
ஒரு பாடகராக, நடனராக, நகைச்சுவை நடிகர், துணை நடிகர் என்று சிறிது சிறிதாக வளர்ந்து வந்து தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த கதாநாயகனாக வளம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். 'மான் கராத்தே', 'டான்', 'டாக்டர்', 'ஹீரோ', 'மாவீரன்' போன்ற பல திரைப்படங்களை நடித்து இப்போது சமீபத்தில் 'அயலான்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதன் டீஸர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
'இன்று நேற்று நாளை' என்ற டயம் டிராவல் கதையை எழுதி இயக்கி அதை வெற்றி படமாக மாற்றிய அறிமுக இயக்குநர் தான் ஆர்.ரவிக்குமார். இந்த திரைப்படம் கடந்த 2015 ஜூன் 26 ஆம் தேதி வெளியானது. ஒரு கருவி மூலம் காலம் கடந்து செல்லும் கதாநாயகனும் அவருடைய நண்பரும் செய்யும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் அமைந்திருக்கும். இதில் நடிகர் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடந்து மறு வருடமே அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் அவர்களிடம் 'அயலான்' என்ற கதையை கூறி படப்பிடிப்பை தொடங்கினார் இயக்குநர் ரவிக்குமார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் மற்றும் கே. ஜே. ஆர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்தனர். பின்னர் சில நிதி நெருக்கடி காரணங்களால் படபிடிப்பு நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக சில செய்திகள் இணையத்திலும் சினிமா வட்டாரத்திலும் நெட்டிசன்களாலும் பேசப்பட்டு வந்தது. அதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானர். தற்போது 7 வருடங்களுக்கு பின்னர் 2023 அக்டோபர் 6 ஆம் தேதி இந்த திரைப்படத்தின் டீஸர் 7 மணி 08 நிமிடங்களுக்கு வெளியானது.
மிகவும் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது என்பதை இந்த டீஸர் வெளிப்படுத்தியுள்ளது. வீஎப்எக்ஸ் காட்சிகளுக்கு மிகவும் படக்குழு உழைத்திருப்பதாக டீஸர் ஐ பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். வேற்று கிரக வாசியான ஏலியன் என்று அழைக்கப்படும் உயிரினம் பூமிக்கு வருவது போலவும் அது கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து பல நகைச்சுவைகளை செய்வது போன்ற பல காட்சிகள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானு பிரியா போன்ற பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இது போன்ற ஏலியன் திரைப்படம் புரட்சி தலைவர் எம். ஜி .ஆர் நடித்து 1963 ஆம் ஆண்டு வெளியான 'கலைஅரசி' ஆகும். அதற்கு பின்னர் பல வருடங்களுக்கு பிறகு இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த 'அயலான்' உருவாகியுள்ளது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாளன்று இந்த 'அயலான்' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
