இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் அருள் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தின் நாயகியாக அறியப்படும் ஊர்வசி ரவுடேலா இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் கவர்ச்சியாக நடித்து கவனம் ஈர்த்தவர். பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாகவும், மாடலாகவும் வலம் வரும் இவர் மிஸ் டீன் இந்தியா மற்றும் மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்ற பெருமைக்குரியவர். அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் இவர் கடந்த ஆண்டு 76-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ரூ.276 கோடி மதிப்புள்ள முதலை நெக்லஸ் அணிந்து வந்து ஒட்டுமொத்த திரையுலகை ஆச்சரியப்படவும், அதிர்ச்சியைடையவும் வைத்திருந்தார். அதேபோன்று கடந்த 25-ஆம் தேதி அன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.3 கோடி மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி மீண்டும் திகைக்க வைத்துள்ளார். தொடர்ந்து எப்போதும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது ஆதாரமற்ற விஷயங்களையும், சர்ச்சைகளையும் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி தொடர்ந்து ஏதாவது பரபரப்பை உண்டாக்கி பேசு பொருளாக மாறும் இந்த ஊர்வசி ரவுடேலா யார்?… இவரின் திரைப்பயணம் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது. இந்த ஊர்வசியின் ஒட்டுமொத்த பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

யார் இந்த ஊர்வசி ரவுடேலா?


அழகிய தோற்றங்களில் காட்சியளிக்கும் ஊர்வசி ரவுடேலா

ஒல்லியான தேகம், மயக்கும் பார்வை என்று எப்போதும் தனது கவர்ச்சியான உடல் அமைப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவரும் ஊர்வசி ரவுடேலா, 1994-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோட்வாரில் மன்வர் சிங் - மீரா சிங் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு யாஷ் ரவுடேலா என்ற ஒரு சகோதரர் உள்ளார். ஊர்வசி ரவுடேலாவின் அப்பா - அம்மா இருவரும் மிகப்பெரிய தொழிலதிபர்கள். இதனால் நன்கு வசதி வாய்ப்புகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை கோட்வாரில் உள்ள DAV பள்ளியில் பயின்றார். இதற்கு பிறகு தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கி வரும் கார்கியில் முடித்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பு, பாட்டு, மாடல் என கலைத் துறைகளில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் பட்டப்படிப்பை முடித்த கையோடு நியூயார்க் சென்று அங்கு இயங்கி வரும் ஸ்கூல் ஆஃப் பிலிம் அகாடமியில் சேர்ந்து டிப்ளமோ பட்டம் பெற்றார். இதற்கிடையில், மாடலிங் ஆசையையும் விட்டுவிடாது பள்ளி காலங்களில் இருந்தே வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஏறி மாடல் அழகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்படி அவ்வப்போது ஆரம்பித்த ஊர்வசியின் மாடலிங் முயற்சியானது அவருடைய 15-வது வயதில் இருந்துதான் முழுமையாக தொடங்கியது. அதாவது 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற “மிஸ் டீன் இந்தியா” அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர், தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு “இந்தியன் பிரின்சஸ்”, “மிஸ் டூரிசம் குயின்” மற்றும் “மிஸ் ஏசியன் சூப்பர் மாடல்” ஆகிய போட்டிகளிலும் கலந்து கொண்டு அங்கும் தன் முத்திரையை பதித்து அனைத்து பட்டங்களையும் வென்றார். இதோடு நின்று விடாமல் அடுத்தடுத்த முயற்சியாக 2015-ஆம் ஆண்டு “மிஸ் யுனிவர்ஸ்”, 2018-ஆம் ஆண்டு “Youngest Most Beautiful Women In The Universe” ஆகிய அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டு அந்தப் பட்டங்களையும் வென்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றம் அடைந்தார்.


அழகி போட்டிகளில் கலந்துகொண்ட தருணங்கள்

இப்படி ஒவ்வொரு முறையும் விடா முயற்சியோடு அனைத்து அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பட்டங்களை மட்டும் வெல்வதோடு, அந்த அழகிப் பட்டத்தினை வெல்லப் போராடும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவும் மாறினார். இந்த நேரம் ஊர்வசி ரவுடேலாவை நோக்கி நிறைய விளம்பர வாய்ப்புகள் வர, லாக்மி காஸ்மெட்டிக், பீமா கோல்டு, Ozel லைஃப்ஸ்டைல், கிராஸிம் என பல முன்னணி பிராண்டுகளுக்கு மாடலாக தோன்றி புகழ் பெற்றார். இதன் மூலம் பெரும்பாலான பிரபல பத்திரிகைகளின் கவர் பேஜில் அதாவது அட்டை படங்களில் இடம்பெறும் அளவுக்கு மிகப்பெரிய புகழ் உச்சத்தை தொட்டார். மேலும் அமேசான் ஃபேஷன் வீக், பாம்பே ஃபேஷன் வீக் மற்றும் துபாய் ஃபேஷன் வீக் ஆகியவற்றில் ராம்ப் வாக் செய்து இன்னும் அடையாளம் பெற்றார். இந்த புகழால் போட்டிகள் அதிகம் நிறைந்த பாலிவுட் படங்களில் அதுவும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அப்படித்தான் 2013-ஆம் ஆண்டில் இருந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.

முதல் திரைப்பட வாய்ப்பு

இன்ஜினியரிங் கனவை விட்டுவிட்டு மாடலிங் துறையில் கால்பதித்து பல்வேறு பட்டங்களை அள்ளிக்குவித்த ஊர்வசி ரவுடேலா 2013 ஆம் ஆண்டு ‘சிங் சாப் தி கிரேட்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக இந்தி திரையுலகில் அறிமுகமானார். அனில் சர்மா என்பவரது இயக்கத்தில், சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் மின்னி தல்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சன்னி தியோலுக்கு ஜோடியாக நடித்திருந்த இவரின் பாத்திரம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்ட இவர் பாலிவுட்டில் நன்கு அடையாளம் பெற்ற நபராகவும் மாறினார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து வாய்ப்புகள் வர, அதன்படி ‘திரு ஐராவதம்’ என்ற கன்னட படத்திலும், 'போரோபாஷினீ' என்ற பெங்காலி படத்திலும் நடித்தார். பின்னர் 'பாக் ஜானி', 'சனம் ரெ', 'பெரிய கிராண்ட் மஸ்தி', 'காபில்', 'வெறுப்புக் கதை 4', 'பகல்பந்தி', 'கன்னி பானுப்ரியா' போன்ற ஹிந்தி படங்களில் முதன்மை பாத்திரங்களிலும், ஒருசிலவற்றில் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார். இதற்கிடையில் ஊர்வசியின் நண்பரான யோ யோ ஹனி சிங் மற்றும் டோனி கக்கர், விஷால் மிஸ்ரா போன்றவர்களுடன் இணைந்து இசை ஆல்பங்களிலும், ஒரு சில வெப் தொடர்களிலும் நடித்தார். இப்படி விளம்பரம், திரைப்படங்கள், மாடல் என்று பல்வேறு தளங்களில் நடித்து வந்த போதுதான் தமிழ் திரையுலக பக்கம் இருந்தும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து இங்கும் கால் பதித்தார்.


இந்தி திரைப்படங்களில் ஊர்வசி ரவுடேலா தோன்றிய காட்சிகள்

தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பு

ஜே.டி மற்றும் ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் 2020-ஆம் ஆண்டு ‘தி லெஜண்ட்’ என்ற படம் வெளிவந்தது. இப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் யோக ரத்தினத்தின் மகனும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணா அதாவது சரவண அருள் ஹீரோவாக நடித்திருந்தார். முதலில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரவைத்தான் படக்குழு அணுகியதாம். பெரிய தொகை கொடுக்க தயாராக இருந்த போதிலும், நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனாலேயே அந்த வாய்ப்பு அப்போது படங்களில் மிகவும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருந்த ஊர்வசி ரவுடேலாவுக்கு கிடைத்தது. அப்படி இப்படத்தில் சரவண அருளுக்கு ஜோடியாக மருத்துவர் மதுமிதாவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி ரவுடேலா இங்கும் ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகையாக மாறினார். இருப்பினும் அவருக்கு தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தெலுங்கு, ஹிந்தி என்று நடித்து வரும் ஊர்வசி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஊர்வசியின் அடுத்தடுத்த சர்ச்சைகள்


பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ரிஷப் பந்த் மற்றும் ராம் பொதினேனியுடன் ஊர்வசி ரவுடேலா

நடிப்பு, மாடலைத் தாண்டி விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வம் கொண்ட ஊர்வசி ரவுடேலாவுக்கும், சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது திரையுலக பயணம் பற்றியும், தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றியும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டபோது தனக்கு வந்த லவ் ப்ரோபோசல் பற்றி பேசியிருந்தார். அப்படி அவருக்கு வந்த அந்த ப்ரோபோசலில் ‘RP’ - யும் ஒருவர் என்று குறிப்பிட்டு கூறியிருந்தார். ‘RP’ என்பது பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ரிஷப் பந்தின் பெயர். அவரது ரசிகர்கள் அவரை அப்படி செல்லமாக அழைப்பதுண்டு. இதனால் ஊர்வசி ரவுடேலா ரிஷப் பந்தைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று விமர்சனத்துக்கு ஆளானது மட்டுமின்றி அவரை கேலி செய்தும், அவதூறு பரப்பியும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டனர். இதனை கண்ட ஊர்வசி ரவுடேலா சில கேள்விகளை எழுப்பி, விளக்கம் அளித்திருந்தார். அதில் என்னைப்பற்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது நல்லதல்ல. “நான் ஆர்.பி என்று குறிப்பிட்டிருந்தது என்னுடைய சக நடிகரான ராம் பொதினேனியைத்தான். ரிஷப்பையும் அப்படி அழைப்பது நிச்சயம் எனக்குத் தெரியாது. எதனையும் முழுமையாக விசாரிக்காமல் கிரிக்கெட் வீரர்களோடு என்னை போன்ற நடிகைகளை ஒப்பிட்டு பேசுவது சரியில்லை என்று கூறியிருந்தார்.

அதே வேளையில், கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்தும் ஊர்வசி ரவுடேலாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பிரபலமாக வேண்டும், எல்லோரும் நம்மை கவனிக்க வேண்டும் என்று தங்களுடைய நேர்காணல்களில் இவ்வாறு பேசுவது மிகவும் மோசமான ஒன்று. பெயருக்காக இப்படியெல்லாம் நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது என்று எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருவருக்கும் இடையே நடந்த விமர்சனங்களால் லாபம் அடைந்தது என்னவோ சமூக ஊடகங்கள்தான்.

இதுவரை ரவுடேலா கொடுத்த ஷாக் நிகழ்வுகள்


76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் டார்க் பிங்க் நிற கவுன் மற்றும் முதலை நெக்லஸ் அணிந்து வந்த தருணம்

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாவில் மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ளார். இதனால் அவர்களை கவரும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது அவரது வழக்கம். அதுமட்டுமின்றி இவர் தன் சம்மந்தமான எந்த ஒரு நிகழ்வை வலைதளங்களில் பதிவிட்டாலும் அது உடனே தீயாய் பரவி பேசு பொருளாக மாறிவிடும். அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சாரா அலிகான், அதிதிராவ், 2017 -ஆம் ஆண்டு உலக அழகியாக இருந்த மனுஷி சில்லர் என பல பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், ஊர்வசி ரவுடேலாவும் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தார். அப்போது ஊர்வசி ரவுடேலா டார்க் பிங்க் நிற கவுன் ஒன்றினை அணிந்துவந்து சிவப்புக் கம்பளத்தின் மீது ஸ்டைலாக நடை போட்டார். பிரபல ஃபேஷன் டிசைனர் சிமா என்பவர்தான் இந்த கவுனை வடிவமைத்திருந்தார். மேலும் ஊர்வசி அணிந்திருந்த டார்க் பிங்க் நிற ஆடைக்கு மேட்சிங்காக தன்னுடைய கழுத்தில் இரண்டு முதலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தாற்போன்று வடிவமைக்கப்பட்டிருந்த நெக்லஸ், அதே டிசைனில் வடிவமைக்கப்பட்ட முதலை உருவம் கொண்ட வளைத் தோடுகள், உச்சந்தலையில் தூக்கி வைக்கப்பட்டதுபோல் இடப்பட்டிருந்த கொண்டை, டார்க் பிங்க் நிற லிப்ஸ்டிக் என ஒரு மாடலுக்கான மொத்த அழகுடன் வந்து ஜொலித்தார். அதுமட்டுமின்றி அந்த முதலை நெக்லஸில் இருந்த பளபளக்கும் வைரங்களும், நுணுக்கமான வடிவமைப்பும் அங்கு இருந்த பார்வையாளர்களை வெகுவாக அசர வைத்தது. இதனால் அன்றைய தினம் அந்த நெக்லஸ் தொடர்பான பதிவுகள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி பேசுபொருளாகவும் மாறி பரபரப்பை ஏற்படுத்தின. இதில் என்ன பரபரப்பு இருக்கப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். அந்த பரபரப்புக்கு மிக முக்கிய காரணம் அந்த முதலை நெக்லஸின் மதிப்பு ரூ.276 கோடி என்பதுதான். இதோடு நின்றாரா? இல்லை. அடுத்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் நடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ கிளிப் இணைந்த பதிவு ஒன்றை வெளியிட்டு, சர்ச்சையை கிளப்பினார் ஊர்வசி ரவுடேலா. இதனால் கடுப்பான பாலிவுட் திரையுலகினர் பலரும் ஊர்வசி ரவுடேலாவின் அந்த பதிவுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.


தனது 30-வது பிறந்தநாளுக்கு 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை நண்பர் யோ யோ சிங்குடன் வெட்டிய ஊர்வசி

இப்படி கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது ஏதாவது ஒரு ஆதாரமற்ற விஷயங்களையோ, சர்ச்சையான பதிவுகளையோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் ஊர்வசி இப்போதும் சும்மா இல்லை. கடந்த 25-ஆம் தேதி அன்று தனது 30-வது பிறந்த நாளை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட 24 கேரட் தங்க கேக்கை வெட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒவ்வொரு வருடம் போலவே இந்த முறையும் ஊர்வசி தனது பிறந்தநாளுக்கு பணத்தை தண்ணீர்போல் செலவு செய்துள்ளார். ஊர்வசி ரவுடேலாவின் நண்பரும், பாப் பாடகருமான யோ யோ ஹனி சிங் தான் இந்த தங்க கேக் ஏற்பாடுகளை செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது. இப்படி ஊர்வசி ரவுடேலா தனது பிறந்தநாளுக்காக இவ்வளவு விலை உயர்ந்த கேக்கை வெட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் அவர் இதே மாதிரியான அளவில் வைர கேக் வெட்டியிருந்தார். இது தவிர, அவரது அந்த பிறந்தநாள் விழாவில் 24 காரட் தங்க கேக்குகளும் இருந்தன. ஆனால் அதுகுறித்து பேசப்பட்ட நிலையிலும் போதுமான ஆதாரங்கள் வெளிவரவில்லை. இந்த நிலையில், இந்த முறை அப்பட்டமாக எல்லோருக்கும் தெரியும் விதமாக ரூ.3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி அனைவருக்கும் ஷாக் மேல் ஷாக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளார் ரவுடேலா. தங்கம் விற்கும் விலையில், தங்க முலாம் பூசிய கேக் வெட்டிய அவரின் இந்த புகைப்படங்கள் குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற பல நிகழ்வுகள் குறித்து நெட்டிசன்களின் கேள்விகள், இனிவரும் காலங்களிலும் ஊர்வசியின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தொடரலாம்.

Updated On 11 March 2024 11:47 PM IST
ராணி

ராணி

Next Story