இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ரேடியோ அலைவரிசை வாயிலாக தனது கேலியான பேச்சின் மூலம் நம்மையெல்லாம் மகிழ்விக்கும் ஆர்.ஜே.வாக அறிமுகமானவர்தான் பாலாஜி. இதன்பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தனது பணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர், தற்போது காமெடியன் தொடங்கி கதாநாயகன், இயக்குநர் என்று பன்முகத்திறமையாளராக இயங்கி வருகிறார். எல்.கே.ஜி. படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர், தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘ரன் பேபி ரன்’ என அடுத்தடுத்தப் படங்கள் வாயிலாக வெற்றி முத்திரையை பதித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தின் வாயிலாக தனது அடுத்த வெற்றியையும் பதிவு செய்ய காத்திருக்கிறார். இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி கடந்து வந்த பாதை மற்றும் அவர் தொட்டிருக்கும் உயரம் எப்படியானது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

பாலாஜி ஆர்.ஜே. ஆனது எப்படி?

நாம் செய்யும் முயற்சி எந்த நிமிடத்திலும் நமது வாழ்க்கையை மாற்றலாம் என்பதற்கு உதாரணமாக, இன்று பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி, 1985-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவருடன் பிறந்தது மூன்று தங்கைகளும், ஒரு தம்பியும் ஆவர். சிறுவயதில் இருந்தே தந்தை சரியில்லாததால், அவரால் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளாகி இருக்கிறார். அதிலும் குடும்பத்தில் தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் சப்போர்டில் வளர்ந்ததால், அவரின் வேலை நிமித்தமாக சென்னையில் மட்டும் கிட்டதட்ட 24 வீடுகள் மற்றும் 11 பள்ளிகள் மாறியிருக்கிறாராம். அதனால் 2002-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வியையும் சந்தித்துள்ளார். மீண்டும் மறுதேர்வு எழுத மனமில்லாமல் ஒரு வருடம் தையல் கடை ஒன்றில், பட்டன் தைக்கும் வேலை செய்து வந்துள்ளார். பிறகு என்ன நினைத்தாரோ தான் பெயில் ஆன கணித பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங் கல்லூரியில் கம்பியூட்டர் பாடப்பிரிவில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளார். பிறகு மீடியா பக்கம் செல்ல ஆசைப்பட்டவர், செய்தித்தாளில் இடம்பெற்றிருந்த விளம்பரத்தை பார்த்து கோயம்புத்தூரில் நடைபெற்ற ரேடியோ ஜாக்கிக்கான ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வாகி சிறிது காலம் விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். அன்றில் இருந்து இன்றுவரை மாகாபாவும் - பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள். மேலும் அங்கு பணியாற்றிய சமயம் “ஹலோ கோயம்புத்தூர்” என்ற மூன்று மணி நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் அம்மாவட்ட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.


ஆர்.ஜே.பாலாஜி ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

பின்னர் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க மனமில்லாமல் மீண்டும் அந்த வேலையை விட்டுவிட்டு சென்னை வந்த பாலாஜி, இங்கு 92.7 பிக் எப்.எம்-ல் பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு நான்கு மணி நேர ஸ்லாட்டைத் திட்டமிடவும், வடிவமைக்கவும் கிடைத்த சுதந்திரத்தால் மாலை நேரங்களில் மக்களை அவர்களது டென்ஷனில் இருந்து குஷிப்படுத்தும் விதமாக ‘டேக் இட் ஈஸி’ என்ற 4 மணி நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலமாக ‘கிராஸ் டாக்’ என்ற தலைப்பில் மற்றொரு பிரிவை உருவாக்கி, அதன் மூலம் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்களால் பரிந்துரைக்கப்படும் நபர்களை கலாய்த்து மக்களை மகிழ்வித்து வந்தார். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழே பின்னாளில் பாலாஜியை ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மாற்றி காட்டியது.

காமெடியன் டு நடிகர்

கொஞ்சம் தேசப்பற்று, சமூக அக்கறை, சரி என்று மனது சொல்வதை பேசுவது , தவறு என்று பட்டால் உடனே மன்னிப்புக் கேட்டு திருத்திக் கொள்வது போன்றவற்றை தனது பாலிசியாக கொண்டு செயல்படும் ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.ஜே.வாக மக்களிடையே பிரபலமாக இருந்தாலும், நடிகராக சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிறப்புத்தோற்றத்தில் வந்து தமிழ் சினிமாவில் நுழைந்திருந்தாலும், ஒரு முழு நடிகராக அறிமுகமானது என்னவோ ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ திரைப்படத்தில்தான். இதனை தொடர்ந்து ‘வாயை மூடி பேசவும்’ , ‘வடகறி’, ‘இது என்ன மாயம்’, ‘யட்சன்’, ‘நானும் ரெளடி தான்’, என நடித்தவருக்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரெளடி தான்’ திரைப்படம் சிறந்த காமெடியனுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பனாக டோஷி பாபா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சிறந்த காமெடியனுக்கான சைமா மற்றும் பிற விருதுகளும் கிடைத்தன. இதன்பிறகு, ‘ஜில் ஜங் ஜக்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’, ‘ஸ்பைடர்’, ‘வேலைக்காரன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என வரிசையாக நடித்தார். ஆனால் ‘நானும் ரவுடிதான்’ படம் விருது பெற்று தந்த அளவிற்கு வேறு எந்த படங்களும் ஆர்.ஜே.பாலாஜிக்கு அமையவில்லை.


காமெடியனாக ஆர்.ஜே. பாலாஜி நடித்த திரைப்படங்களின் காட்சிகள்

இயக்குநர் டு கதாநாயகன்

ஆர்.ஜே., வர்ணனையாளர், காமெடியன் என்று பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 2019-ஆம் ஆண்டு ‘எல்.கே.ஜி’ என்றொரு படத்தினை எடுத்து இயக்குநராகவும், அப்படத்தின் நாயகனாகவும் அவதாரம் எடுத்தார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது மட்டுமின்றி வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதனால் ஆர்.ஜே.பாலாஜிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதன்பிறகு என்ன மாதிரியான களத்தில் படத்தினை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நேரத்தில், மீண்டும் ஒரு வெற்றியாக பாலாஜிக்கு வந்து அமைந்ததுதான் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம். நயன்தாரா நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தினை பாலாஜி தனது நண்பர் என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியிருந்தார்.குறிப்பாக கடவுள் பெயரை தங்களது சுயலாபத்திற்காக சிலர் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிய இப்படம் லாஜிக் மற்றும் தொடர்ச்சியான கதைக்களம் இல்லாமல் முழு நகைச்சுவையோடு வெளிவந்து ரசிகர்களிடம் எகோபித்த வரவேற்பினை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் அம்மாவாக வரும் ஊர்வசிக்கும், இவருக்கும் இடையேயான உரையாடல் மற்றும் அம்மனாக வரும் நயன்தாராவுடன் இவர் தோன்றும் காட்சிகள் காமெடி சரவெடியாக இருந்ததோடு, அதுவே படத்தின் வெற்றிக்கும் வழிவகுத்தது.


சொந்த இயக்கம் மற்றும் பிறர் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படங்கள்

இதன் பிறகு அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றிய ஆர்.ஜே.பாலாஜி, அதனை 2022-ஆம் ஆண்டு 'வீட்ல விசேஷங்க' என்ற பெயரில் தானே இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்தார். ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்திருந்த இப்படத்தில் இளங்கோ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ’பதாய் ஹோ’வில் உள்ள அம்மா கதாபாத்திரம் கருக்கலைப்பு தவறு என்று கூறுவது போன்று எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் சில மாற்றங்கள் செய்து நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு பாலாஜி படத்தினை எடுத்திருந்த விதம் குடும்ப பெண்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. மேலும் படத்தில் பாலாஜியின் அம்மாவாக வரும் ஊர்வசியும் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக நடித்து ரசிக்க வைத்திருந்தார். இதனையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷுடன் கைகோர்த்து ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது ‘சிங்கப்பூர் சலூன் என்ற புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் .

பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’

‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘அன்பிற்கினியால்’ ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற கோகுல் இயக்கத்தில், கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம்தான் ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் காதல், காமெடி, சென்டிமென்ட் என ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டிருந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது இன்ஜினியரிங் படித்து முடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தும் அதனை வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார். ஏன் என்று வினவப்படும்போது சிறு வயது கனவான முடிதிருத்தும் வேலையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவிக்கிறார். அதனை தொடர்ந்து அது என்ன நம்மளோட குல தொழிலா? என்று தலைவாசல் விஜய் கேட்க, அதற்கு பாலாஜி இன்ஜினியரிங் மட்டும் என்ன நம்மளோட குல தொழிலா என வினவுகிறார். இப்படி ஓவ்வொரு இடங்களிலும் போராடி தனது லட்சியத்தை அடையும் முன் பாலாஜி எப்படியெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறார்... அதில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறார் என்பது போல்தான் படத்தின் கதை நகர்வதாக காட்டப்படுகிறது.


ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெளிவர உள்ள 'சிங்கபூர் சலூன்' திரைப்படத்தின் போஸ்டர்

இப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒன்றரை மாதம் சில முக்கியமான சிகை அலங்கார நிபுணர்களிடம் பயிற்சிகள் எடுத்துக் கொண்டாராம் ஆர்.ஜே.பாலாஜி. இப்படி விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ’சிங்கப்பூர் சலூன்’ படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தொடர்ந்து சமூக கருத்துள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதுடன் 12-ஆம் வகுப்பில் தோல்வியுற்ற ஒரு மாணவன் இன்று தமிழ்நாடே கொண்டாடும் ஒரு இயக்குநராக, நடிகராக எப்போதும் வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து வரும் ஆர்.ஜே.பாலாஜி இந்த முறையும் தனது வெற்றி முத்திரையை பதிவு செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Updated On 30 Jan 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story