இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘ஹீரோயின்னா இப்படித்தான் இருக்கணும்’ என்ற வழக்கத்துக்கு மாறாக ஒருசில நடிகைகள் பக்கத்துவீட்டு பெண் போல நமது மனதில் இடம்பிடிப்பார்கள். அதேசமயம் அழகாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஹீரோயின்களில் ஒருவர்தான் பாவனா. மலையாள நடிகையான இவர், தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரைட் என்றே சொல்லலாம். ஏனென்றால் சினிமாவைவிட லாங் சைஸ் நோட்புக்கில் இவருடைய அட்டைப்படங்களை பார்த்து ரசித்த மாணவர்கள்தான் அப்போது அதிகம். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் மாறி மாறி நடித்து முன்னணி தென்னிந்திய ஹீரோயினாக வலம்வந்த பாவனா, கடத்தல் விவகாரம், பாலியல் தொல்லை, வதந்திகள் போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். இதனாலேயே தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டாலும், அவற்றையெல்லாம் ஒருவழியாக சமாளித்து இன்றும் மோலிவுட்டின் தவிர்க்கமுடியாத நாயகிகளில் ஒருவராக வலம்வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்திவரும் பாவனாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நடிகர்’ திரைப்பட புரமோஷன்களில் கலந்துவரும் இவர், தன்னைப்பற்றி முன்பு வெளிவந்த வதந்திகள் எவ்வாறு தன்னை பாதித்தன என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். பாவனாவின் திரை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.


பெற்றோருடன் மற்றும் சிறுவயதில் பாவனா

16 வயதிலேயே கதாநாயகி

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாவனா. கார்த்திகா மேனன் என்ற தனது இயற்பெயரை திரைக்காக மாற்றிக்கொண்டார். உதவி ஒளிப்பதிவாளரின் மகளான இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. 2002ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே ‘நம்மல்’ என்ற திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பாவனாவிற்கு சிறப்பு பிரிவில் கேரள மாநில அரசின் திரைப்பட விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே 6 படங்களில் நடித்துமுடித்த பாவனா, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதேபோல் 4 படங்களுக்கு குறையாமல் நடித்துவந்தார். இப்படி 2002 முதல் 2005வரை வெறும் மூன்றே ஆண்டுகளுக்குள் மம்மூட்டி, திலீப், பிருத்விராஜ் போன்ற அனைத்து மலையாள ஸ்டார்களுடனும் 19 படங்களில் நடித்து தவிர்க்கமுடியாத முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். அதன்பிறகுதான் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம்மூலம் தமிழ் திரையுலகுக்குள் காலடி எடுத்துவைத்தார். ஆரம்பத்தில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் சிறிது இடைவெளி விட்டு ரீரிலீஸ் செய்தபோது பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகுதான் ‘கிழக்கு கடற்கரை சாலை’, ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘கூடல் நகர்’ என அடுத்தடுத்து தமிழ்ப்படங்களில் ஆர்வம் காட்டினார். இதில் ஜெயம் ரவியுடன் இவர் ஜோடி சேர்ந்த ‘தீபாவளி’ திரைப்படம் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது. குறிப்பாக, இப்படத்தில் வரும் பாடல்களால் மிகவும் பரிச்சயமான ஹீரோயின்களில் ஒருவரானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் என மாறிமாறி நடித்துவந்த பாவனாவால் மோலிவுட் அளவிற்கு கோலிவுட்டில் சோபிக்க முடியவில்லை.


தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோயினாக பாவனாவை உருவாக்கிய திரைப்படங்கள்

குறிப்பாக, ‘வாழ்த்துகள்’, ‘ஜெயம்கொண்டான்’ மற்றும் ‘அசல்’ என ஆண்டுக்கு ஒரு தமிழ்ப்படத்தில் மட்டுமே நடித்த பாவனா அதன்பிறகு கோலிவுட்டிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். இதனிடையே ‘ஒன்டாரி’ என்ற படம்மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். அதேபோல் தமிழ் திரையுலகிலிருந்து விலகிய பாவனா 2010ஆம் ஆண்டு புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த ‘ஜாக்கி’ திரைப்படம்மூலம் கன்னட திரையுலகிலும் அறிமுகமானார். இதனிடையே தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானார்.

பாவனாவை விடாது துரத்திய சர்ச்சைகள்

தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம்வந்த பாவானாவிற்கு தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் அவரை மனதளவில் கடுமையாக பாதித்தது. 2017ஆம் ஆண்டு திருச்சூரில் ‘ஹனிபிடூ’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இரவு கொச்சினுக்கு காரில் சென்று கொண்டிருந்த பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக செய்தி வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாவனா அளித்த புகாரில், ஓட்டுநர் மார்ட்டின் காரை ஓட்டிச்சென்றபோது, அத்தானி பகுதியில் தனது கார்மீது வேன் ஒன்று மோதியதாகவும், அந்த சமயத்தில் காருக்குள் புகுந்த 3 பேர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், சுமார் ஒன்றரை மணிநேரம் அந்த 3 பேரும் காருக்குள் இருந்ததாகவும், பின்னர் பாதிவழியில் காரை நிறுத்தி தப்பிச் சென்றதாகவும் கூறியிருந்தார்.


பாவனா கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் நடிகர் திலீப்

பாவனாவின் புகாரின்பேரில் கேரள போலீசார் தனிப்படை அமைத்து தேடியதில் ஓட்டுநர் மார்ட்டின் இந்த சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்தது கண்டறியப்பட்டது. பாவனாவின் முன்னாள் ஓட்டுநர் சுனில்குமார் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதும், பணத்துக்கு ஆசைப்பட்டு இதை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்பும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவழியாக திலீப் ஜாமீனில் வெளிவந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் குறித்து பாவனா பொதுவெளியில் பேசினாலும் இன்றுவரை இந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை. திலீப்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஒரு மெமரி கார்டு இருந்த நிலையில், தனது மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டிருப்பதாக சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பொதுவெளிக்கு இந்த சர்ச்சையை கொண்டு வந்திருக்கிறார் பாவனா. மேலும் இது அநியாயம் மற்றும் அதிர்ச்சி என குறிப்பிட்டு போட்டிருந்த பதிவில், நீதிமன்றத்தில் தனது தனியுரிமை பாதுகாப்பாக இல்லை எனவும், அதனை அறிந்து பயமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவரின் நீதியை பாதுகாக்கவேண்டிய நீதிமன்றத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நீதி கிடைக்கும்வரை போராடுவேன் எனவும் கூறியிருக்கிறார்.


கணவர் நவீனுடன் நடிகை பாவனா

திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாதா?

இந்த சர்ச்சைக்குப் பிறகு இப்போது மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் மட்டுமே நடித்துவரும் பாவனா, 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல கன்னட தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த ஆண்டே திருமணம் செய்துகொண்டனர். தனக்கு நேர்ந்த அவலம் மற்றும் தன்னை சுற்றிவந்த வந்ததிகளால் மனமுடைந்த இவர், திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கன்னட படங்களில் மட்டுமே நடித்துவந்தார். அதன்பிறகு 2023ஆம் ஆண்டுதான் ‘என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு’ என்ற படத்தின்மூலம் மீண்டும் மலையாள திரையுலகம் பக்கம் சென்றார். தொடர்ந்து, ‘ராணி: தி ரியல் ஸ்டோரி’, ‘கேஸ் ஆஃப் கொண்டானா’ என மலையாளம், கன்னடம் என்று அடுத்தடுத்த படங்களை கொடுத்த இவர், தனது திரைப்பயணத்தில் கணவர் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார் என்று பகிர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “நான் 15 வயதில் நடிக்கத் தொடங்கினேன். திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பை விட்டுவிடுவார்கள் என்று அப்போதெல்லாம் சொல்வார்கள். அதனை ஆமோதிக்கும்விதமாக கதாநாயகி வாய்ப்பையும் இயக்குனர்கள் கொடுக்கமாட்டார்கள். ஆனால் நான் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கவேண்டுமென்று அப்போதே நினைத்தேன். திருமணத்தால் திறமை போய்விடுமா என்ன? அதனால் நடிப்பை ஏன் விடவேண்டும்? என் கணவரை நான் சந்தித்தபோது அவரும் இதே மனநிலையில்தான் இருந்தார்” என்று கூறியிருந்தார்.


‘நடிகர்’ மற்றும் ‘தி டோர்’ திரைப்படங்களின் போஸ்டர்கள்

மீண்டும் தமிழில்...

தற்போது ‘பிங்க் நோட்’, ‘உத்தரகண்டா’, ‘ஹண்ட்’, ‘நடிகர்’ என அடுத்தடுத்து இவர் நடிப்பில் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் ரீலீஸுக்கு காத்திருக்கின்றன. ‘நடிகர்’ திரைப்படத்தின் டீசரே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இப்படம் மே- 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டேவிட் படிக்கல் என்ற சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் டோவினோ தாமஸ் நடிக்க, அவரது மனைவியாக நடித்திருக்கிறார் பாவனா. இப்படமும், தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்து வரும் மலையாளப் படங்களின் வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்து ‘தி டோர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் தமிழ்ப்படத்தில் நடிக்கவிருக்கிறார் பாவனா. இதனால் பாவனா தென்னிந்திய திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On 13 May 2024 5:58 PM GMT
ராணி

ராணி

Next Story