இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர்கள் என்றாலே எப்படிப்பட்ட கதையையும் அப்படியே உள்வாங்கி திரையின்முன்பு மற்றொரு கதாபாத்திரமாகவே வாழவேண்டும் என்று சொல்வார்கள். என்னதான் பெரிய நடிகர்களாக இருந்தாலும் முழு திரைப்படத்தையும் பார்க்கும்போது எங்கேனும் ஒரு இடத்தில் அந்த நபருடைய நளினம் மற்றும் பேச்சு வெளிப்பட்டுவிடும். ஆனால் ஒருசில நடிகர்கள் அதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் 100% முழுமையாகவே வாழ்ந்துகாட்டி விடுவார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் எஸ்.ஜே. சூர்யா. ‘நடிப்பு அரக்கன்’ என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் இவர், கொடூரமான வில்லன், அப்பாவி, குழந்தை, கொலைகாரன் என வெவ்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு திரையில் உயிர்கொடுத்திருப்பார். இப்படி எல்லாராலும் விரும்பப்படும் நடிகராக இப்போது உருவாகியிருந்தாலும், இந்த இடத்திற்கு வர, அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம்; இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட எஸ்.ஜே. சூர்யா, ஜூலை 20ஆம் தேதி தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எஸ்.ஜே. சூர்யா சந்தித்த சவால்கள் குறித்தும், திரைத்துறையின் தவிர்க்கமுடியாத நடிகனாக உருவாக அவர் கடந்துவந்த பாதை குறித்தும் பார்க்கலாம்.

இயக்குநராக உருவான எஸ்.ஜே. சூர்யா

தென்காசி மாவட்டத்திலிருக்கும் வாசுதேவநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சம்மனசு பாண்டியன் மற்றும் ஆனந்தம் தம்பதியின் இளைய மகன், செல்வராஜ் ஜஸ்டின் பாண்டியன். சினிமாவுக்காக தனது பெயரை எஸ்.ஜே. சூர்யா என மாற்றிக்கொண்டார். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்றபோதிலும் அப்பா ஆடியோ கேசட் கடை வைத்து நடத்திவந்துள்ளார். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்து அதிகம் ஈர்க்கப்பட்ட சூர்யா, பள்ளிக்காலத்திலேயே நடிகனாக வேண்டுமென்ற ஆசையை தனக்குள் வளர்த்துக்கொண்டார். அதனால் தன்னுடன் இருக்கும் நண்பர்களுக்கு கதை சொல்வது, நடித்துக்காட்டுவது என இருந்த சூர்யா, நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே வீட்டை விட்டு ஓடிவிட்டார். ஒருவழியாக பெற்றோர் அவரை கண்டுபிடித்து சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற கனவு மட்டும் சூர்யாவை விடவில்லை. பள்ளிக்குப் பிறகு சென்னையில் லயோலா கல்லூரியில் சேர்ந்த இவர், விடுமுறை நாட்களில் சினிமா வாய்ப்பு தேடி சென்றுள்ளார். அப்படி சென்ற சமயத்தில்தான் ‘ஆசை’ படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் வசந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை திறம்பட பயன்படுத்திக்கொண்ட சூர்யா, அவரிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டார். மேலும் அந்த படத்திலேயே ஒரு சிறிய ரோலிலும் நடித்தார். நடிகனாக வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் இருந்தபோதிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இயக்குநரானார்.


எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘வாலி’

இதுகுறித்து அவர் பகிர்கையில், “சிறுவயதிலிருந்தே நடிகனாக வேண்டும் என்பது மட்டும்தான் என் கனவாக இருந்தது. நான் ஒரு ஸ்டார் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும். ஆனால் முதலில் நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் படத்தை இயக்க திட்டமிட்டேன். முதலில் இயக்குநராகி, அதன்மூலம் நடிகனாகிவிடலாம் என்று யோசித்தேன். சிறுவயதிலிருந்தே நன்றாக கதை சொல்வேன் என்பதால் முதலில் ஒரு கதை எழுதி இயக்கினேன். அப்படி உருவானதுதான் ‘வாலி’. அந்த படத்தின் இயக்குநராக நான் இருந்தாலும் அறுந்துபோன செருப்பில் பின் குத்திதான் போட்டுக்கொண்டிருப்பேன். அஜித் சார்தான் எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக்கூடாது என்பதற்காக என் தோளில் கைபோட்டு என்னை இறுக்கி அணைத்துக்கொள்வார். எப்போதும் டார்லிங் என்றே கூப்பிடுவார். அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு அவர் எனக்கு ஒரு காரை பரிசளித்தார். அதனையடுத்து உருவான படம்தான் ‘குஷி’. அதுவும் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது” என்று கூறியிருந்தார். இப்படி இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களுமே அஜித், விஜய் என பெரிய ஸ்டார்களை வைத்துதான். இந்த இரண்டு படங்களுமே இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் என்று சொல்லலாம். ‘குஷி’ படம் தமிழில் மெகா ஹிட்டடித்ததைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைப்போலவே தெலுங்கில் வெற்றிபெற்றாலும் இந்தியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. என்னதான் ஒரு சிறந்த இயக்குநர் என்ற பெயரைப் பெற்றாலும் நடிகனாக வேண்டும் என்ற கனவுடனேயே இருந்த எஸ்.ஜே. சூர்யா, தன்னை வைத்து தானே ஒரு படம் இயக்க முடிவுசெய்தார். அப்படி உருவான படம்தான் ‘நியூ’.

ஆக்டிங் அறிமுகம் குறித்து

‘குஷி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு 4 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட எஸ்.ஜே. சூர்யா, அடுத்து ஒரு கதை எழுதி, இயக்க திட்டமிட்டு, அதை தயாரிக்கவும் செய்து, அதில் தன்னைத்தானே கதாநாயகனாவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். தன்னை ஒரு நடிகனாக மக்கள் அங்கீகரிப்பார்களா என்ற கவலை எல்லாம் அப்போது தனக்கு இல்லை என கூறும் சூர்யா, நடிகனாக அறிமுகமான தருணம் குறித்து பல்வேறு நேர்க்காணல்களில் பகிர்ந்திருக்கிறார். “நான் ‘நியூ’ படத்தில் நடிக்க முடிவு செய்தபோது, என்னிடம் பெரியளவில் பணமெல்லாம் இல்லை. அதுவரை டைரக்டராக சம்பாதித்த அனைத்தையும் போட்டுதான் அந்த படத்தில் நடித்தேன். பட்ஜெட் பிரச்சினை வந்துவிட கூடாது என்பதற்காக கூடவே அந்த படத்தை தெலுங்கிலும் மகேஷ் பாபுவை வைத்து இயக்கினேன். நடிப்பில் இறங்குவதற்கு முன்பு, ‘ஒருவேளை நடிப்பு கைகொடுக்காவிட்டால் மீண்டும் ஹோட்டலில் சர்வராக வேலைசெய்ய ரெடியா?’ என்று என்னை நானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். மனம் அதற்கு ஓகே சொன்னபிறகுதான் நடிக்க முடிவுசெய்தேன்.


‘குஷி’ பட ஷூட்டிங்கில் இயக்குநராக எஸ்.ஜே. சூர்யா

நான் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருப்பதற்கும் இதுதான் காரணம். நடிப்பு, இயக்கம் கைகொடுக்கவில்லை என்றால் என்னால் ஹோட்டலில்கூட வேலைக்கு சென்றுவிட முடியும். ஆனால் குடும்பம் என ஒன்று இருந்தால் நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியிருக்கிறார். அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக அப்போதைய கனவு கன்னியாக வலம்வந்த சிம்ரன் நடித்திருந்தார்.

‘நியூ’ திரைப்படம் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கிடைத்த நம்பிக்கையால், ‘அன்பே ஆருயிரே’ படத்தை இயக்கி நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘மயிலிறகே மயிலிறகே’ பாடல் இன்றுவரை மனதை வருடும் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அதனையடுத்து வெளியான ‘கள்வனின் காதலி’, ‘வியாபாரி’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும், அவருடைய படங்களில் இடம்பெற்ற ‘ஆசப்பட்ட எல்லாத்தையும்’ மற்றும் ‘காலையில் தினமும் கண்விழித்தால்’ போன்ற அம்மா சென்டிமென்ட் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலமாகின. இருப்பினும் அவருடைய நடிப்பை பலர் ஓவர் ஆக்ட்டிங் என விமர்சித்தனர். படங்கள் நன்றாக ஓடவில்லை என்பது ஒருபுறம், நடிப்பு நன்றாக இல்லை என்ற கருத்துக்கள் மறுபுறம் என எஸ்.ஜே. சூர்யா பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். 2012ஆம் ஆண்டு ‘நண்பன்’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம்தளராத எஸ்.ஜே. சூர்யா, தனக்கான வாய்ப்பை தானேதான் உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், 2005ஆம் ஆண்டு ‘இசை’ என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அந்த படத்திற்காக இசையையும் முறைப்படி கற்றுக்கொண்டார். அந்த படம் ஓரளவு பேசப்பட்டாலும் மீண்டும் அவருடைய சினிமா வாழ்க்கை தொடர் சறுக்கல்களையே சந்தித்தது. எஸ்.ஜே. சூர்யா சினிமாவை விட்டே விலகிவிட்டார் என்று பேசப்பட்ட சமயத்தில்தான் அவரை தூக்கிநிறுத்தியது ‘இறைவி’.


எஸ்.ஜே. சூர்யாவை நடிகராக கைதூக்கிவிட்ட ‘இறைவி’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்

எஸ்.ஜே. சூர்யாவின் கலக்கல் கம்பேக்!

இனிமேல் எஸ்.ஜே. சூர்யாவை திரையில் பார்க்கமுடியாது என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2016ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘இறைவி’ படத்தில் நடித்தார். அந்த படத்தில் வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒரு ஆணின் மனநிலை எப்படியிருக்கும்? என்பதை தனது எதார்த்தமான மற்றும் அழுத்தமான நடிப்பால் வெளிப்படுத்திய எஸ்.ஜே. சூர்யாவை பார்த்து அனைவரும் மிரண்டுபோயினர். அதுவரை சூர்யாவை ஓவர் ஆக்ட்டிங் என்று சொன்ன மீடியாக்கள் புகழத் தொடங்கின. அதன்பிறகு எஸ்.ஜே. சூர்யாவிற்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். அதற்கு அடுத்த ஆண்டே ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக கையாண்டிருந்தார். தொடர்ந்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த ஏதுவான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அந்தந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்து காட்டினார். இப்படி ‘மெர்சல்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற படங்களால் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

குறிப்பாக, எஸ்.ஜே. சூர்யாவை புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்ற திரைப்படம் என்றால் அது ‘மாநாடு’. அந்த படத்தில் ஹீரோ சிம்புவையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என ஊடகங்கள் விமர்சித்தன. குறிப்பாக, ‘தலைவரே தலைவரே’ மற்றும் ‘வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு’ போன்ற டயலாக்குகள் இளைஞர்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் மிகவும் ட்ரெண்டாகின. இதனால் ஒரு படத்தில் ஹீரோ இருந்தாலும் அதைத் தாண்டி எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதனாலேயே பல இயக்குநர்கள் இவருக்காகவே வெயிட்டான கதாபாத்திரங்களை எழுதத் தொடங்கினர். அதனால் அடுத்தடுத்து ‘டாண்’, ‘வாரிசு’ போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார். இவர் மிகவும் எதிர்பார்த்த ‘பொம்மை’ திரைப்படம் வரவேற்பை பெறாவிட்டாலும், அடுத்து வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் எஸ்.ஜே. சூர்யாவின் கெரியரில் சிறந்த மைல்கல் என்றே சொல்லலாம். அந்த படத்தில் விஷாலின் நடிப்பைத் தாண்டி அதிகம் பேசப்பட்டவர் எஸ்.ஜே. சூர்யாதான் என்றால் அது மிகையாகாது. அந்த படத்தின் ட்ரெய்லரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படமும் ஏமாற்றமளிக்கவில்லை. எஸ்.ஜே. சூர்யாவிற்காகத்தான் படம் பார்த்ததாக பலரும் சமூக ஊடகங்களில் புகழ்ந்து தள்ளினர். ‘மார்க் ஆண்டனி’யின் வைப் குறைவதற்குள்ளாகவே வெளியானது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படத்திலும் இரண்டு கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருப்பார். இப்படி தொடர் வெற்றிகளால் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யா, அடுத்து என்ன கெட்டப்பில் வரப்போகிறார் என ரசிகர்கள் ஒருபுறம் எதிர்பார்த்திருக்க, மற்றொருபுறம் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.


‘இந்தியன் 2’ திரைப்படத்தில் வில்லன் கெட்டப்பில் எஸ்.ஜே. சூர்யா

வெற்றிக்கான தாரக மந்திரம்

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மேலும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த பாகத்தில்தான் கமலுடன் தனக்கு காம்பினேஷன் சீன்கள் இருப்பதாக அவரே நேர்க்காணல்களில் கூறியிருந்தாலும் இரண்டாம் பாகத்திலேயே எஸ்.ஜே. சூர்யாவுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ‘கேம் சேஞ்சர்’, ‘ராயன்’ போன்ற படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யா தனது வெற்றிக்கான தாரக மந்திரத்தை பகிர்கையில், “என்னை வெற்றி நடிகனாக உருவாக்கிய ‘மாநாடு’, ‘மான்ஸ்டர்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற படங்களின் எந்த கதாபாத்திரங்களையும் நான் டிசைன் செய்யவில்லை. அந்த வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டின. அந்த வாய்ப்புகள் இறைவன் நமது வீட்டுக்கதவை தட்டுவதைப் போன்றது. அப்படி தட்டும்போது நான் எனது கதவையும், காதுகளையும் திறந்து கேட்பேன். எனக்கு யார் மெசேஜ் செய்தாலும், கால் பண்ணினாலும் எனக்கு தெரியாதவர்களாக இருந்தாலும் திரும்ப அவர்களிடம் கூப்பிட்டு கேட்பேன். வாய்ப்புகள் எப்போது எங்கிருந்து வரும் என்று தெரியாது. இப்போது பெரிய இயக்குநர்களாக இருக்கும் சங்கர் சார், மணி சார், ராஜ மௌலி சார் உட்பட எல்லாருமே ஒரு காலத்தில் புதிய டைரக்டர்கள்தான். வாய்ப்புகள் நமது கதவை தட்டும்போது காதை மூடிக்கொண்டு இருந்துவிட்டால் பெரிய வாய்ப்புகளை தவறவிட்டு விடுவோம் என்ற பயம் எப்போதுமே எனக்கு இருக்கும்” என்கிறார்.

Updated On 22 July 2024 10:49 PM IST
ராணி

ராணி

Next Story