‘ஜூன் போனால் ஜூலை காற்றே’ என்று 90ஸ் இளம்பெண்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகர் வினய் ராய். வேறு மொழி நடிகைகள் பலருக்கு கோலிவுட் வாய்ப்பளித்தபோது ஒருசில நடிகர்களையும் கைதூக்கிவிட்டிருக்கிறது. அவர்களில் வினயும் ஒருவர். ஐடி துறையில் பணிபுரிந்த இவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது? தனக்கு பிடித்த துறையாக சினிமா மாறிப்போனது எப்படி? செயின் ஸ்மோக்கராக இருந்த இவர் எப்படி புகைப்பழக்கத்தை கைவிட்டார்? என்பதுபோன்ற பல பர்சனல் விஷயங்களை ராணி நேயர்களுடன் பகிர்கிறார்...
திரைத்துறைக்குள் வரவேண்டுமென ஆசைப்பட்டு வந்தீர்களா? அல்லது எதிர்பாராமல் நடந்ததா?
முழுக்க முழுக்க அதிர்ஷ்டம்தான். இதை நான் எதிர்பார்க்கவில்லை. காலேஜில் படித்துக்கொண்டிருந்தபோது சிறு சிறு மாடலிங் செய்திருக்கிறேன். அதன்பிறகு இரண்டு மூன்று கார்பரேட் கம்பெனிகளில் வேலை செய்திருக்கிறேன். கடைசியாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தபோது என்னுடைய வேலை மிகவும் குறைவாக இருந்தது. அந்த சமயத்தில் என்னுடன் இருந்தவர்களெல்லாம் மாடலிங் செய்ய சொல்லிக்கொண்டிருந்தார்கள். ராம்ப் என்றாலே நான் மிகவும் வெட்கப்படுவேன். அதனால் ரூ.10 ஆயிரம் கொடுத்து ஒரு போட்டோஷூட் செய்தேன். அதை எல்லா ஒருங்கிணைப்பாளர்களிடமும் கொடுத்தேன். கொடுத்த முதல் மாதத்திலிருந்தே விளம்பர வாய்ப்பு கிடைத்தது. ஒரு வருடத்திற்குள்ளாகவே 100 முதல் 150 பிரிண்ட் விளம்பரங்கள் செய்தேன். முதல் விளம்பரமே ஒரு பேட்டரி கம்பெனிக்காக செய்திருந்தேன். அப்போது ஒரு டிவி விளம்பர வாய்ப்புகூட கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு பார்ட்டிக்கு போக பிடிக்குமென்பதால் தொடர்ந்து கிடைத்த விளம்பரங்களிலெல்லாம் நடித்துவந்தேன். அந்த சமயத்தில்தான் டிவி விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஃபேர் & லவ்லி விளம்பரத்தில் நடித்தேன். ஒரு பெரிய டைரக்டர் அதை எடுத்திருந்தார். அந்த விளம்பரம் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு சீரியல்களுக்கு நடுவே போய்க்கொண்டிருந்தது. நான் மும்பையில் ரக்பி விளையாடி முகத்தில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தபோது, எனக்கு இயக்குநர் ஜீவா சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அவர் 2 நாட்களில் பெங்களூருவில் என்னை சந்திப்பார் என்று சொன்னார்கள். அவரை சந்தித்தபோது டான்ஸ் ஆட தெரியுமா? என்று கேட்டார். நான் தெரியும் என்று பொய் சொன்னேன். படம் முடிந்தபிறகு ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து நான் வெளியே சென்றபோது ஜீவா சார் என்னை கூப்பிட்டு, “இப்போது உனக்கு இந்த படத்தின் அருமை புரியாது. யாரும் உனக்கு இந்த லெவலில் படம் கொடுக்கமாட்டாங்க” என்று சொன்னார். இப்போது அவர் சொன்னது எனக்கு புரிகிறது.
வினய்க்கு சினிமா ஆர்வத்தை ஏற்படுத்திய ‘உன்னாலே உன்னாலே’ இயக்குநர் ஜீவா
முதல் படம் முடிந்தபிறகு உங்களுடைய திரைப்படங்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென நீங்கள் நினைத்திருப்பீர்கள் அல்லவா? அப்படித்தான் இன்றும் போய்க்கொண்டிருக்கிறதா?
சினிமா வாய்ப்பு அதிர்ஷ்டத்தில் கிடைத்திருந்தாலும் எனக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். அப்பா, அம்மா இருவரும் மும்பை என்பதால் எங்களுடைய வீட்டில் அதிகமாக இந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள்தான் பார்ப்போம். ஆனால் நான் தமிழ் மக்கள் அதிகம் வசித்த பகுதியில் வசித்ததாலும் என்னுடைய டீச்சர், நண்பர்கள் என நிறையப்பேர் தமிழ் ஆட்கள் என்பதாலும் தமிழ்ப்படங்களும் பார்த்திருக்கிறேன். நான் முதலில் ‘உன்னாலே உன்னாலே’ படம் பண்ணியபோது ஜீவா சாரிடம் நிறையத் திட்டு வாங்கினேன். ஏனென்றால் நான் மிகவும் ஜாலியாக இருப்பேன். அதனால் இவன் நடிக்க வரவில்லை, ஜாலி பண்ண வந்திருக்கிறான் என்று சொல்லி திட்டுவார். ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 20 நாளைக்குப் பிறகு அவர் என்னை ஃப்ரீயாக விட்டுவிட்டார். ஆனால் நிறைய சொல்லிக்கொடுத்தார். அப்போதுதான் சினிமாமீது எனக்கு காதல் வந்தது. படம் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்த படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருந்ததால் ரிலீஸாகி 2 வாரங்கள் இங்கு வரவே இல்லை. அதன்பிறகு பெரிய ஸ்க்ரீனில் என்னை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் எனக்கு அதைவிட செட்டுக்குள் நடப்பதுதான் மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு ‘ஜெயம்கொண்டான்’, ‘மிரட்டல்’, ‘மோதி விளையாடு’ போன்ற நிறையப் படங்கள் பண்ணினேன். ஆனால் எனக்கு சினிமா மேக்கிங்கில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ‘துப்பறிவாளன்’ வரை என்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் அதன்பிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது. எனக்கு கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்துகொடுக்கவேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். அதனால் பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பும், வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று வித்தியாசமான உணவுகளை சாப்பிடும் அனுபவமும் கிடைக்குமென்று நினைத்தேன்.
‘ஜெயம்கொண்டான்’ மற்றும் ‘துப்பறிவாளன்’ படங்களில்...
ஹீரோவாகவே நடித்திருக்கலாம் என்று நினைத்திருக்கிறீர்களா?
இல்லை. ஹீரோவாக கமிட்டானால் ஒரே படத்தில் 60 -70 நாட்கள் நடிக்கவேண்டி இருக்கும். ஆனால் கேரக்டர் ரோல் செய்தால் லாபம்தானே. உண்மையை சொன்னால் ‘துப்பறிவாளன்’ படத்திற்கு முன்புவரை நான் ஹீரோவாக நடிக்கவேண்டுமென்றுதான் யோசித்தேன். அதனால் பெரிய டைரக்டர்கள் படத்தில் வில்லன் ரோல்களுக்கு நோ சொன்னேன். அப்போதுதான் மிஷ்கின் சார், “நீ ஏன் ஹீரோ பற்றி யோசிக்கிறாய். வில்லனாக நடித்தால் நிறைய ரேஞ்சஸ் இருக்கும்” என்று என்னிடம் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் ‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘ஓ மை டாக்’, ‘ஹனு மன்’ போன்ற நிறைய படங்களில் நடித்தேன். அதன்மூலம் இந்த 5 வருடங்களில் டார்க் காமெடி, கமெர்ஷியல், குழந்தைகள் படம், சூப்பர் ஹீரோ படம் என நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.
எல்லா துறைகளிலுமே ஏற்றதாழ்வுகள் இருப்பதைபோல சினிமாவிலும் சற்று அதிகமாகவே இருக்கும். அதை எப்படி கடந்து வந்தீர்கள்?
2015 சமயத்தில் எனக்கு வேலை இல்லை. ஆனால் எனக்கு சினிமா பிடிக்கும் என்பதால் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் பெங்களூருவில் ஒரு கம்பெனி தொடங்கி அதை நடத்திவந்தேன். இருந்தாலும் நம் மனதுக்கு என்ன பிடிக்குமோ அதைப்பற்றிதான் யோசித்துக்கொண்டே இருக்கும். அப்படி நான் யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பிடித்த வேலை கிடைத்திருப்பதே பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். வாழ்க்கையில் அது மிகவும் முக்கியம்.
வில்லன் கதாபாத்திரங்களில் திரையில் மிரட்டும் வினய் ராய்
புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியே வந்ததாகவும் கூறியிருந்தீர்கள்? அது எப்படி சாத்தியமாயிற்று?
நான் கல்லூரி சமயத்தில் புகைபிடிக்கத் தொடங்கினேன். அந்த பழக்கம் அப்படியே அதிகமாகி செயின் ஸ்மோக்கராகவே மாறிவிட்டேன். இந்திய ரக்பி டீமில் நானும் இன்னொருவரும் மட்டும்தான் புகைபிடிப்போம். ஒரு நாளைக்கு 20 முதல் 25 சிகரெட் பிடிப்பேன் என்றால் வீக் என்ட்களில் ஒரு நாளில் 40க்கும் மேல் பிடிப்பேன். ஒரு கட்டத்தில் புகைபழக்கத்திற்கு அடிமையானதால் விட்டுவிடலாம் என்று யோசித்து 2 நாட்கள் தொடாமல் இருந்து பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கு அடிமையாகி இருந்ததால் என்னால் விடவே முடியவில்லை. திடீரென என் நண்பன் விட்டுவிட்டான். அவன் என்னிடம் சொன்னான் மெல்லமாக விடலாம் என்று நினைத்தால் நடக்காது. விட்டால் ஒரே நாளில் விட்டுவிட வேண்டுமென்றான். அப்போது முடிவெடுத்து 3 வருடங்கள் விட்டுவிட்டேன். ஆனால் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்காக நிறைய ஸ்மோக் செய்யவேண்டி இருந்தது. அந்த பழக்கம் திரும்ப வந்ததால் தெரபி எடுத்து நிறுத்திவிட்டேன். இப்போது நான் சிகரெட்டுக்கு அடிமை கிடையாது. நினைத்தால் விடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. அது மிகவும் கெட்ட பழக்கம். அதை யாரும் பழகவேண்டாம்.
எந்த படத்தையாவது மிஸ் செய்துவிட்டோமே என்று வருத்தப்பட்டதுண்டா?
அதுபற்றியெல்லாம் நான் யோசிப்பதில்லை. கால்ஷீட் காரணமாக நிறைய படங்கள் என் கைவிட்டு போயிருக்கின்றன. ஆனால் கதை கேட்டுவிட்டு நான் வேண்டாம் என்று சொன்ன படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் நான் தியேட்டருக்குள் இருந்தபோது தெலுங்கு டைரக்டர் ஆபீஸிலிருந்து ஒரு கால் வந்தது. வெளியே வந்து கூப்பிடுவதற்குள் அந்த ஆஃபர் வேறு ஒருவருக்கு போய்விட்டது.
புகைப்பழக்கத்தை கைவிட்ட அனுபவம் குறித்து...
நீங்கள் நடித்த திரைப்படங்களிலேயே இதில் நடித்திருக்கவே கூடாது என்று நினைத்ததுண்டா?
கண்டிப்பாக. நான் படத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் யாரிடம் சொல்லவேண்டுமோ அவரிடம் ‘நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்’ என்று நேரடியாகவே சொல்லிவிட்டேன். அதேசமயம் எனக்கு வந்த வேலையை முழுமையாக முடித்து கொடுத்துவிடுவேன். நான் நடித்துமுடித்த சில படங்களில் நடித்திருக்கவேண்டாம் என்று நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு புரிந்த தருணங்களும் இருக்கின்றன.
திரைத்துறையில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்களா?
நான் நிறையப்பேரிடம் நண்பராக இருக்கிறேன். சமீபத்தில் மலையாள படத்தில் நடித்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் பாவனாவை பார்த்து பேசினேன். அதுபோல் விஷால் எனக்கு நல்ல நண்பர்தான். அதுபோல், ரம்யா, ஜெகபதி பாபு போன்றோர் நெருங்கிய நண்பர்கள்.
நடிகர் விஷாலுடனான நட்பு குறித்து பகிர்ந்த வினய்
நீங்கள் ஃபுட்டீ என்று சொல்கிறார்கள். என்ன மாதிரியான உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்கள்?
ஷூட்டிங்கிற்கு எங்கு சென்றாலும் சரி, அது வெளிநாடாக இருந்தாலும் வெளியூராக இருந்தாலும் அதன் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ளவேண்டும், அந்த ஊர் உணவுகளை நன்றாக சாப்பிடவேண்டும் என்று நினைப்பேன். ‘துப்பறிவாளன்’ பட ஷூட்டிங் பிச்சாவரத்தின் உள்ளே 45 நிமிடங்கள் செல்லவேண்டிய தூரத்தில் நடந்தது. அங்கு டீமிற்கான சாப்பாடு மதியம் 12.30க்கு எல்லாம் வந்துவிடும். நான் எந்த ஊருக்கு போனாலும் என்னுடைய அசிஸ்டண்டை விட்டு உள்ளூரில் பிரபலமான சாப்பாடு மற்றும் கடையை விசாரித்து வர சொல்லுவேன். அப்படி இங்கு சென்றபோதும் ஃபேமஸ் கடை எது என்று கேட்டேன். அதற்கு சிதம்பரம் மூர்த்தி கேண்டீன் என்று சொன்னார். அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை என்பதால் எல்லாருக்கும் செட்டிலிருந்து பிரியாணி வரும் என்று சொன்னார்கள். நான் அந்த பிரியாணி வேண்டாம், மூர்த்தி கேண்டீனிலிருந்து எனக்கு வாங்கி வா என அசிஸ்டண்டிடம் சொல்லிவிட்டேன். அடுத்த நாள் சண்டைக்காட்சி ஷூட்டிங் முடிந்து மதியம் லஞ்ச் சாப்பிட உட்கார்ந்ததும் நான் மட்டன் பிரியாணி பார்சலை எடுத்து என் தட்டில் கொட்டினேன். பக்கத்தில் எல்லாரும் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது விஷாலும் தயிர் சாதத்துடன் என் கிட்டே வந்தபோது என் தட்டை பார்த்து ஷாக்காகி இவனுக்கு மட்டும் எப்படி பிரியாணி கிடைத்தது என்று கத்திக்கொண்டிருந்தான். அந்த நாளே ஜோக்காக போய்விட்டது. அதுபோல் தூத்துக்குடிக்கு ஷூட்டிங் போனபோது பார்டர் கடை பரோட்டா சாப்பிட்டேன். சாப்பாட்டில்தான் நமது கலாச்சாரமும் இருக்கும் அல்லவா? எனவே எங்கு போனாலும் எனக்கு சாப்பாடு முக்கியம்.
அடுத்து என்னென்ன படங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள்?
அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிக்கவிருக்கிறேன். அதுபற்றி படக்குழு அறிவிக்கும்போது தெரிவிக்கிறேன்.
