
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட இவர் ‘கனா’ என்ற படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். தற்போது வரை இரண்டு படம், ஒரு வெப் தொடரை மட்டுமே இயக்கியுள்ள அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே நடிகர் கார்த்தியை வைத்து இயக்கப் போகிறார் என்ற பேச்சும் அடிபட்டு வந்த நிலையில், நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற செய்தி சமீபத்திய ஹாட் டாப்பிக்காக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அருண்ராஜா காமராஜ் யார் என்பது பற்றியும்.., இவர் நயன்தாராவை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றது எப்படி என்பது குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.
யார் இந்த அருண்ராஜா காமராஜ்?
அருண்ராஜா காமராஜ் கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகே உள்ள பரளி என்ற இடத்தில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே விளையாட்டு மற்றும் இசையின் மீது அதீத ஆர்வம் கொண்ட அருண்ராஜா, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருச்சியிலேயே முடித்தார். கல்லூரி நாட்களில் அருண்ராஜாவுக்கு இருந்த நட்பு வட்டத்தில் மிக முக்கியமான ஒருவராக இருந்தவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த அருண்ராஜாவை, சென்னைக்கு அழைத்து வந்தவர் அவர்தான். இங்கு அருண்ராஜாவை தனது ரூமிலேயே தங்க வைத்துக் கொண்ட சிவகார்த்திகேயன், விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது சினிமா தொடர்பான சிலரின் அறிமுகங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தாராம். அப்படி கிடைத்த அறிமுகத்தால்தான் 2012 ஆம் ஆண்டு பீட்சா படத்தின் மூலமாக ‘ராத்திரியை ஆளும் அரசன்’ மற்றும் ‘எங்கோ ஓடுகின்றாய்’ என்ற இரண்டு பாடல்களை எழுதி பாடலாசிரியராக கால் பதித்தார் அருண்ராஜா. இதன் பிறகு ‘பீட்சா 2’, ‘ஜிகர்தண்டா’, ‘டார்லிங்’, ‘காக்கி சட்டை’, ‘டிமாண்டி காலனி’ என வரிசையாக பல படங்களில் பாடல்களை எழுத ஆரம்பித்தது மட்டுமின்றி, 2014ஆம் ஆண்டு சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகராகவும் அறிமுகமானார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன்
இப்படி பாடலாசிரியராக, பாடகராக இயங்கி வந்தவர் 2013ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் ஒரு காமெடி நடிகராக உடும்பே என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு அடுத்த ஆண்டு தனது நண்பரான சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தொடர்ந்து ‘பென்சில்’, ‘ரெமோ’, ‘மரகத நாணயம்’, ‘யானும் தீயவன்’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’, க/பெ ரணசிங்கம்’ ஆகிய படங்களில் நகைச்சுவை மற்றும் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்தார். இதற்கிடையில் நண்பன் சிவகார்த்திகேயன் மூலமாக, இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் அறிமுகம் கிடைத்து, 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ படத்தை அவர் எடுத்த போது, அப்படத்தில் நெல்சனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் அருண்ராஜா.
இயக்குநர் அவதாரம்
பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பன்முகத் திறமையாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்த அதே நேரத்தில், உதவி இயக்குநராகவும் அவதாரம் எடுத்த அருண்ராஜா, திடீரென அதே ஆண்டில் படம் இயக்க முடிவு செய்து அதனை தனது நண்பனான சிவகார்த்திகேயனிடமும் கூறினார். உடனே அப்போது நடிகர் எஸ்.கே-வும் நன்கு வளர்ந்து வந்துகொண்டிருந்த கதாநாயகனாக இருந்ததால், தனது நண்பனையும் மேலே தூக்கிவிட வேண்டும் என்று நினைத்து, தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அதன் மூலம் தனது நண்பரான அருண்ராஜாவின் முதல் படமான பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘கனா’ படத்தினை தயாரித்தார். நண்பர்கள் இருவரும் இணைந்து எடுத்த முதல் முயற்சி வெற்றி பெற்றது மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ஏற்று நடித்த திரைப்பட காட்சிகள்
இதன் பிறகு அடுத்த கதைக்கான விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டே பாடலாசிரியராகவும், பாடகராகவும் இயங்கி வந்த அருண் ராஜா திடீரென கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட சமயத்தில் தனக்கு எல்லாமுமாக இருந்த மனைவி சிந்துஜாவை இழந்தார். மனைவியின் இழப்பில் இருந்து மீண்டுவர முடியாமல் மிகவும் சிரமப்பட்ட அருண்ராஜா, கொஞ்சம் கொஞ்சமாக அந்த துக்கத்தில் இருந்து வெளியில் வந்து 2022 ஆம் ஆண்டு, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தினை எடுத்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘ஆர்டிகல் 15’ என்ற படத்தினை தழுவி எடுக்கப்பட்டது. இப்படமும் தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிய அருண்ராஜா வட சென்னையை பின்னணியாக கொண்டு ‘லேபில்’ என்ற வெப் தொடரை இயக்க முடிவு செய்து, அதனை தற்போது வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டுள்ளார்.
‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் நடிகர் உதயநிதியுடன், இயக்குநர் அருண்ராஜா காமராஜ்
லேபிலில் பதித்த புதிய முத்திரை
பொதுவாகவே ஒடுக்கப்பட்டவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், நியாயம் கிடைக்க வேண்டி போராடுபவர்கள் போன்ற மனிதர்களின் வாழ்க்கையையே தனது திரை பிம்பமாக, கடந்த 2 படங்களில் காண்பித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய அருண்ராஜா காமராஜ், தற்போது ‘லேபில்’ என்ற வெப் தொடரை இயக்கி இருக்கிறார். இந்த தொடரில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வட சென்னையின் ஒரு முகம் மட்டுமே திரைப்படங்களில் பிரதிபலிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு உள்ள வேறு சில வாழ்க்கை முறைகளையும், அவற்றின் உண்மை பின்னணியையும் வெளிப்படுத்தும் விதமாக அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'லேபில்' வெப் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த தொடரில் மோகன் ராஜன் என்பவர் எழுதி இடம்பெற்றுள்ள 'தங்க கிளியே' என்ற பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார்.
‘லேபில்’ வெப் தொடர் போஸ்டரில் நடிகர் ஜெய்
இந்த வெப் தொடர் கடந்த 10 ஆம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெப் தொடர் முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி வெளிவந்துள்ளதால் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக அப்பகுதியிலேயே நடத்தப்பட்டுள்ளது. அங்கு படப்பிடிப்பு நடந்த சமயத்தில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இயக்குநர் அருண் ராஜாவிடம் எப்போதும் இங்கு படப்பிடிப்புக்காக வருபவர்கள் எல்லோருமே எங்களை மோசமானவர்களாகவே பிரதிபலிப்பது போல் எடுக்கிறார்கள். இங்கு நல்லவர்களும் வாழ்கிறோம். நீங்களும் எங்களை தவறாகத்தான் காட்டப்போகிறீர்களா என்று கேட்டார்களாம். ஆனால் அவர்களின் கேள்வியை தகர்க்கும் விதமாக வெளிவந்துள்ள இந்த வெப் தொடர், தற்போது அப்பகுதி மக்களிடமும் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
‘லேபில்’ வெப் தொடர் காட்சியில் நடிகர் ஜெய் மற்றும் கதாபாத்திர போஸ்டர்
நயன்தாராவுடன் இணையும் அருண்ராஜா காமராஜ்
இயக்குநர்களாக இருந்தாலும் சரி, நடிகர்களாக இருந்தாலும் சரி ஒரு படத்தை எடுத்து வெற்றி கொடுத்துவிட்டால், அடுத்ததாக இவர் யாருடன் கை கோர்க்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே எல்லோரிடத்திலும் தொற்றிக்கொள்ளும். அந்த வகையில், தற்போது ‘லேபில்’ வெப் தொடரை இயக்கி முடித்துள்ள அருண்ராஜா அடுத்ததாக யாருடன் இணைந்து பணியாற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நேரம், அதற்கு ஏற்றார் போல் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற தகவலும் பரவலாக வைரலாகி வந்தது. ஆனால் அவர் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக இயங்கி வருவதால், அவருடன் இணைந்து பணியாற்ற இருந்த திரைப்படம் தள்ளிப்போயுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் அருண்ராஜா
இந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்ராஜா அடுத்ததாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும், அந்த படத்தினை கார்த்தியை வைத்து இயக்க இருந்த அதே பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் படம் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ‘ராஜா ராணி’, ‘கோலமாவு கோகிலா’, போன்ற படங்களில் நடிகராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றியபோது நயன்தாராவுடன் ஏற்பட்ட அறிமுகத்தால் கிடைத்த நட்பின் அடிப்படையில், அவர் ஒரு கதையை நயனிடம் கூறியதாகவும், அந்த கதை பிடித்ததாலேயே இப்படத்தில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ‘அன்னபூரணி’ படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா டிசம்பர் 1-ஆம் தேதி அதன் ரிலீசுக்காக காத்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நயன்தாராவிற்கு, அருண்ராஜா நிச்சயம் ஒரு சமூக அக்கறையுள்ள படத்தைதான் தருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்படம் மற்றுமொரு 'அறம்' திரைப்படமாக நயன்தாராவிற்கு அமையும் என நம்பலாம்.
