‘அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா...’ இப்படி ஒரு பாடலை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற விழா மேடையில் பாடியவர் வேறு யாருமல்ல; தளபதி விஜய்தான். அழகு, அறிவு, நளினம் மற்றும் பண்பு என அனைத்துக்கும் உதாரணமாக திகழ்ந்த அனுஷ்கா ஷெட்டி, பல நடிகர், நடிகைகளின் ஃபேவரிட் என்பது அனைவருக்குமே தெரியும். கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டடிக்கும் என்பதற்கு ‘அருந்ததி’ திரைப்படம்தான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இப்படி தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தபோதிலும் திடீரென திரையுலகிலிருந்து காணாமல்போனார். அதற்கு உடல் எடை அதிகரிப்பு, வயது மற்றும் உடல்நல பிரச்சினைகள் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உடல் எடையை கொஞ்சம் குறைத்து கடந்த ஆண்டு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து ஒருசில படங்களில் கமிட்டாகி இருந்தாலும் இவரைப்பற்றி முன்புபோல் செய்திகள் வெளிவருவதில்லை. இந்நிலையில் ‘காத்தி’ திரைப்படத்தின்மூலம் ரத்தம் தெறிக்க மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார் அனுஷ்கா. 43 வயதாகும் இவருக்கு திருமணமும் நடக்கவுள்ளதாக செய்திகள் வலம்வருகின்றன.
ஸ்வீட்டி டூ அனுஷ்கா!
தனக்குத்தானே பெயர் வைத்துக்கொள்ளும் அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? அப்படியொரு வாய்ப்பு அனுஷ்காவிற்கு கிடைத்தது. யோகா டீச்சராக பணிபுரிந்துகொண்டிருந்த இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் ஸ்வீட்டி என்ற பெயர் சாதாரணமாக இருப்பதாகவும், அதுவும் ஆங்கில பெயர் போன்று இருப்பதாகவும், பெயரை மாற்றவேண்டுமானால் உடனடியாக சொல்லுமாறும் இயக்குநர் கேட்டாராம். ஏனென்றால் படத்தின் டைட்டில் கார்டு பணிகள் முடிவதற்கு ஓரிரு நாட்களே அப்போது இருந்ததாம். அந்த சமயத்தில் தனக்கு என்ன பெயர் வைத்தால் நன்றாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்த ஸ்வீட்டி, அம்மா, அப்பாவிடமும் ஃபோன் செய்து இதுகுறித்து பேசினாராம். அவர்களும் நிறைய பெயர்களை சொல்லியிருக்கின்றனர். அந்த சமயத்தில் படத்தின் ஹீரோவான நாகர்ஜூனா, ‘அனுஷ்கா என்ற பெயர் உனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பெயர் ஸ்வீட்டிக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் சொல்கிறாரே என அதே பெயரை வைத்துக்கொள்ளலாம் என்றும், அடுத்த படத்திற்குள் வேறு பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் யோசித்து தனக்கு தானே அனுஷ்கா என பெயர் வைத்துக்கொண்டாராம் ஸ்வீட்டி. இப்படி ஆரம்பமானது அனுஷ்கா ஷெட்டியின் திரைப்பயணம்.
ஸ்வீட்டி ஷெட்டி என்ற பெயரை அனுஷ்கா என மாற்றிய நாகர்ஜூனா
தென்னிந்திய சினிமாவின் வசூல்நாயகி!
முதல் படமே வெற்றிப்படமாக அமைய, அடுத்தடுத்து தமிழில் அறிமுகமானார் அனுஷ்கா ஷெட்டி. இருப்பினும், கைவசம் பல தெலுங்கு படங்கள் இருந்ததால் தொடர்ந்து தமிழில் நடிக்கமுடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது ‘அருந்ததி’ திரைப்படம். தமிழில் முதல் படமான ‘ரெண்டு’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அப்படத்தின் இயக்குநரான சுந்தர் சி.யிடம் ‘அருந்ததி’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாகவும், அந்த படம் வெளியானால் தனது மார்க்கெட்டே உச்சத்திற்கு சென்றுவிடும் என்றும் அனுஷ்கா சொல்லிக்கொண்டே இருப்பாராம். அவர் சொல்லிவந்ததை போன்றே ‘அருந்ததி’ அனுஷ்காவின் மார்க்கெட்டை உயரத்திற்கு கொண்டுசென்றது. 2009ஆம் ஆண்டு அப்படம் வெளியான சமயத்தில் கதாநாயகிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹீரோயின் சென்ட்ரிக் படம் அது. ஹாரர்- திரில்லர் கதைக்களத்தில் உருவான அப்படத்தில் அனுஷ்காவின் நளினமும், கம்பீரமும் அசாத்தியமான நடிப்பும் அனைவரின் கவனத்தையும் பெற்றது. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி என பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, இந்திய சினிமாவில் முதன்முறையாக ரூ.500 கோடி வசூல் சாதனைபுரிந்த படம் பெற்ற பெருமையை பெற்றது ‘அருந்ததி’. அப்போதிருந்து இந்திய அளவில் ரசிகர்களை பெற்றது மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என எந்த நடிகர், நடிகைகளிடம் கேட்டாலும் பிடித்த நடிகை, க்ரஷ், ஹாட், ஃபிட் என பலருக்கும் ஃபேவரிட்டாக மாறினார் அனுஷ்கா. தொடர்ந்து கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகள் அனுஷ்காவிற்கு கிடைத்தன. அப்படி கிடைத்த படங்களில் ஒன்றுதான் ‘இஞ்சி இடுப்பழகி’. அந்த படத்திற்காக, உடல் எடையை ஏற்றி நடித்த அனுஷ்காவால் அதன்பிறகு, தனது பழைய ஃபிட்னஸை பெறமுடியவில்லை என்பதுதான் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக இருந்தது.
‘அருந்ததி’ படத்தின்மூலம் வசூல்நாயகி என பெயர்பெற்ற அனுஷ்கா
இருப்பினும் உடல் எடைக்கும் தனது நடிப்புத் திறமைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை காட்டும்விதமாக அனுஷ்காவிற்கு அமைந்தது ‘பாகுபலி’. அனுஷ்காவாக இருந்தால் எவ்வளவு பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் தைரியமாக களத்தில் இறக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு தனது நடிப்பின்மூலம் கொடுத்தார். தெலுங்கு சினிமாவில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளில் ஒன்றாக பிரபாஸ் - அனுஷ்கா இந்த படத்தில் ஒன்றாக நடிக்க, ராஜமௌவுலி இயக்குகிறார் என்றால் சொல்லவா வேண்டும்? 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’ பாகம் ஒன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மிக பிரம்மாண்டமான படம் என்ற பெயரை பெற்றதுடன், ரூ.1000 கோடிக்கும்மேல் வசூல்சாதனை புரிந்த முதல் இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இரண்டாம் பாகமும் ரூ.1800 கோடி வசூல்சாதனை படைத்தது. இப்படி தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஜோடியாக வலம்வந்த பிரபாஸும், அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டாலும் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இருப்பினும் 40 வயதை தாண்டியும் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதால், அவ்வப்போது இவர்களுடைய உறவு குறித்து அரசல்புரசலான பேச்சுகள் கிளம்புவது இன்றும் வழக்கமாக இருக்கிறது.
அச்சத்தில் உறைய வைக்கும் ‘காத்தி’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ
வன்முறையில் இறங்கிய அனுஷ்கா!
அனுஷ்கா பீக்கில் இருந்த காலத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான நாகர்ஜூனா மற்றும் கோபிசந்த் ஆகியோரை டேட் செய்துவருவதாக வதந்திகள் பரவிய நிலையில், அடுத்துதான் அந்த லிஸ்ட்டில் இணைந்தார் பிரபாஸ். இருப்பினும் இயல்பிலேயே மிகவும் சாதுவான இவர், இதுபோன்று தன்னை குறித்து பரவும் வதந்திகள் குறித்தெல்லாம் ரியாக்ட் செய்வதில்லை. தொடர்ந்து ஒரு சில படங்கள் சறுக்கலை சந்தித்ததால் படங்களில் நடிக்காமல் தவிர்த்துவந்த அனுஷ்கா, ஓரிரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார். தன்னை காதலிப்பதாக கூறும் தன்னைவிட இளையவரான இளைஞர் ஒருவர்மீது எப்படி ஒரு பெண்ணுக்கு காதல் உருவாகிறது என்பதை மையப்படுத்திய அப்படம் ஓரளவு வசூல்சாதனை பெற்றாலும், அனுஷ்காவை திரையில் பார்த்த மகிழ்ச்சியை கொண்டாடினர் அவருடைய ரசிகர்கள். இந்நிலையில், அனுஷ்கா திரும்பவும் பழைய ஃபார்முக்கு வருவாரா? என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு சூப்பரான விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகி வருகிறார் அவர். கடந்த ஆண்டு அனுஷ்காவின் பிறந்தநாளன்று வெளியான ‘காத்தி’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களை எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்திருக்கிறது. கண்களில் கொலைவெறியுடன், ஒரு ஆணின் தலையை அறுத்து, ரத்தம் சொட்ட சொட்ட கையில் பிடித்துக்கொண்டு நடந்துவரும் அனுஷ்காவை பார்த்த பலரும் மிரண்டு போயுள்ளனர். அனுஷ்காவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இடைவெளி எடுத்து இந்த படத்தில் நடித்துவருவதாகவும், இப்படம் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனிடையே அனுஷ்காவிற்கு அவருடைய பெற்றோர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்துவைக்க திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கின்றன தெலுங்கு திரையுலக வட்டாரங்கள்.