இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர், நடிகைகள் என்றாலே ஃபிட்டாக இருக்கவேண்டும். அப்போதுதான் மார்க்கெட் கிடைக்கும் என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்து காட்டிய சில நடிகைகளில் நித்யா மேனனும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகை ஆவார். கிட்டத்தட்ட 6 மொழிகளை சரளமாக பேசக்கூடிய இவர் ஒரு பாடகியும்கூட. கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் முக்கியத்துவம் மிக்க சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் நித்யா மேனன், நிஜ வாழ்க்கையிலும் தைரியமிக்க பெண்ணாகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் பலரின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவருடைய திரைப்பயணம் மற்றும் வளர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

நடிப்புதான் என் துறையா?

கர்நாடகாவிலுள்ள ஒரு மலையாள தம்பதியருக்கு பிறந்தவர் நித்யா மேனன். பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்த நித்யாவிற்கு ஆரம்பத்தில் ஜர்னலிசத்தின் மீதுதான் ஆர்வம் இருந்திருக்கிறது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன் கல்லூரியில் சேர்ந்து மாஸ் கம்யூனிகேஷன் படித்த நித்யாவிற்கு, தனது கருத்துகளை வெளிப்படுத்த சிறந்த இடம் பத்திரிகை துறை அல்ல என்ற எண்ணம் மேலோங்கவே திரைத்துறையை தேர்ந்தெடுத்தார். அதனால் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டு புனேவிலுள்ள FTI-இல் ஒளிப்பதிவு படிப்பை மேற்கொள்ள அங்கு நுழைவுத் தேர்வு எழுத சென்றபோதுதான் பி.வி. நந்தினி ரெட்டியை சந்தித்திருக்கிறார். அவருடைய தூண்டுதலின்பேரில் நடிப்பை தனது துறையாக தேர்ந்தெடுத்தார் நித்யா.


குழந்தை நட்சத்திரம் மற்றும் அறிமுக திரைப்படங்களில் நித்யா

ஆனால் கதாநாயகியாக அறிமுகமாகும் முன்னரே, தனது 8 வயதில் பிரெஞ்சு - இந்திய ஆங்கில மொழித் திரைப்படமான ‘ஹனுமான்’ (1998) என்ற திரைப்படத்தில் தபுவின் தங்கையாக திரையில் தோன்றியிருந்தார் நித்யா. அதேபோல் 2007 -இல் ஒரு கன்னட படத்தில் துணை கதாபாத்திரத்திலும், 2008-இல் ‘ஆகாஷ கோபுரம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லால் ஜோடியாகவும் நடித்தார். இதன்மூலம் திரையுலகில் இவரது முகம் தெரிய ஆரம்பித்தது. அந்த படத்தில் அவரது நடிப்பிற்காக 57வது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருதும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் 12ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். இதனிடையே 2009ஆம் ஆண்டு ‘ஜோஷ்’ என்ற கன்னட படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. அதே ஆண்டு, ‘வெள்ளத்தூவல்’, ‘ஏஞ்சல் ஜான்’, ‘கேரளா கஃபே’ போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு தன்னுடைய எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணிய நித்யா, படிப்பின்மீது கவனம் செலுத்தினார். பத்திரிகை துறைக்குள் நுழைய விரும்பினார். இருப்பினும் அவர் விட நினைத்தாலும் நடிப்பு அவரை விடவில்லை என்றே சொல்லலாம். 2011ஆம் ஆண்டு நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘அட மொடலைண்டி’ என்ற நகைச்சுவை தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் - தெலுங்கு மொழிகளில் ஜெயேந்திரா இயக்கிய ‘180’ திரைப்படம்மூலம் சித்தார்த், பிரியா ஆனந்துடன் இணைந்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். இது 2011ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.


பாடகியாக நித்யா மேனன்

சிங்கராக உருவெடுத்த நித்யா

தெலுங்கு, தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிவந்த நிலையில் தமிழில் துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்த ‘ஓகே கண்மணி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமானார். தொடர்ந்து காஞ்சனா 2, 24, இருமுகன், மெர்சல், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களின் மூலம், பரிச்சயமான தமிழ் நடிகைகளில் ஒருவரானார். இதற்கிடையே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்ற நித்யா, பின்னர் ஒரு பாடகியாகவும் உருவெடுத்தார். தனது முதல் ஆல்பம் வெளியானபோது நித்யா மேனன் ஒரு நேர்காணலில், “சிறு வயதிலிருந்தே எனக்கு பாட பிடிக்கும். அந்த ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது. எனக்கு 6 மொழிகள் தெரியும். எனது முதல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால் என்னுடைய கனவு இயக்குநராக வேண்டும் என்பதுதான். அதையும் கூடிய விரைவில் நிறைவேற்றுவேன்” என்று கூறியிருந்தார். இதுதவிர எந்த மொழிப் படங்களில் நடித்தாலும் தனது சொந்த குரலில் டப் செய்வதைத்தான் நித்யா விரும்புவாராம். 2019ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஃப்ரோசன் 2’ படத்தில் எல்சா கதாபாத்திரத்திற்கு தெலுங்கு டப்பிங் செய்திருந்தார்.


தமிழில் மெகா ஹிட்டடித்த நித்யா மேனனின் கதாபாத்திரங்கள்

உடலுக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம்?

நடிகைகள் என்றாலே ஸ்லிம்மாக இருக்கவேண்டும்... அப்போதுதான் வாய்ப்புகள் தொடர்ந்து தேடிவரும் என்ற கருத்தை உடைத்துக் காட்டிய நடிகைகளில் நித்யாவும் ஒருவர். படத்திற்கு படம் தனது ஆத்மார்த்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பின்மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சினிமாவில் அறிமுகமான காலத்தில் ஸ்லிம்மாக இருந்த நித்யா, ஓரிரு ஆண்டுகளில் எடை அதிகரித்து குண்டாகிவிட்டார். அதனால் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தாலும், அவர் குண்டாக இருப்பதாக கமெண்ட்ஸ்களும் வந்துகொண்டேதான் இருந்தன. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு, அவருக்கு உடல் எடை மிகவும் அதிகரித்திருந்த சமயத்தில், “பலரும் எனக்கு உடல் எடை அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எடை அதிகரிக்க, உடலில் ஏதேனும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது. அனைத்து பிரச்சினைகளையும் ஓபனாக பேசவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால், என்னுடைய உருவம் எப்படியிருக்கிறது என்பதை மட்டுமே சினிமா உலகம் பார்க்கிறது” என்று வருத்தப்பட்டார்.


உடல் எடை அதிகரித்த நித்யா மேனன்

அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் சற்று குறையவே, கடுமையான உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து, கஷ்டப்பட்டு ஒருவழியாக தனது பழைய உடல்வாகை கொண்டுவந்தார். இருப்பினும், ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நித்யாவின் புகைப்படங்கள் இணையங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ‘எங்கள் கண்மணிக்கு என்ன ஆச்சு?’ என்று ரசிகர்களே அதிர்ச்சியடைந்து கேட்கும்படியாக உடல் எடை ஏறியிருந்தது. இதனால் கவலையடைந்த நித்யா மீண்டும் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

திருமணம் எப்போது?

உடல் எடை குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் என்ற வதந்திகளும் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கின்றன. பொதுவாகவே நடிகர், நடிகைகள் என்றாலே திருமணம் மற்றும் காதல் குறித்த கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும். அதிலும் குறிப்பாக 30 - ஐ தொட்ட நடிகைகளுக்கு காதல் இல்லையென்றால் திருமணம் குறித்த வதந்திகள் இல்லாமல் இருக்காது.


நித்யா மேனன் - விஷால் ரஞ்சன் மிஸ்ரா - விவேக் ஓபராய்

அதுபோலவே நித்யாவும், பிரபல மலையாள நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், அது முற்றிலும் பொய் எனவும், இதுபோன்ற தகவல்களை பரப்புவதற்கு முன்பு, ஊடகங்கள் உண்மையை சரிபார்க்க வேண்டும் எனவும் அவர் விளக்கம் அளித்திருந்தார். ஒருபுறம் தீவிரமாக எடையை குறைக்கும் நித்யா, தற்போது இந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் ‘மர்டர் மிஸ்டரி’ திரைப்படத்தில் நடிக்கும் நித்யாவுடன், விவேக் ஓபராய், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனிடையே, வெப் தொடர்களிலும் கவனம் செலுத்திவரும் இவர், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Updated On 2 Jan 2024 12:03 AM IST
ராணி

ராணி

Next Story