இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மக்களுக்கான பொழுதுபோக்கு என்பது அதிகப்படியான நேரங்களில் தொலைக்காட்சி மற்றும் கைபேசியை சார்ந்தே தான் இருக்கிறது. தொலைக்காட்சி என்ற வகையில் பார்த்தால் தினமும் ஏராளமானோர் கண்டு ரசிக்கும் சீரியல்கள் அதில் முக்கியப் பங்காற்றுகிறது. சீரியல்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் கிடைப்பது வழக்கம்தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் தொடரில் ‘கார்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பின் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கும் நவீன் வெற்றியோடு நடத்திய உரையாடல் பின்வருமாறு..

நீங்கள் முதன் முதலில் கேமராவிற்கு முன்பு நின்று நடித்த அந்த முதல் அனுபவம் எப்படி இருந்தது?

நன்றாக பயிற்சிகள் எடுத்த பிறகுதான், ஷூட்டிங் தளத்திற்குள் சென்று நடிக்க ஆரம்பித்தேன். அங்கு புதிய முகங்களை பார்த்ததும் எனக்குள் ஏதோ ஒருவிதமான நடுக்கமும் ஏற்பட்டது. ஆனால் நாட்கள் போகப்போக அவை அனைத்தும் எனக்கு பழகி விட்டது.

இதுவரை நீங்கள், ஷூட்டிங் தளத்தில் ஏதேனும் சங்கடமான சூழலை சந்தித்து இருக்கிறீர்களா?

இதுபோன்ற சூழல்கள் நிறையவே எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான ரொமான்டிக் காட்சிகள் நடிக்கும் பொழுது நான் அதிகமான டேக்குகள் எடுப்பேன். குறிப்பாக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் எனக்கொரு கதாபாத்திரம் கிடைத்திருந்தது. அதில் நடிகை ரச்சிதா நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். எனக்கும், அவருக்குமான ஒரு ரொமாண்டிக் காட்சி நடந்துகொண்டிருந்த, அந்த சமயத்தில் என்னுடைய இயக்குநர் தாய் செல்வம் என்னை ‘இவனுக்கு ரொமான்ஸ் எல்லாம் வராது’ என்று விளையாட்டாக கேலி செய்தார். அது தான் எனக்கு ஏற்பட்ட மிகவும் மறக்க முடியாத சங்கடமான ஒரு சூழல்.


சின்னத்திரை நடிகர் நவீன் மற்றும் கருங்காலி மாலை

நீங்கள் அணிந்திருக்கும் இந்த கருங்காலி மாலைக்கு பின்னணி ஏதேனும் இருக்கிறதா?

தற்போது இயக்குனர் லோகேஷ் அணிந்த கருங்காலி மாலை மிகவும் பிரபலமானது. நான் பொதுவாகவே இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நம்புவது இல்லை. இந்த கருங்காலி மாலையானது என்னுடைய பிறந்தநாள் பரிசாக எனது மனைவியிடம் இருந்து எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது என்பதற்காக மட்டுமே நான் அதை அணிந்து கொண்டேன். இதை அணிவதால் கெட்ட சக்திகள் விலகும் என்ற நம்பிக்கையை நான் முழுவதுமாக நம்பவே இல்லை. ஆனால் குறுகிய நாட்களிலே எனக்கு நடந்த சில விஷயங்களினால் எனக்கு தானாகவே இந்த கருங்காலி மாலையில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

உங்களுக்கு ஜோடியாக இதுவரை நடித்த நடிகைகளில் உங்கள் மனைவியின் மனதுக்கு பிடித்த ஜோடியாக யாரேனும் இருக்கிறார்களா?

இதுபோன்று எல்லாம் இதுவரையில் அவள் என்னிடம் ஏதும் கூறியதே இல்லை. என்னுடைய நடிப்பு குறித்து பாராட்டி அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். ஆனால் இதுவரை சீரியலில் எனது ஜோடி குறித்து பேசியதில்லை. இனி வரும் நாட்களில் இது குறித்து ஏதேனும் பேசுவாரா என்று பார்க்கலாம்.

உங்களுக்கு பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த நடிகையோடு சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

எனக்கு சிறுவயதில் இருந்தே என் மனதுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருப்பவர் திரிஷா தான். அவரோடு இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயமாக நடிப்பேன்.



நடிகை திரிஷாவுடன் நடிக்க விரும்பும் நவீன்

கண்ணே கலைமானே சீரியலைப் பொறுத்த வரையில் நந்தா என்பவருக்கு பதிலாக தான் நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறீர்கள். அது குறித்து உங்கள் கருத்து?

பொதுவாகவே ஒவ்வொரு நடிகருக்கும் வெவ்வேறு மாதிரியான நடிப்புத்திறன் இருக்கும். நான் என்னுடைய குரு விஜய் சேதுபதியிடம் இருந்து கற்றுக் கொண்டதும் இதுதான். ஒவ்வொரு நடிகனுக்குள்ளேயும் ஒரு தனித்துவம் இருக்கும். அதுபோல தான் நந்தாவும் இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து வந்தார். நான் இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததற்காக ஏராளமான விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். இருந்த போதிலும் என்னால் முடிந்த அளவு நானும் எனக்கான கதாபாத்திரத்தை நடித்து வருகிறேன்.

உங்களுக்கு ஏற்படும் விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டு வருகிறீர்கள்?

விமர்சனங்களைப் பொறுத்த வரையில் நம்ம தலைவர் விஜய் சொல்வது போல தான் கூலாக இருந்து கொண்டு நமது வேலையில் கவனத்தை செலுத்த வேண்டியது தான். ஏனென்றால் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் நம்மால் நமது வேலையில் ஆர்வத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் .

உங்களுடைய மகள் பற்றி ஒரு சில வார்த்தைகள் எங்களுக்காக..

என்னுடைய மகள், பிறந்த பிறகு தான் எனது வாழ்விற்கே ஒரு ஏற்றம் கிடைத்தது. அவள் பிறந்ததில் நான் மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன். அவள் பெண் பிள்ளையாக இருந்தாலும், நான் அவளை ஒரு பையனைப் போல்தான் வளர்த்து வருகிறேன். அவளுடைய ஒவ்வொரு அசைவும் என்னைப் போலவே தான் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் என்னை அவள் தொலைக்காட்சியில் எளிதில் அடையாளம் காட்டுகிறாள். மேலும் அவளுடைய அந்த சின்னச் சின்ன குறும்புகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது.


மகளுடன் நேரங்களை செலவிடும் நவீன்

ஷூட்டிங் தளத்திற்கு செல்வதற்கு முன்னதாக நீங்கள் உங்களை எவ்வாறு தயார் செய்து கொள்கிறீர்கள்?

எனக்கு அதிகாலையிலே ஏதேனும் முக்கியமான காட்சிகள் என்றால் அது குறித்த தகவல்கள் முன்னரே அறிவுறுத்தப்படும். அதாவது ஒரு முக்கியக் காட்சியோ அல்லது மனக்குமுறல்கள் சார்ந்த காட்சியாக இருந்தால் அதற்கேற்றார் போல நானும் என் மனநிலையை தயார்படுத்திக்கொள்வேன்.

நீங்கள் இதுவரை நடித்த கதாப்பாத்திரத்தில் உங்கள் மனைவிக்கு பிடித்த கதாப்பாத்திரம் என்றால் அது எது?

கார்த்தி என்ற கதாப்பாத்திரம் தான், ஏனென்றால் நடிப்பு ரீதியாகவும் சரி மக்களால் அதிகளவில் பாராட்டி பேசப்பட்ட ஒரு கதாப்பாத்திரமாகவும் அது எனக்கு அமைந்தது. அதனைத் தொடர்ந்து ‘கார்த்தி’ கதாப்பதிரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, ‘கண்ணே கலைமானே’ சீரியலில் ஒரு நகைச்சுவைக் கதாப்பாத்திரமாக நடித்து வருவதையும் எனது மனைவி பாராட்டியிருக்கிறார்.


'தமிழும் சரஸ்வதியும்' தொடரில் ‘கார்த்தி’ கதாபாத்திரத்தில் நவீன்

எது ஒரு நடிகனை உருவாக்குகிறது?

முதலில் நடிப்பின் மீது தீராத பற்று இருக்க வேண்டும். அதுபோக விமர்சனங்களை எதிர் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் உங்கள் சொந்த குடும்பத்தையும் சில சமயங்களில் சந்திக்க வேண்டி இருக்கும். ஏனென்றால் ஒரு சில குடும்பங்களில் ஆதரவுகள் கிடைப்பது எளிது. ஆனால் சில குடும்பங்களைப் பொறுத்தவரையில் அது கொஞ்சம் சவாலான விஷயம் தான். எங்க அப்பாவும் கூட இந்த துறைக்கு என்னை முதலில் அனுமதிக்கவில்லை. இப்பொழுது அவருக்கு புரிகிறது எனக்கு இந்த துறையின் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று. ஒரு நடிகனுக்கு தான் செய்யும் வேலைக்காக சில நேரங்களில் சிலவற்றை தியாகம் செய்ய வேண்டிய மனப்பாங்கு இருப்பது அவசியமாகும்.

Updated On 20 Nov 2023 6:32 PM GMT
ராணி

ராணி

Next Story