இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘ஐசி டால்’ என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம்வந்த காஜல் அகர்வாலின் அழகிய கண்கள் மற்றும் சிரிப்புக்கென்றே தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருந்தார். திரை பின்னணி இல்லாமல் மாடலிங், கதாநாயகியின் தோழி, தோல்வியைத் தழுவிய முதல் படம் என தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய காஜல், குறுகிய காலத்திலேயே தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என முன்னணி நடிகைகளில் ஒருவரானார். தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட காஜல், தற்போது கணவர், குழந்தையுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஓரிரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் கமிட்டாகிவரும் காஜல், தற்போது கமலுடன் ‘இந்தியன் - 2’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து வரிசையாக பல படங்களை கைவசம் வைத்திருக்கும் காஜலின் திரைப்பயணம், குடும்ப வாழ்க்கை மற்றும் கம்பேக் குறித்தெல்லாம் சற்று பார்க்கலாம்.

ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்விகள்

பஞ்சாபை பூர்வீகமாகக்கொண்ட ஜவுளி தொழிலதிபர் வினய் அகர்வால். அவருடைய மனைவி சுமன் அகர்வால் மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார். இந்த பிசினஸ் குடும்பத்தின் மூத்த மகள்தான் காஜல் அகர்வால். பிசினஸ் நிமித்தமாக பெற்றோர் மும்பையில் செட்டிலாகிவிட்டதால் காஜலும் அவருடைய தங்கை நிஷா அகவர்வாலும் அங்குதான் பிறந்து வளர்ந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை மும்பையிலேயே முடித்த காஜல், தனது பெற்றோரைப்போலவே தானும் ஏதேனும் ஒரு பிசினஸில் இறங்கவேண்டும் என்ற கனவுகளுடன் எம்.பி.ஏ. படிக்கும் எண்ணம் கொண்டிருந்தார்.


அப்பா மற்றும் சகோதரியுடன் காஜல் அகர்வால் - காஜலின் சிறுவயது புகைப்படம்

இதற்கிடையே மாடலிங்கில் ஈடுபட்டுவந்த காஜல் தனது கட்டுக்கோப்பான உடலமைப்பு, பெரிய கண்கள் மற்றும் அழகிய சிரிப்புக்காகவே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் ஹீரோயினாக அல்ல; ‘க்யூன்..! ஹோ கயா நா’ படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராயின் தோழியாக திரையுலகில் அறிமுகமானார். இதுபோன்றுதான் திரிஷா, ஸ்ரேயா சரண் போன்றோரும் முதலில் ஹீரோயினுக்கு தோழியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார்கள். முதல் படத்தில் காஜலின் கதாபாத்திரம் அந்த அளவிற்கு பேசப்படவில்லை என்றாலும், அடுத்து 2007ஆம் ஆண்டு ‘லக்‌ஷ்மி கல்யாணம்’ திரைப்படத்தின்மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அப்படம் வெற்றிபெறவில்லை. இருப்பினும் காஜலுக்கு அடுத்த பட வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அடுத்த ஆண்டே இவர் நடிப்பில் வெளியான ‘சந்தாமாமா’ திரைப்படம் வெற்றிபெறவே, தமிழ்ப்பட வாய்ப்பு காஜலை தேடிவந்தது. பேரரசு இயக்கத்தில் பரத்துடன் காஜல் ஜோடியாக நடித்த ‘பழனி’ திரைப்படத்தில் க்யூட் ரியாக்‌ஷன்ஸ் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார்.

வெற்றிக்கனியை எட்டிப்பிடித்த காஜல்

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்தாலும் காஜல் அகர்வாலை ஒரு கனவு கன்னியாக, முன்னணி ஹீரோயினாக உருவாக்கியது ‘மகதீரா’ திரைப்படம். இப்படம் தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் காஜல் நடித்த இரண்டு கதாபாத்திரங்களுமே சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன. மேலும் பல விருதுகளையும் பெற்றார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார். இதற்கிடையே 2011ஆம் ஆண்டு ‘சிங்கம்’ என்ற படத்தின்மூலம் இந்தி திரையுலகிலும் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘ஜில்லா’, ‘மாரி’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ போன்ற திரைப்படங்களின்மூலம் விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி என முன்னணி தமிழ் ஹீரோக்களின் கதாநாயகியானார்.


காஜல் அகர்வாலை முன்னணி கதாநாயகியாக மாற்றிய கதாபாத்திரங்கள்

குறிப்பாக, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் சித்ரா தேவி பிரியா மற்றும் ‘துப்பாக்கி’யில் நிஷா போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த கதாபாத்திரங்கள் குறித்து சமீபத்தில் நினைவுகூர்ந்த காஜல், தனக்கு காமெடி கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். அதுபோன்ற கதைகளில் என்ஜாய் செய்து நடிப்பாராம். ஆனால் அதற்கடுத்து வெளியான சில படங்கள் ஒரே மாதிரி இருப்பதாகவும், காஜல் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகின. குறிப்பாக, ‘பாயும் புலி’, ‘சர்தார் கப்பர் சிங்’, ‘பிரம்மோத்ஸவம்’, ‘தோ லஃப்ஸோன் கி கஹானி’ போன்ற படங்கள் தோல்விப்படங்களாக அமைந்தன. இதற்கிடையே காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால் திருமணம் செய்துகொண்டு குழந்தைபெற்ற நிலையில் காஜல் எப்போது திருமணம் செய்துகொள்வார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு ஓரிரு படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில் தனது திருமணம் குறித்து அறிவித்தார் காஜல். நடிப்பு தவிர, பானசோனிக், டாபர் ஆம்லா, கிரீன் ட்ரெண்ட்ஸ், சென்னை சில்க்ஸ், கஜானா ஜுவல்லரி, லக்ஸ், பாண்ட்ஸ், அரோமா தயிர் மற்றும் பால் பொருட்கள், சாம்சங் மற்றும் பூர்விகா போன்ற ப்ராண்டுகளின் தூதராகவும், விளம்பர மாடலாகவும் வலம்வந்தார் காஜல் அகர்வால்.

காதல் திருமணமும் குழந்தையும்

அடுத்தடுத்து திரைப்படங்களை கையில் வைத்திருந்தாலும் கொரோனா காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே முடங்கியிருந்த சமயத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் காஜல். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிட்சலு என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.


கணவர் கௌதம் கிட்சலு மற்றும் குழந்தை நீலுடன் காஜல்

ஊரடங்கு சமயம் என்பதால் நெருங்கிய நண்பர்களைக் கூட அழைக்க முடியவில்லை என வருத்தப்பட்டாலும் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் முன்னிலையில் நட்சத்திர ஹோட்டலில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றது. கொரோனா காரணமாக முதலில் வீட்டிலேயே வைத்து திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தாலும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஹோட்டலில் வைத்து நடைபெற்றது காஜல் - கௌதம் திருமணம். திரையுலகினர் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இவர்களுடைய திருமண புகைப்படங்களும் அப்போது சமூக ஊடகங்களில் வைரலாகின. 2022ஆம் ஆண்டு இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக நீல் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் காஜல். கர்ப்பகாலத்தில் மட்டும் திரையுலகிலிருந்து சற்று விலகியிருந்த இவர், அதற்கு முன்பே கமிட்டாகியிருந்த ‘இந்தியன் - 2’ திரைப்பட ஷூட்டிங்கில் மீண்டும் கலந்துகொண்டார்.

உடல் எடையை இப்படித்தான் குறைத்தேன்

ஆனால் திரைப்படங்களில் மீண்டும் நடிப்பதற்கு முன்பு கர்ப்பம் காரணமாக ஏறியிருந்த உடல் எடையை குறைப்பது காஜலுக்கு மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறியிருக்கிறார். எடை குறைப்பு குறித்து அவர் பகிர்கையில், கர்ப்பகாலத்தில் 70 கிலோ வரை ஏறியிருந்த எடையை, குழந்தைப்பிறப்புக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படி, நீச்சல் மற்றும் கடுமையான டயட் மூலம் குறைத்தாராம். குறிப்பாக, வேகவைத்த முட்டை, ஊறவைத்த நட்ஸ், சாலட்ஸ், கீரைகள், பழங்கள், ஸ்மூத்தி, ஜூஸ் போன்றவைதான் காலை உணவாம். மதியத்திற்கு ப்ரவுன் ரைஸும், காய்கறிகளும் சாப்பிட்டாராம். இவற்றுடன் முக்கியமாக எப்போதும் வெந்நீர் குடித்துவந்துள்ளார்.


‘சத்யபாமா’ மற்றும் ‘உமா’ திரைப்பட போஸ்டர்கள்

டயட் போக, காலையில் சூரிய நமஸ்காரம் மற்றும் இரவு உணவுக்கு பிறகு நடைபயிற்சி ஒருநாளும் தவறவில்லையாம். இப்படி கிடுகிடுவென எடையை குறைத்த காஜல் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஷூட்டிங்கில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, கொரோனாவுக்கு முன்பே கமல் நடிப்பில் உருவாகிவரும் ‘இந்தியன் - 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியிருந்தார். எடை குறைப்புக்கு பிறகு அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தற்போது மீண்டும் தெலுங்கில் படுபிஸியாகிவிட்டார். ஜூன் மாதம் ‘இந்தியன் - 2’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காஜல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சத்யபாமா’ திரைப்படம் மே 17ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. ஹாரர் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஏசிபி சத்யபாமா என்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல். அதேபோல் இந்தியில் இவர் நடிப்பில் ‘உமா’ என்ற பெண் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்ட திரைப்படம் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. இடையிடையே போட்டோஷூட்களையும் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் காஜல். இப்போதுள்ள முன்னணி நடிகைகள் பலர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுக்கும் சூழலில் காஜலும் அதே யுக்தியை கையாள நினைக்கிறார் என விமர்சிக்கின்றனர் இணையவாசிகள். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என இவர் நடிப்பில் ஒன்றன்பின் ஒன்றாக படங்கள் வெளியாகி போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 6 May 2024 11:45 PM IST
ராணி

ராணி

Next Story