இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் பேபி ஷாலினி. மூன்று வயதில் திரையுலகில் அறிமுகமாகி, குழந்தைப் பருவத்திலேயே மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இவர், பின்னர் கதாநாயகியாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஷாலினியின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தாலும், அவர்களது காதல் கதை பல படங்களை மிஞ்சிய காவியமாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது. குழந்தையில் பல சேட்டைகளாலும், குமரியான பின் அழகாலும், திருமணத்திற்கு பிறகு அமைதியான குணத்தாலும் பலரையும் கவர்ந்து வரும் ஷாலினி 20.11.2024 அன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஷாலினியின் வாழ்க்கை பயணம் குறித்தும், அஜித்-ஷாலினியின் மாறாத காதல் குறித்தும் இங்கே காணலாம்.

சினிமா அறிமுகம்

1979-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பாபு - அலிஸ் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக கேரள மாநிலம் திருவல்லாவில் பிறந்தார் ஷாலினி. இவருக்கு ரிச்சர்ட் என்ற அண்ணனும், ஷாமிலி என்ற தங்கையும் உள்ளனர். கேரளாவில் வசித்துவந்த ஷாலினியின் தந்தை பாபுவுக்கு சினிமா ஆசை வர, குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். சினிமா முயற்சி வெற்றி பெறாமல் போகவே, ஃபேன்சி சாதனங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை தொடங்கினார் பாபு. அப்போது பாபுவின் கடைக்கு அடிக்கடி வரும் இயக்குநர் ஃபாசில், ஒரு நாள் கடையில் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த ஷாலினியை பார்த்துள்ளார். அப்போது ஷாலினியின் சேஷ்டைகள் மிகவும் பிடித்துபோய் தனது படத்தில் நடிக்கவைக்க முடிவு செய்தார். அப்படி கிடைத்த வாய்ப்புதான் 1983-ஆம் ஆண்டு, ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த "என்றெ மாமாட்டி குட்டி அம்மைக்கு" என்ற மலையாள படம். இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி முதல் படத்திலேயே மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதுமட்டுமின்றி இப்படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதையும் பெற்றார்.


குழந்தை பருவத்தில் நடிகை ஷாலினி

முதல் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மலையாளத்தில் ஒரே வருடத்தில் 12 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு தமிழில், கே. பாலாஜி இயக்கிய ’ஓசை’ படத்தின் மூலம் இங்கும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி, தொடர்ந்து ‘பிள்ளை நிலா’, ‘விடுதலை’, ‘அபூர்வ சகோதரிகள்’, ‘ஆனந்த கும்மி’, ‘தராசு’, ’பந்தம்’, ‘நிலவே மலரே’, ‘சிறைப்பறவை’, 'சங்கர் குரு' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தார்.

கதாநாயகியாக...

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவந்த ஷாலினி, 1990-களுக்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்தார். அரைகுறையாக இருந்த தனது பள்ளி படிப்பை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று நினைத்தார். சென்னை சர்ச் பார்க்கில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்த ஷாலினியை, இயக்குநர் ஃபாசில் 1997-ஆம் ஆண்டு வெளியான 'அனியத்தி பிராவு' என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கதாநாயகியாக முதல் படத்திலேயே கிடைத்த வரவேற்பும், பாராட்டும் ஷாலினியை மிகவும் உற்சாகப்படுத்தவே, அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளை ஏற்று நடிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் தமிழிலும் அவரை நாயகியாக அறிமுகப்படுத்திய ஃபாசில் 'அனியத்தி பிராவு' படத்தை தமிழில் 'காதலுக்கு மரியாதை' என்ற பெயரில் எடுத்து, விஜய்க்கு ஜோடியாக ஷாலினியை நடிக்க வைத்தார். இப்படத்தில் காதலுக்கும், உறவுகளுக்கும் இடையே குழப்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் மனதை ஷாலினி தனது நடிப்பால் உயிர்ப்பித்திருந்த விதம் அனைவரையும் ரசிக்க வைத்தது.


'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தின் போது நடிகர் விஜய்யுடன் ஷாலினி

இதையடுத்து மீண்டும் மலையாளப் படங்களில் நடித்துவந்த ஷாலினி, 1998-க்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பை நிறுத்த முடிவு செய்தார். ஆனால், தமிழ் சினிமா அவரை விடுவதாக இல்லை. 1999-ஆம் ஆண்டு வெளிவந்த 'அமர்க்களம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கேட்டு இயக்குநர் சரண் ஷாலினியை அணுகியபோது ஆரம்பத்தில் மறுத்த ஷாலினி, பின்னர் அஜித்தின் வேண்டுகோளின் பேரில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதே நேரத்தில், இயக்குநர் ஃபாசில் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து 'கண்ணுக்குள் நிலவு' படத்தில் நடிக்க ஷாலினியை அணுகினார். இதையடுத்து, 'அலைபாயுதே' மற்றும் 'பிரியாத வரம் வேண்டும்' படங்களிலும் நடித்தார். இதில் 'கண்ணுக்குள் நிலவு' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், ஷாலினியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதே போல் 'அலைபாயுதே' படத்தில் மில்லியன் காலத்து காதலையும் ஊடலையும் பதிவு செய்து மிகவும் உயிரோட்டத்தோடு நடித்திருந்த ஷாலினி, 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் காதலுக்கும் நட்புக்கும் இடையிலான உணர்வுகளை அழகாகப் பதிவு செய்திருந்தார்.

அஜித்துடனான காதல்

அஜித் ஷாலினியின் காதல் கதை 'அமர்க்களம்' படப்பிடிப்பு தளத்திலிருந்துதான் துவங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய போது, ஷாலினியின் தனிக் காட்சிகள்தான் முதலில் படமாக்கப்பட்டதாம். அப்போது அஜித் அவ்வப்போது செட்டிற்கு வந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துச் செல்வாராம். இதற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கத் தொடங்கிய போதுதான், அவர்களது வாழ்க்கையில் பல மறக்க முடியாத நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கின. படத்தின் ஒரு காட்சியில், அஜித் கத்தியுடன் ஷாலினியிடம் சண்டை போடுவது போல் ஒரு சீன் இருந்ததாம். ரிகர்சலின் போது அஜித் கத்தியால் தவறுதலாக ஷாலினியின் கையை கிழித்துவிட்டாராம். இதனால் ஷூட்டிங் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டதோடு, அஜித்தும் அதிர்ச்சியாகி செய்த ஆர்ப்பாட்டத்தில் யூனிட்டே பதறிபோய் விட்டதாம். பிறகு அஜித், ஷாலினிக்கு முதலுதவி செய்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் ஷாலினியின் மனதில் அஜித் மீது ஒரு தனிப்பட்ட காதல் உணர்வை ஏற்படுத்தியுள்ளது.


'அமர்க்களம்' திரைப்படத்தில் அஜித்துடன் ஷாலினி

அதன்பிறகு, ஷாலினி சில நாட்கள் ஷூட்டிங் வராமல் இருந்த சமயம் அஜித்துக்கும் அவர் மீது காதல் மலரவே, ஒரு சமயம் அஜித் தனது காதலை ஷாலினியிடம் சூசகமாக வெளிப்படுத்தினாராம். அதாவது ஒரு முறை இயக்குநர் சரண், அஜித் மற்றும் ஷாலினி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அஜித் திடீரென ‘அமர்க்களம்’ படத்தை விரைவாக முடிக்க வேண்டும். நான் வேறு படங்களுக்குக் கொடுத்திருக்கும் கால்ஷீட்டை இதற்கே கொடுத்துவிடுகிறேன். ஏனென்றால், இந்தப் படத்தில் நீண்ட நாட்கள் நடித்தால் ஷாலுவை நான் காதலித்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது என ஷாலினிக்கு கேட்கும்படியாக சத்தமாக சொன்னாராம். அப்போது ஷாலினியின் முகத்தில் புன்னகை பூத்து குலுங்கியதாம். அதே போல் மற்றொரு காட்சியில் அஜித் ஷாலினியிடம் காதல் சொல்லும்படி சீன் இருந்துள்ளது. இந்த காட்சியில் ஷாலினிக்கு கொடுக்க வேண்டிய பொக்கேவை அஜித் தனது சொந்த பணத்தில் வாங்கி வந்ததோடு, ஷாலினியின் தந்தை இதை அறிந்து கொள்ளாமல் இருக்க, இயக்குநர் சரண் மற்றும் அஜித் பலவித திட்டங்கள் போட்டர்களாம். இறுதியாக அந்த காட்சி எதிர்பார்த்த படியே படமாக்கபட்டு, அஜித் தனது முதல் காதல் பரிசாக அந்த பொக்கேவை ஷாலினிக்கு கொடுத்துள்ளார். இதற்கு பிறகு இருவருமே தங்கள் காதலை உறுதி செய்ததையடுத்து, திருமணம் என்ற அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளின் வாழ்க்கைக்கு அடையாளமாக அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.


ஷாலினி மீதான காதலை முத்தத்தின் மூலம் அஜித் வெளிப்படுத்திய தருணம்

என்றும் மாறா காதல்!

திரையுலகில் காதல் திருமணம் என்பது புதிதல்ல. ஆனால், புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகை, அனைத்து லட்சியங்களையும் தியாகம் செய்து இல்லற வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது எளிதான காரியமல்ல. ஆனால், ஷாலினி அதனை செய்தார். தன் கணவர் சினிமா பயணத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த நேரங்களில் உறுதுணையாக இருந்தார். இன்று தன் கணவர் அல்டிமேட் ஸ்டாராக மாறிய பிறகும் தன்னை ஒரு சாதாரண பெண்ணாகவே வெளிப்படுத்தி வருகிறார் ஷாலினி.


என்றும் மாறா காதலுடன் கணவர் அஜித்துடன் ஷாலினி

இந்நிலையில், ஷாலினிக்கு கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் இருந்த அஜித், தன் ஷூட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு மனைவி ஷாலினியை அருகில் இருந்து பார்த்து கொள்வதற்காக ஓடோடி வந்தது மட்டுமின்றி அறுவை சிகிச்சை முடிந்து மனைவி வீடு திரும்பும் வரை கூடவே இருந்து பார்த்துக் கொண்டாராம். அப்போது கணவர் அஜித்துடன் கையை பிடித்தபடி மருத்துவமனையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷாலினி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘லவ் யூ ஃபார் எவர்’ என கேப்ஷனிட்டு தாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தியிருந்தார். ஷாலினியின் இந்த பகிர்வை பலரும் ரசித்தனர். 4 மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஷாலினி வெளிநாடுகளில் தன் குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அது தொடர்பான புகைப்படங்களை சமீபகாலமாக தனது இன்ஸ்டாவில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். குறும்புக்கும், காதலுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் அடையாளமாக விளங்கும் ஷாலினியின் வாழ்க்கை இன்று போல் என்றும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

Updated On 18 Nov 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story