இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

80களின் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் ரேவதி. கிளாமர் பக்கம் போகாமலே தனக்கென தனியிடத்தை பிடித்த இவர், அப்போதைய டாப் ஸ்டார்களான கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்தி, மோகன் என அனைவருடனும் ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு இயக்குநரும்கூட. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒருசில படங்களை இயக்கி அதற்காக விருதுகளையும் வென்றவர். இப்படி சினிமாவில் ஜொலித்தபோதிலும் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டு தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த ரேவதி இன்றுவரை தொடர்ந்து நடித்துவருகிறார். நேற்று (ஜுலை 8ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடிய அவருடைய திரைப்பயணம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் பற்றியும் அவரே பகிர்ந்தவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

சினிமா என்ட்ரி!

1966ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த ஆஷா கேளுண்ணி. இவருடைய தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட மாநிலங்களில்தான் அதிகம் வளர்ந்தார். பள்ளிக்காலத்திலேயே ஆஷா மற்றும் தங்கை பிந்து இருவருடனும் அம்மா சென்னையிலேயே தங்கிவிட்டார். ஏதாவது ஒரு கலையில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் ஒழுக்கம் வளரும் என தாயார் கூறியதைக் கேட்டு, 8 வயதிலிருந்தே நாட்டியப்பயிற்சி எடுத்துக்கொண்டார் ஆஷா. கூடவே மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவையும் வளர்த்துக்கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக காத்திருந்த ஆஷாவை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, தனது படத்தின் அடுத்த கதாநாயகி இவர்தான் என முடிவுசெய்துவிட்டார். 16 வயதேயான ஆஷாவுக்கு அப்போது திரைப்படங்கள் குறித்தெல்லாம் பெரியளவில் ஐடியா இல்லை. அதனால் அவர் சற்று தயங்கவே, ஒருவழியாக ஆஷாவின் பெற்றோரிடம் பேசி ஒப்புதல் வாங்கியிருக்கிறார் பாரதிராஜா. இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே நன்றாக பேசத்தெரிந்த ஆஷாவுக்கு முதலில் கிடைத்தது என்னவோ முத்துப்பேச்சி என்ற கிராமத்துப்பெண் கதாபாத்திரம்.


‘கை கொடுக்கும் கை’ திரைப்படத்தில் கண் தெரியாத பெண்ணாக ரஜினியுடன் நடித்த ரேவதி

சினிமாவில் நுழையும்போதே பல நடிகைகளுக்கு பெயரை மாற்றி வைக்கும் பாரதிராஜா, ஆஷாவிற்கு ரேவதி என பெயர் வைத்திருக்கிறார். ஆனால் தனக்கு ஆஷா என்ற பெயர்தான் பிடித்திருக்கிறது, ரேவதி பிடிக்கவில்லை என்று சொல்லி சண்டைப்போட்டிருக்கிறார். ‘இந்த பெயரால் நீ புகழின் உச்சத்திற்கே போகப்போகிறாய்’ என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார் பாரதிராஜா. இப்படி ‘மண் வாசனை’ என்ற படத்தின்மூலம் 1983ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் ரேவதியாக காலடி எடுத்துவைத்தார். சினிமாவில் நுழைந்த அனுபவம் குறித்து ரேவதி ஒரு நேர்காணலில் பகிர்கையில், “நான் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் காரில் போய்க்கொண்டிருந்தபோது பள்ளி வாசலில் என்னை பார்த்துவிட்டு, எனது மாமாவிடம் கேட்டிருக்கிறார். அவர் எனது பெற்றோரிடம் அவரை கூட்டிக்கொண்டு வந்தார். அப்போது எனக்கு 16 வயது. அவர் கூறியதன்பேரில் பாரதிராஜா சாரின் அலுவலகத்திற்கு பெற்றோருடன் போயிருந்தேன். அங்கு அவரிடம் முதலில் நான் கேட்ட கேள்வியே, ‘சினிமாவில் நிஜமாகவே கட்டிப்பிடிப்பார்களா?’. அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டார்கள். அதன்பிறகு ‘மண் வாசனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, பாரதிராஜா சார் என்ன சொன்னாரோ அதை மட்டும் பின்பற்றினேன். முத்துப்பேச்சி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நான் என்ஜாய் செய்து நடித்தேன். பட ரிலீஸின்போது பாரதிராஜா சார் எனக்கு போன் செய்து, ஜெமினி ஃப்ளை ஓவருக்கு போ என்று சொன்னார். என்னாச்சு என கேட்டேன். நீ போய் பார் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். அப்போது இரவு 11 மணி இருக்கும். உடனே அப்பா, அம்மா, நான் மற்றும் தங்கை நான்கு பேரும் சென்றோம். அங்கு ஒரு பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய பேனரில் எனது முகத்தை பார்த்தபோதுதான் நான் என்ன வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நினைத்து பூரித்துப்போனேன்” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.


‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தில் கமல் - ரேவதி

இளம் வயதிலேயே டாப் ஹீரோ - முன்னணி இயக்குநர்களின் காம்போவில்!

தமிழில் ‘மண் வாசனை’யின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘காற்றத்தே கிளிக்கூடு’ என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படி முதல் இரண்டு படங்களும் ரேவதிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்ததால் தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரை தேடிவந்தன. இருப்பினும் ஒவ்வொரு படம் முடியும்போது ரேவதியின் அம்மா, “இத்துடன் நடிப்பை நிறுத்திக்கொள். கல்லூரிக்கு போ” என்று சொல்வாராம். ஆனால் எனக்கு நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறது என்று அம்மாவிடம் சொல்லவே, நான்கைந்து படங்களுக்குப் பிறகு படிப்பது பற்றி பேசுவதை அம்மா நிறுத்திக்கொண்டாராம்.

அடுத்தடுத்து ‘கை கொடுக்கும் கை’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு படங்களில் ரஜினி, கமல் என அப்போதைய டாப் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில், ‘புதுமைப் பெண்’ படத்தில் நடித்தார். அப்போது ரேவதி படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட்தான் என பெயர்பெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தார் ரேவதி. ஆனால் ‘கை கொடுக்கும் கை’ திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் பயந்தாராம். அப்பட அனுபவம் குறித்து கூறுகையில், “கண் தெரியாத பெண்ணாக நடிப்பதற்கு மகேந்திரன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பேனா இல்லையா என யோசித்து பயந்தேன். அதற்காக வீட்டில் கண்ணை கட்டிக்கொண்டு நடந்து பயிற்சிபெற்றேன்” என்று கூறினார். அந்த சமயத்தில், சிறுவயதிலிருந்து தான் கற்ற நடனத்திறமையை வெளிகாட்டும் விதமாக அமைந்த திரைப்படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ இப்படத்தில் இளம் கைம்பெண் கதாபாத்திரத்தை ஏற்று அவளின் உணர்ச்சிகளையும், ஏக்கங்களையும் தனது ஆத்மார்த்தமான நடிப்பால் மக்களிடம் கொண்டுசேர்த்தார் ரேவதி. குறிப்பாக, ‘அழகு மலராட’ பாடல் ரேவதியின் பெயரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது. இப்படி அறிமுகமான முதல் சில படங்களே பாரதிராஜா, மகேந்திரன், பாபு, பரதன் என முன்னணி இயக்குநர்களின் படங்களாக அமைந்தன. 20 வயதுக்குள்ளாகவே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிசேர்ந்த பெருமையையும் பெற்றார் ரேவதி. இருப்பினும் ரேவதியின் அப்பாவுக்கு அவர் கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். அந்த ஆசை ‘புன்னகை மன்னன்’ படத்தின்மூலம் நிறைவேறியது.


மணிரத்னம் இயக்கிய ‘மௌனராகம்’ திரைப்படத்தில்...

இந்தியாவின் டாப் ஹீரோயின்!

தொடர்ந்து படங்களில் நடித்துவந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘மௌனராகம்’ திரைப்படம்தான் அந்த யூனிட்டில் வேலைசெய்த அனைவரின் வாழ்க்கைக்குமே ஒரு திருப்புமுனையாக அமைந்ததாக கூறுகிறார் ரேவதி. இதுகுறித்து அவர் பேசியபோது, “நான் முழுக்க முழுக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே பயின்றவள். முதன்முறையாக ஒரு இயக்குநர் என்னிடம் வந்து கதை முழுக்க ஆங்கிலத்தில் விவரித்தார். ஐ வாஸ் ஸோ ஹேப்பி. அந்த இயக்குநர் வேறு யாருமல்ல; மணிரத்னம்தான். அவர் ‘பகல் நிலவு’ படத்திற்காக என்னை அணுகியபோதே, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் இயக்குநர் என்பதாலேயே அந்த படத்திற்கு ஓகே சொன்னேன். அதன்பிறகு அவர் உருவாக்கிய மாஸ்டர் பீஸ்தான் ‘மௌனராகம்’. அந்த படத்தை முதலில் சிறுகதையாக என்னிடம் சொன்னார். பிறகு அதை முழுநீள கதையாக்கிவிட்டார்” என்று பகிர்ந்திருந்தார். இப்படி தொடர்ந்து, ‘ஆண் பாவம்’, ‘அரங்கேற்ற வேளை’, ‘கிழக்கு வாசல்’, ‘அஞ்சலி’, ‘தேவர் மகன்’, ‘மகளிர் மட்டும்’, ‘இருவர்’ என பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் அதற்கு இணையாக மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடிசேர்ந்து இந்திய அளவில் பிரபலமான ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார். என்னதான் பலமொழிப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் க்ளாமருக்கு நோ சொல்வதில் ரேவதி பிடிவாதமாக இருந்தாராம். அதேபோல் அதற்கேற்றபடியேதான் கதைகளையும் தேர்ந்தெடுப்பாராம். இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்த ரேவதிக்கு திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.


முன்னாள் கணவர் சுரேஷ் மேனனுடன் ரேவதி

இளம்வயதிலேயே பிரிவு

திரையுலகில் அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலேயே ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார் ரேவதி. ஆனால் குழந்தை இல்லை என்ற காரணத்தாலேயே இருவருக்குமிடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டு, 2000ஆம் ஆண்டு விவாகரத்துக் கோரினர். அதன்பின் தனியாக வாழ்ந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்தார். ஒருவழியாக 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தனர். இந்நிலையில் தனியாக வாழும் ரேவதி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதுபற்றி எதுவும் பேசாமல் தவிர்த்துவந்த ரேவதி 2018ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில், “மஹி, நான் 10 மாதம் சுமந்துபெற்ற பிள்ளை. பலரும் அவளை நான் தத்தெடுத்து வளர்க்கிறேன் என்று சொல்கிறார்கள். தாய்மை ஒரு பெண்ணுக்கு எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு நன்றாக தெரியும். செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் நான் குழந்தை பெற்றுக்கொண்டேன். அவள்தான் என் மஹி. எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் விருதுகள் வாங்கியிருந்தாலும் என் மஹியின் முகத்தை பார்த்த தருணத்தைதான் என் வாழ்க்கையிலேயே சிறந்த தருணமாக கருதுகிறேன். இதுகுறித்து பரவும் வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டார். இப்படி தனது 47வது வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட ரேவதி, தனது மகளை பொதுவெளிகளில் காட்டவும் விரும்பவில்லை. தனது திருமண வாழ்க்கை குறித்து கூறுகையில், மேலும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு பிறகு நிதானமாக திருமணம் செய்திருக்கலாம் என்கிறார் தனக்கே உரித்தான வருத்தம் கலந்த புன்னகையுடன். ரேவதி ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ‘மிட்டர், மை ஃப்ரண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தையும், ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்தையும் இயக்கியிருக்கிறார். தான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்திலிருந்தே திரைப்பட யூனிட் என்றாலே ஆண்கள்தான் அதிகம் இருப்பார்களாம். அதனாலேயே தனது ஷூட்டிங் செட்டில் பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் என்று விரும்புவாராம். இப்படி பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஒரு இயக்குநராகவும் வலம்வருகிறார் ரேவதி.

Updated On 15 July 2024 11:38 PM IST
ராணி

ராணி

Next Story