(31.08.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
ஷோபாவுக்கு எம்.ஆர்.ராதாவைப் பற்றி நிறையத் தெரியும். அது எப்படி என்றால்... நாங்கள், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வீட்டில் குடியிருந்தபோது, எங்கள் வீட்டுக்கு எதிர்த்த வீட்டில் "குட்ஷெப்பர்டு கான்வெண்டு" பள்ளிக்கூட டீச்சர் ஸ்டெல்லா மேரி இருந்தார்கள். அவர்களிடம், ராதாவின் மகள் எம். ஆர். ராதிகா (இப்போதைய நடிகை) "டியூஷன்" படிக்க வருவாள். ராதிகாவும் அப்போது குட்ஷெப்பர்டு கான்வெண்டில் படித்துக்கொண்டு இருந்தாள். ராதிகா டியூஷனுக்கு காரில் வருவாள். அழைத்துப் போகவும் கார் வரும். அவள் காரில் வந்து இறங்குவதை, ஷோபா மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருப்பாள். அப்போது, ராதிகாவைப் பற்றியும், அவள் தந்தை எம். ஆர். ராதாவைப் பற்றியும் ஷோபாவுக்கு நான் நிரம்ப சொல்லி இருக்கிறேன்.
முதன்முறையாக
ஆனால், விமான நிலையத்தில் வைத்துதான் ராதாவை முதன்முறையாக ஷோபா பார்த்தாள். ஷோபா முறைத்துப் பார்க்கவும், எம். ஆர். ராதா ஷோபாவின் அருகே வந்து, "பயப்படாதே பாப்பா! என் உருவம்தான் இப்படி. ஆனால், உண்மையில் நான் நல்லவன்" என்று சிரித்தார். நான் (பிரேமா) ராதாவுக்கு வணக்கம் சொல்லிவட்டு, இவள் என் மகள். பெயர், ஷோபா என்றேன். உடனே ராதா, "ஓ...! நீதான் ஷோபாவா? நன்றாக நடிக்கிறாயாமே! நல்லா நடி. அதுதான் நல்லது" என்று ஷோபாவின் கன்னத்தில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஷோபா பிரம்மை பிடித்தவள் போல, ராதாவையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
தட்டிக்கொடுத்த எம். ஆர். ராதா
ஷோபா சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான பரிசை வாங்கிக்கொண்டு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பும் பொழுதும், எம். ஆர் ராதா அதே விமானத்தில் வந்தார். எம். ஆர். ராதாவைப் பார்த்ததும், ஷோபா பரிசுப் பொருளை எடுத்துக்கொண்டு, அவரிடம் சென்றாள். "அங்கிள்! இதோ எனக்குக் கிடைத்த பரிசு" என்று, பரிசை அவர் கையில் கொடுத்தாள். குட், இப்பொழுது பயம் இல்லையே!" உனக்கு என்ற ராதா, ஷோபாவின் தலையில் கையை வைத்து, “நீ சிறந்த நடிகை ஆக வேண்டும்” என்று வாழ்த்தினார். இந்தப் பரிசு பெற்றதின் மூலம், ஷோபா கேரளா முழுவதும் அறிமுகமான குட்டி நட்சத்திரம் ஆனாள்.
சிறந்த நடிகையாக வேண்டும் என ஷோபாவை வாழ்த்திய எம்.ஆர்.ராதா
சேது மாதவன்
அதைத் தொடர்ந்து, “கரை காணா கடல்" என்ற படத்தில் நடித்தாள். டைரக்டர் சேதுமாதவனின் படம், இது. மறைந்த நடிகர் சத்யனின் இளைய மகளாக ஷோபா நடித்தாள். மூத்தவர் ஜெய பாரதி. "சேதுமாதவன்" படம் என்றால், கட்டுப்பாடு அதிகம் இருக்கும். அவரைக் கண்டால் எல்லா நடிகர்- நடிகைகளும் பயப்படுவார்கள். காரணம், அவர் தொழிலில் மிகவும் கண்டிப்பானவர். வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். தன்னைப் போலவே, மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புவார். சேதுமாதவனுக்கு ஷோபா என்றால் உயிர். படப்பிடிப்பு நடக்கும் பொழுது, “அம்மணி கொச்சே…! அம்மணி கொச்சே”…! என்று ஷோபாவைத் தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்வார்.
ஆனால், ஷோபாவுக்கு கால் ஓர் இடத்தில் நிற்காது! மாதவன் சாரின் கவனம், கேமரா பக்கம் சென்றதும், ஷோபா மெதுவாக அங்கிருந்து நழுவி விடுவாள். இப்படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஏற்காட்டில் படம் ஆக்கப்பட்டன. அதனால், ஷோபாவுக்கு வேடிக்கை பார்க்க நிறையக் காட்சிகள் இருந்தன. ஆனால், ஷோபா நழுவவும், அம்மணி கொச்சே!, என்று குரல் கொடுத்து விடுவார் மாதவன். “சேதுமாதவன் அங்கிளுக்கு தலையைச் சுற்றி கண்” என்று என்னிடம் மெதுவாகக் கூறிவிட்டு, அவர் அருகே போய் நின்று கொள்வாள் ஷோபா.
சத்யன்
நடிகர் சத்யன், ஷோபாவை மிகவும் விரும்புவார். ஆனால், ஷோபா அவரிடம் நெருங்கவே பயப்படுவாள்.! ஏற்காட்டில் இருந்து படப்பிடிப்புக்கு சிறிது தூரம் காரில் போக வேண்டும். நான், ஜெயபாரதி எல்லாம் காரின் பின் இருக்கையில் ஏறிக்கொண்டோம். சத்யன் டிரைவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஷோபாவையும் முன்னே அழைத்தார். ஆனால், அவள் என்னிடம் வந்து ஒட்டிக் கொண்டாள். சும்மா அங்கிளிடம் போய் உட்கார் என்றேன், நான். ஷோபா வேறு வழி இல்லாமல் தயங்கித் தயங்கி முன்னே போய் உட்கார்ந்தாள்.
நடிகர் சத்யனை நெருங்கவே பயப்படுவாள் ஷோபா - அம்மா பிரேமா
பாட்டு
அவள் போய் உட்கார்ந்ததும், “ஷோபா ஒரு பாட்டு பாடு" என்றார், சத்யன். ஒரு மலையாளப் பாடலை ஷோபா பாடினாள். அவளோடு சேர்ந்து சத்யனும் பாடினார், அவர் பாட்டை உச்சக் குரலில் உயர்த்திப் பாடியது, சிரிப்பாக இருந்தது. ஷோபாவின் நடிப்பை அடிக்கடி பாராட்டுவார், சத்யன். "பிரேமா! உன் மனதில் இருந்த ஆசைகளை எல்லாம், ஷோபா நிறைவேற்றி வைப்பாள், எதிர்காலத்தில் சிறந்த நடிகையாகத் திகழுவாள்'” என்று "அடிக்கடி என்னிடம் கூறுவார் சத்யன். "கரை காணா கடல்" படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தபோது, சத்யனுக்கு "இரத்தப் புற்றுநோய்" உச்சக்கட்டத்தில் இருந்தது. அவர், செல்லும் இடமெல்லாம், டாக்டரை தயாராக வைத்து இருந்தார்கள்.
சத்யன் ஏற்கனவே நல்ல கறுப்பு. இரத்தப் புற்று நோய், அவரை மேலும் மாற்றிக் காட்டியது. இப்போதோ, எப்போதோ என்றுதான் அவர் இருந்தார், ஆனால், முகத்தில் மட்டும் எந்தவிதக் கவலைக்கோடும் இருக்காது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். தன்னம்பிக்கையே சிறந்த மருந்து என்பார். அவரிடம் யாராவது சென்று, உடம்பு இப்பொழுது எப்படியிருக்கிறது? என்று கேட்டு விட்டால், பலத்த கோபம் வந்துவிடும். "எனக்கு, என்ன? நான் நன்றாகத்தானே இருக்கிறேன். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?" என்று எரிந்து விழுவார். ஏற்காடு படப்பிடிப்பின் போது ஒரு நாள் காலையில், குளியளறைக்குச் சென்ற சத்யன், வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவைத் திறந்து பார்ததால், சத்யன் குப்புற விழுந்து கிடந்தார். வாயிலும் மூக்கிலும் இரத்தம்.
“கரை காணா கடல்" என்ற மலையாள படத்தில் ஷோபா
நான் அப்போதுதான் குளித்து முடித்துவிட்டு ஆடை மாற்றிக் கொண்டு இருந்தேன். எனக்கு முன்னால் குளித்துவிட்டு, டிபன் சாப்பிடப் போன ஷோபா அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள் "மம்மி! சத்யன் அங்கிளுக்கு ஏதோ ஆகிவிட்டதாம்" என்று கத்தினாள். நான் வேகமாக துணி மாற்றிக் கொண்டு போவதற்குள், டாக்டர் வந்து பார்த்து, சத்யனுக்கு நினைவு திரும்பிவிட்டது. உடனே, சுற்றி நின்றவர்களைப் பார்த்து, "ஏன் கூடி நிற்கிறீர்கள்? இப்பொழுது எனக்கு என்ன வந்துவிட்டது? எல்லோரும் போங்கள்" என்று விரட்டியிருக்கிறார் சத்யன். அது எனக்குத் தெரியாது. நான் சென்றபோது சத்யன் தனியாக இருந்தார்.
அண்ணே! உடம்பு இப்பொழுது எப்படியிருக்கிறது? என்று நான் கேட்டேன். அவ்வளவுதான், சத்யனுக்குக் கோபம் வந்துவிட்டது."நான் நல்லாத்தானே இருக்கிறேன்? உங்களுக்கு என்ன வந்துவிட்டது! எல்லோரும் படப்பிடிப்புக்குப் போங்கள்" என்று கத்திவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விழுந்து கிடந்தார் என்றார்கள்; அதற்குள் எப்படி, இப்படி மாறினார்? என்று எனக்குள்ளேயே கேட்டுவிட்டு அறைக்குத் திரும்பினேன். அதற்குள் டிபனை முடித்துவிட்டுத் திரும்பிய ஷோபா, "மம்மி! சத்யன் அங்கிளிடம் சரியாக திட்டு வாங்கினீர்களாமே!'' என்று கேலியாகக் கேட்டாள்! எப்போதும், என்னைக் கிண்டல் செய்து விளையாடுவது என்றால், ஷோபாவுக்கு நிரம்பப் பிடிக்கும்!
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்...