(06.07.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
ஷோபாவை முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு நானே கூட்டிப்போனேன். ஷோபாவைப் போல, அன்று புதிதாக சேர்ந்த குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் ஒரே அழுகையும் கூக்குரலுமாகக் காட்சி அளித்தனர். சில குழந்தைகள், தாயின் இடுப்பைவிட்டு இறங்க மறுத்தனர்! ஷோபா என்ன செய்யப் போகிறாளோ என்ற பயம், எனக்கு!.
வகுப்பறை வாசலில் நின்று, "ஷோபா கண்ணு! இதுதான் உன் வகுப்பு. போய் உட்கார்ந்துக்கொள். "மிஸ்" (ஆசிரியை) வருவார்கள்" என்று ஷோபாவிடம் சொன்னேன். "மம்மி, டாட்டா!" என்று கையைக் காட்டிவிட்டு, ஓடிப்போய் அறைக்குள் கிடந்த ஒரு பெஞ்சில் ஷோபா உட்கார்ந்து கொண்டாள்! எனக்கு மனது குளிர்ந்தது. அதே நேரம், ஷோபாவை பிரிந்து இருக்க வேண்டியதை நினைத்ததும், மனசு கனத்தது!.
அழைத்து வர
"எல்.கே.ஜி."க்கு (பாலர் வகுப்பு) அரை நாள்தான் படிப்பு!. அன்று ஒரு மணிக்கு ஷோபாவை அழைத்துவர நானும் ஷோபாவின் அப்பாவும் பள்ளிக்கூடத்துக்குச் சென்றோம். எல்லாக் குழந்தைகளும், பெற்றோரையோ, ஆயாவையோ எதிர்பார்த்து கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில், ஷோபாவைத் தேடினோம். இல்லை. வகுப்பு அறையில் போய்ப் பார்த்தோம். அங்கும் ஷோபாவை காணோம். எனக்கு "பகீர்" என்று இருந்தது. ஷோபாவின் ஆசிரியையிடம் சென்று கேட்டோம். "வெளியேதானே நின்றாள்" என்றார்கள்.
பிறகு மூவருமாக ஷோபாவைத் தேடினோம். சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்து அடியில் ஷோபா உட்கார்ந்து இருப்பது தெரிந்தது. அங்கே ஓடினோம்! அவளோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், மணலை கூட்டி வைத்து விளையாடிக் கொண்டு இருந்தாள். "ஷோபா! உன்னை எங்கெல்லாம் தேடுவது? வா வீட்டுக்குப் போகலாம்" என்று நான் அழைத்தேன். "நான் இங்கேதான் இருப்பேன். இங்கே எனக்கு ஸ்வீட் கொடுக்கிறாங்க. விளையாட நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க? என்றாள், ஷோபா.
மிகவும் சீரியஸ் லுக்கில் ஷோபா
"ஷோபா, உனக்கு வகுப்பு முடிந்துவிட்டது. இனிமேல், நாளைக் காலையில்தான் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும். எழுந்து வீட்டுக்குப் போ" என்று "மிஸ்" சொன்னார்கள். அதன்பிறகு ஷோபாவும் வேண்டா வெறுப்போடு எழுந்து, எங்களுடன் வந்தாள். வீட்டில் தனியாக அடைந்து கிடந்த ஷோபாவுக்கு பள்ளிக்கூடத்து சூழ்நிலை நன்றாகப் பிடித்துவிட்டது.
முத்தம்
“ஒவ்வொரு பிள்ளைகள், பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றனர். உங்கள் மகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்குப் போக மாட்டேன் என்கிறாள். ஷோபாவை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது" என்று அந்த "மிஸ்" ஷோபாவின் கன்னத்தில் தட்டிக்கொடுத்து முத்தம் அளித்தார். அன்று முதல், "மிஸ்"-க்கு ஷோபா செல்லக் குழந்தை ஆகிவிட்டாள். "மம்மி! நீங்களும் என்னை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுறீங்க. ஸ்வீட் கொடுக்குறீங்க, முத்தம் கொடுக்குறீங்க. “மிஸ்”-ம் என்னை மடியில் உட்காரவெச்சிக்குறாங்க, ஸ்வீட் கொடுக்குறாங்க. முத்தம் தர்றாங்க. உங்களைப் போலவே "பிங்கி... பிங்கி...!" என்று என்னை அழைக்கிறாங்க" என்று ஷோபா அடிக்கடி கூறுவாள்.
மஸ்தான்
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில், எங்கள் வீட்டுக்கு அருகேதான் ஒளிப்பதிவாளர் மஸ்தான் வீடு இருந்தது!. மஸ்தானின் பேத்தி நசிரினாவும் குட்ஷெப்பர்டு கான்வென்டில்தான் படித்தாள். ஷோபாவும் நசிரினாவும் சேர்ந்தே பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள். சேர்ந்தே வீட்டுக்கு வருவார்கள்.
எத்திராஜ்
ஷோபாவை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப்போகவும், கூட்டிவரவும் எத்திராஜ் என்ற பையனை நாங்கள் வீட்டோடு வைத்து இருந்தோம்!. ஷோபா முதல் வகுப்பு படிக்கும்பொழுது, ஷோபாவுக்கும் நசிரினாவுக்கும் மதிய சாப்பாடு கொண்டுபோவது எத்திராஜ்தான்!. ஒரு நாள் "மம்மி! உங்களை மிஸ் நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு வரச் சொன்னாங்க" என்று ஷோபா சொன்னாள்.
முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தும் ஷோபா
டியூஷன்
அதன்படி, மறுநாள் நான் போய் மிஸ்ஸை சந்தித்தேன். "உங்கள் மகள் புத்திசாலிப் பெண்ணாக இருக்கிறாள். எதையும் உடனே புரிந்து கொள்கிறாள். அவளுக்கு இந்த நேரத்தில் "டியூஷன்" வைத்தால், படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக வருவாள்" என்று "மிஸ்" சொன்னார்கள். டியூஷனுக்கு நானும் சம்மதித்தேன். அந்த மிஸ்ஸே, வீட்டில் வைத்து டியூஷன் சொல்லிக்கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். அதனால், ஷோபாவுக்கும் மிஸ்ஸிற்கும் இடையே உள்ள நெருக்கம் இறுக்கமானது. மிஸ் வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள். எனவே, டியூஷன் இல்லாத நாளிலும், "நான் மிஸ் வீட்டுக்குப் போகிறேன்" என்று சென்றுவிடுவாள், ஷோபா.
காணோம்!
இந்த நேரத்தில் ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் இருந்து ஷோபாவைக் கூட்டிவரப்போன எத்திராஜ், "ஷோபாவை காணவில்லை" என்று சொல்லிக்கொண்டு திரும்பிவந்தான். எனக்கு நிலைகொள்ளவில்லை. பதறிப்போனேன். அப்போது, பிள்ளை பிடிப்போர் நடமாட்டம் சென்னையில் அதிகம். பத்திரிகையிலும் அடிக்கடி செய்தி வந்துகொண்டு இருந்தது. "அய்யோ! என் மகளைக் காணோமே!" என்று நான் அழுதுவிட்டேன்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….