இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்களின் வரவு என்பது காலம் காலமாக அதாவது எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது தவிர பண்டிகை நாட்களிலும் பல படங்கள் ரிலீஸ் ஆகி மக்களை குதூகலப்படுத்தி வருகின்றன. இருப்பினும் சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை, ரிலீஸ் ஆகும் படங்களும் அதிக நாட்கள் ஓடுவதில்லை போன்ற சச்சரவுகள் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பேசுபொருளாக இருக்கிறது. அதனையும் மீறி இன்றும் பல படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகின்றன. இந்த சூழலில் 2023ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வருட இறுதிக்குள் எந்தெந்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகப் போகிறது என்பது பற்றி இங்கே காணலாம்.

பொதுவாகவே ஒரு புதிய ஆண்டு தொடங்குகிறது என்றால், அதோடு சேர்த்து இந்த வருடத்தில் எந்தெந்த ஹீரோக்களின் படங்கள் வெளிவர தயாராக உள்ளன என்ற எதிர்ப்பார்ப்பும் தொற்றிக்கொள்ளும். அப்படி 2023 ஆம் வருடம் ஆரம்பித்தது முதல் தற்போது வரை எண்ணிலடங்கா படங்கள் வெளிவந்து அவற்றில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் திரையுலகினரையும் திருப்திபடுத்திய படங்களாகவே இருந்துள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2023 ஆம் ஆண்டு தொடங்கி சில தினங்களிலேயே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த விஜய்யின் ‘வாரிசு’ படமாக இருக்கட்டும், அஜித்தின் ‘துணிவு’ படமாக இருக்கட்டும் எல்லாமே மாஸ் ஹிட் அடித்து தங்களது வெற்றியை பதிவு செய்தன. இதுதவிர ‘வாத்தி’, ‘விடுதலை’, ‘பத்து தல’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘மாமன்னன்’, ‘ஜெயிலர்’, ‘மாவீரன்’, ‘சித்தா’, ‘லியோ’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ஜப்பான்’ என வரிசையாக தற்போது வரை வெளிவந்துள்ள அனைத்து படங்களுமே ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாகவே இருக்கின்றன. இந்த வருடம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நவம்பர் 24 முதல் டிசம்பர் இறுதிக்குள் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்', சந்தானம் நடித்துள்ள '80ஸ் பில்டப்', ரியோ ராஜ் நடித்துள்ள 'ஜோ', நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி', ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்', ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் தவிர டிசம்பருக்குள்ளாக மேலும் சில படங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்'


விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' போஸ்டர்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளிவரவுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்க, இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு திரைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஏனோ சில காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகி தள்ளிப்போனது. பின்னர் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து, தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. அண்மையில் இப்படம் குறித்து பேட்டி அளித்திருந்த இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், முதலில் இந்த படத்தின் கதையை நடிகர் சூர்யா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோரிடம் சொல்லியதாகவும், அவ்விருவரும் நடிக்க முடியாமல் போனதால் பின்னர் நடிகர் விக்ரமிடம் கதையை கூறி ஓகே வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் '80ஸ் பில்டப்'


'80ஸ் பில்டப்' படத்தில் நடிகர் சந்தானம்

தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர நடிகராக மாறியவர்தான் சந்தானம். சமீபத்திய ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இவர் தற்போது “குலேபகாவலி, ‘ஜாக்பாட்’, ‘கோஷ்டி' ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் என்பவரின் இயக்கத்தில் '80ஸ் பில்டப்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 1980 கால கட்டங்களில் நடந்த அட்ராசிட்டியான விஷயங்களை மையமாக வைத்து நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக, சன் டிவியில் ஒளிபரப்பான ’பூவே உனக்காக’ சீரியலில் அஸீமுக்கு முதலில் ஜோடியாக நடித்திருந்த பிரீத்தி ராதிகா தான் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் மற்றும் மறைந்த நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியோ ராஜின் ‘ஜோ’


ரியோ ராஜின் 'ஜோ ' பட போஸ்டர்

‘கனா காணும் காலங்கள்’,‘சரவணன் மீனாட்சி’ஆகிய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பிக் பாஸ் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் வாயிலாக புகழ்பெற்று அதன் மூலம் திரைத்துறைக்குள் வந்தவர்தான் ரியோ ராஜ். 2017-ல் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த 'சத்திரியன்' படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக வந்தவர், 2019-ஆம் ஆண்டு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அளவிற்கு, இவர் நடித்த மற்ற படங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜோ ஹரிஹரன் ராம் என்பவரின் இயக்கத்தில் ‘ஜோ’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். 17 வயதிலிருந்து 27 வயது வரை உள்ள இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' மற்றும் '80ஸ் பில்டப்' ஆகிய படங்களுடன் ரியோ ராஜின் ‘ஜோ’ படமும் போட்டியிட தயாராகி வருகிறது. இப்படம் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் ஜெயிக்க போராடும் ரியோ ராஜ்-க்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நயனின் 'அன்னபூரணி'


நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தின் போஸ்டர்

அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாராவின் 75வது படமாக வெளிவரவுள்ள திரைப்படம் 'அன்னபூரணி'. இப்படத்தில் நயன்தாராவுடன் நடிகர் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். நாட் ஸ்டுடியோஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சமையல் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் காமெடி மற்றும் எமோஷனல் கலந்து எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படம் நயன்தாராவின் 'அறம்' படத்தினை போன்று மிகப்பெரிய வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த படம் தவிர நமது வாழ்வில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' திரைப்படம் மற்றும் ஜெயம் ரவி முதல் முறையாக நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சைரன்' ஆகிய படங்களும் இதே டிசம்பர் 1 அன்று வெளிவர உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 படங்களுக்கு மேல் வெளிவந்துள்ள நிலையில், இன்னும் இருக்கும் நாட்களில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கையையும் சேர்த்து கிட்டத்தட்ட 250 படங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 28 Nov 2023 12:13 AM IST
ராணி

ராணி

Next Story