இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனால் மிகவும் பிரபலமடைந்து, அதன்பிறகு துணை கதாபாத்திரங்களுக்குக்கூட வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி அலையும் பல நடிகர் நடிகைகளுக்கு மத்தியில் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். ஒரு சாயலில் நடிகை நயன்தாரா போலவே இருப்பதாக கூறும் ரசிகர்கள் இவரை ‘பேபி அனிகா’ மற்றும் ‘குட்டி நயன்தாரா’ என்றெல்லாம் அழைக்கின்றனர். 18 வயதிலேயே ஹீரோயினும் ஆகிவிட்ட அனிகாவுக்கு இப்போது அனைத்து திரையுலகிலிருந்தும் வாய்ப்புகள் தேடிவருகின்றன. ஆனால் இளம் வயதிலேயே அனிகா மிகவும் க்ளாமராக போட்டோஷூட்களை நடத்துவது, அரைகுறை ஆடைகளை அணிவது போன்றவைதான் அதற்கு காரணம் என ரசிகர்கள் அவரை கலாய்த்த நிலையில், நானும் ஒரு மனுஷிதான். இதுபோன்ற கமெண்டுகள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது என தனது வருத்தத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கொட்டியிருக்கிறார் அனிகா. பல குழந்தை நட்சத்திரங்களுக்கு மத்தியில் அனிகா பிரபலமானது எப்படி? அனிகாவை நெட்டிசன்கள் மோசமாக பேசுவதற்கான காரணம் என்ன? அதற்கு அனிகா என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார்? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக பார்க்கலாம்.

குழந்தை நட்சத்திரமாக அனிகா

கேரள மாநிலம் மலப்புரத்திலிருக்கும் ஒரு கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் அனிகா சுரேந்திரன். 2007ஆம் ஆண்டு மோகன் லால் ஹீரோவாக நடித்த ‘சோட்டா மும்பை’ திரைப்படத்தின்மூலம் 3 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையில் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு பெரிய அளவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் 2010ஆம் ஆண்டு வெளியான ‘கத துடருன்னு’ திரைப்படம் அனிகாவை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு 2012 முதல் 2014 வரை கிட்டத்தட்ட 7 மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவருக்கு 2015ஆம் ஆண்டு அஜித் - திரிஷா ஜோடிசேர்ந்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


மலையாளம், தமிழ் சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் வளரிளம் பெண்ணாக தோன்றிய அனிகா சுரேந்திரன்

அந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை கொட்டிய அனிகா, இன்றுவரை அஜித்தின் மகளாகவே தமிழ் ரசிகர்களால் அடையாளம் காணப்படுகிறார். அந்த படத்தில் அப்பா - மகள் கெமிஸ்ரி ஒத்துப்போக, அடுத்து ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித் - நயன்தாராவுக்கு மகளாகவே நடித்தார். ஏற்கனவே 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்த படத்தில் அம்மா - மகள் காம்போ பெரிதாக பேசப்பட்டதையடுத்து ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். ‘ஒரு குழந்தையால் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் நடிக்க முடியுமா?’ என்று பலரும் இவரை பாராட்டினர். தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறி மாறி பிஸியாக நடித்துவந்த அனிகா, 2022ஆம் ஆண்டு நாகர்ஜுனா ஹீரோவாக நடித்த ‘தி கோஸ்ட்’ திரைப்படத்தின்மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். 18 வயது வரை ஹீரோயின் வாய்ப்பு தேடாமல் தவிர்த்துவந்த அனிகாவுக்கு, அதன்பிறகு ‘புட்ட பொம்மா’ திரைப்படத்தின்மூலம் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தார்.


ஒரு சாயலில் நயன்தாரா போல இருப்பதால் ‘குட்டி நயன்’ என அழைக்கப்படும் அனிகா

I admire நயன்தாரா!

அனிகாவை இன்றுவரை பலரும் ‘குட்டி நயன்தாரா’ என்றே அழைக்கின்றனர். ஒரு சாயலில் பார்ப்பதற்கு நயன்தாரா போன்று இவர் இருப்பதுதான் அதற்கு காரணம். குறிப்பாக, ஒவ்வொரு முறை அனிகா புடவை கட்டி போட்டோஷூட் செய்து போஸ்ட் பண்ணும்போதெல்லாம் நயன்தாரா போன்று இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இதுகுறித்து மனம்திறந்த அனிகா, “நான் நயன்தாரா போன்று இருப்பதாக பலர் கூறுகிறார்கள். நான் அவரைப்போல இல்லை என்பதுதான் உண்மை. அதேசமயம் அவரைப்போல இருக்க நான் முயற்சி செய்வதும் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் என்னை நயன்தாரா மாதிரி இருப்பதாக கூறும்போது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக நான் சேலை கட்டிய புகைப்படங்களை பதிவிட்டாலோ அல்லது ஒருசில மேக்கப் லுக்கிலோ நயன் மாதிரி இருப்பதாக கூறுவார்கள். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நாங்கள் இருவரும் அம்மா - மகளாக நடித்திருக்கிறோம். எங்கள் இருவருக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. எங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு அப்படி தோன்றலாம்” என்று கூறியிருந்தார். நயன்தாராவுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்கையில், “நான் எப்படி நடிக்கிறேன் என்று நயன் மேம் அதிகம் கமெண்ட் செய்யமாட்டார். ஆனால் டிரெஸ், மேக்கப் போன்றவற்றில் நான் எப்படி இருந்தால் நன்றாயிருப்பேன், ஸ்க்ரீனில் எப்படி தெரிகிறேன் என்பது குறித்தெல்லாம் என்னிடம் பேசுவார். திரையைத் தாண்டி அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். என்னிடம் எப்போதும் ஜாலியாக பேசுவார்” என்று கூறியிருந்தார்.


சர்ச்சைக்குள்ளான ‘ஓ மை டார்லிங்’ படத்தின் ஒரு காட்சியில் அனிகா

லிப்-லாக் சர்ச்சையும் அனிகாவின் விளக்கமும்

‘ஓ மை டார்லிங்’ படத்தில் கதாநாயகன் மெல்வின் ஜி. பாபுவுடன் லிப் - லாக் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்ததால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார் அனிகா. அதுவரை குழந்தையாகவே பார்க்கப்பட்ட அனிகா திடீரென இதுபோன்ற காட்சிகளில் நடித்ததால் இவரை ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர். குறிப்பாக, படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது ரசிகர்கள் அனிகாவின் சமூக ஊடக பக்கங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் அதுகுறித்து அவர் விளக்கமளித்திருந்தார். அதில், “இப்படம் முழுக்க முழுக்க இளம் காதல் ஜோடிகளை மையப்படுத்திய முழுநீள காதல் படமாகும். அந்த படத்தில் முத்தக் காட்சிகளும், நெருக்கமான காட்சிகளும் தவிர்க்கமுடியாதவை என்பதை படத்தின் டைரக்டர் என்னிடம் தெளிவாக விளக்கினார். கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே அதுபோன்ற காட்சிகளில் நடிக்க ஓகே சொன்னேன். ட்ரெய்லரை பார்த்துவிட்டு இப்படி கமெண்ட் செய்கிறார்கள். ஆனால் படம் முழுவதையும் பார்க்கும்போது அப்படி இருக்காது என்பதை அவர்களே புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பது பற்றி அனிகா கருத்து

எனக்கும் hurt ஆகும் - வருத்தப்படும் அனிகா

சிறுவயதிலிருந்தே சோஷியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருப்பவர் அனிகா. பிற நடிகைகளை போலவே அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதில் கிளாமரான போட்டோக்கள் அவ்வப்போது இணையங்களில் தீயாய் பரவுவதுண்டு. இதுகுறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்தவந்த அனிகா, சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார். அந்த பேட்டியில், “சினிமாத்துறையில் இருக்கும் பல பெண்கள் ஆடை குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாவதுண்டு. நான் மிகவும் கிளாமராக டிரெஸ் பண்ணுவதாக எனக்கு தோன்றுவதில்லை. அதை என்னுடைய ஸ்டைலாகப் பார்க்கிறேன். ஆனால் பலர் விமர்சிக்கும்போது அது என்னுடைய வேலையில் ஒரு பகுதியாக பார்த்தாலும், நானும் மனுஷிதான். அது என்னை மிகவும் பாதிக்கும். ஒரு கட்டத்தில் சமூக ஊடகங்களில் பதிவிடுவதையே குறைத்துக்கொண்டேன். ரசிகர்கள் தவறான கமெண்டுகளை போடுகிறார்கள் என்பதற்காக அல்ல; நானாகவே போஸ்ட் போடுவதை மெல்ல குறைத்துக்கொண்டேன். ஆரம்பத்தில் எனது வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தேன். ஆனால் நாம் என்ன பண்ணினாலும் கட்டாயம் விமர்சிக்கப்படுவோம் என்பதை புரிந்துகொண்ட பிறகு அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டேன். அதேசமயம் என் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் நான் யோசித்து பார்ப்பேன். மாற்றவேண்டிய விஷயங்களை மட்டும் மாற்றிக்கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.


‘பிடி சார்’ படத்தின் போஸ்டர் மற்றும் திரைப்படத்தின் ஒரு காட்சியில் அனிகா

பிடி சார் படத்தில் கிடைத்த அனுபவம் வேறமாதிரி

பொதுவாக ஹீரோயின்கள் சைடு ரோலில் நடிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். அதிலும் அனைவரும் விரும்பும் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது மலையாளம், தெலுங்கு என மாறி மாறி ஹீரோயினாக நடித்துவரும் அனிகா, தமிழில் ‘பிடி சார்’ படத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது குறித்து பேசியிருக்கிறார் அனிகா. அந்த பேட்டியில், “நிறைய பெண்கள் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். அவர்களை தவறாக தொடுவார்கள், பொதுவெளியில் நடக்கும்போது தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். இதுபோன்ற ஒரு சம்பவத்தை மையமாகக்கொண்டதுதான் ‘பிடி சார்’ திரைப்படம். ஒரு பெண்ணுக்கு நடந்த அநியாயத்தால் அந்த பெண் என்னென்ன சிரமங்களுக்கு ஆளாகிறாள் என்பதை இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான போல்டான கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. எங்கு போனாலும் அம்மா அல்லது ஃப்ரண்ட்ஸ் கூட இருப்பார்கள்” என்று கூறியிருந்தார். இப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதற்கு முன்பே தனுஷின் 50வது படத்திலும் நடித்திருக்கும் அனிகா, தனுஷின் இயக்கத்தில் அவருடைய அக்கா மகன் ஹீரோவாக நடிக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Updated On 3 Jun 2024 11:43 PM IST
ராணி

ராணி

Next Story