இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மிகப்பெரிய சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நிறைய போராட்டங்களையும், அவமானங்களையும் கடந்து, தன் விடா முயற்சியால் மட்டுமே தமிழ் திரையுலகில் இன்று தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி உச்சம் தொட்டிருப்பவர் அருண் விஜய். தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தும், அவரின் எந்த உதவியும் இன்றி தன்னை தானே கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டவர். நம்ம வீட்டு பிள்ளை போன்ற தோற்றத்தில் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் சில வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், அவை பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இருந்தும் ‘தடையறத் தாக்க’ படத்தின் மூலம் ஒரு ஆக்சன் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அந்த வகையில், 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நான்கு ஹீரோக்களின் படங்களில் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், அருண் விஜய் நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்கள் மற்றும் அவர் கடந்து வந்த பாதை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் திரைப்படங்கள்

என்றென்றும் இளமையாகவே காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய் 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று நடிகர் விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தது கவிதா, அனிதா என்ற இரண்டு மூத்த சகோதரிகளும், வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என மூன்று தங்கைகளும் ஆவர். விஜயகுமார் குடும்பத்தில் பிறந்த 6 பிள்ளைகளில் அருண் மட்டும் ஒரே மகன் என்பதால் அவர் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டுள்ளார். சகோதரிகள் அனைவரும் அருண் விஜய் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர்கள் என்பதால், அவருக்கு தனது குடும்பத்தை தாண்டி வெளியில் பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரம் கிடையாது. இதற்காக அவர் வருத்தப்பட்டதும் கிடையாது. ஏனென்றால் எப்போதும் அவரை சுற்றி குடும்ப உறவுகளை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் இருப்பார்களாம். இப்படி அன்பும், பாசமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அருண் விஜய் தன் தந்தை மற்றும் சித்தி மஞ்சுளா ஆகியோர் திரைத்துறையில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தும், ஒருநாளும் அவர்களைப் போல் பெரிய நடிகராக வர வேண்டும் என்று நினைத்துப் பார்த்தது கூட கிடையாதாம். நன்கு படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவரை காலம் விடாமல் சினிமாத்துறைக்குள் அழைத்து வந்து விட்டது.


அருண் விஜய்யின் ஆரம்பகால திரைப்படங்களின் புகைப்பட காட்சிகள்

பள்ளி படிப்பை முடித்த கையோடு, சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்த சிறிது நாட்களிலேயே ‘முறை மாப்பிள்ளை’ என்றொரு படத்தில் நடிக்க வாய்ப்பு வர, அந்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறிவிடாமல், குடும்பத்தினர் கொடுத்த உற்சாகத்தில் அந்த வாய்ப்பை ஏற்று நடித்துள்ளார். 1995-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படம் ஓரளவிற்கு ஓடி வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது. இப்படத்தில் நடித்த கையோடு கல்லூரிக்கும் சென்ற அருணிடம் உடன் படித்தவர்கள் அனைவரும் அப்படம் பற்றியும், அப்படத்தில் நடித்த ஹீரோயின் பற்றியும் கேட்டுக்கொண்டே இருந்ததால், ஒருவித கூச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி முதலாம் ஆண்டோடு படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தபடியே அப்பாவின் உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இதற்கிடையில் ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் ஓரளவு அடையாளம் பெற்றிருந்த அருண் விஜய்க்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து ‘பிரியம்’, ‘காத்திருந்த காதல்’, ‘கங்கா கௌரி’, ‘துள்ளி திரிந்த காலம்’, ‘அன்புடன்’ என வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் நடித்தார். ஆனால் எந்த படங்களும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை பெற்றுத்தரவில்லை. இந்த நேரம், சேரன் இயக்கத்தில், ஆச்சி மனோரம்மா, விஜயகுமார், ராஜ்கிரண், ரஞ்சித் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இணைந்து அருண் விஜய் நடித்திருந்த ‘பாண்டவர் பூமி’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில், பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற “அவரவர் வாழ்க்கையில்”, “தோழா தோழா” ஆகிய பாடல்கள் அன்றைய 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தது மட்டுமின்றி அருண் விஜய்யை மக்கள் ஏற்றுக் கொள்ளவும் ஆரம்பித்தனர். இதனையடுத்து ‘முத்தம்’, ‘இயற்கை’, ‘ஜனனம்’, ‘தவம்’, ‘வேதா’, ‘மலை மலை’, ‘துணிச்சல்’, ‘மாஞ்சா வேலு’ என வரிசையாக நடித்தாலும் எந்த படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படங்களாக இல்லை.


‘ஜனனம்’, ‘தவம்’, ‘மாஞ்சா வேலு’, ‘வேதா’ ஆகிய படங்களின் புகைப்பட காட்சிகள்

தன்னம்பிக்கை நாயகன்

1995-ல் அதாவது அருண் விஜய் தனது 18-வது வயதில் நாயகனாக நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளை கடந்தும் ஒன்றிரண்டு படங்களைத் தவிர மற்றவை ஒரு மாஸ் ஹிட் படங்களாகவோ அல்லது சுமாரான படங்களாகவோ இல்லாமல் போனது அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அருண் விஜய்யின் குடும்பத்தில் உள்ளவர்களே குறிப்பாக அவரின் அம்மா முத்துக்கண்ணு தனது கணவர் விஜயகுமாரிடம் இவன் நடித்ததெல்லம் போதும். இத்தனை படங்கள் நடிச்சாச்சு. ஆனால் இதுவரை ஒன்றுகூட சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அதனால் அவனுக்கு இனி சினிமா வேண்டாம். ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து கொடுங்கள். அதனை பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்ல. அதை கேட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அருண் விஜய் தனது அறையின் கதவை தாளிட்டு கதறி அழுதாராம். பிறகு இவ்வளவு காலம் நாம் இதில் பயணித்து விட்டோம். சுற்றியிருப்பவர்களிடம் நாம் யார் என்பதை நிரூபித்தே ஆக வேண்டும். நிச்சயம் நம்மால் முடியும் என்று மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மகிழ் திருமேனி இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்த இதில், செல்வா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அருண் விஜய்க்கு இப்படம் வெற்றிப்படமாக மட்டுமின்றி நல்ல பெயரையும், அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது. இருந்தும் இப்படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த அருண் விஜய் மீண்டும் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் வேறொரு பரிமாணத்தில் அதாவது ஹீரோவில் இருந்து வில்லனாக என்ட்ரி கொடுத்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில், விக்டராக வரும் அருண் விஜய் நடிப்பில் அதகளம் செய்து மிரட்டியிருப்பார். ஒரு மாஸ் ஹீரோவையும் தாண்டி முதல் முறையாக வில்லனாக மக்கள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்ட அருண் விஜய் "நம் வாழ்க்கையில் முடியாதது என்று எதுவுமே கிடையாது. உண்மையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்” என்பதை இப்படத்தின் மூலம், நிரூபித்து காட்டினார்.


அருண் விஜய்யின் ‘தடையறத் தாக்க’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் காட்சிகள்

இதற்குப் பிறகு, நாயகன், வில்லன் என்றில்லாமல் கதைக்கும், தனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்கள் அனைத்திலும் நடிக்க முடிவு செய்த அருண் விஜய்க்கு, வெறும் ஆக்சன் படங்களாகவே தேடி வர ஆரம்பித்தன. பொதுவாகவே அருண் விஜய்க்கு ஆக்சன் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தான் ஒரு மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக வரவேண்டும் என்பதுதான் அவரது நீண்ட நாள் கனவாகவே இருந்தது. அதற்கு ஏற்றார் போல் அவர் எதிர்பாத்திருந்த தருணமும் வந்ததால் அதனை சரியாக பயன்படுத்தி தனக்கான இடத்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி, தமிழ் என்றில்லாமல் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு திரையுலகில் இருந்து வந்த அழைப்பினை ஏற்று ராம்சரண் படமான ‘புரூஸ் லீ: தி ஃபைட்டர்’ திரைப்படத்தில், வில்லனாக வரும் சம்பத் ராஜுக்கு மகனாக, தீபக் ராஜ் என்ற நெகட்டிவ் வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் ‘சக்ரவியூஹா’ என்ற படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரமான ஓம்கார் என்ற வேடத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த வருடங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர், 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அதாவது தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு ‘குற்றம் 23’ படத்தில் கதையின் நாயகனாக அதுவும் வெற்றிமாறன் ஐபிஎஸ்-ஆக ஸ்டைலான அதே நேரம் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். மேலும் இப்படத்தில் நடிகராக மட்டுமின்றி, ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த அருண் விஜய்க்கு இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பிறகு, ‘செக்க சிவந்த வானம்’, ‘தடம்’, ‘மாஃபியா: அத்தியாயம் 1’, ‘ஓ மை டாக்’, ‘யானை’, ‘சினம்’ என வரிசையாக நடித்தவருக்கு அனைத்து படங்களும் ஓரளவுக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.


‘புரூஸ் லீ: தி ஃபைட்டர்’ மற்றும் 'மாஃபியா: அத்தியாயம் 1' படங்களில் அருண் விஜய்

மிஷன்: சேப்டர் 1

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம்தான் மிஷன்: சேப்டர் 1. அதிக எதிர்பார்ப்போ, விளம்பரமோ இல்லாமல் ரிலீஸான இப்படம், பொங்கலுக்கு வெளிவந்த மற்ற படங்களை விட ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்ற படமாக அமைந்தது. லைகா நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்த படத்தில் கதையின் நாயகனான அருண் விஜய்யுடன் இணைந்து, எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிக்க இவர்களுடன் ‘லியோ’ பட புகழ் குழந்தை நட்சத்திரமான இயலும் அருண் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். படத்தின் கதை என்று பார்த்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினை தடுக்க முயற்சிக்கிறார்கள். இது இந்திய அரசுக்கு தெரிந்துவிட்டது என்றவுடன், அங்கிருந்து வெளியேறி விடுகின்றனர். பின்னர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது தீவிரவாத நண்பர்களை மீட்க அந்த நாட்டிற்கு செல்கின்றனர். தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள லண்டன் சிறையின் பாதுகாப்பு அதிகாரியாக எமி ஜாக்சன் இருக்கிறார். அந்த நேரம் நடிகர் அருண் விஜய், தனது குழந்தையான இயலுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, லண்டன் சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக திருடர்களின் வலையில் சிக்கி, காவல்துறையினரிடம் மாட்டி சிறையில் அடைக்கப்படுகிறார். அப்போது தங்கள் கூட்டத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக, சிறைக்கு வரும் தீவிரவாதிகள் சிறைச்சாலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்க அதை எப்படி அருண் விஜய் தடுக்கிறார் என்பதுதான் கதை.


'மிஷன்: சேப்டர் 1' படத்தில் அருண் விஜய் மற்றும் மகளாக வரும் இயல்

ஆக்‌ஷன் காட்சிகளில் எப்போதுமே தூள் கிளப்பும் அருண் விஜய் இப்படத்திலும், சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருந்தார். அப்படிப்பட்ட இப்படம் ரிலீஸான சமயத்தில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய படங்கள் திரைகளை அதிகமாக ஆக்ரமித்ததால் அருண் விஜய்யின் ‘மிஷன்: சேப்டர் 1’ படத்திற்கு பெரிய அளவில் திரைகள் கிடைக்காமல், குறைந்த அளவிலான திரைகள் மட்டுமே கிடைத்திருந்தன. இருந்தும் 2024 பொங்கலுக்கு வெளியான மற்ற படங்களை காட்டிலும் வணிக ரீதியாக பின்தங்கி இருந்தாலும், விமர்சன ரீதியாகவும் சரி, மக்களின் கண்ணோட்டத்திலும் சரி மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றது. இதனால் அருண் விஜய்யை ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும், யூடியூப் சேனல்களும் கொண்டாடி தீர்த்தன. அதுவும் அருண் விஜய்யை அவரது குடும்பத்தினருடன் அழைத்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த வாரம் முழுவதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் இருந்த அருண் விஜய் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து வெற்றி முத்திரையை பதிவு செய்து சாதனை நாயகனாக திகழ வாழ்த்துவோம்.

Updated On 6 Feb 2024 12:23 AM IST
ராணி

ராணி

Next Story