(23.08.1981 தேதியிட்ட 'ராணி' இதழில் வெளியானது.)
"படிக்கும் பொழுது, நடித்து பரிசு பெறுவது போல கனவு கண்டேன். அது பலித்து இருக்கிறது" என்று கூறுகிறார், புதுமுகம் ராதா.
"அலைகள் ஓய்வதில்லை" படத்தின் கதாநாயகி, புது மலர் ராதா. இளம் வயது. மாநிறம். செழுமையான உடல்! சிரித்தால், தெத்துப்பல் தித்திக்க வைக்கிறது!
ராதாவுக்கு முதல் படமே அமோக விளம்பரத்தை தேடிக் கொடுத்து விட்டது. தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு ராதாவை சுற்றத் தொடங்கி விட்டார்கள்!
உதய சந்திரிகா
மழலைத் தமிழ் பேசும் ராதா, மலையாளத்தில் இருந்து இறக்குமதி ஆனவர். உண்மையான பெயர் உதய சந்திரிகா. ராதா என்று பெயர் சூட்டியவர் பாரதிராஜாதான்" என்று பூரிப்போடு சொல்லுகிறார், ராதா.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் மற்றும் ராதா
அம்பிகா
ராதாவுக்கும் சினிமாவுக்கும் ஏற்கனவே தொடர்பு உண்டு! ராதாவின் அக்காள் அம்பிகா, தமிழ், மலையாளம் , தெலுங்கு படங்களில் நடித்து கொண்டு இருப்பவர்.
ஆனால், ராதாவை சினிமாவுக்கு இழுத்துக் கொண்டு வந்தவர், "குரு" படத் தயாரிப்பாளர் பிரகாஷ் தானாம்! (கதாநாயகன் கார்த்திகை நடிகர் ஆகியதும் இந்த பிரகாஷ்தான் என்று, முத்துராமன் கூறினார்)
ராதாவின் படத்தை பாரதி ராஜாவிடம் கொண்டு போய் பிரகாஷ் கொடுத்தார். படத்தைப் பார்த்ததும், ராதாவை பாரதிராஜாவுக்குப் பிடித்துவிட்டது. "உடனே, ராதாவைப் பார்க்க வேண்டும்" என்றார்!
"பாரதிராஜா அழைத்து வரச் சொன்னதும், என் அம்மாவும் அக்காளும் என்னை கூட்டிப் போனார்கள். எனக்கு பயமாக இருந்தது. என்னைப் பார்த்ததும், பாரதிராஜா "சிரி" என்றார். சிரித்தேன். "அழுது காட்டு" என்றார். கிளிசரின் இல்லாமலே அழுதேன். பிறகு, "நடிக்கிறாயா?" என்று கேட்டார். நான் என் அம்மாவையும் அக்காவையும் பார்த்தேன். "சரி" என்று சொல்லு என்றார், அம்மா, நான் தலையை ஆட்டினேன். அப்போதே என்னை "அலைகள் ஓய்வதில்லை" படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள்" என்று சொன்னார் ராதா.
அக்கா அம்பிகாவுடன் ராதா
சண்டை இல்லை
நிருபர்: நீங்கள் நடிப்பதால், உங்கள் அக்காவுக்கு மார்க்கெட்டு குறையாதா?
ராதா: அப்படி என் அக்காள் நினைத்து இருந்தால், என்னை நடிக்க வேண்டாம் என்று சொல்லியிருப்பாள். நான் உற்சாகத்தோடு நடிக்க ஒப்புக் கொண்டதற்குக் காரணமே. அம்பிகா கொடுத்த ஊக்கந்தான்! படப்பிடிப்பில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போல. எனக்கு சொல்லித் தந்தாள், அம்பிகா. என் மீது அம்பிகாவுக்கு பிரியம் அதிகம். எனக்குத் தேவையான துணிகள் எடுத்துத் தருவது கூட அம்பிகா தான்.
நிரு: இனிமேல் உங்கள் இருவர் இடையே தொழிலில் போட்டி---பொறாமை எழாதா?
ராதா: போட்டி--பொறாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் இருவர் சம்பாதிப்பதும், எங்கள் குடும்பத்துக்குத் தானே! நாங்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிடுபவர்கள்!
நிரு: அப்படியென்றால், இருவரும் ஒருவரையே திருமணம் செய்து கொள்வீர்களா?
ராதா: ச்சீ...போங்க, சார்! ( ராதா வெட்கப்படும் போதும் அழகாகத்தான் இருக்கிறார்)
பட்டம்
ராதா இப்பொழுது 12-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறார். "நடித்துக் கொண்டு இருந்தாலும், தொடர்ந்து படித்து பட்டம் பெறுவேன்" என்கிறார், ராதா.
விழா ஒன்றில் ராதா, அக்கா அம்பிகாவுடன்
அம்மா
ராதாவின் அம்மா, சரசம்மாள், கேரளாவில் இ. காங்கிரஸ் பேச்சாளர். பல-சமூக நிறுவனங்களிலும் நிர்வாகியாக இருந்து வந்தார். இப்பொழுது, சமூக சேவைக்கு "டாடா" காட்டி விட்டு, மகள்களின் (அம்பிகா--ராதா) "கால்ஷீட்டு" விவகாரங்களை கவனித்து வருகிறார். அப்பா என்.கே. நாயர்.
ராதாவுக்கு இன்னோர் அக்காள் உண்டு, (அம்பிகாவுக்கு அடுத்தவர்) பெயர் மல்லிகா. கல்லூரியில் படித்து வருகிறார்.
நிரு: இளம் நடிகையான உங்களிடம், சினிமா உலகில் எப்படி பழகுகிறார்கள்.
ராதா: என் அம்மா பழக விட்டால் தானே! அவர் மிகவும் கண்டிப்பானவர். கோபம் வந்தால் அடித்தே விடுவார். நான் பலமுறை அம்மாவிடம் அடி வாங்கியிருக்கிறேன்.
நிரு: அது முன்பு. இப்பொழுது நீங்கள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டீர்களே!
ராதா: நான் சம்பாதித்தாலும், அம்மாவுக்கு மகள்தானே!
நிரு: முதல் படத்திலேயே காதலனோடு ஓடுவது போல நடித்தீர்கள். சொந்த வாழ்க்கையில் அது போல எதுவும் உண்டா?
"அய்யய்........யோ!" என்று ராதா பல்லைக் கடித்தார்.
ராதா அவரின் அம்மாவுடன்
உடனே அருகே இருந்த ராதாவின் அம்மா பேசினார்.
"எனக்குத் தெரியாமல் என் பிள்ளைகள் காதலிக்கவும் மாட்டார்கள்; திருமணம் செய்து கொள்ளவும் மாட்டார்கள். அவர்களுக்கு எப்பொழுது திருமணம் செய்து வைப்பது என்று எனக்குத் தெரியும். என் மகள்களை நிரந்திர நடிகையாக்க நான் விரும்ப வில்லை. இரண்டு பேருக்கும் 21 வயதில் திருமணம் செய்து வைத்துவிடுவேன்" என்று சொன்னார், சரசம்மாள்!
அப்படியென்றால், அம்பிகாவுக்கு இப்பொழுது எத்தனை வயது?
"எனக்கு வயது 16 ஆகிறது" என்று சொல்லுகிறார், ராதா.
ராதா இன்னும் வீடு பார்த்து குடியேறவில்லை. சென்னையில் உள்ள ஓர் ஓட்டலில் அக்கா அம்பிகாவோடு தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
"நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?" என்று கேட்டதற்கு, "மாடர்ன் ஆக உடுத்துவதை நான் கவர்ச்சி என்றோ, ஆபாசம் என்றோ கருதுவது இல்லை. நீச்சல் உடையில் தோன்றுவதைக் கூட ஆபாசம் என்று கூறிவிட முடையாது. ரசிகர்களை சுண்டி இழுக்கக் கவர்ச்சியாக நடிப்பேன். ஏனென்றால் , எனக்கு ரசிகர்கள் தேவை. அப்பொழுது தான் நான் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும்" என்றார், ராதா.