2020ஆம் ஆண்டு எப்படி திரையுலகில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததோ அதேபோன்று 2024ஆம் ஆண்டு விவாகரத்து ஆண்டாக மாறியிருக்கிறது. ஏற்கனவே பிரிந்த வாழ்ந்துவந்த ஜோடிகள் விவாகரத்து பெறுவதும், பிரிவார்கள் என்று யாருமே எதிர்பார்க்காத ஜோடிகள் திடீரென பிரிவை அறிவித்ததும் ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்தது. இந்த நிலை கோலிவுட்டில் மட்டுமில்லை, பாலிவுட், ஹாலிவுட் என உலகெங்குமே இந்த ஆண்டு பிரிவுகளுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். ஹாலிவுட்டில் 2024ஆம் ஆண்டை பிரிவு ஆண்டு என்றே சொல்லிவருகின்றனர். பிரிவுகள் ஒருபுறம் ரசிகர்களை வருத்தமடைய செய்தாலும் சில காதல் ஜோடிகள் திருமண பந்தத்திலும் இணைந்திருக்கின்றனர். 2024ஆம் ஆண்டில் பிரிந்த ஜோடிகள், என்னென்ன காரணங்களை சொல்லியிருக்கிறார்கள் என்பது குறித்தும், காதல் திருமணத்தில் இணைந்த ஜோடிகளின் மகிழ்ச்சி பதிவுகள் குறித்தும் ஒரு ரீவைண்ட்!
2024இல் பிரிந்த ஜோடிகளும் காரணங்களும்
முறைப்படி விவாகரத்து பெற்ற தனுஷ் - ஐஸ்வர்யா
கடந்த 2022ஆம் ஆண்டே இருவரும் பிரியப்போவதாக அறிக்கை வெளியிட்டனர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி. அப்போதே இருவரின் வீட்டாரும் இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் எதுவும் எடுபடவில்லை. தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக, ப்ரேக் எடுத்திருந்த ஐஸ்வர்யாவும் மீண்டும் பட இயக்கத்தில் இறங்கினார். இப்படி இருவரும் தனித்தனியாக இருந்தாலும் இவர்களுடைய மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் அம்மா, அப்பா இருவருடனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, வெளிநாடுகளுக்கு பயணிப்பது என இருவரையும் சேர்த்துவைக்கும் முயற்சிகளில் இறங்கினர். விவாகரத்துக்கு தாக்கல் செய்திருந்த இந்த ஜோடி மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இருவரும் சேர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதேசமயம் ஐஸ்வர்யாவின் பதிவுகளுக்கு தனுஷ் லைக் போட இருவரும் சேர்வது உறுதி என்று ரசிகர்கள் பேசிவந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகி முறைப்படி விவாகரத்து பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டு முழுவதும் எந்த தம்பதி பிரிந்தாலும் அதற்கு தனுஷ்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் கிண்டலடிக்கும் அளவிற்கு தனுஷின் போக்கு இருந்ததுதான் ஐஸ்வர்யா அவரை பிரிந்துசென்றதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
மூன்று வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்ற தனுஷ் - ஐஸ்வர்யா
Divorce couple goals செய்யும் தம்பதி!
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ்குமாரும் பாடகி சைந்தவியும் பள்ளிகாலத்திலிருந்தே காதலித்துவந்த நிலையில், 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு அன்வி என்ற ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. கணவன் - மனைவி இருவருமே சேர்ந்து பாடினாலே சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும். அந்த அளவிற்கு இருவரும் குரலால் இணைந்த ஜோடியும்கூட. இப்படி 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் சேர்ந்திருந்த இந்த தம்பதிக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இந்த ஆண்டு மே மாதம் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தது இந்த ஜோடி. திருமண பந்தத்திலிருந்து பிரிந்தாலும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு திரையில் சேர்ந்து பாடிய இத்தம்பதி, டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்ற ஜி.வி பிரகாஷ்குமாரின் மியூசிக் கான்சர்ட்டிலும் சேர்ந்து பாடியது. குறிப்பாக, ‘பிறை தேடும் இரவிலே’ பாடலை இருவரும் சேர்ந்து பாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி மிகவும் வைரலானதுடன், Divorce couple goals செய்வதாக இருவரையும் பாராட்டினர். என்னதான் மனதளவில் பிரிந்தாலும் இசை இவர்களை மீண்டும் சேர்த்துவைக்கும் என நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர் இவர்களுடைய ரசிகர்கள்.
விவாகரத்துக்கு பிறகும் சேர்ந்து பணியாற்றும் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி
வேறு பெண்ணுடன் தொடர்பா?
நடிகர் ஜெயம் ரவி தனது கல்லூரி கால தோழியும் காதலியுமான ஆர்த்தியை பெற்றோர் சம்மதத்துடன் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆர்த்தியின் அம்மாவும் திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் எப்போதும் திரையுலக தோழிகளுடன் ஆர்த்தி வலம்வருவது வழக்கம். மேலும் எந்த திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் நேர்க்காணல்கள் என்றாலும் இந்த ஜோடி ஒன்றாகவே வருவதுடன், மேடையிலும் தங்களது காதலை வெளிப்படுத்த தவறமாட்டார்கள். இப்படி இணக்கமாக இருந்த ஜோடி திடீரென கடந்த செப்டம்பர் மாதம் தங்களது பிரிவை அறிவித்தது. ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக முதலில் அறிக்கை வெளியிட, தனக்கு தெரியாமலேயே தனது கணவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக மற்றொரு அறிக்கையை வெளியிட்டார் ஆர்த்தி. இப்படி இவர்களுடைய விவாகரத்து விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக, கெனிசா ஃப்ரான்சிஸ் என்ற பாடகியுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய மனைவி குற்றச்சாட்டை முன்வைக்க அதற்கு கெனிசா, ஜெயம் ரவி இருவருமே மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தனர். அதன்பிறகுதான், ஆர்த்தியின் அம்மா சுஜாதா ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவருடைய படங்களில் ஜெயம் ரவியை தொடர்ந்து நடிக்கவைத்து லாபம் பார்த்த கையோடு படங்கள் அனைத்தும் ஃப்ளாப் என்று கூறி ஜெயம் ரவியை ஏமாற்றியதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு ஆர்த்தியும் துணைபோனதால் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தனது விருப்பமில்லாமல் ஜெயம் ரவி பிரிவை அறிவித்ததாக கூறிய ஆர்த்தி
முடிவுக்கு வந்த 30 ஆண்டு திருமண வாழ்க்கை
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், குடும்பத்தின்மீது பற்றுக்கொண்டவர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. இந்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி தனது கணவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார் சாயிரா பானு. அதிகப்படியான காதலும் தீர்க்கமுடியாத இடைவெளியை உருவாக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அவர். அதனைத் தொடர்ந்து விரைவில் 30 வருடங்களை எட்டுவோம் என்று தாங்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாக இருப்பதாகவும், உடைந்த இதயங்களின் கனத்தால் சிம்மாசனம்கூட நடுங்கக்கூடும் என்று அறிக்கை வெளியிட்டார் ரஹ்மான். இந்த பிரிவை யாருமே எதிர்பார்த்திராததால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான அவருடைய ரசிகர்கள் இந்த பிரிவுக்கு வருத்தம் தெரிவித்தனர். இதனிடையே ரஹ்மானின் குழுவில் இணைந்து பணியாற்றி வந்த மோகினி டே என்ற பேஸ் கிட்டாரிஸ்ட்டும் தனது கணவருடனான விவாகரத்தை அறிவிக்க, இவர்கள் இருவரையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஆனால் தனது கணவர் ஒரு சிறந்த மனிதர் என்றும், தனது உடல்நல குறைபாடு காரணமாகத்தான் அவரை பிரிவதாகவும் ஆடியோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாயிரா பானு. இவர்களுடைய 3 பிள்ளைகளும் தங்களுடைய தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இருவரும் சேர வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார் இந்த வழக்கை நடத்தும் வழக்கறிஞர் வந்தனா ஷா. அவர் கூறியதைப்போல இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர் ரஹ்மானின் ரசிகர்கள்.
ஏ.ஆர் ரஹ்மானை பிரிந்த அவருடைய மனைவி சாயிரா பானு
இப்படி ஒரு பிரிவு செய்தி அடங்குவதற்குள் அடுத்த பிரிவு செய்தி ஆண்டு முழுக்க வெளியாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துவந்த நிலையில், இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது விவாகரத்து செய்திகளை கேட்கக்கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனாவுடனான 17 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதாக அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிமூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும் நடிகருமான மணிகண்டனும் அவருடைய மனைவியான சீரியல் நடிகை சோபியாவை பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பிரபல ஜோடியாக வலம்வந்த அர்ஜுன் கபூர் - மலைக்கா அரோரா, நடிகை நடாசா ஸ்டான்கோவிச் - கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா போன்றோரும், ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலி, ஜோ ஜோனாஸ், டெய்லர் ரஸ்ஸல் உள்ளிட்ட பலர் தங்களுடைய இணையை பிரிந்துவிட்டனர்.
காதலால் இணைந்த உள்ளங்கள்
2024ஆம் ஆண்டில் பிரிவின் சோகம் ஒருபுறமிருக்க, பல காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணைந்திருக்கின்றன. நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, தம்பி ராமையா மகன் உமாபதியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, மும்பையை சேர்ந்த பிசினஸ்மேனான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை 10 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்துவந்த நிலையில், இந்த ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்துமுடிந்தது.
இந்த ஆண்டு தமிழ் திரையுலகில் நடந்த திருமணங்கள்
சமந்தாவை பிரிந்தபிறகு, ‘பொன்னியின் செல்வன்’ புகழ் சோபிதா துலிபாலாவை காதலித்து கரம்பிடித்திருக்கிறார் நாக சைதன்யா. இந்த திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், தங்களுடைய தெலுங்கு பாரம்பரிய முறைப்படி, திருமணத்தை வெகு பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது இந்த ஜோடி. நடிகர் காளிதாஸ் ஜெயராம், சென்னையில் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலித்துவந்த நிலையில், கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி குருவாயூரில் வைத்து வெகு பிரம்மாண்டமாக நடந்தது இவர்களுடைய திருமணம். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் நடந்தது நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம். இவர் தனது 15 ஆண்டுகால ரகசிய காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்திருக்கிறார். கொச்சினைச் சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி மற்றும் கீர்த்தி தம்பதியை திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.