இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘இந்நேரம் அசின் மட்டும் இருந்திருந்தால் அவர்தான் டாப் கதாநாயகியாக இருந்திருப்பார்’ என்பது போன்ற மீம்ஸ்களை இன்றும் சோஷியல் மீடியாக்களில் பார்க்கமுடிகிறது. அதற்கு காரணம், 2000களின் நடுவில் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நாயகிகளில் ஒருவராக வலம்வந்தவர் அசின். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட்களான திரிஷா, நயன்தாரா மற்றும் அசின் மூவருமே ஒரே காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் ஸ்டார்களுடன் மாறி மாறி டூயட் பாடிவந்தனர். இருப்பினும் இந்த மூவருக்குள் அசினுக்குத்தான் ரசிகர் பட்டாளம் அதிகம். அனைவருடனும் எதார்த்தமாக பழகுவது, கலகல பேச்சு மற்றும் எப்போதும் சிரித்த முகம் போன்றவைதான் அதற்கு காரணம் என்று சொல்லலாம். குறுகிய காலத்தில் பல மொழிகளில் நடித்திருந்தாலும் பிற நடிகைகளுடன் ஒப்பிடும்போது இவர் மிகவும் குறைவான படங்களில்தான் நடித்திருக்கிறார். இருப்பினும் மாஸ் ஹீரோக்களைப் போன்றே அசின் நடித்த ‘போக்கிரி’ மற்றும் ‘ஆழ்வார்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி தமிழ் சினிமாவில் முடிசூடா ராணியாக இவரை வலம்வர வைத்தன. இப்படி தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த காலத்தில்தான் இந்தியில் காலடி எடுத்துவைத்தார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்க, ஸ்ரீதேவி, ரேகா போன்று பாலிவுட்டில் தனக்கென தனியிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இந்தி திரையுலகும் கைகொடுக்கவில்லை. இதனையடுத்து தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அசினுக்கு ஒரு மகள் இருக்கிறார். இப்போது கம்பேக் கொடுத்தாலும் ரசிகர்கள் இவரை கொண்டாட தயாராக இருக்கின்றனர். வருகிற அக்டோபர் 26ஆம் தேதி தனது 39வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் அசினின் திரைப்பயணம் குறித்து ஒரு ரீவைண்ட்...

கோலிவுட்டில் அசின் அலை!

கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட அசின், பள்ளி காலத்திலிருந்தே படிப்பைவிட எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில்தான் மிகவும் ஆர்வமாக இருப்பாராம். மேலும் 3 வயதிலிருந்தே பரதநாட்டியமும் கற்றுவந்ததால் பள்ளிகளில் நடைபெற்ற நாடகங்கள் மற்றும் நடனப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளையும் வென்றுவந்துள்ளார். மருத்துவ பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் நெருங்கிய வட்டாரங்களின் வழிகாட்டுதலின்பேரில் பள்ளிகாலத்திலேயே விளம்பரங்களில் நடித்தார். சிறிதுகாலம் மாடலங்கிலிருந்து விலகி கல்லூரிக்குச் சென்று படிக்கலாம் என திட்டமிட்டு, பி.ஏ ஆங்கில பட்டபடிப்பில் சேர்ந்த அசினுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் தேடிவர, நடிப்புத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தார். 2001ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான அசின், அடுத்து தெலுங்கிலும் நடித்தார். இதனிடையே கல்லூரி படிப்பு முடிய, அடுத்து கிடைத்தது தமிழ் பட வாய்ப்பு. 2004ஆம் ஆண்டு ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் மலையாளப் பெண்ணாகவே நடித்த அசின், அந்த படத்தில் மலையாளம் கலந்த தமிழை தனது சொந்த குரலிலேயே பேசி அசத்தினார். படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல், முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். தமிழைப் போலவே தெலுங்கிலும் ஹிட் படங்களை கொடுத்ததால் இரண்டு திரையுலகங்களும் இவரை சொந்தம் கொண்டாட போட்டிபோட்டன.


‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான அசின்

ஆனால் ‘உள்ளம் கேட்குமே’ படத்திற்கு பிறகு அசினுக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘கஜினி’. இன்றுவரை கல்பனா கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடிவருவதை வைத்தே அது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அனைவராலும் நன்கு புரிந்துகொள்ள முடியும். இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க அசினுக்கு ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. தொடர்ந்து ‘மஜா’, ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘ஆழ்வார்’, ‘போக்கிரி’, ‘வேல்’, ‘தசாவதாரம்’ என விக்ரம், அஜித், விஜய், சூர்யா, கமல் என தமிழின் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்களுக்கு விருதுகளையும் வாங்கி குவித்தார். குறிப்பாக, விஜய்க்கு சிறந்த ஜோடி திரிஷாவா, அசினா என ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய்க்கு சிறந்த ஆன் - ஸ்க்ரீன் ஜோடி அசின்தான் என வெளிப்படையாகவே கூறி ரசிகர்களின் வாயை அடைத்தார். அந்த சமயத்தில் பெரும்பாலான பேட்டிகளில் விஜய்யும், அசினும் ஒன்றாக கலந்துகொண்டபோது விஜய்க்கு திருமணமாகாதிருந்தால் தானே திருமணம் செய்துகொள்வேன் என அசின் வெளிப்படையாக கூறியது அப்போது மிகவும் ட்ரெண்டானது. அசின், திரிஷா, நயன்தாரா என மூன்று பேருக்குள்ளும் மறைமுகமாக கடுமையான போட்டி நிலவிய சமயத்தில் அசின்தான் டாப் ஹீரோயின் என பத்திரிகைகளில் எழுதப்பட்டன. இப்படி ரசிகர்கள் கொண்டாடினாலும் அசின் தமிழில் நடித்தது என்னவோ மொத்தமே வெறும் 11 படங்கள்தான்!

பாலிவுட் அறிமுகமும் சறுக்கல்களும்

தமிழில் ‘கஜினி’ வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்க, அசினின் கல்பானா கதாபாத்திரத்தில் அவரைவிட யாராலும் சிறப்பாக நடிக்கமுடியாது என நம்பிய ஏ.ஆர் முருகதாஸ், அவரையே இந்தியிலும் அறிமுகப்படுத்தினார். தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் அசின் சரளமாக பேசக்கூடியவர் என்பதால் அங்கும் தனது சொந்த குரலிலேயே டப்பிங் செய்தார். இப்படம் அசினுக்கு இந்தியில் பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. ‘கஜினி’க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து சல்மான் கான் ஜோடியாக ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படத்திலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் ஜோடியாக ‘காவலன்’ படத்தில் நடித்தார்.


விஜய்யின் சிறந்த ஆன் - ஸ்க்ரீன் ஜோடி என அசினுக்கு கிடைத்த பெயர்

மீண்டும் இந்தியில் ‘ரெடி’, ‘ஹவுஸ்ஃபுல் 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அவை தொடர் தோல்விகளை சந்திக்க அங்கு மார்க்கெட்டை இழந்தார். இதனால் மீண்டும் தமிழ் பக்கம் வரலாம் என நினைத்த அசினுக்கு தடைக்கல்லாக அமைந்தன அரசியல் காரணங்கள். குறிப்பாக, ‘ரெடி’ படத்தில் சல்மான் ஜோடியாக அசின் கமிட்டாகியிருந்ததால் படபிடிப்புக்காக இலங்கை சென்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் இலங்கையில் நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்திருந்ததால், இங்கு பிரபலமான யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என பலதரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் பாலிவுட் படத்தில் நடித்துவந்த அசின் அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அந்த ஷூட்டில் கலந்துகொண்டார். இது தமிழ் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையாலேயே ‘காவலன்’ பட ரிலீஸுக்கும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனாலேயே அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்தியில் ஏற்பட்ட தொடர் சறுக்கல்களால் தமிழுக்கு வரநினைத்த அசினை இங்கு நடிக்கவைக்கக்கூடாது என பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரே தமிழ் திரையுலகம் வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டார்.

தொழிலதிபருடனான காதல் திருமணம்

‘ஹவுஸ்ஃபுல் 2’ படபிடிப்பின்போது தனது நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை அசினுக்கு அறிமுகம் செய்துவைத்தார் அக்‌ஷய்குமார். முதலில் நண்பர்களாக இருந்த அசினுக்கும் ராகுலுக்கும் இடையே காதல் மலர்ந்த போதிலும், அதுகுறித்து பொதுவெளியில் வாய்திறக்காமல் படங்களில் பிஸியாக நடித்துவந்தார். இருப்பினும் அசினின் காதல் அவ்வப்போது மீடியா கண்களில் படாமல் இல்லை. இந்த சூழ்நிலையில் ஒருபுறம் பாலிவுட்டில் தொடர் தோல்விகள், மற்றொருபுறம் தமிழில் எதிர்ப்பு என இருந்ததால் தனது காதலனை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் CEO ராகுல் ஷர்மா, வெளிநாட்டில் உயர்கல்வி பயின்றவர். தனது நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்க நினைத்த ராகுல், 2000ஆம் ஆண்டு தனது தந்தையிடமிருந்து ரூ. 3 லட்சத்தை கடனாக பெற்று பிசினஸில் முதலீடு செய்தார். இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சியால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரிய பிசினஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்தார்.


தொழிலதிபர் ராகுல் ஷர்மாவுடனான காதல் திருமணம்

இப்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.1300 கோடி என்று சொல்லப்படுகிறது. டெல்லியில் பெரிய சொகுசு வீட்டில் வசித்துவரும் இந்த தம்பதிக்கு ஆரின் ரேன் என்ற ஒரு மகள் இருக்கிறார். சினிமாவே வேண்டாம் என ஒதுங்கியிருந்த அசின் அவ்வப்போது குடும்பத்துடன் பொதுவெளிகளில் தலைகாட்டி வந்தாலும் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாகவே இருந்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த தனது திருமண புகைப்படம் மற்றும் கணவர் ராகுல் ஷர்மாவின் புகைப்படங்களை நீக்கினார். அதனால் அசினுக்கும், ராகுல் ஷர்மாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் விவாகரத்து செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை அனைத்தும் வதந்தியே என்று ஆணித்தரமாகக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார் அசின். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “இப்போது எங்கள் கோடை விடுமுறையின் நடுவே, ஒருவருக்கு அருகில் ஒருவர் அமர்ந்தபடி, எங்களுடைய காலை உணவை ரசித்துக் கொண்டே இந்த கற்பனையான மற்றும் அடிப்படையற்ற செய்தியை படித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து எங்கள் திருமணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்கு ‘பிரேக் அப்’ ஆகிவிட்டதாக வந்த செய்தியை நினைவூட்டுகிறது. ஓர் அற்புதமான விடுமுறையின் 5 நிமிடத்தை இதில் வீணடித்தது வருத்தமாக உள்ளது. உங்கள் நாள் சிறப்பானதாக அமையட்டும்” என்று பதிவிட்டார். சினிமா வாழ்க்கைக்குத்தான் பிறரால் முற்றுப்புள்ளி வைக்கமுடியுமே தவிர, தனிப்பட்ட வாழ்க்கைக்கு அல்ல என்பதை பிறருக்கு நினைவூட்டும் விதமாக தனது குடும்பம் மற்றும் மகளுடனான இனிய தருணங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார் அசின். அவரின் ஆசைபோல் வாழ்க்கை சிறக்க ராணி நேயர்கள் சார்பாக நாமும் வாழ்த்துவோம்.

Updated On 28 Oct 2024 11:09 PM IST
ராணி

ராணி

Next Story