பண்டிகைகள் என்றாலே புது படங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பொங்கல் பண்டிகை என்றால் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வந்து நேருக்கு நேர் மோதிக்கொள்ளும். அப்படி கடந்த 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் - அஜித் ஆகிய இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளிவந்து வெற்றி வாகை சூடின. அந்த வகையில், இந்த ஆண்டான 2024 பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ் சினிமாவில் பெரிய டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவரவில்லை என்றாலும், அவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் ஒரேநாளில் வெளிவந்து பொங்கல் ரேஸில் மோதியுள்ளன. இவற்றில் எந்த ஹீரோக்களின் படங்கள் மக்கள் மனதில் சிறப்பானதொரு இடத்தை பிடித்துள்ளன. பாக்ஸ் ஆபிஸில் முன்னிலையில் உள்ள படம் எது? இப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்ன மாதிரியான விமர்சனங்கள் கிடைத்துள்ளன போன்ற தகவல்களை இந்த பதிவில் காண்போம்...
அயலான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'அயலான்'. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 அன்று வெளியான இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது 2வது படமாக இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இஷா கோபிகர், சரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள், தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாகவும், சிஜி பணிகள் முடிய காலதாமதம் ஏற்பட்டதாலும் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் வெளியீடாக இப்படம் வெளிவந்துள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் தரம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருப்பதாக பாராட்டப்படுவதோடு, படத்தில் இடம் பெற்றுள்ள VFX காட்சிகளும் குட்டீஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட போஸ்டர்
சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை என்று பார்த்தால் கிராமத்தில் வாழ்ந்து வரும் சிவகார்திகேயன் ஒரு புழு, பூச்சிக்கு கூட துன்பம் விளைவிக்க கூடாது என்ற மனநிலையில் இருக்கிறார். இதற்காக தனது வயலில் கூட எந்த ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் செய்து வரும் அவர், இயற்கையை மிகவும் அன்போடு நேசிக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் இதே மனநிலை கொண்ட வேற்று கிரக ஏலியன் ஒன்று சிவகார்த்திகேயனை சந்திக்க, அந்த சமயத்தில் இந்த உலகத்தை அழிக்க ஒரு கும்பலும் கிளம்ப, அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் 'அயலான்' திரைப்படத்தின் கதை. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஏலியனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு ஒரு டூயல் ஹீரோ கதை போல படம் நகர்வதோடு, படத்தில் இடம்பெற்றுள்ள VFX காட்சிகளும் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஹாலிவுட்டுக்கு நிகராக என அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையை ஓரளவு காப்பாற்றியுள்ள இப்படம் குழந்தைகளோடு திரையரங்குகளுக்கு வரும் ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் திரைக்கதையில் பழைய விஷயங்கள் இல்லாமல் புதுமை செய்திருந்தால் படம் இன்னுமே சூப்பராக இருந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கேப்டன் மில்லர்
தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் 'கேப்டன் மில்லர்'. பொங்கலை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படம், ஆக்ஷன் பிரியர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் தனுஷுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட ரிலீசிற்கு முன்பே ஷூட்டிங் சமயத்தில் நடந்த வெடிகுண்டு ரகளைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்திருந்த நிலையில், 'கில்லர் கில்லர்', 'உன் ஒளியிலே' மற்றும் 'கோரனாரு' ஆகிய மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்று வரும் இப்படத்தின் கதை என்று பார்த்தால் சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 1930 காலகட்டங்களில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் தனுஷின் தோற்றம்
வெள்ளைகார்கள் அபகரித்து செல்லும் ஒரு சிலையை மீட்பதே படத்தின் முக்கிய புள்ளியாக இருந்தாலும், ஜமீன்தார்கள் செய்யும் அடிமைத்தனம், கோவிலுக்குள் அனுமதிக்காமல் அவர்கள் செய்த அட்டூழியங்கள் போன்ற விஷயங்களையும் அப்பட்டமாக காட்டி, வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறியும் சில சதி கும்பலால் நாம் இன்னமும் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்பதை மிக அழுத்தமாக இப்படம் பதிவு செய்துள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள், கலை நுணுக்கம் என அனைத்து டெக்கனிகள் விஷயங்களிலும் பிரம்மாண்டம் காட்டியிருந்தாலும், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் வழக்கமான அருண் மாதேஸ்வரன் படத்தில் வரும் வன்முறை காட்சிகளும் சற்று தூக்கலாக இருப்பது அனைத்து தரப்பினரையும் திரையரங்குகளுக்கு அழைத்து வர முடியாமல் தடுக்கிறது. இருப்பினும் திரைப்பட குழுவினரின் கடின உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுவது பாராட்டும் படியாக உள்ளது.
மெரி கிறிஸ்துமஸ்
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி தற்போது பொங்கலுக்கு ரிலீசாகி உள்ள படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ என்ற ஒற்றை படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற ஸ்ரீராம் ராகவன், இந்த முறை விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஜோடியுடன் கைகோர்த்து இந்த 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தை எடுத்துள்ளார். இவர்களுடன் ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடிக்க மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்து இப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். ஆல்பிரட் ஹிட்ச்காக் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை என்று பார்த்தால், கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்தைய நாள் துபாயில் இருந்து மும்பைக்கு வரும் விஜய் சேதுபதி ஹோட்டல் ஒன்றில் தனது வாய் பேச முடியாத மகளுடன் இருக்கும் கத்ரீனா கைஃப்பை சந்திக்கிறார். கணவருடனான பிரச்சினையில் இருந்து தப்பிக்க துணை தேடும் கத்ரீனா உடன் நேரத்தை செலவிட நினைக்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' போஸ்டர்
இதனிடையே மகளை வீட்டில் தூங்க வைத்துவிட்டு வெளியே மகிழ்ச்சியாக இருவரும் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் வீட்டில் கத்ரீனாவின் கணவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதற்கு பிறகு நடந்த ட்விஸ்ட்டுகள் நிறைந்த அதகளம்தான் படத்தின் மீதிக்கதை. படத்தில் ஸ்ரீராம் ராகவனின் தனித்துவமான நகைச்சுவை உணர்வு, த்ரில்லர் இயக்கம் சிறப்பாக இருப்பதோடு, எடிட்டிங், கலை, மேக்கிங் என அனைத்து தளங்களும் மிக நன்றாகவே கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதி தனக்கே உரிய பாணியில் நடித்து இந்தி, தமிழ் என இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள அதே வேளையில் கத்ரீனா கைஃப்பும் அவருக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார். இருப்பினும் 'அந்தாதுன்' அளவுக்கு சிறப்பான திரைக்கதை அமைக்கப்படாதது மைனஸ் ஆகிறது. மேலும் படமும் பல இடங்களில் ஸ்லோவாக செல்வது ஆடியன்ஸை சோர்வடைய வைக்கிறது. அதே போல் கிளைமேக்ஸிற்கு கொடுத்த முக்கியத்துவம் படம் முழுவதுமே கொடுத்திருந்தால் 'மெரி கிறிஸ்துமஸ்' இன்னமுமே கவர்ந்திருக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
மிஷன் சாப்டர்-1
சமீப காலமாகவே நடிகர் அருண் விஜய் தன்னை நிரூபிக்கும் வகையிலான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்துள்ள படங்களில், அதிக எதிர்பார்ப்போ, விளம்பரமோ இல்லாமல் ரிலீஸாகியுள்ள படம்தான் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர்-1 திரைப்படம். ஏ.எல்.விஜய் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் கதையின் நாயகனான அருண் விஜய்யுடன் இணைந்து, எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிக்க இவர்களுடன் ‘லியோ’ பட புகழ் குழந்தை நட்சத்திரமான இயல் நடித்துள்ளார்.படத்தின் கதை என்று பார்த்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினை தடுக்க முயற்சிக்கிறார்கள். இது இந்திய அரசுக்கு தெரிந்துவிட்டது என்றவுடன், அங்கிருந்து வெளியேறி விடுகின்றனர். பின்னர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது தீவிரவாத நண்பர்களை மீட்க அந்த நாட்டிற்கு செல்கின்றனர். தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள லண்டன் சிறையின் பாதுகாப்பு அதிகாரியாக எமி ஜாக்சன் இருக்கிறார். இந்த நேரம் நடிகர் அருண் விஜய், தனது குழந்தையான இயலுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, லண்டன் சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக திருடர்களின் வலையில் சிக்கி, காவல்துறையினரிடம் மாட்டி சிறையில் அடைக்கப்படுகிறார். அப்போது தங்கள் கூட்டத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக, சிறைக்கு வரும் தீவிரவாதிகள் சிறைச்சாலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்க அதை எப்படி அருண் விஜய் தடுக்கிறார் என்பதுதான் கதை.
அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்-1' பட போஸ்டர்
ஆக்ஷன் காட்சிகளில் எப்போதுமே தூள் கிளப்பும் அருண் விஜய் இப்படத்திலும், சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். நாயகியான எமி ஜாக்சனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். அருண் விஜய்யின் மகளாக வரும் இயல் பேசும் வசனங்கள் கொஞ்சம் மனதை உருக வைக்கும் படியாக உள்ளது. இருந்தும் சண்டை காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அங்கங்கு கதைக்கு ஒட்டாமலும் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. எப்போதுமே தான் நடிக்கும் படங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் அருண் விஜய் இன்னும் நிதானமாக யோசித்து கதை தேர்வில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும். பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து சிறப்பித்துள்ள இப்படத்தில் புதுமைகள் இல்லாவிட்டாலும், சண்டைக் காட்சிகளால் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.