இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

1960-களில் தமிழ் திரையுலகம் கொண்டாடி தீர்த்த ஒரு நடிகை என்றால் அது சரோஜாதேவியாக மட்டும்தான் இருக்க முடியும். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு பரதநாட்டியமோ, நாடகத்தில் நடித்த அனுபவமோ கிடையாது. இருப்பினும் தன் நடிப்பாலும், உடல் அசைவுகளாலும், நளினத்தாலும் கவர்ச்சியே காட்டாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய திரை உலகையே கட்டிப்போட்டு திரைப்படத்துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக பயணித்தவர். நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம், நடிப்பு போன்ற எல்லாத் துறைகளிலும் இவர் அறிமுகப்படுத்திய புதுமைகள் அவரது தனித்துவத்தைப் புதிதாய் மின்னச் செய்தன. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட சரோஜாதேவி ஜனவரி 7 தனது 87-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்தப் பொன்னான நாளில், அவரது திரைப்பயணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ஆரம்பகால வாழ்க்கை


சிறுமியாக நடிகை சரோஜாதேவி

அன்றைய காலகட்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த சரோஜா தேவி, 1938-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பெங்களூரில் பிறந்தார். காவல்துறை அதிகாரியான பைரப்பா மற்றும் ருத்ரம்மா தம்பதியினரின் நான்காவது மகளாகப் பிறந்த இவர், ஐந்து பெண் குழந்தைகளில் ஒருவராக இருந்தார். குடும்பத்தினர் ஆண் குழந்தையை எதிர்பார்த்த நிலையில், சரோஜாவியின் பிறப்பால் அவர்கள் மன வருத்தத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக, அவரது தாத்தாவுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஆனால், அவரது தாயின் அளவு கடந்த அன்பு சரோஜாவை உற்சாகமாக வளரச் செய்தது. பள்ளிக் காலத்திலேயே தனது திறமைகளை வெளிப்படுத்திய சரோஜா தேவி, பெங்களூரிலுள்ள புனித தெரசா பள்ளியில் கல்வி பயின்ற போது, ஒரு இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் கன்னட திரையுலகின் புகழ்பெற்ற ஹொன்னப்ப பாகவதரின் கவனத்தை பெற்றார். அவரது அழகும் திறமையும் பாகவதருக்கு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதனால், சரோஜாவை திரைப்பட நட்சத்திரமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை பாகவதர் மேற்கொண்டார்.ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சரோஜா, முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், இந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சிறு வயதில் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட உணர்வுடன் வளர்ந்த சரோஜா, பின்னாளில் தனது தாத்தாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். அவருடைய மேன்மையான சாதனைகளும் புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்வதுமான வெற்றிகளுமே இந்த மன மாற்றத்திற்கான காரணம் என்று கூட சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்


'அன்பே வா' திரைப்படத்தில் சரோஜா தேவி

ஹொன்னப்ப பாகவதரின் வழிகாட்டுதலில் கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சரோஜா தேவி, தமிழ் சினிமாவில் கால் பதிக்க சிவாஜி கணேசன் நடித்த 'தங்கமலை ரகசியம்' திரைப்படம் காரணமாக அமைந்தது. பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் உதவியுடன் இப்படத்தில் நடன மங்கையாக தோன்றி, 'யவ்வனமே என் யவ்வனமே...' என்ற பாடலில் நடனமாடி அசத்தியிருந்தார். இப்படத்தில் சிவாஜி, ப. நீலகண்டன், பந்தலு உள்ளிட்ட பலர் சரோஜா தேவியின் அழகைப் பார்த்து பத்மினி, வைஜெயந்தி மாலா போல் இருப்பதாக வியந்துள்ளனர். குறிப்பாக இயக்குநர் ப. நீலகண்டன், சரோஜா தேவிக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் பெரிய வருங்காலம் இருக்கும் என்று உறுதியாக நம்பியுள்ளார். இதையடுத்து ஜெமினி கணேசன் நடித்த 'பூலோக ரம்பை' படத்தில் 'தேனைப் போலே தேடி வா...' என்ற பாடலில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுக்கு ஜோடியாக நடனமாடியிருந்தார். இந்தப் படத்தில் சரோஜா தேவியின் பெயர் தனியாக டைட்டில் கார்டில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக வலம் வந்த சரோஜா தேவிக்கு, தமிழில் தொடக்கத்தில் சிறு வேடங்களே கிடைத்தன. இந்த வேளையில் , எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த 'நாடோடி மன்னன்' திரைப்படம்தான் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த வாய்ப்பு அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை என்றாலும், தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து இன்றும் நம் நினைவில் நிற்கும் ஒரு நடிகையாக திகழ்கிறார் சரோஜா தேவி.

வாழ்வை மாற்றிய எம்.ஜி.ஆர்


'அரச கட்டளை' திரைப்படத்தில் மக்கள் திலகத்துடன் ஒரு காட்சியில் சரோஜா தேவி

நாடோடி மன்னன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குநர் கே.சுப்பிரமணியம் தயாரித்த 'கச்ச தேவயானி' என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சரோஜா தேவி. அப்போது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர், அங்கே நடித்து வந்த புதுமுக நடிகையைக் கண்டு, "யார் அந்த பெண்?" என்று இயக்குநர் கே. சுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார். "அவர் பெயர் சரோஜா தேவி, பெங்களூரைச் சேர்ந்தவர்," என்ற பதில் அப்போது வந்துள்ளது. அது முடிந்து எம்.ஜி.ஆர் அமைதியாக அங்கிருந்து சென்றாலும், அவரது மனதில் ஒரு திட்டம் பிறந்தது. அவர் நடிக்க இருந்த ‘திருடாதே’ படத்திற்கு சரோஜா தேவியை கதாநாயகியாக தேர்வு செய்ய விரும்பினார். இதனால் சரோஜா தேவியை அழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டது. பிறகு படக்குழுவினர் புதுமுகத்தை நாயகியாக கொண்டுவர குழப்பம் காட்டினாலும், எம்.ஜி.ஆர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஒருகட்டத்தில் ‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால், எம்.ஜி.ஆர் தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் சரோஜா தேவியை இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு செய்தார். ஆரம்பத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு இணையாக சரோஜா தேவியின் நடிப்பும் இருந்ததால் பலராலும் அவர் பாராட்டப்பட்டார். இதற்கு பிறகு இந்த கூட்டணி நாடோடி மன்னன் தொடங்கி தொடர்ந்து 26 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழ் சினிமாவின் கலைப் பொக்கிஷமாக மாறிபோனார்கள்.

சிவாஜி, ஜெமினிக்கு ஜோடி


சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக திரையில் ஜொலித்த சரோஜா தேவி

‘நாடோடி மன்னன்’, ‘திருடாதே’ படங்களின் வெற்றியை தொடர்ந்து 1959-ல் வெளிவந்த 'கல்யாண பரிசு' படத்தில் விஜயகுமாரிக்கு தங்கையாக நடித்தார். ஆனால், அப்போது தமிழ் மொழி அவருக்கு புதிதாக இருந்ததால், பல டேக் வாங்கி இயக்குநர் ஸ்ரீதரை கஷ்டப்படுத்தினாராம். இருந்தாலும், அப்படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து, உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார் சரோஜா தேவி. பிறகு அதே ஆண்டில் வெளிவந்த 'பாகப்பிரிவினை' படத்தில் சிவாஜி கணேசனின் வீட்டில் வேலை செய்பவராக வந்து அவரை மணம் முடிப்பவராக நடித்தார். கருப்பு வெள்ளையில் குடும்ப பாசத்தை எளிமையாக வெளிப்படுத்திய இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. இப்படி அடுத்தடுத்து வெளிவந்த ‘நாடோடி மன்னன்', 'கல்யாணப்பரிசு' மற்றும் 'பாகப்பிரிவினை' ஆகிய மூன்று படங்களும் வெள்ளி விழா கொண்டாடியதால், சரோஜா தேவி மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். ஒரே நாளில் 30 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களும் அடங்கும் என்பதால் தினமும் 3 ஷிஃப்டாக ஓய்வின்றி நடிக்க ஆரம்பித்தார். அதில் குறிப்பாக சிவாஜி கணேசன் அவர்களுடன் ‘இரும்புத் திரை’ , ‘விடி வெள்ளி’, ‘பாலும் பழமும்’, ’வளர் பிறை’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘ஆலயமணி’, ‘இருவர் உள்ளம்’, ‘புதிய பறவை’ என பல படங்களில் நடித்தவர், ஜெமினிகணேசனுடனும் ‘ஆடிப்பெருக்கு’, ‘பெண் என்றால் பெண்’, ‘பணமா பாசமா’ என பல வெற்றி படங்களில் நடித்தார்.

மறக்க முடியாத படங்கள்


"ராஜாவின் பார்வை" பாடல் காட்சியில் எம்ஜிஆருடன்...

என்னதான் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை சரோஜா தேவி கொடுத்திருந்தாலும், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி ஜோடி பொருத்தம்தான் அந்த காலத்தில் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜா தேவி இணைந்து நடித்த 'அன்பே வா', 'எங்க வீட்டு பிள்ளை', 'பறக்கும் பாவை', 'தர்மம் தலைகாக்கும்' போன்ற பல படங்கள் இன்றும் நினைவில் நிற்க கூடியவை. குறிப்பாக 'அன்பே வா' படத்தில் இவர்கள் இருவரும் பகிர்ந்த காதல் கதை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாடல் இன்றும் பலரின் இதயங்களில் பதிந்துள்ளது. அதேபோல் சிவாஜி கணேசனுடன் இணைந்து 'புதிய பறவை' போன்ற படங்களில் நடித்த சரோஜா தேவி, ஒரு வித்தியாசமான தோற்றத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார். கொலை குற்றவாளியை தேடும் அதிகாரியாகவும், காதலில் விழும் ஒரு சராசரி பெண்ணாகவும் அவர் இப்படத்தில் பொருந்தி கச்சிதமாக நடித்திருப்பார். அதிலும் 'உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்' என்ற பாடலில் இவரது நடன அசைவுகள் மற்றும் சிவாஜியின் முகபாவங்களை இன்றும் ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. இது தவிர சரோஜா தேவி நடித்த பல படங்களில் இடம்பெற்ற 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்', 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா', 'தொட்டால் பூ மலரும்' போன்ற பாடல்கள் இன்றும் பலரால் விரும்பி கேட்கப்படுகின்றன.

கணவர் காட்டிய அன்பு


கணவர் ஸ்ரீஹர்ஷாவுடன் சரோஜா தேவி

தமிழக ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட கன்னடப் பைங்கிளி சரோஜா தேவி, தன் நடிப்பின் அழகால் அனைவரையும் ஈர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவரது திருமணம் குறித்த செய்தி வெளியானது. 1967-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த பொறியாளர் ஸ்ரீஹர்ஷாவுடன் அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, சரோஜா தேவியின் தாய் ருத்ரம்மா, தனது மகள் குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். முதலில் அவருக்கு எதிராக இருந்தாலும், தாயின் விருப்பத்தை ஏற்று, நடிப்பை நிறுத்த சரோஜா தேவி முடிவு செய்தார். ஆனால், அவரது கணவர் ஸ்ரீஹர்ஷா, அவரை நடிப்பைத் தொடர ஊக்குவித்தார். இதனால், சரோஜா தேவி திரையுலகிற்குத் திரும்பி பல வெற்றி படங்களில் நடித்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மகள் இந்திரா காந்தி மற்றும் மகன் கெளதம் ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் நினைவாக பெயரிடப்பட்டது). ஆனால், 1986-ஆம் ஆண்டு, திடீரென ஏற்பட்ட இதய நோயால் ஸ்ரீஹர்ஷா உயிரிழந்தார். இந்த துயரம் சரோஜா தேவியை மிகவும் பாதித்தது. கணவரின் இழப்பால் மனவேதனை காரணமாக கண்ணீர் சிந்தி, தனது பார்வையை இழக்க நேரிட்டது. வெளிநாட்டு சிகிச்சையின் மூலம் பார்வை மீண்டும் கிடைத்தாலும், மனதிலுள்ள காயம் ஆறவே இல்லை. கணவரின் இழப்பில் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருந்த சரோஜா தேவியை மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குள் இழுக்க பலரும் முயன்றனர். பின் தன் பிள்ளைகள் மீது கொண்ட அன்பினால் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ வாழ்க்கைக்கு திரும்பினார்.

இன்றும் நம்பிக்கை நாயகி


பேரக்குழந்தை மற்றும் மகிழ்ச்சியான தருணத்தில் நடிகை சரோஜா தேவி

தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வாழ்ந்து வரும் சரோஜா தேவி, 1990-களுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்களின் படங்களில் மட்டும் நடித்துள்ளார். குறிப்பாக, 1997-ல் வெளிவந்த 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தது இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரைப்படங்களில் நடிப்பதுடன் மட்டுமல்லாமல், தனது கணவரிடம் இருந்து வணிகத்தின் நுட்பங்களை கற்றுக்கொண்ட சரோஜா தேவி, தொழில் துறையிலும் தன்னை திறம்பட நிரூபித்தார். இன்று தனது குழந்தைகளுடன் இணைந்து பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இருந்தும் சரோஜா தேவிக்கு தமிழ் சினிமா மீதான அன்பு மட்டும் குறையவே இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சூர்யா நடித்த 'ஆதவன்' திரைப்படம்தான் இவர் கடைசியாக நடித்த தமிழ் படம். இதற்கு பிறகும் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், தனது குடும்பத்தின் மீது கொண்ட அன்பின் காரணமாக அனைத்தையும் தவிர்த்து விட்டு, தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பெங்களூரில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சிறந்த மகளாக, அழகான நடிகையாக, அன்பான மனைவியாக, அர்ப்பணிப்புள்ள தாயாக என பல பரிமாணங்களில் திகழும் சரோஜா தேவி, திரைப்படங்களின் மகாராணி மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ராணியாகவும் திகழ்கிறார். அந்த ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் பெருமை கொள்கிறது நம் ராணி குழுமம்.

Updated On 7 Jan 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story