“உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்..” இந்த பாடலின் முதல் வரியை 90-களில் காதலித்த ஒவ்வொரு இளைஞனும் பாடாமல் இருந்திருக்க முடியாது. சினிமா பாடலில் இடம்பெறும் அளவுக்கு சென்னையின் புகழ்வாய்ந்த திரையரங்குகளில் ஒன்றாக இருந்த இந்த ‘உதயம்’ திரையரங்கம், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் வருவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி சினிமா ரசிகர்களின் கோட்டையாக இருந்தது. அந்த அளவுக்கு சென்னை ரசிகர்களின் மனதை கவர்ந்து கடந்த 41 ஆண்டுகளாக செயல்பட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது. ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான முதல் நாள், முதல் காட்சி கொண்டாட்டங்கள் இங்குதான் திருவிழா போல் நடைபெறும். இதுதவிர படம் வெளியாகும் நாள் அன்று அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அளவுக்கு மறக்க முடியாத பல நினைவுகளை தாங்கி நின்றது. அப்பேற்பட்ட இந்த திரையரங்கம் தன் பயணத்தை இந்த 2024-ஆம் ஆண்டோடு முடிக்க உள்ளது. ஆம், “உதயம்” திரையரங்கை இதோ இடிக்க போறாங்க, அதோ இடிக்க போறாங்க என்று வெறும் பேச்சளவில் மட்டுமே சொல்லப்பட்டு வந்ததை, தற்போது நிஜமாக்கி உள்ளனர். அதன் பயணம் மற்றும் வரலாறு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
சென்னையில் மறக்கமுடியாத திரையரங்குகள்
சித்ரா மற்றும் சாந்தி தியேட்டர்
நம் சென்னைக்கு என்று பிரத்யேகமாக நிறைய அடையாளங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமான ஒன்று தமிழ் சினிமாவும், அவற்றை கண்டு ரசிக்க வைக்கும் திரையரங்குகளும்தான். அந்த வகையில், சென்னையின் புகழை பறைசாற்றும் வகையில் எத்தனையோ திரையரங்குகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை தலைநகரின் அடையாளமாக இருந்து கடைசியில் இருந்த தடம் கூட தெரியாமல் மாறிப்போய்விட்டன. அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் ‘நியூ எல்பின்ஸ்டோன்’, ‘பிளாசா’, ‘சித்திரா’, ‘வெல்லிங்டன்’, ‘safire’, ‘ப்ளூ டைமண்ட்’, ‘சாந்தி’, ‘தேவி’ ராயப்பேட்டை பிரதான சாலையில் ‘பைலட்’, ‘சஃபாரி’, சிந்தாதிரிப்பேட்டையில் ‘கேசினோ’, எல்.ஐ.சி கட்டிடத்திற்கு எதிரில் ‘தி நியூ குளோப்’, பிளாக்கர்ஸ் சாலையில் ‘கெயிட்டி’, அடையாறில் ‘ஈரோஸ்’, அரசு தொழில் பேட்டை எதிரில் ‘பாரகன் டாக்கீஸ்’, ஜார்ஜ் டவுன் அருகில் ‘பத்மநாபா டாக்கீஸ்’, ஆயிரம் விளக்கு பகுதியில் ‘அலங்கார்’, ‘ஆனந்த்’,‘சத்யம்’, தியாகராய நகரில் ‘கிருஷ்ணவேணி’, திருவான்மியூரில் ‘ஜெயந்தி’, கோடம்பாக்கத்தில் ‘லிபர்டி’, அமஞ்சிக்கரையில் ‘பழனியப்பா’, திருவல்லிக்கேணியில் ‘ஸ்டார்’, வடபழனியில் ‘கமலா’, அசோக் நகரில் ‘காசி’, ‘உதயம்’ என சென்னையில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் கமலா, தேவி, சத்யம், காசி போன்ற ஒரு சில திரையரங்குகளை தவிர பெரும்பாலானவற்றிற்கு மூடுவிழா நடத்தப்பட்டு அந்த திரையரங்குகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன.
நவீனத்தால் நசுக்கப்பட்ட வரலாறு
தியேட்டர் உட்புற இருக்கைகள்
மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது படம் பார்ப்பது. அதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது என்றால் அனைவருக்குமே அலாதியான ஒன்றுதான். படம் பார்க்கின்ற அந்த இரண்டு மணி நேரத்தில், நம் கவலைகள் அனைத்தையும் மறந்து வேறொரு உலகத்துக்கே சென்று வந்துவிடுவோம். குறிப்பாக சென்னையை பொறுத்தவரை 1950 காலகட்டம் துவங்கி இன்றுவரை திரையரங்குகள் என்பது மக்களின் பொழுதுபோக்கு தளம் என்பதை தாண்டி மற்றுமொரு வீடாகவே பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட திரையரங்குகள் நவீனத்தின் தாக்கத்தால் தொடர்ந்து மூடப்பட்டு வரும் நிகழ்வு சோகத்தின் உச்சமாகவே இருந்து வருகிறது. ஒருகாலத்தில் சாந்தி, உதயம், பிரார்த்தனா, மோட்சம், சரவணா, அகஸ்தியா, தேவி, ஆனந்த் உட்பட பல தியேட்டர்கள் பிரபலமாக இயங்கின. ஆனால், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் வருகையால் இவை அனைத்துமே கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு தள்ளப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. உதாரணமாக எழும்பூரில் இருந்த 'ஆல்பர்ட்' திரையரங்கம் சொத்து வரி செலுத்தாததால் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்டது.
'ஆல்பர்ட்' மற்றும் 'அகஸ்தியா' திரையரங்கம்
சென்னை மயிலாப்பூரில் 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமைவாய்ந்த திரையரங்கமான 'காமதேனு' பொருளாதார சிக்கல்களால் தொடர்ந்து செயல்பட முடியாமல் 2008ஆம் ஆண்டு மூடப்பட்டு, பின்னர் அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுவிட்டது. இதுதவிர சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த நடிகர் நாகேஷிற்கு சொந்தமான 'நாகேஷ்' திரையரங்கம், பொருளாதார நிலைகளால் தாக்கு பிடிக்க முடியாமல் கடந்த 2008 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு, தற்போது அந்த இடத்தினை வாங்கியவர்கள் விஜயா மகால் எனும் திருமண மண்டபத்தினை கட்டியுள்ளனர். மேலும் 1967 ஆம் ஆண்டு வட சென்னையின் அடையாளமாக, தண்டையார்பேட்டையில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த 'அகஸ்தியா' திரையரங்கமும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் பொருளாதார பிரச்சினைகளால் மூடப்பட்டது. ஏன் புரசைவாக்கத்தில் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமாக இருந்த அபிராமி திரையரங்கம் கால நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு அபிராமி மெகா மாலாக செயல்பட்டு வந்த நிலையில், ஏதோ ஒரு சூழ்நிலையில் தற்போது இயங்காமல் இருந்து வருகிறது. இப்படி எத்தனையோ திரையரங்குகள் தங்களது வரலாறை தொலைத்து வரைபடங்களாக இருந்து வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் சென்னை அசோக் நகரின் மைய புள்ளியாக கருதப்படும் 100 அடி சாலையில் பிரதானமாக இருந்த உதயம் திரையரங்கமும் இடம்பெற்றுள்ளது.
'உதயம்' மறக்க முடியுமா?
'உதயம்' திரையரங்கம்
1983 ஆம் ஆண்டு சென்னையின் முக்கிய இடமான அசோக் நகர் பகுதியில் 'உதயம்' திரையரங்கம் உருவானது. இந்த தியேட்டரில் அன்றைய ரஜினி, கமல் துவங்கி அடுத்த தலைமுறை நட்சத்திரங்களான விஜய், அஜித் தற்போதுள்ள தனுஷ், சிவகார்த்திகேயன் என எத்தனையோ நடிகர்களின் வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 62,400 சதுர அடி பரப்பளவு, அதாவது 1.3 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய 4 திரைகள் உள்ளன. பார்க்கிங் கட்டணமும் சரி, தின்பண்டங்களின் விலையும் சரி இங்கு குறைவாகவே எப்போதும் இருக்கும். இதனால் இது சாமானியர்களின் திரையரங்கு என்றே சொல்லலாம். தற்போது கால மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு திரையரங்குகள் வந்துள்ள நிலையிலும் இந்த தியேட்டருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. குறிப்பாக வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, கே.கே.நகர், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இந்த திரையரங்கம் பொழுதுபோக்கின் புகலிடமாக பார்க்கப்பட்டது. இப்படி பல பெருமைகள் நிறைந்த உதயம் திரையரங்கிற்கு கொரோனா காலத்திலிருந்தே மக்களின் வருகை வெகுவாக குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த பல மாதங்களாகவே மாலை மற்றும் இரவுக் காட்சிகள் அதிகம் நடக்காமல் கதவுகள் மூடப்பட்டிருப்பது வாடிக்கையாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. வெறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே ரசிகர்கள் சினிமா பார்க்க வருவார்களாம். மற்ற நாட்களில் கூட்டம் வராமல் தியேட்டர் தள்ளாடி வந்ததன் காரணமாகவே உதயம் திரையரங்க உரிமையாளர் அதிரடி முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
முடிவுக்கு வந்த சகாப்தம்
'உதயம்' திரையரங்கதின் முகப்பு தோற்றம்
சுமார் 41 ஆண்டுகளாக திரை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திவந்த உதயம் திரையரங்கம் 53 பங்குதாரர்களுக்கு சொந்தமானதாக இருந்தது என சொல்லப்படுகிறது. அவர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக திரையரங்கை விற்பனை செய்யலாம் என முடிவு செய்தனராம். அதன்படி 2009 ஆம் ஆண்டு முதல், இந்த தியேட்டர் மூன்று முறை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சூழலில்தான் 2012 ஆம் ஆண்டு உதயம் திரையரங்கை அந்த 53 பங்குதாரர்களில் ஒருவர் 80 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு விலைக்கு வாங்கியுள்ளார். அந்த காலகட்டத்தில்தான் உதயம் திரையரங்கம் கொஞ்சம் அப்டேட் செய்யப்பட்டது. இருந்தும் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள இந்த சுணக்கத்தின் காரணமாக தியேட்டரை விற்பனை செய்ய உரிமையாளர் முடிவு செய்துள்ளார். அதன்படி பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு இந்த இடம் விற்பனை செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1980 மற்றும் 90-களில் சென்னையில் நிறைய திரையரங்குகள் உருவாகி மக்களின் விருப்பமான இடமாக இருந்து வந்தது. அந்த திரையரங்குகள் அனைத்திலும் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என்று முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களும் திரையிடப்பட்டு திருவிழா போன்று கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இன்று 'உதயம்' போல பல திரையரங்குகள் மூடப்படுவதற்கு காரணமாக சொல்லப்படுவது மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் வருகை என்பதே.
பட வெளியீட்டு நாளில் 'உதயம்' திரையரங்கம் முன்பு குவியும் ரசிகர்களின் புகைப்பட காட்சி
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்கள் ஓடிடியிலேயே வெளிவந்துவிடுகின்றன. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திலேயே ஓடிடியில் ரிலீசாகி விடுகின்றன. ஆனால் 80, 90 காலகட்டங்களில் எல்லாம் அப்படியான வசதிகள் இல்லாததால் ஒரு வருடத்திற்கும் மேலாகவே திரையரங்குகளில் ஓடி வெள்ளிவிழா காணும். அந்த அளவுக்கு நம்மை மகிழ்ச்சிப்படுத்திய திரையரங்குகளுக்கு இன்று நேரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக குறைந்து விட்டது. இதற்கு காரணமாக இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒருபுறம் நமக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், இதுபோன்ற வருத்தமான நிகழ்வுகளையும் ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அவற்றையும் தாண்டி இன்றும் அடையாளம் மாறாமல் சென்னையின் பிரதானமாக இருக்கும் காசி, கமலா, தேவி, சத்யம் போன்ற திரையரங்குகள் தங்களை அப்டேட் செய்து வெற்றிகரமாக இயங்கிக் வருவது நமக்கு ஆறுதலை தந்தாலும், தொலைத்த அடையாளங்களை மீட்டெடுக்க இனி ஒரு யுகம் சென்றாலும் முடியாது.