
90 காலகட்ட தமிழ் திரையுலகில், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவயானி. இயல்பான நடிப்பு, மெல்லிய அழகு, மனதை தொடும் வெளிப்பாடு என தனக்கே உரிய ஒரு தனித்துவத்தை கொண்டிருந்த அவர், சீரியல்களிலும் நடித்து தனித்த கவனம் பெற்றவர் ஆவார். சமீபத்தில் கூட 'கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்று சாதனை படைத்துள்ள தேவயானி, தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் அவ்வப்போதுதான் தோன்றினாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பிரபலமான ஆன்-ஸ்கிரீன் ஜோடிகளில் ஒருவரான சரத்குமாருடன் இணைந்து ‘3BHK’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து மக்களிடத்தில் நல்ல வவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் பற்றியும், தேவயானி - சரத்குமாரின் திரையுலக ஜோடி பொருத்தம் எப்படிப்பட்டது என்பது குறித்தும் விரிவாக இங்கே அலசலாம்.
தேவயானியின் சிறந்த ஜோடி
தமிழ் திரைப்பட உலகில், குறிப்பாக 90-களில், தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் தேவயானி. அவரின் அழகு, இயல்பான நடிப்பு, மென்மையான உடல் மொழி ஆகியவை ஒன்றிணைந்து, அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாற்றியது. 90-களின் தொடக்கத்திலேயே திரைப்படத்துறையில் தனது பயணத்தைத் தேவயானி தொடங்கிய போதிலும், 1996-ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கோட்டை’ திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தை தந்தது. இப்படத்தின் வெற்றியால், அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்தன. அந்த வகையில் அஜித், விஜய், பிரஷாந்த் போன்ற அன்றைய முன்னணி இளம் ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், கமல்ஹாசன், மம்மூட்டி, கார்த்திக், பிரபு, பார்த்திபன், முரளி போன்ற 90-களின் சிறந்த நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவ்வாறு அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்திய அழகு, நயம் மிகுந்த நடிப்பு, உணர்ச்சிப் பூர்வமான வெளிப்பாடு ஆகியவை ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்தன. இருந்தும் தேவயானியின் திரையுலக வாழ்க்கையில் அவர் எத்தனையோ ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், அவருக்கு சிறந்த ஜோடியாக, பொருத்தமான துணையாக இன்றுவரை பார்க்கப்படுபவர் நடிகர் சரத்குமார்தான். இதனை தேவயானியின் கணவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். காரணம் இவ்விருவரும் இணைந்து நடித்த பல படங்கள் ரசிகர்கள் மனதில் இன்றுவரை நீங்கா இடம் பிடித்துள்ளதால்தான்.
‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் கமலியாக தேவயானி - சூர்யாவாக அஜித்
குறிப்பாக தேவயானி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த திரைப்படங்களில் அவர்களின் நேர்த்தியான நடிப்பு, உணர்ச்சி மிகுந்த காட்சிகள், மறக்க முடியாத பாத்திரங்கள் ஆகியவை ரசிகர்களின் மனதில் என்றும் அழியா நினைவுகள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் 1998-ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘மூவேந்தர்’ படத்தில் அடிதடி மிக்க ஆளாக மணிமாறன் என்னும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக வைதேகி என்னும் கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருந்தார். படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின. இதற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் ‘பாட்டாளி’ என்ற படத்தில் சண்முகமாக சரத்குமாரும், சகுந்தலாவாக தேவயானியும் இணைந்து நடித்தனர். இப்படம் இருவருக்கும் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ‘ஒருவன்’, ‘சமஸ்தானம்’, ‘தென்காசி பட்டணம்’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என்று பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள், ரசிகர்களுக்கு விருப்பமான மிகச்சிறந்த ஜோடியாக அடையாளம் பெற்றனர். இதில் ‘தென்காசி பட்டணம்’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படங்களில் நேரடி ஜோடியாக இல்லாவிட்டாலும் ஒரே படத்தில் இணைந்து நடித்தனர் என்ற பெயர் கிடைத்தது. இப்படி எத்தனையோ படங்களில் இவ்விருவரும் இணைந்து நடித்து பல மறக்க முடியாத நினைவுகளை நமக்கு தந்திருந்தாலும், இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த முதல் படமான 'சூர்யவம்சம்' திரைப்படத்தை மட்டும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. காரணம் இப்படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் என்பது அப்படிப்பட்டது.
'மூவேந்தர்' திரைப்படத்தில் மணிமாறன் - வைதேகியாக சரத்குமார், தேவயானி
'சூர்யவம்சம்' மறக்க முடியுமா?
‘சூர்யவம்சம்’, 1997-ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ஒரு மெகாஹிட் திரைப்படம். சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க, தேவயானி, ராதிகா, மணிவண்ணன் என பலர் நடித்திருந்த இப்படம், 90ஸ் கிட்ஸ்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்த ஒரு அற்புதமான படைப்பாகும். சக்திவேல் கவுண்டர், அவரது மகன் சின்ராசு மற்றும் அவர் மனைவி நந்தினி ஆகியோரின் வாழ்க்கையை மிகவும் அழகாக பதிவு செய்த இத்திரைப்படம் என்றுமே பல உணர்வுப்பூர்வமான தருணங்களை தாங்கி நிற்கிறது. குறிப்பாக இப்படத்தில் வரும் , "ரோசா பூ சின்ன ரோசா பூ" பாடல் இன்றும் மக்களால் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பாடலாக உள்ளது. இதற்கு இணையாகவே, தேவயானி, சரத்குமார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் காட்சி, “பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்” என்ற வசனம், இட்லி-உப்புமாவை இல்லத்தரசிகளுக்கு அறிமுகப்படுத்திய நிகழ்வு, “படிச்ச நான் எங்க, படிக்காத நீ எங்க” எனும் வசனத்திற்கு எதிர்வினையாக வரும் “காலம் எந்தளவு வேகமா சுழலுது பாத்தீங்களா” போன்ற தருணங்கள் இன்றும் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கின்றன. குறிப்பாக வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய 'நட்சத்திர ஜன்னலில்' பாடல், ஒரு பாடலுக்குள் நிகழ முடியாத கற்பனையே என்றாலும், அந்த அனுபவம் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்தால் எப்படி இருக்கும் என்ற உணர்வை பலருக்கும் கடத்தி இருக்கும். இப்படி பல உணர்வுகளை தாங்கி நிற்கும் இந்த படத்தில்தான் முதல் முறையாக சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானி நடித்தார். இதில் சின்ராசுவாக வரும் சரத்குமாருக்கும், நந்தினியாக வரும் தேவயானிக்கும் இடையேயான காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரியை இங்கு நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
'சூரிய வம்சம்' திரைப்படத்தில் தேவயானி - சரத்குமார்
காரணம் சூர்யவம்சம் திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானியின் கதாபாத்திரங்கள் மிக இனிமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இவர்களின் நடிப்பு இயல்பாகவும், மனதை தொடுவதாகவும் இருந்ததோடு, உண்மையான கணவன்-மனைவியிடையேயான அன்பு உணர்வை மிகச்சிறப்பாக இருவரும் வெளிப்படுத்தியிருப்பர். அதிலும் சின்ராசு-நந்தினி இடையிலான பரஸ்பர அன்பும், புரிதலும் அவர்கள் இருவரின் மென்மையான நடிப்பால் உயிரோட்டமாக வெளிப்பட்டிருக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக "ரோசா பூ சின்ன ரோசா பூ" பெண் வடிவ சோக பாடலைக் குறிப்பிடலாம். இந்த பாடலில் நந்தினி (தேவயானி) தனது கணவன் சின்ராசுவின் (சரத்குமார்) வேதனையைப் புரிந்து கொள்கிற விதமாக காட்சிப்படுத்திய விதம் மனதில் நிற்கும் வகையில் சிறப்பாக அமைந்திருக்கும். அதிலும் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நந்தினி கதாபாத்திரத்தில் வரும் தேவயானி, சின்ராசுவை புரிந்து கொண்டு, அவனை உண்மையான சாதனையாளராக மாற்றும் மனைவியாக பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் திருமணத்திற்குப் பிறகு தேவயானியின் மென்மையான நடிப்பு, கண்களில் பளிச்சிடும் உணர்வுகள் அனைத்தும், அவரது அபாரமான திறமைக்கு சான்றாக இன்று வரை உள்ளன. அதேபோல் சரத்குமாரின் அப்பாவி தனமான நடிப்பையும் நாம் இங்கு நினைவு கூறாமல் இருக்க முடியாது. இப்படி தேவயானி - சரத்குமார் ஜோடியின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் மிக நன்றாக அமைந்ததால், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மிக உணர்வுப்பூர்வமான அதேவேளையில் மிக பொருத்தமான ஜோடிகளில் ஒன்றாக இருவரும்,மாறி போனார்கள். இப்படிப்பட்ட இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், தற்போது ‘3BHK’ என்ற படத்தில் சரத்குமார் - தேவயானி ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
மீண்டும் சரத்குமார் - தேவயானி
"சித்தார்த் 40" திரைப்படமான 3BHK-வின் போஸ்டர்
தமிழ் சினிமாவின் பிரபலமான ஆன்ஸ்கிரீன் ஜோடிகளில் ஒருவராக திகழ்ந்த சரத்குமார் - தேவயானி, 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘3BHK’ திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இது நடிகர் சித்தார்த்தின் 40வது படம் ஆகும். ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்ரீ கணேஷ், இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த்துடன் மீதா ரகுநாத், யோகிபாபு, கன்னட நடிகை சைத்ரா அசார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு ‘3BHK’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த டீசர், "இது ஒரு ராஜா கதை… இல்ல… இல்ல… இது நம்ம குடும்பத்தை பற்றிய கதை" என தொடங்குகிறது. பின்னர் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் வருவதுடன், அவர்கள் கொண்டிருக்கும் 3BHK கனவை முன்வைத்து திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களம் வெளிப்படுகிறது.சமீபத்தில் வெளிவந்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்து, பெரும் வெற்றியை கண்டது. அதேபோல், ‘3BHK’ திரைப்படமும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு உணர்வுபூர்வமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் சரத்குமார் - தேவயானி ஜோடியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ள அதேவேளையில், இந்த திரைப்படம், தேவயானிக்கும் சிறந்த கம்பேக் படமாக அமையும் என்பதிலும் பெரும் நம்பிக்கை எழுந்துள்ளது.
