இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிப்பின் மீது இருக்கும் மோகத்தால் பார்க்கும் வேலை எதுவாக இருந்தாலும் அதனை வெகுசாதாரணமாக தூக்கியெறிந்துவிட்டு பல்வேறு கனவுகளோடு சினிமாவுக்குள் வருபவர்கள் இங்கு ஏராளம். அப்படி கனவோடு வந்த அனைவரும் சாதித்து வெற்றி என்னும் இலக்கை எட்டிபிடித்துவிடுவது இல்லை. அதிர்ஷ்டம் இருக்கும் சிலரே அதில் உச்சம் பெருகிறார்கள். அந்த வகையில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி போன்றவர்களின் வழியை பின்பற்றி குடும்பத்தை பற்றி கூட யோசிக்காமல், தன் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்த வங்கி வேலையை தூக்கியெறிந்ததுவிட்டு நடிகன் என்ற கனவுடன் சினிமாவுக்கு வந்து ஓரளவு அதில் தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளவர்தான் நடிகர் குணா பாபு. இவரின் சினிமா பயணம் குறித்து பகிர்ந்துகொண்ட நேர்காணலின் இரண்டாம் பகுதியை இந்த தொகுப்பில் காணலாம்.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினி என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த அனுபவங்கள் பற்றி கூற முடியுமா?

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனை நான் நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. ஆனால், அது நடந்தது. ஒருநாள் படக்குழுவினர் பாம்பே செல்கிறோம். அமிதாப் பச்சனுக்கான காட்சிகள் அங்குதான் படமாக்கப்படுகின்றன என்று சொல்லும்போது உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள்தான் படப்பிடிப்பு. அதுவும் நீதிமன்ற காட்சிதான் படமாக்கப்படுகிறது. ஏற்கனவே நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் பார்த்துவிட்டோம். அடுத்து அமிதாப்பை எப்போது பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. காலையிலேயே படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டோம். ரஜினி சார் வந்துவிட்டார். அடுத்து அமிதாப் சார் கையில் வசன பேப்பரோடு உள்ளே நுழைந்தார். இயக்குநர் ஞானவேலை தன்னுடைய டோனில் அழைத்து தன் நடிப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு ஒத்திகை எடுத்துக்கொண்டு ஷாட்டுக்கு தயாரானார். இதையெல்லாம் ரஜினி சார் மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருந்தார்.


'வேட்டையன்' படத்தில் அமிதாப் பச்சன், ரஜினியுடன் பணியாற்றிய குணா பாபு

அப்போது எங்களுக்கு எப்படி இருந்தது என்றால் இவ்வளவு நாள் ரஜினி சாரை நாம் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தோம். இப்போது அவர் ஒருவரை பார்த்து ரசிக்கிறாரே என்று ஆச்சர்யமாக இருந்தது. இது எல்லாமே காண கிடைக்காத காட்சிகள்தான். இந்த படத்தில் நான் இன்ஸ்பெக்டர் ரோலில் தான் நடித்திருக்கிறேன். கொஞ்சம் பயத்தோடுதான் நடித்தேன் என்றாலும், படத்தில் எனக்கான முக்கியத்துவத்தையும் கொடுத்து இருக்கிறார்கள். நன்றாக செய்திருக்கிறேன். படமும் நன்றாக வந்து இருக்கிறது. இந்த படத்தில் இரண்டு பெரிய ஜாம்பவான்களுடன் நடித்திருக்கிறேன் எனும்போது உண்மையிலேயே கடவுளுடைய ஆசிர்வாதம்தான் என்று நினைக்கிறேன். இவ்வளவு வயது ஆனாலும் கூடவே இருவரும் இன்றும் தங்களை புது நடிகர்கள் மாதிரி, முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதுபோல் காட்டிக்கொள்வது மட்டுமின்றி தொய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த அனுபவங்கள் பற்றி கூற முடியுமா?

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் இயக்குநர் சந்துரு. ‘தமிழ் படம் 2’ நடிக்கும்போது எனக்கு அவர் பழக்கம். இந்த வாய்ப்பும் எளிதாக கிடைத்துவிடவில்லை. நீண்ட நாள் பின்தொடரலுக்கு பிறகுதான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உடன் ஒரு பயணம் எனக்கு இருக்கும். நடிகை கீர்த்தி சுரேஷ்தான் லீட் ரோல் செய்திருக்கிறார்கள். உண்மையிலேயே மிகவும் டேலண்டடான நபர்தான் அவர். ஒன்றரை பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்து முடித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியெல்லாம் இதை செய்வதாக சொல்லுவார்கள். ஆனால், நான் நேரில் பார்த்தது இல்லை. சக நடிகராக கீர்த்தியின் அந்த நடிப்பை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், கூஸ்பம்சாகவும் இருந்தது. படமும் நன்றாக வந்துள்ளது. காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் படத்தின் டீசரும் வெளியானது. அந்த படத்தை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்.


‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்

உங்களுக்கான கதை தேர்வு எல்லாம் எப்படி செய்கிறீர்கள்?

இதுவரை நான் செய்த ரோல்கள் எல்லாமே கதை கேட்டு யோசித்து செய்ததுதான். ‘தடை அதை உடை’, ‘திருவள்ளுவர்’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். இதற்கான கதைகள் படப்பிடிப்பு தளங்களில்தான் எனக்கு சொல்லப்பட்டது. அதேபோன்று தனித்துவமான படங்களில் முழு கதையும் கூறுவார்கள். பிடித்திருந்தால் நடிப்பேன். அப்படிதான் முழு கதையும் கேட்டு, மிகவும் பிடித்து போய் ‘பேரன்பும் பெரும் கோபமும்’ என்றொரு படத்தில் நடித்துள்ளேன். நமது கருத்துக்களை கேட்பவர்களிடம் எனது யோசனைகளை சொல்லுவேன். இல்லையென்றால் அவர்கள் தரப்பில் இருந்து கதை சொல்வது பிடித்திருந்தால் நடிப்பேன். இப்படித்தான் எனக்கான கதை தேர்வுகளை செய்து கொண்டிருக்கிறேன்.

இதுவரை 27 படங்கள் நடித்து முடித்துள்ளீர்கள்.. அதில் உங்களுக்கு பிடித்த ரோல் என்றால் எதை சொல்லுவீர்கள்?

இது பிடிக்கும்; பிடிக்காது என்று சொல்ல முடியாது. எல்லாமே எனக்கு பிடித்து செய்த ரோல்கள்தான். எனக்கு சவாலாக இருந்த வேடம் என்றால் ‘தீரன் அதிகாரம் ஒன்றில்’ நான் ஏற்று நடித்த போலீஸ் ரோல்தான். உடல் ரீதியாக, குளிர், வெயில் இதையெல்லாம் தாங்கி கொண்டு ஆக்சன் காட்சிகளில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது. இப்போது திரைக்கு வரவுள்ள ‘தடை அதை உடை’ படத்தில் டூயல் ரோல் ஏற்று நடித்துள்ளேன். அதேமாதிரி ‘கேங்’ என்றொரு படத்திலும் நடித்துள்ளேன். முழுக்க வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அங்கு பூச்சிக்கடி, எறும்பு, முள் போன்ற பிரச்சினைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் நடித்துள்ளேன். இவை ஒவ்வொன்றுமே வித்தியாசமான கதைக்களங்கள்தான். எனக்கு மிகவும் பிடித்து நடித்திருக்கிறேன்.


‘தடை அதை உடை’ படத்தில் குணா பாபு

நீங்கள் ஒரு படம் மிகவும் பிடித்து நடித்து இருப்பீர்கள். ஆனால், அது வெளிவராமலே போயிருக்கும். அந்த தருணம் எப்படி இருந்தது?

நான் இதுவரை நடித்த 27 படங்களில் இன்னும் ஏழு படங்கள் வெளிவர வேண்டும். அதில் நான்கு படங்கள் கண்டிப்பாக வெளிவந்துவிடும். மீதமுள்ள மற்ற படங்கள் வெளிவருவதில் சிரமங்கள் இருக்கிறது. நானும் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறேன். அது வெளிவந்தால் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா? அது நடக்காதது கொஞ்சம் மன உளைச்சலாக இருக்கிறது. மிகப்பெரிய வேதனையாகவும் உள்ளது. எங்கள் படம் மட்டுமில்லை. இதுபோன்று நிறைய படங்கள் வெளிவராமலேயே உள்ளன. அதற்கு என்ன காரணங்கள் என்று சொல்லத் தெரியவில்லை.

உங்களை மாதிரி படங்கள் வெளிவரவில்லையே என்று டிப்ரஷனில் உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்னவாக இருக்கும்?

என்னை நானே எப்படி ஹீலிங் செய்து கொள்வேன் என்றால் தனியாக படம் பார்ப்பேன்; அல்லது நண்பர்களுக்கு போன் செய்து எனது படத்தை பற்றி பேசாமல் பொதுவாக பேசுவது போன்று அவர்களிடம் விவாதிப்பேன். இதுவும் இல்லை என்றால் பைக்கை எடுத்துக்கொண்டு நீண்டதூர பயணம் சென்றுவிடுவேன். கமல் சார் சொல்வதுபோன்று நன்றாக தூங்கிவிடுவேன். தூங்கி எழுந்துவிட்டால் சரியாகிவிடும். அதைத்தாண்டி புது யோசனைகள் அப்போது நமக்கு பிறக்கும். யாரிடமும் எதைப்பற்றியும் பெரிதாக விவாதிக்காமல் இருந்தாலே பிரச்சினைகள் பெரிதாகாது.


'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் குணா பாபு

புரஃபஷனலாக நடிப்பு கற்றுக் கொண்டு வருபவர்களை விட, டிஜிட்டல் பிளாட்ஃபாம் மூலமாக நடிப்புத்துறைக்குள் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற டிஜிட்டல் தளங்களில் இருந்து நடிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எங்களை போன்று நடிப்புக்கு என்று படித்துவிட்டு வருபவர்கள் ஒவ்வொரு இடமாக வாய்ப்பு தேடி அலைகிறார்கள். அதிலும், தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருந்து வருபவர்களின் நடிப்பை சினிமா சம்மந்தப்பட்டவர்கள் நிறைய பார்க்கக்கூடும். இதை இயக்குநர்கள்தான் கவனிக்க வேண்டும். எங்களை போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்களுக்கும் கேமரா, நடிப்பு என எல்லாமுமே தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியும். புரஃபஷனலாக வரும் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால்தான் அவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

டேனியல் பாலாஜி கூட நடித்த அனுபவங்கள் ஏதும் இருக்கிறதா?


மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியுடன் நடித்தது பற்றி மனம் திறந்த குணா பாபு

‘வேட்டையடு விளையாடு’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களில் மிகவும் சூப்பராக நடித்து இருப்பார். அவருடன் நடிக்க போகிறேன் என்று கேள்விப்பட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள போகிறோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நடிக்கும்போது நல்லா நடி என்று மோட்டிவேட் செய்வார். அது மிகவும் ஆத்மார்த்தமாக இருக்கும். புது பையன் என்று நினைக்காமல் சமமாக நினைத்து பழகுவார். இடைவேளை நேரங்களில் என்னை பற்றி விசாரித்து மிகவும் ஜோவியலாக பேசுவார். நீ நடிப்பில் என்னவெல்லாம் கத்துகிட்ட? சொல்லு என்று கேட்டு தெரிந்துகொள்வார். அவரிடம் இருந்து நானும் நிறைய கற்றுக்கொண்டேன்.

Updated On 9 Dec 2024 9:33 PM IST
ராணி

ராணி

Next Story