முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகளின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு, அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்த நேரலைகளும் செய்திகளும் தீயாய் பரவின. இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது மகள் குறித்து, ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபலங்கள்/ சினிமா துறையினர் வீடுகளில் நடக்கும் துக்க நிகழ்வுகளில் இனிவரும் நாட்களில் வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி பெற்றப் பிறகே வீடியோ எடுக்க அனுமதி வழங்கப்படும் (கோரிக்கை) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On 22 Sept 2023 5:30 PM IST
ராணி

ராணி

Next Story