இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பேசும்போதே படபடக்கும் அழகிய கண்கள், எப்போதும் சிரித்த முகம், மென்மையான குரல் என நடிப்பைத் தாண்டி பலரின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மிக இளம்வயதிலேயே பல மொழிகளின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சினார். திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் தொடர்ந்து மீடியா வெளிச்சத்திலேயே இருந்துவந்த மீனாவினுடைய கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் உடல்நலக் குறைவால் காலமானார். அதில் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த மீனாவை அவரது தோழிகள் சமாதானம் செய்து மீண்டும் நடிப்பதற்கு ஊக்குவித்தனர். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தனது கஷ்டத்திலிருந்து மீண்டுவரும் மீனா குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, மகளுடன் தனியாக வாழும் இவருக்கு அரசியல்வாதியுடன் தொடர்பு, இரண்டாம் திருமணம், கவர்ச்சியான நடிப்பு என விமர்சித்து பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. ஒரு கட்டத்தில் கோபமடைந்த மீனாவும், தன்னைப் பற்றி பரவும் செய்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக கோலோச்சிய மீனா

ஆந்திராவைச் சேர்ந்த துரைராஜ், கேரளாவைச் சேர்ந்த ராஜமல்லிகா தம்பதியின் மகள்தான் மீனா. 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், படித்தது வளர்ந்தது எல்லாமே இங்குதான். சிறுவயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்ட மீனா, அப்போதே குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகமானார். எல்லாருக்கும் அதிர்ஷ்டம் ஏதோ ஒரு கட்டத்தில்தான் அடிக்கும் என்பார்கள். ஆனால் மீனாவுக்கோ முதல் படத்திலிருந்தே அதிர்ஷடம் அடிக்கத் தொடங்கியது. ஏனென்றால், இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதே சிவாஜி கணேசனின் ‘நெஞ்சங்கள்’ திரைப்படத்தில்தான்.


‘நெஞ்சங்கள்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா

முதல்படத்திலேயே நடிகர் திலகத்துடன் நடித்து அசத்திய இவருக்கு, அடுத்து ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அதனைத் தொடர்ந்து ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்திலும் ரஜினியுடன் சேர்ந்து நடித்தார். ரோஸி என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் இந்த படத்தில் மாற்றுத்திறனாளி ரோஸியாக நடித்து அசத்தினார். அந்த படத்தில் ‘ரஜினி அங்கிள் ரஜினி அங்கிள்’ என மீனா சூப்பர் ஸ்டாரை அழைத்தது இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. இதனால் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் மீனாவை தேடிவந்தன. 1980களில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் பல மொழிகளில் கிட்டத்தட்ட 45 படங்களில் நடித்திருக்கும் மீனாவால் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. இருப்பினும், திறந்தவெளி பல்கலைக்கழகத்தின்மூலம் முதுகலை படிப்புவரை படித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் சரளமாக பேசும் நடிகை என்ற புகழும் மீனாவைச் சேரும்.

சூப்பர் ஸ்டார்களின் ஹீரோயின்!

1990ஆம் ஆண்டு ‘நவயுகம்’ திரைப்படம் மூலம் முதலில் தெலுங்கில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டு ‘ஒரு புதிய கதை’ படத்தின்மூலம் தமிழிலும் ஹீரோயினாக நடித்தார். இப்படி ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் ராஜ்கிரணுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படம்தான் மீனாவுக்கு மக்கள் மனங்களில் ஒரு கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘குயில் பாட்டு வந்ததென்ன ஓ மானே!’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.


கதாநாயகியாக மீனாவிற்கு ஹிட் கொடுத்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில்

அதன்பிறகு ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், அஜித், சரத்குமார், சத்யராஜ், அர்ஜுன் போன்ற 90 மற்றும் 2000களின் முன்னணி தமிழ் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்தார். இருப்பினும் அப்போது சக்சஸ்ஃபுல் ஹீரோவாக உருவெடுத்துக்கொண்டிருந்த விஜய்யுடன் இவரால் ஜோடி சேரமுடியவில்லை என்பது குறித்து வருத்தப்படுவதாக பலமுறை நேர்காணல்களில் அவரே தெரிவித்திருக்கிறார். கால்ஷீட் பிரச்சினைதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், மீனா பார்ப்பதற்கு அப்படியே விஜய்யின் மறைந்த தங்கை வித்யா போன்றே இருப்பதால் அவருடன் ஜோடியாக நடிக்க விஜய் விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனாலேயே மீனாவின் ஆசைக்காக ‘சரக்கு வெச்சிருக்கேன்’ பாடலில் மட்டும் அவருடன் குத்தாட்டம் போட ஒத்துக்கொண்டார் என அப்போது பத்திரிகைகளில் எழுதினர்.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்து மீனாவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, முதலில் ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் நடிக்க மீனாவுக்குத்தான் வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சினையால்தான் விஜய்யுடன் நடிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இருப்பினும் தனது மகள் நைனிகா ‘தெறி’ படத்தில் விஜய்யுடன் நடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த மீனாவுக்கு ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘பொற்காலம்’ படங்கள் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுக்கொடுத்தன.


‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா

இதனிடையே ‘பர்தா ஹை பார்தா’ மற்றும் ‘புத்னஞ்சா’ ஆகிய படங்கள்மூலம் இந்தி மற்றும் கன்னடம் மொழிகளிலும் ஹீரோயினாக அறிமுகமானார். மீனா நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவரும்கூட. ரஜினியுடன் மீனா ஜோடி சேர்ந்தாலே ஹிட்தான் என அப்போதைய ஊடகங்கள் இவரை கொண்டாடித் தீர்த்தன. அதனை உறுதி செய்யும் விதமாக ‘முத்து’ படம் இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பான் வரை ரிலீஸாகி அங்கும் கொண்டாடப்பட்டது. அடுத்து சேரன் இயக்கி நடித்த ‘பொக்கிஷம்’ படத்தில் கதாநாயகிக்கு பின்னணி குரல் கொடுத்த மீனா, சில படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். பல்வேறு படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, தமிழக விருதுகள் உட்பட, நந்தி விருது, ஃபிலிம் ஃபேர், கலைமாமணி போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

காதல் டூ கல்யாணம்

2000களின் கனவுகன்னியாக கொடிகட்டி பறந்த மீனா மீது சரத்குமார் உட்பட பல ஹீரோக்களுக்கு காதல் வந்திருக்கிறது. ஆனாலும் அவர்களுடைய காதலை ஏற்க மறுத்த மீனாவுக்கு ‘டபுள்ஸ்’ திரைப்படத்தில் நடித்தபோது, பிரபுதேவாவுடன் காதல் வளர்ந்திருக்கிறது. அதனாலேயே அந்த படத்தில் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டதாக ஊடகங்கள் விமர்சித்தன. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அந்த காதலுக்கு என்டு கார்டு போட்டுவிட்டு, வீட்டில் பெற்றோர் பார்த்துவைத்த கர்நாடகா பிசினஸ்மேன் வித்யாசாகர் என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். குடும்பம், குழந்தை மற்றும் பிசினஸ் என படுபிஸியாக ஓடிக்கொண்டிருந்த மீனாவை தொடர்ந்து நடிக்கச்சொல்லி அவரது கணவர் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பாராம். அவருடைய சம்மதத்தின் பேரில்தான் தனது மகள் நைனிகாவையும் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார் மீனா.


வித்யாசாகர் - மீனாவின் திருமண புகைப்படம்

தொடர்ந்து ‘திரிஷ்யம்’, ‘ஷைலாக்’, ‘அண்ணாத்தே’ போன்ற படங்களில் தலைகாட்டினாலும், இடையிடையே பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இப்படி மீனாவுக்கு உறுதுணையாக இருந்துவந்த கணவர் வித்யாசாகர், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் உயிருக்கு உயிராக நேசித்த கணவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத மீனா, அவருடைய இறுதிச்சடங்கு அனைத்தையும் தானே நடத்தி முடித்ததுடன், அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். அவருடைய நெருங்கிய தோழியும் நடன இயக்குநருமான கலா மற்றும் ஒருசில நடிகைகள்தான் அவருக்கு உறுதுணையாக நின்று துக்கத்திலிருந்து மீண்டு வர உதவியதாகவும், மேலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஊக்கப்படுத்தியதாகவும் சமீபத்திய பேட்டிகளில் மீனா தெரிவித்திருகிறார். இந்நிலையில்தான் மீனா குறித்து பல்வேறு தகவல் பரவி வருகின்றன.

மீனா பதிலடி

கணவரின் இறப்புக்கு பிறகு தற்போது படங்களில் நடித்துவரும் மீனா, ஒரு மலையாள படத்தில் கவர்ச்சியான படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. திருமணத்துக்கு முன்புகூட கவர்ச்சிகாட்டாத மீனா, ஏன் இப்போது இப்படி இறங்கிவிட்டார் என சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்தனர். இதையடுத்து, அந்த படத்தின் கதை பிடித்துப்போனதால்தான் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டதாக மீனாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதுபோக, சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் மீனா மட்டும் கலந்துகொள்ள, அவர்களுடன் மீனாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. மேலும் விவாகரத்தான ஒரு நடிகருடன் மீனாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் தகவல்கள் பரவின. இதனால் கணவரின் இறப்புக்கு பிறகு மீனா ஏன் இப்படி மாறிவிட்டார் என கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழுந்தன.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், பொதுவெளியில் பிரபலமாக இருப்பதால் நடிகர் நடிகைகளைப் பற்றி தவறான செய்திகளை ஒளிபரப்பும் சில யுடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவை ஆமோதிக்கும் வகையில்தான் மீனா, “அவரவர் வலி அவரவருக்கு மட்டும்தான் தெரியும். வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள். முட்டாள்தனமாக செய்திகளை பரப்புகின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறிப்பாக பெண்களை மோசமாக தாக்குகின்றனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிப்பட்ட நபர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது” என்று தனது காட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் மீனா இன்னும் தனது கணவரை இழந்த வருத்தத்தில் இருந்து வெளிவரவில்லை எனவும், இதுபோன்று நடிகர் நடிகைகள் குறித்து தவறான செய்திகளை பரப்பும் யுடியூப் சேனல்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Updated On 13 Aug 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story