நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அறிமுகத்துடன் திரைத்துறையில் நுழைந்த ராதிகா சரத்குமார் இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் கண்டுபிடிக்கப்பட்ட திறமையான நடிகை. தமிழ் சினிமாவில் நாயகிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிகளை முற்றிலுமாக உடைத்து கருப்பு நிறம், குண்டான தேகம் என ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலமாக நமக்கெல்லாம் அறிமுகமான இவர் பெரிய திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் தனக்கான ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி அதில் பலரும் பார்த்து பொறாமைப்படும்படியான ஒருவராக வலம் வந்தவர். 80-களில் இவருடன் அறிமுகமாகி வெற்றி நாயகிகளாக காணப்பட்ட பலரும் இன்று இருந்த இடமே தெரியாமல் போனநிலையில், நாயகி என்றால் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தால் மட்டும்தான் என்றில்லை; படத்தின் கதை போக்கையே மாற்றி பல திருப்பங்களோடு கொண்டு செல்லும் கனமான வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களுக்கு நாம் நாயகியாகத்தான் தெரிவோம் என்று அதற்கு தகுந்த கதைகளையும் தேர்வு செய்து நடித்தார். அதனால்தான் திரைத்துறைக்கு வந்து 45 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இயக்குநர்கள், கதாநாயகர்கள் விரும்பும் நாயகியாக இன்றும் வலம் வருகிறார். இப்படி பல பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்ட ராதிகா சரத்குமார் சினிமாவில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் தற்போது சாதிக்க முயற்சித்து வருகிறார். எந்த அளவுக்கு ரசிகர்களால் நடிப்புக்காக பாராட்டப்படுகிறாரோ அதே அளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அதே ரசிகர்களால் விமர்சிக்கப்படும் இவர், நாளை (21.08.2024) தனது 62-வது பிறந்த நாளை கொண்டாகிறார். இந்தநிலையில், ராதிகா சரத்குமாரின் சினிமா பயணம், திரையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் கண்ட வெற்றி தோல்விகள், சந்தித்த மோசமான விமர்சனங்கள் என்ன? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
எதிர்பாராத திருப்பத்தை தந்த பாரதிராஜா
தன் சிறந்த நடிப்புக்காக எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் எம்.ஆர்.ராதாகிருஷ்ண நாயுடு - கீதா தம்பதியருக்கு மூத்த மகளாக 1962-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தது நிரோஷா என்ற தங்கையும், ராஜு, மோகன் என இரண்டு தம்பிகளும் உள்ளனர். ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதாவுக்கு, ஸ்ரீலங்காவை பூர்வீகமாக கொண்ட கீதா மூன்றாவது மனைவி ஆவார். அவருக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் தனக்கு பிறந்த பிள்ளைகள் அனைவரையும் ஒரேவிதமாக பார்ப்பதும், பிள்ளைகளை ஒரே இடத்தில் தங்க வைத்து படிக்க வைப்பதும் என்று பாகுபாடு இல்லாமல் வளர்த்துள்ளார். அப்படிப்பட்டவர் தன்னை போன்று தன் பிள்ளைகளும் சினிமாவுக்கு வந்துவிடக்கூடாது என்று “இந்த சினிமாவெல்லாம் உங்களுக்கு வேண்டாம். அந்த மாதிரியான வேலை என்னோடு போகட்டும். நீங்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற என்ன வழியோ அதை பாருங்கள் என்று அடிக்கடி சொல்வதோடு திரைப்படங்கள் பார்ப்பதற்கும் அழைத்துச் செல்ல மாட்டாராம். ஆனால், ராதிகாவுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும் என்பதால் ஒருமுறை எம்.ஆர்.ராதா, தான் அவருடன் நடித்து வந்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்று சந்திக்க வைத்தாராம். அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆர், ராதிகாவை தூக்கி முத்தமிட்டு கொஞ்சினாராம். அதற்காக மூன்றுநாள் குளிக்காமல் கூட இருந்த நிகழ்வுகள் எல்லாம் உண்டாம். அந்த அளவுக்கு நடிப்புக்காகவும், கலர் மற்றும் ஸ்டைலுக்காகவும் பார்த்து பார்த்து ரசித்த மக்கள் திலகத்தை, தன் தந்தை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டுவிட்டார், அதற்காக அவர் ஜெயிலுக்கு செல்ல போகிறார் என்ற நிலை வந்ததும் ராதிகாவின் வாழ்க்கை சூழலும் முற்றிலுமாக மாறியது. அதுவரை அப்பா, அம்மா என்று இருவரை சுற்றியே வளர்ந்த ராதிகா பாதுகாப்பிற்காக லண்டன் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு விடுதியில் தங்கி படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தன் சிறுவயது முழுவதும் அங்கேயே கழித்தவர், பள்ளிக்கல்வியை முடித்து விடுமுறைக்காக சென்னைக்கு வந்திருந்த சமயத்தில்தான் சினிமா என்னும் கதவு தானாக வந்து தட்டியது. அதுவரை சினிமாவில் நடிப்போம், நாமும் தென்னிந்திய சினிமாவின் இளவரசியாக கொண்டாடப்படுவோம் என்றெல்லாம் அவர் ஒருதுளி கூட நினைத்திருக்க மாட்டார்.
தந்தை எம்.ஆர்.ராதாவுடன் நடிகை ராதிகா
ஒருநாள் வீட்டு கார்டனில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவரை எதேச்சையாக பார்த்த பாரதிராஜா இவர்தான் நம் படத்தின் நாயகி என்று முடிவு செய்து நேராக ராதிகா வீட்டு கதவை தட்டி படத்தில் நடிக்க அனுமதி கேட்டுள்ளார். அப்போது, ராதிகாவோ “ஒரு நடிகைக்கான எந்த தகுதியும் என்னிடம் இல்லை. அப்படியிருக்கும்போது நானெல்லாம் நடிச்சா, யார் பார்ப்பாங்க?” என்று கேட்டு மறுப்பு சொல்ல, பாரதிராஜாவோ சிரித்துக்கொண்டே “அதெல்லாம் சரியா வரும்” என எப்படியோ பேசி சம்மதிக்க வைத்து, தான் அப்போது எடுக்க இருந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நாயகியாக அறிமுகம் செய்து வைத்தார். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதோடு, ராதிகா முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக, பாஞ்சாலியாக அப்படியே நம் மனங்களில் பதிந்துபோனார். அதுமட்டுமின்றி இப்படத்தை பார்த்த ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதாவும் தனது மகளின் நடிப்பை கண்டு பூரித்து போனாராம். இதற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு தன் முழு கவனத்தையும் சினிமா மீது செலுத்துவது என்று முடிவு செய்தார். அதன்படி தமிழில் ‘இனிக்கும் இளமை’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘வேலும் மயிலும் துணை’, ‘எங்க ஊரு ராசாத்தி’, ‘சூலம்’, ‘ஆயிரம் வாசல் இதயம்’, ‘பாமா ருக்மணி’ என வரிசையாக நடிக்க, முதல் படம் அளவுக்கு எந்த படங்களும் வெற்றிப்படங்களாக அமையவில்லை. இருப்பினும் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வாய்ப்புகள் குவிந்து பிஸியான நடிகையாக மாறினார்.
விமர்சனங்களை வெற்றிகளாக மாற்றிய ராதிகா
எந்த இயக்குநரிடம் “நானெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே இல்லை” என ராதிகா கூறினாரோ அதே இயக்குநர் தந்த பயிற்சிதான் ராதிகாவை தென்னிந்திய நடிகையாக உச்சம் பெறச்செய்தது. ஒருவர் கூறும் விமர்சனம்தான், நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று சொல்லுவார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ராதிகாவுக்கு மிகச்சரியாக பொருந்தும். ஏனென்றால் அவர் நடிக்கவந்த காலத்தில் பார்ப்பதற்கு கருப்பாக, குண்டாக தெரிவாராம். இதனால் இவரின் நிறம் மற்றும் உடலமைப்பை வைத்து பலரும் மோசமான விமர்சனங்களை அள்ளித்தெளிக்க ஆரம்பித்துள்ளனர். அது மனதிற்கு ஒருவித வலியை உண்டாக்கினாலும், நம் லட்சியம்தான் முக்கியம் என்று மற்றவற்றை பற்றியெல்லாம் கவலை படாமல் ஓட ஆரம்பித்தார். இருப்பினும், நம்மை நோக்கி வரும் விமர்சனங்களையும் உடைத்து காட்ட வேண்டும் என்று உடல் எடையை குறைப்பது, அழகை மெருகேற்ற என்னென்ன விஷயங்களை பின்தொடர வேண்டும், தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி தன்னை மெருகேற்றிக் கொண்டார். மேலும், தமிழ் திரையுலகில் தனக்கென்று ஓரு பாதையை அமைத்து 1980 மற்றும் 90-களில் அப்போது உச்ச நட்சத்திரங்களாக கோலோச்சிக் கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார்.
‘பூந்தோட்ட காவல்காரன்’ திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்துடன்
இதற்கிடையில் தனது வெகுளித்தனத்தால் 1980-ஆம் ஆண்டு ‘இளமைக்கோலம்’ என்ற படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பிரதாப் போத்தனை காதலித்த ராதிகா, 1985-ஆம் ஆண்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். ஆனால், அத்திருமணம் நீடிக்காமல் சில மாதங்களிலேயே இருவரும் மனமொத்து பிரிந்துவிட, பிறகு திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அப்படி 1980 காலகட்டங்களில் மட்டும் நூறு படங்களில் நடித்த ராதிகா, அதை அப்படியே விட்டுவிடாமல் தொடர்ந்தார். இந்த நேரத்தில் ரஜினி, கமலை விட விஜயகாந்துடன் ‘நீதியின் மறுபக்கம்’, ‘தர்ம தேவதை’, ‘சிறைப்பறவை’, ‘வீர பாண்டியன்’, ‘உழவன் மகன்’, ‘தெற்கத்தி கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல்காரன்’ என ஏராளமான படங்களில் நடித்தார். ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக விஜயகாந்த்-ராதிகா உருவான நிலையில், விஜயகாந்தை ராதிகா காதலித்து வருவதாகவும், திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் நிறைய செய்திகள் உலா வந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரெனெ 1990-ஆம் ஆண்டு பிசியான நடிகையாக உச்சத்தில் இருக்கும்போதே, ரிச்சர்ட் ஹார்டி என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்டார் ராதிகா. ஆனால், இந்த வாழ்க்கையும் நீடிக்காமல் 1992-ஆம் ஆண்டு ஹார்டியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த ராதிகா, அவரை விட்டு பிரியும்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாராம். இதற்கு பிறகு 1993-ஆம் ஆண்டு ராதிகாவுக்கு ரேயான் என்ற மகள் பிறக்க இனி சினிமாவில் நடிப்பதில்லை என முடிவுவெடுத்தார்.
மீண்டும் மாற்றம் தந்த பாரதிராஜா
‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தின்போது இயக்குநர் இமையத்துடன்
எப்போதும் ஒரு நடிகை சினிமாவில் தன்னை உச்சத்தில் வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு சாதாரண நிகழ்வு ஒன்றும் கிடையாது. அது நடிகை ராதிகாவுக்கு தானாகவே அமைந்தது. ஒவ்வொரு வருட இறுதியிலும் ராதிகா இனி நமக்கு சினிமாவே வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு சினிமா வாய்ப்பு வந்து நின்று அவரது கெரியரையே மாற்றிவிடுமாம். அப்படிதான் மகள் ரேயான் பிறந்த நேரம் இனி நடிக்க வேண்டாம் என்று இருந்தவரை பார்க்க வந்த பாரதிராஜா, நான் ‘கிழக்கு சீமையிலே’ என்றொரு படம் எடுக்கிறேன். அதில் நீதான் நடிக்க வேண்டும், உன்னை தவிர வேறு யாராலும் அதில் நடிக்க முடியாது என்று கேட்க ராதிகாவோ முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதம் தெரிவித்து நடித்தாராம். பல சிரமங்களுக்கு மத்தியில் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடித்த ராதிகா, பாரதிராஜா சொன்னது போலவே அவரை தவிர அந்த படத்தில் வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியாதபடி விஜயகுமாருக்கு தங்கையாக, நெப்போலியனுக்கு மனைவியாக விருமாயி என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டு போயிருந்தார். 1993-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கி வெளிவந்த இப்படம் அவரது திரைவாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்த படமாக அமைந்தது. இதற்கு பிறகு ‘வரவு எட்டனா செலவு பத்தனா’, ‘பவித்ரா’, ‘பசும்பொன்’, ‘ராசய்யா’, ‘நான் பெத்த மகனே’, ‘சூர்யவம்சம்’, ‘வீர தாலாட்டு’, ‘ஜீன்ஸ்’, ‘என் ஆசை ராசாவே’, ‘பூமகள் ஊர்வலம்’ என வரிசையாக அம்மா, அக்கா, அண்ணி, வழக்கறிஞர் என குணச்சித்திர வேடங்களிலும் தனித்துவமாக தெரியும்படி அதகளப்படுத்தினார்.
'வாணி ராணி' தொடரில் உடன் நடித்தவர்களுடன் ராதிகா
இதற்கிடையில், பெரிய திரையில் இருந்து சின்னத்திரையிலும் கால் பதித்த ராதிகா அங்கும் தான் யார் என்பதை நிரூபித்து காட்டினார். சாருஹாசன் தயாரிப்பில், சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் பொதிகை தொலைக்காட்சியில் ‘பெண்’ என்ற தொடரில் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர், ‘விடுதலை’, ‘நாளாவது முடுச்சு’, ‘மறுபிறவி’ போன்ற பல சீரியல்களில் நடித்தார். பிறகு ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் ‘சித்தி’ என்ற தொடரை சொந்தமாக தயாரித்து, இயக்கி அதிலும் நடித்தார். தமிழ்நாட்டில் இந்த சீரியல் ஏற்படுத்திய தாக்கம் ராதிகாவை எங்கோ உச்சத்தில் கொண்டு சென்று அமர வைத்தது. அதிலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ராதிகாவை தங்கள் வீட்டு சித்தியாகவே வரவேற்று கொண்டாடி தீர்த்தன. இதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து இயக்குவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனும் அளவுக்கு இவர் கொடுத்த ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’, ‘வாணி ராணி’ ஆகிய தொடர்கள் சன் தொலைக்காட்சி டிஆர்பி-யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தன. இன்றும் தனது ராடான் மூலம் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தாலும் வாணி ராணிக்கு பிறகு பெரிய அளவிலான வெற்றி தொடர்களை கொடுக்க முடியவில்லை.
அரசியல் களத்தில் ராதிகா
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தருணம்
நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் என பல முகங்களோடு பயணிக்கும் ராதிகா 2001-ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ளார். இதுவரை ராதிகா செய்துகொண்ட திருமணங்களால் பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தாலும், இப்போது சரத்குமாருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்துவரும் இவர், சரத்குமாரின் முதல் மனைவி மற்றும் மகள்களுடனும் நல்லதொரு உறவை பேணிக்காத்து வருகிறார். எப்போதும் வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகள்தான், அனுபவ பாடங்களாக மாறி நமக்கு பல தெளிவான முடிவுகளை எடுக்க உதவும் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அதுமாதிரியான வாழ்க்கை பாடங்கள் ராதிகாவுக்கு பல விஷயங்களை தெளிவுபடுத்தியதால் தன் மகள் ராயனை மிகச்சரியாக வழிநடத்தியதோடு அவருக்கு நல்லதொரு வாழ்க்கை துணையையும் அமைத்துக் கொடுத்து தற்போது தன் பேரன், பேத்திக்கு ஒரு நல்ல பாட்டியாகவும் இருந்து வருகிறார். இப்படியான தருணத்தில்தான் எப்போதாவது அரசியலில் பேச்சாளராக மட்டும் தன் ஆர்வத்தை காட்டிவந்த ராதிகா, சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்ததன் மூலம், அண்மையில் நடந்துமுடிந்த 18-வது பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் வேட்பாளராக இறக்கப்பட்டார். இருப்பினும் அத்தொகுதியில் அவர் தோல்வியை தழுவினார். வாழ்க்கையில் நாம் பெரும் தோல்விதான் ஒருநாள் வெற்றி என்ற இலக்கை அடைய உதவியாக இருக்கும். அந்த வகையில், பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் சாதித்தது போலவே அரசியலில் சாதிப்பார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. அவரது ரசிகர்களின் ஆசை நிறைவேற நாமும் வாழ்த்துவதோடு, பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.