறை (மெடிக்கல் லீவு) எடுத்துக் கொண்டு, "அவள் அல்பம் வைகி போயி" படத்தில் நடித்தாள். படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆல்வாய் என்ற இடத்தில் நடந்தது!. ஆல்வாயில் உள்ள ஆல்வாய் மாளிகை”யில் நாங்கள் தங்கியிருந்தோம். கேரளாவில் அப்போதே பெரிய நடிகர், சின்ன நடிகை என்ற வேறுபாடு கிடையாது. அந்தப் படத்தில் நடித்த பிரேம் நசீர், ஷீலா, ஜெயபாரதி, அடூர்பாசி ஆகியோரும் அந்த மாளிகையில் தான் தங்கினார்கள்.

செல்லப்பிள்ளை

அவர்களுக்கு எல்லாம் ஷோபா செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தாள்! "ஆல்வாய் மாளிகை"க்கு முன்னே ஓர் ஆறு ஓடுகிறது. மாளிகையில் இருந்து நாலு படிக்கட்டு இறங்கினால், ஆற்றில் காலை வைத்துவிடலாம். காலையில் எல்லோருக்கும் ஆற்றில்தான் குளியல்!! பிரேம்நசீர், ஷீலா, ஜெயபாரதி, அடூர்பாசி, ஜோஸ் பிரகாஷ் ஆகியோர் ஆற்றில் இறங்கி, வட்டமாக நின்று, பந்து விளையாடுவார்கள். அவர்களுக்குப் பந்து ஷோபா தான்! பிரேம்நசீர், ஷோபாவை தூக்கி தண்ணீருக்குள் ஒரு தடவை மூழ்கச் செய்து, அடூர்பாசியிடம் போடுவார். அடூர்பாசி ஷீலாவிடம் தூக்கிப் போடுவார். ஷீலா, ஜெயபாரதிக்கு...! ஜெயபாரதி, ஜோஸ் பிரகாசுக்கு வீசுவார். இந்த விளையாட்டை நானும் ஷோபாவின் அப்பாவும் மாளிகையின் தளத்தில் நின்று வேடிக்கை பார்ப்போம்! ஆற்றில் இறங்கும் பொழுதே, ''இன்றைக்கு வேடிக்கையைப் பாருங்களேன்" என்று எங்களிடம் கூறிவிட்டுதான் செல்வார்கள்.


ஆச்சர்ய பார்வையை வீசும் நடிகை ஷோபா

அதிகாலையில்...

ஆற்றில் குளிப்பதும், இந்த விளையாட்டும் ஷோபாவுக்கு நிரம்பப்பிடிக்கும்!. அதற்காக எப்பொழுது விடியும் என்று காத்து இருப்பாள். விடிந்ததும், முதல் ஆளாக எழுந்து, கையில் துண்டும் சோப்பும் எடுத்துக்கொண்டு, ஒவ்வோர் அறையாகச் சென்று, ஓவ்வொருவரையும் தட்டி எழுப்புவாள். ஷோபாவுக்கு பிரேம் நசீர் நீச்சல் கற்றுக் கொடுப்பார். அடூர்பாசி, ஷோபாவை முதுகில் தூக்கி வைத்துக்கொண்டு நீச்சல் அடிப்பார். அந்த ஆற்றில் படகுகள் உண்டு. நாலணா கொடுத்தால், படகில் ஏற்றி சிறிது தூரம் அழைத்துப்போய் வந்து இறக்கி விடுவார்கள். அந்தப் படகில் செல்வதற்கு ஷோபா அதிகம் ஆசைப்படுவாள்!

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், ஷோபா படகில் ஏறிவிடுவாள். ஷோபாவை ஏற்றிச் செல்வதற்கு, படகுக்காரர்கள் போட்டி போடுவார்கள். காரணம், மற்றவர்கள் நாலணா கொடுக்கும் பொழுது, ஷோபா அப்பா ஒரு ரூபாயை எடுத்து நீட்டுவார். தாலாட்டு "அவள் அல்பம் வைகி போயி” படத்தில் ஷீலாவுக்கு தங்கையாக ஷோபா நடித்தாள்! கதைப்படி, பிரேம் நசீருக்கு ஷோபா மீது பிரியம் அதிகம்! அவளை சின்னக் குழந்தையைப் போல தாலாட்டி தூங்க வைப்பார். இப்படி இருக்கும்பொழுது, ஷோபா நோயில் படுக்கிறாள். உடல்நிலை மிகவும் "சீரியஸ்" ஆகிவிடுகிறது!.

தான் பிழைக்க மாட்டோம் என்பதை தெரிந்து கொண்ட ஷோபா, பிரேம் நசீரிடம். “நீங்கள் வழக்கமாகப் பாடும் தாலாட்டுப் பாட்டைப் பாடுங்கள்" என்கிறாள்! பிரேம்நசீர், சோகமாக தாலாட்டுப் பாட்டை பாடுகிறார். பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கும்பொழுது, ஷோபாவுக்கு உயிர் பிரிந்துவிடுகிறது. அந்தக் காட்சியில், ஷோபா மிகவும் தத்ரூபமாக நடித்தாள்.

குட்டி ஊர்வசி

அந்தக் காட்சி முடிந்ததும், பிரேம் நசீர் ஷோபாவை தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டு. "ஷோபாட நீ சதாரண நடிகை அல்ல. குட்டி ஊர்வசி. நீ நிச்சயம் ஊர்வசி ஆவாய்” என்று பரவசத்தோடு பாராட்டினார். அன்று முதல், ஷோபாவை பிரேம்நசீர் எங்கே பார்த்தாலும், பேர் சொல்லி அழைக்கமட்டார். ''குட்டி ஊர்வசி” என்றுதான் கூப்பிடுவார்.


முகபாவனையில் ரசிகர்களை அசரடிக்கும் நடிகை ஷோபா

அட்வான்ஸ்

ஷோபாவுடன் படப்பிடிப்புக்குச் செல்லும் பொழுது, நான் (தாயார் பிரமா) மீண்டும் சிறிய பத்திரங்களிலும், சில படத்தில் கவுரவ வேடத்திலும் நடிக்கத் தொடங்கினேன். “மிஸ் மேரி" என்ற படத்தில் பிரேம்நசீருடன் நான் நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு நாள் ஷோபா என்னோடு வந்து இருந்தாள். அவளைக் கண்ட பிரேம் நசீர் பைக்குள் கையை விட்டு ஒரு ரூபாய் பணத்தை எடுத்து, “ஷோபா! இப்பொழுது பைக்குள் ஒரு ரூபாய்தான் இருக்கிறது. இதை ஒரு லட்சமாக நினைத்து, முன் பணமாக வைத்துக்கொள். நீ பெரிய பெண் ஆன பிறகு, என்னோடு நடிப்பதற்கு இது அட்வான்ஸ்! என்று விளையாட்டாகக் கூறி, பணத்தை ஷோபாவிடம் கொடுத்தார்.

நீண்டநாளைக்குப் பிறகு, ஷோபாவை பெரிய பெண்ணாக சந்தித்த பிரேம்நசீர், "ஷோபா! என்னிடம் அட்வான்ஸ் வாங்கியதை மறந்துவிட்டாயா?" என்று கேட்டுவிட்டார். "அங்கிள்! உங்களோடு நடிப்பதற்கு எனக்கு இன்னும் வயது காணாது. உடம்பும் போதாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றாள், ஷோபா சிரித்துக் கொண்டு. அவரும் சிரித்துக் கொண்டே, "குட்டி ஊர்வசி! விளையாட்டுக்குச் சொன்னேன். நீ நன்றாக நடித்து புகழ் பெற வேண்டும். அதுதான் என் ஆசை" என்று வாழ்த்திவிட்டுப் போனார். பிரேம்நசீர் எப்பொழுதும் ஒரு குழந்தையைப் போல ஷோபாவிடம் அன்பு செலுத்துவார். அவள் வளர வேண்டும்; உயர வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவார்.

"என் மோளே! நீ போயிட்டியே!" என்று ஷோபாவுக்காக கண்ணீர் வடித்த பிரேம் நசீர்

ஷோபா இறந்து இரண்டு நாள் கழித்து பிரேம் நசீர் வீட்டுக்கு வந்தார். அவர் அப்படி அழுது நான் ஒருநாளும் பார்த்தது இல்லை. "என் மோளே! நீ போயிட்டியே!" என்று கண்ணீர் வடித்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தவரை நாங்கள் தேற்ற வேண்டியதாகிவிட்டது. ஷோபாவின் அப்பா, "நசீர்! என் மகள் சும்மா, போகவில்லை. நீ சொன்ன படியே “ஊர்வசி" என்கிற பட்டத்தை வாங்கி விட்டுத்தான் போயிருக்கிறாள்? என்று, அவரை ஆறுதல் படுத்தினார்! “குட்டி ஊர்வசி”யை நினைவுபடுத்தியதும், பிரேம்நசீர் மீண்டும் "ஓ" என்று அழுதுவிட்டார்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….

Updated On 14 Oct 2024 9:57 PM IST
ராணி

ராணி

Next Story