இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? உலகில் அனைத்து உயிர்களையுமே இயக்கும் உந்துசக்தி என்றால் அது அம்மாவாகத்தான் இருக்கமுடியும். அதனால்தான் ‘தாயினும் சிறந்த கோயில் இல்லை’ என நம் முன்னோர்கள் அன்னையர்களை போற்றி தெய்வமாகவே வழிபட்டனர். இன்று நிறையப்பேர் பெற்றோருக்கு மதிப்பு கொடுக்காமல் கடைசிகாலத்தில் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் சூழலில் ஒருசிலர் தன்னுடைய அம்மாவுக்காக கோயில் கட்டி வழிபடுகின்றனர். திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் பலர் தனது வெற்றிக்கு காரணம் தாய்தான் என்று கூறுவதுண்டு. அப்படி எப்போது மேடை ஏறினாலும் அம்மாவையும், இறைவனையும் புகழ்ந்து பேசுபவர்களில் ஒருவர்தான் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இக்குடும்பத்தை ஒரு பெண் தனியாக எப்படி வழிநடத்தினார் என்பதற்கு ரஹ்மானும், அவருடைய மூன்று சகோதரிகளுமே சாட்சி. ரஹ்மானைப் போலவே அவருடைய அக்கா ஏ.ஆர். ரெய்ஹானாவும் இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமாரின் அம்மாவும்கூட. அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது அம்மாவுடனான அனுபவம் குறித்தும், ஒரு அம்மாவாக பயணிக்கும் அனுபவம் குறித்தும் நம்முடன் மனம்திறக்கிறார் ஏ.ஆர். ரெய்ஹானா. அவருடனான ஓர் உரையாடல்...

அம்மா என்றதும் உங்களுக்கு நினைவில் வரும் முதல் எண்ணம் எது?

என்னுடைய அம்மா மிகவும் வலிமையானவர். எஸ்.எஸ்.எல்.சி மட்டும் படித்திருந்த என் அம்மா, அவருடைய அம்மா, அப்பா, சகோதரி என அனைவருடனும்தான் சேர்ந்து வாழ்ந்துவந்தார். நான் 11 வயதாக இருந்தபோது என் அப்பா இறந்துவிட்டார். அந்த சமயத்தில் முழு குடும்ப பொறுப்பையும் கையிலெடுத்தார். பிறகு ரஹ்மானுக்குள் இருந்த திறமையை கண்டறிந்து அவனுடைய முன்னேற்றத்துக்கான பாதையை உருவாக்கிக் கொடுத்தார். நேர்மையாக இருக்கவேண்டும், மற்றவர்களை ஏமாற்றக்கூடாது, வாழ்க்கை கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார் அம்மா. சிறிய தவறுகூட செய்துவிடமுடியாது.

உங்கள் குடும்பத்தில் 4 பிள்ளைகள்... உங்களை வளர்க்கும்போது உங்களுடைய அம்மா சந்தித்த சிரமங்கள் என்னென்ன?

என்னுடைய அம்மா, அவருடைய குடும்பத்துடன் வசித்துவந்ததால் அவருடைய அம்மா, அப்பா மற்றும் தங்கையின் ஆதரவு அவருக்கு இருந்தது. அதேபோல் திரையுலகிலிருந்தும் இசைக்கருவிகளை எங்களிடமிருந்து வாடகைக்கு எடுப்பதன்மூலம் ஆதரவு கொடுத்தனர். சிலருக்கு எங்களிடமிருந்த பழைய இசைக்கருவிகளை எப்படி டியூன் செய்வது, வாசிப்பது என தெரியாததால், அம்மா ரஹ்மானை அழைத்து, ‘உனக்குத்தான் எல்லாமே வாசிக்க தெரியுமே! நீ ஏன் வாசிக்கக்கூடாது?’ என்று சொல்வார்கள். அப்படித்தான் எங்களுடைய வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. சிறுவயதிலிருந்தே நீதான் சம்பாதிக்கவேண்டும் என ரஹ்மானிடம் அம்மா கூறிக்கொண்டே இருந்ததால் அவர்மீது அந்த சுமை இருந்தது. இப்போது நாங்கள் அனைவருமே தைரியமாக இருப்பதற்கு காரணம் அம்மா வளர்ப்புதான்.

ரஹ்மான் சிறுவயதிலேயே சினிமா உலகிற்குள் நுழைந்துவிட்டதால் குழந்தைப்பருவ மகிழ்ச்சியை அவர் இழந்துவிட்டதாக அம்மா என்றாவது வருத்தப்பட்டு பேசியது உண்டா?

சிறுவயதிலிருந்தே மற்ற பசங்களுடன் சேர்ந்து விளையாடுவது, வெளியே சுற்றுவது போன்றவற்றில் ரஹ்மானுக்கு அதிக ஆர்வம் இருந்தது இல்லை. எப்போதும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நோண்டுவது அல்லது மியூசிக் வாசிப்பதில்தான் தனது நேரத்தை செலவிடுவார். அவருக்கு நண்பர்களும் மிகவும் குறைவு. அதனால் குழந்தைப்பருவத்தில் அவர் எதையும் இழந்தது கிடையாது. அம்மாவுக்கு உலகமே ரஹ்மான்தான். எப்போதும் அவருடனே அம்மா இருந்ததால் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.


தனது அம்மாவுடனான அனுபவம் குறித்து பகிர்ந்த ஏ.ஆர். ரெய்ஹானா

அம்மாவின் சமையலில் உங்களுக்கு பிடித்தது எது?

அம்மா மிகவும் நன்றாக சமைப்பார். அவர் சமைக்கும் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். வெளியே வேறு வீடுகளில் சாப்பிடும்போதுதான் அம்மாவின் சமையல் எவ்வளவு சூப்பர் என்பதை தெரிந்துகொண்டேன். சில உணவுகளை நானும் நன்றாக சமைப்பேன் என்றாலும் இன்றுவரை என்னால் அவர்போல சமைக்க முடிவதில்லை. ரஹ்மானுக்கு என்னுடைய சமையல் மிகவும் பிடிக்கும் என்றாலும் அம்மா இதுவரை என் சமையலை பாராட்டியது இல்லை.

ஜி.வி.பிரகாஷ் முதலில் ரஹ்மான் இசையில் பாடியபோது எப்படியிருந்தது?

மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிரகாஷுக்கு 3 வயது ஆகும்வரை நான் அவரை மியூசிக் கிளாசிற்கு அனுப்பவில்லை. அம்மாவும் ரஹ்மானும், என்னையும் பிரகாஷையும் கூட்டிக்கொண்டுபோய் ரஹ்மானின் டீச்சரிடமே சேர்த்துவிட்டார்கள். அதன்பிறகு பிரகாஷே பிக்-அப் செய்துகொண்டான். முதலில் பிரகாஷ் பாடியதை கேட்டதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போது நான் பாடகியாகவில்லை. அதனால் என்னால்தான் பாடகியாக முடியவில்லை, என்னுடைய பையன் பாடிவிட்டானே என கணக்கற்ற முறை அந்த பாடலை கேட்டுக்கொண்டே இருந்தேன்.

ரஹ்மான் முதன்முதலில் ‘ரோஜா’ படத்தில் இசையமைத்த அனுபவம் மற்றும் ஆஸ்கர் அனுபவம் பற்றி கூறுங்கள்...

ரஹ்மான் எப்போது இசையமைத்தாலும் முதலில் அம்மாவுக்குத்தான் போட்டு காண்பிப்பார். அம்மா அதற்காக பிரார்த்தனை செய்வார். ‘ரோஜா’ படத்தின் இசையை முதலில் போட்டு காண்பித்தபோது நான் கேட்டுவிட்டு, இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகப்போகிறது என்று துள்ளிக் குதித்துக்கொண்டே சொன்னேன். அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அதேபோலத்தான் ‘முக்காபலா’ பாடலை முதலில் கேட்டபோது, அது தேவா சார் இசையமைத்தது என நினைத்தேன். அம்மாவை கூப்பிட்டு, ‘தேவா சார் எப்படி சூப்பரா இசையமைத்திருக்கிறார்’ என்று கூறினேன். உடனே அம்மா அது ரஹ்மானுடையது என்று கூறினார். உடனே தலைகால் புரியாமல் குதித்தேன். ஆனால் அம்மா ர்ஹமானை போலவே சீரியஸான ஒரு நபர். ஆஸ்கர் விருது வாங்கியபோதும் கடவுளுக்கு நன்றி கூறினார்.

அம்மாவிடம் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை மிகமிக அதிகம். கடுமையாக பிரார்த்திப்பார். அதற்கேற்றாற்போல் அவருக்கு எல்லாமே நல்லபடியாக நடந்தது. நாங்கள் இன்றுவரை நன்றாக இருப்பதற்கு அம்மாவின் பிரார்த்தனைதான் காரணம். அம்மா பொறுமையாகவும், சீரியஸாகவும் இருப்பார். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து பார்த்ததே இல்லை. ஆனால் எங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்.


ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘ரோஜா’ படத்திற்காக தேசிய விருது கிடைத்த தருணம் மகிழ்ச்சியானது - ரெய்ஹானா

அம்மா இந்த தருணத்தில் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் நினைத்ததுண்டா?

ஒவ்வொரு நொடியும் அப்படி நினைக்கிறேன். அம்மா உயிருடன் இருக்கும்போது அவரை நன்றாக பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமோ என தோன்றுகிறது. அம்மா இருக்கும்போது அவருடைய அருமை தெரியாமல் போய்விட்டதோ என்று நினைப்பேன். அம்மா இருக்கும் அனைவருமே அவரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள், கொண்டாடுங்கள். அம்மாவுடனான நாட்களை ஸ்பெஷலாக கொண்டாடாமல் விட்டுவிட்டோமோ என இப்போது வருத்தப்படுகிறேன். அதனாலேயே அம்மாவின் ஆத்மாவுக்காக தினமும் பிரார்த்திக்கிறேன்.

அம்மா இறந்த தருணம் எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது?

அம்மா கிட்டத்தட்ட 9 வருடங்கள் உடல்நல குறைபாட்டுடன் இருந்தார். அதனால் அவர் இறந்தபோது திடீரென நடந்ததாக அதிர்ச்சியடையவில்லை. ஆனால் அவரை இழந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மாவுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதிலிருந்தே ரஹ்மான் வருத்தத்துடனேயே இருந்தார். அதனாலேயே அவர் இறந்தபிறகு ஸ்பெஷல் நினைவு மண்டபம் ஒன்றை கட்டியிருக்கிறார். அதை கட்டுவதற்கு முன்பு எங்களிடம் கலந்து ஆலோசித்தார். இருப்பினும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். அந்த இடத்துக்கு போனாலே மனதுக்கு நன்றாக இருக்கும். அந்த இடத்தில் தோட்டம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை ரஹ்மான் எனக்கு கொடுத்திருக்கிறார். அதை மிகவும் சிரத்தை எடுத்து செய்துகொண்டிருக்கிறேன்.

உங்களுடைய மகன் ‘வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான தருணம் குறித்து எங்களுடன் பகிருங்கள்!

எனது மகன் இசையமைப்பாளராக வருவான் என நான் நினைக்கவேயில்லை. ஏனென்றால் அதற்கு முன்பு ஜிங்கிள்ஸ் வாசித்துக்கொண்டிருந்தான். அதனால் ஒரு நல்ல இசை வாசிப்பாளராகவோ அல்லது பாடகராகவோ வருவார் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென அவர் இசையமைப்பாளராக உருவானது எனக்கே சர்ப்ரைஸ்தான். அதனால் இப்போது மகிழ்ச்சியும்கூட. ஆயிரம் படங்கள் நடித்தாலும் இசையமைத்தாலும் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு மாற்றத்தை பாடலோ அல்லது நடிப்போ ஏற்படுத்தினால் அது பெரிய விஷயம். இப்போது எனது மகன் அதை செய்கிறான் என்றால் அதைவிட பெருமை எனக்கு வேறு எதுவுமில்லை.

ஜி.வி. பிரகாஷ் ‘தேசிய விருது’ வாங்கிய தருணம் உங்களுக்கு எப்படியிருந்தது?

நீண்ட நாட்களாக நாங்கள் எதிர்பார்த்த விருதுதான் அது. ‘வெயில்’ படத்திற்கே பிரகாஷிற்கு கிடைக்கும் என நினைத்ததாகவும், அந்த சமயத்தில் தனக்கு விருது வழங்கப்பட்டுவிட்டதாகவும் ரஹ்மானே அப்போது சொல்லிக்கொண்டிருந்தார். ரஹ்மானுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். எங்கள் வீட்டிலேயே பிரகாஷ்தான் முதல் குழந்தை என்பதால் எப்போதும் மடியிலேயே உட்கார வைத்திருப்பார். எங்கு வெளியே சென்றாலும் கூட்டிக்கொண்டு போவார். சிறுவயதில் பிரகாஷ், ரஹ்மானுடன் மிகவும் நெருக்கமாகத்தான் இருப்பார். பிரகாஷ் பாடகரான பிறகும் அவருடைய குரலை ரஹ்மான் புகழ்ந்துகொண்டே இருப்பார்.


அம்மாவுடன் ஏ.ஆர்.ஆரின் முழுக்குடும்பம்

பவானி ஸ்ரீ நடிகையாகப் போகிறேன் என்று சொன்னபோது நீங்கள் என்ன சொன்னீர்கள்?

எனக்கு அவர் நடிப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் ஒருவரை கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. யார் என்ன செய்யவேண்டுமென்ற அழைப்பு இருக்கிறதோ அதை செய்வார்கள். யாருடைய வாழ்க்கையையும் நாம் பிடித்துவைக்கக்கூடாது. முதன்முதலாக அவளை திரையில் பார்த்தபோது பெருமையாக இருந்தது. நன்றாக நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது அவளுக்கு கிடைத்த வரம்.

உங்களுடைய சகோதரிகளை பற்றி சொல்லுங்கள்!

என்னுடைய அக்கா ரெண்டு பேரும் நிறையப்பேருக்கு உதவி செய்வார்கள். அம்மா மிகவும் வேகமாக சமைப்பார். அதனால் என்னுடைய இரண்டாவது அக்கா பாத்திமாதான் எனக்கு சமையல் கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு நல்ல டீச்சர். நல்ல சமையல் கலைஞரும்கூட.

ராம் கோபால் வர்மா சர்ச்சை குறித்து உங்களுடைய கருத்து என்ன?

ராம் கோபால் வர்மா ஏன் அப்படி சொன்னார் என்றே தெரியவில்லை. பிறருடைய விஷயத்தில் தலையிடுவதே தவறு. தனக்கு தெரியாத விஷயத்தை தெரிந்தமாதிரி பேசுவதற்கு பதிலாக அதை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். ரஹ்மான்தான் பண்ணினார் அல்லது பண்ணவில்லை என இரண்டு பக்கம் இருக்கும். ரஹ்மானுடையது இல்லை என்றால் கோல்டன் க்ளோப், ஆஸ்கர், தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, கிராமி விருது என பல விருதுகளை ரஹ்மான் வாங்கியபோதே அவை தனக்கானவை என சுக்விந்தர் சிங்கே கேட்டிருப்பார். அவர் எந்த ஆக்‌ஷனும் எடுக்காதபோது, ராம் கோபால் வர்மா இவ்வாறு பேசியது தவறு.

தேவா சாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்கள்!

தேவா சார் அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வார். அவரிடம் பேசும்போதே தெரியும். ரஹ்மான் ஸ்டுடியோ தொடங்கியபோது தேவா சாரால் வரமுடியவில்லை. மற்றொரு நாள் அவர் வந்தபோது ரஹ்மான் பிஸியாக இருந்ததால் அம்மா அவரை சென்று பார்த்தார். அவரை பார்த்துவிட்டு, ‘தேவா சார் ரொம்ப நல்லவர்’ என்று அம்மா கூறினார். அவருக்கு எப்போதும் நல்ல மனது இருக்கிறது. அவருடைய இசையில் பாடி, அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு பாடல் பாடிவிட்டாலே ஒரு மாதத்திற்கு சந்தோஷத்தில் நான் மிதந்துகொண்டே இருப்பேன்.


ஜி.வி.பிரகாஷின் குரலை ஏ.ஆர்.ரஹ்மான் புகழ்ந்துகொண்டே இருப்பார் - ஏ.ஆர். ரெய்ஹானா

இப்போது நிறைய இசையமைப்பாளர்கள் அவர்களுடைய குடும்பத்தினர்களையே பாடவைக்கும்போது ஜிவி பிரகாஷும், ரஹ்மானும் ஒருவர் இசையில் மற்றவர் பாடுவதில்லையே ஏன்?

பிரகாஷ் சிறுவயதில் இருந்தபோது ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார். வளர்ந்தபிறகு ஓரிரு பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் ரஹ்மான் எப்போதும் வேறு இசையமைப்பாளர்களுக்கு பாடியது இல்லை. அவரவர் வேலையை அவரவர் பார்க்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும்? அப்படி ஒருமுறை பாட வைத்துவிட்டால் மீண்டும் மீண்டும் அதையே ஏன் செய்யக்கூடாது என கேள்வி வரும். இப்போது சைந்தவியை ஏன் இந்த பாடலை பாடவைக்கக்கூடாது? என நிறையப்பேர் கேட்கிறார்கள்.அதுபோல நடந்துவிடக்கூடாது என இருவரும் நினைக்கிறார்கள்.

'எல்லுவய பூக்களையே' பாடலை சைந்தவி பாடி கேட்டபோது எப்படி இருந்தது?

இது சைந்தவியின் ஸ்டைல் இல்லையே என நினைத்தேன். கச்சேரியிலும், ரெக்கார்டிங்கிலும் சைந்தவி எனக்காக பாடியிருக்கிறார். ஆனால் அது அவருடைய ஸ்டைல் அல்ல. அதைத் தாண்டி சோகத்தை பிழிந்துகொட்டி மிகவும் நன்றாக பாடியிருந்தார்.

சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் கான்சர்ட்டில் நடந்த பிரச்சினையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

யாரோ திட்டமிட்டு செய்ததாகத்தான் நான் பார்த்தேன். ஏனென்றால் 30 வருடங்களாக பல்வேறு இடங்களில் நாங்கள் கான்சர்ட்டுகளை நடத்தியிருக்கிறோம். எங்கும் இதுபோன்று நடந்தது இல்லை. முதலில் திட்டமிடப்பட்டு பிறகு கேன்சல் செய்யப்பட்டது. மீண்டும் நடத்தப்பட்டபோது தகராறாகிவிட்டது. இதற்கான காரணங்கள் என்னவென்று யோசித்தாலே புரியும்.

விஜய் அரசியலுக்கு வந்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சினிமாக்காரர்கள் என்றாலே ஏன் ஒதுக்கிவைக்கிறீர்கள்? அவர்கள் மக்களுடன் ஒன்றாக கலந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் கொடுக்கிறார்கள். அதேபோலத்தான் சேவையும் செய்ய நினைக்கிறார்கள். ஒரு வெள்ளம், பிரச்சினை என்றால்கூட முதலில் டொனேஷன் கொடுக்கிறார்கள். அதற்காக சினிமாக்காரர்கள்தான் வரவேண்டும் என்று இல்லை. அவர்களும் வரலாம். அவர்களும் மக்கள் பிரஜைதான். பிரகாஷும் அவரால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.

Updated On 20 May 2024 11:53 PM IST
ராணி

ராணி

Next Story