இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தற்போதைய தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என திரையுலகில் வலம்வரும் இவர் சிறந்த நடிகை மற்றும் சிறப்பாக நடனமாடுபவரும்கூட. எந்த மொழிப்படமாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வுசெய்து நடிக்கும் இவர், சிறு இடைவெளிக்குப்பிறகு தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் அடுத்த வாய்ப்பு பாலிவுட்டிலிருந்து இவரை தேடிவந்திருக்கிறது. நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் என அடுத்தடுத்து தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் அறிமுகமாகும் நிலையில் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் சாய் பல்லவி.

நடனமும் சினிமாவும்

சாய் பல்லவி சிறப்பாக நடனமாடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். நடனம்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்பதும் பெரும்பாலானோருக்குத் தெரியும். நீலகிரியில் பிறந்து வளர்ந்த சாய் பல்லவி, பள்ளிப்பருவத்திலேயே நடனத்தின்மீது கொண்ட தீராக் காதலால் பல நடனப் போட்டிகளில் கலந்துகொண்டார். ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு, ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படித்துக்கொண்டிருந்த சாய் பல்லவியை அணுகிய இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், ‘பிரேமம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.


சாய் பல்லவியின் நடனமும் நடிப்பும்

முதலில் தயங்கினாலும், ஒருவழியாக நடிக்க ஒத்துக்கொண்ட சாய் பல்லவி, மலர் டீச்சராக மலையாளம் மட்டுமில்லாமல், இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றார். அடுத்தடுத்த மலையாளம், தெலுங்கு என வாய்ப்புகள் தேடிவர, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஒருபுறம் நடிப்பு, மற்றொரு புறம் படிப்பு என இரண்டையும் அசாலாட்டாக சமாளித்து டாக்டர் ஆனார். படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக சில பட வாய்ப்புகளை மறுத்த பல்லவி, அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியானார். தமிழில் தனுஷுடன் அவர் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல், யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றானது.

சாய் பல்லவியின் பேச்சுகள்

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வளர்ச்சி மற்றும் நடிப்பு குறித்து பேசிய சாய் பல்லவி, ஒவ்வொரு கதையை தேர்ந்தெடுக்கும்போதும், அந்தந்த கேரக்டராகவே மாறி, அந்த இடத்தில் தான் இருந்தால் என்ன செய்திருப்பார், எப்படி நடந்திருப்பார் என்பதை யோசித்துப் பார்ப்பாராம். இதனால் ஒவ்வொரு கேரக்டரையும் உள்வாங்கி நடிப்பது தனக்கு சற்று சுலபமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். அப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் நடித்து முடித்தபிறகு, உலகத்தை தான் காணும் விதமும் மாறிவருவதாகக் கூறியிருக்கிறார்.


சாய் பல்லவியின் சிறந்த கதாபாத்திரங்கள்

மற்றொரு நேர்க்காணலில், ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பர வாய்ப்புகளை தவிர்த்ததற்கான காரணத்தைக் கூறியிருந்தார். அதில், ”எனது தங்கை பூஜாவிற்கு நான் அவளைவிட கலராக இருக்கிறேன் என தாழ்வு மனப்பான்மை இருந்தது. நீ வெள்ளையாக வேண்டுமானால் காய்கறிகள், பழங்கள் சாப்பிடு என்று ஒருநாள் நான் அவளிடம் கூறினேன். அவளுக்கு அது பிடிக்காவிட்டாலும், அவள் பழங்களை சாப்பிட்டாள். ஒரு சின்ன பெண்ணின் மனதை நிறம் எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். அதனாலேயே இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை விரும்பவில்லை. நானும் பிரேமம் படத்தில் நடித்திருக்காவிட்டால் முகப்பருவை நீக்க, பல க்ரீம்களை பயன்படுத்தியிருப்பேன்” என்றார்.

மேலும், ”மேக்-அப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் என்னதான் வித்தியாசமாக ஒப்பனை செய்தாலும், செய்யாமல்விட்டாலும் கதையையும், நடிப்பையும் பொருத்தே ஒரு கதாபாத்திரம் மக்களின் மனதில் இடம்பிடிக்கும். அதிர்ஷ்டவசமாக எனக்கு வந்த பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு மேக்-அப் தேவைப்படவில்லை” என்று கூறியிருந்தார்.


ஃபேர்னெஸ் க்ரீம் குறித்து சாய் பல்லவி கருத்து

பிரபல தொகுப்பாளர் அனுபமா சோப்ராவின் நேர்க்காணலில் பங்கேற்ற சாய் பல்லவியிடம் இந்தி ஹீரோயின்கள்மீது க்ளாமர் திணிக்கப்படுவது குறித்து கேட்டபோது, ”மேக்-அப் தேவைப்படும்போது போட்டுக்கொள்ளலாம். மேக்-அப் போடுவதால் கான்ஃபிடண்ட் கிடைக்குமென்றால் தாராளமாக போடலாம். ஆனால் மேக்-அப் இல்லாமலேயே நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன்” என்று சிம்பிளாக பதில் சொன்னார். அதே நேர்காணலில் நீங்கள் பங்கேற்ற முதல் நடனப் போட்டியில் உங்களுடைய முதல் நடனமே இந்தி பாட்டிற்குத்தான் ஆடியிருந்தீர்கள். இந்தியில் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? என அனுபமா கேட்டிருந்தார். அதற்கு சரியான நேரம் வாய்த்தால், நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிக்க தயார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்திப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு பல்லவிக்கு தேடி வந்திருக்கிறது. அதிலும் மேக்-அப் இல்லாமலேயே நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.


SK21 படக்குழுவினருடன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகனுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி!

நடிப்பிலிருந்து சற்று ப்ரேக் எடுத்திருந்த சாய் பல்லவி பெற்றோருடன் அமர்நாத் யாத்திரை சென்றிருந்தார். மலையிலிருந்து இறங்கியபோது, இனம்புரியாத மகிழ்ச்சியை உணர்ந்ததாகக் கூறினார். அதன்பிறகு, SK21 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். ராணுவக் கதையை அடிப்படையாகக் கொண்ட இதன் படபிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலம் அமீர் கானின் மகன் ஜுனைத் கானுடன் ஜோடி சேர்கிறார் சாய் பல்லவி. கடந்த ஆண்டு தமிழில் மெஹா ஹிட்டடித்த ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை அமீர் கான் வாங்கியிருக்கிறார். அந்தப் படத்தில்தான் சாய் பல்லவி ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார்.


பாலிவுட் என்ட்ரி

தமிழில் இவானா நடித்த அதே கேரக்டரில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதால் தென்னிந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சுனில் பாண்டே இயக்கவிருக்கிற இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்து பல பாலிவுட் வாய்ப்புகள் வந்த நிலையில் ஜுனைத் கானுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. சாய் பல்லவிக்கு இது சூப்பரான ஓபனிங் என்பதால் பாலிவுட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

Updated On 26 Sept 2023 12:16 AM IST
ராணி

ராணி

Next Story