இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காது கேட்காமல், வாயும் பேசமுடியாமல் சைகை மொழியால் மட்டுமே உள்வாங்கி 15 வருடமாக சினிமாவில் நடித்து மக்களுக்கு எப்போதும் பிடித்த நாயகியாக வெற்றிகரமாக பயணித்து வருபவர்தான் நடிகை அபிநயா. இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியின் கண்டுபிடிப்பு என்ற அறிமுகத்தோடு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர், எந்த இடத்திலும் தன்னிடம் இருக்கும் குறைகள் தெரியாதபடி ஒரு தேர்ந்த நடிகையே தோற்றுப்போகும் அளவுக்கு வெகு எதார்த்தமாக நடிக்கக் கூடியவர். திரைத்துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளை கடந்தும் இதுவரை எந்தவித கிசுகிசுக்களிலும் சிக்காமல், மிகச்சிறப்பான வழியில் பயணித்துக்கொண்டிருந்த அபிநயா, அண்மையில் சமூக ஊடகம் ஒன்றிற்கு அளித்திருந்த நேர்காணல் ஒன்றில், தன் காதல் வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அந்த நிகழ்வு தற்போது பூதாகரமாகி நடிகர் விஷாலுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கும் அளவுக்கு பேசுபொருளாக மாறிய நிலையில், விஷாலுடன், அபிநயா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்ற செய்தி எப்படி பரவியது? அபிநயா உண்மையிலேயே யாரை காதலிக்கிறார்? எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? திரைத்துறையில் அவரது தற்போதைய பயணம் எப்படி சென்று கொண்டிருக்கிறது? இவை குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை


அழகான புன்னகையுடன் நடிகை அபிநயா

அழகும் அபிநயமும் ஒருசேர திகழ்ந்து, பலரை வியப்பில் ஆழ்த்தி வரும் நடிகை அபிநயா, 1991 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரியில் ஆனந்த் மற்றும் ஹேமலதா தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. சிறு வயதிலிருந்தே அபிநயாவுக்கு காது கேளாதது மற்றும் பேசுவதில் சிக்கல் இருந்து வந்துள்ளது. இருப்பினும் தன்னிடம் இருக்கும் ஒரு குறையை அவர் ஒருநாளும் பெரிதாக நினைத்து கவலைப்பட்டது இல்லை. காரணம் அவரது அம்மா. அவரின் நிழல் குரலாகவே இருந்து செயல்பட்டுள்ளார். அபிநயாவின் இத்தனை வளர்ச்சிக்கும் மிக முக்கிய நம்பிக்கை தூணும் அவர்தான். தந்தை ஆனந்த் சினிமா துறையில் பயணித்து வந்ததால் அவரின் படப்பிடிப்பை காண அபிநயாவும், அவரின் சகோதரரும் நேரில் செல்வார்களாம். அப்படி செல்லும் பொழுது அபிநயாவின் சகோதரருக்கு படப்பிடிப்பை காணவே பிடிக்காதாம். ஆனால், அபிநயாவுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு நன்கு கவனிப்பாராம். இப்படி தனது எட்டு வயதிலேயே சினிமா குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தவர் அதற்கு தகுந்தாற்போல் நடனம் போன்ற கலைகளிலும் கவனம் செலுத்தி கற்று வந்துள்ளார். இப்படி படிப்பை தொடர்ந்து கொண்டே சினிமாவுக்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்திவந்த போதுதான் மாடலிங் துறையிலும் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளார்.


மாடலிங் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய அபிநயா

அப்படி அபிநயா மாடலிங் துறையில் இருந்தபோது அவரே எதிர்பார்க்காத நேரத்தில் வந்து கிடைத்த வாய்ப்புதான் சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள்’ திரைப்படம். தனது நாடோடிகள் திரைப்படத்திற்காக சமுத்திரக்கனி சரியான நடிகையை தேடிக் கொண்டிருந்த போது அவரது பார்வையில் முதலில் பட்டது அபிநயாவின் புகைப்படம்தானாம். கேரளாவில் ஒரு மாடல் கோ-ஆர்டிநேட்டரிடம் இருந்து பெறப்பட்ட அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சென்னை வந்தவர், ஏற்கனவே வேறொரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததால் அவரை அழைத்து துவக்கத்தில் நடிக்க வைத்துள்ளார். போட்டோஷூட் வரை இருந்த அந்த நடிகை சமுத்திரக்கனிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறிவிட்டு படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம். அப்போது சமுத்திரக்கனியின் யோசனையில் வந்து உதித்தவர்தான் அபிநயா. பேசமுடியாத, காது கேட்காத ஒரு பெண்ணை என் மொழியில் நான் இயக்கி காட்டுகிறேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு அதில் வெற்றியும் கண்ட சமுத்திரக்கனி தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான திறமை வாய்ந்த நடிகையை தந்து இருக்கிறார். அபிநயாவின் அந்த திறமைதான் இன்றும் அவரை வெற்றிகரமாக வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

'நாடோடிகள்' நாயகி


நாடோடிகள் பவித்ராவாக...

2009 ஆம் ஆண்டு, சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அபிநயா. இப்படத்தில், சசிகுமாரின் தங்கையாகவும், விஜய் வசந்தின் காதலியாகவும் நடித்த அபிநயா, தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். பேச முடியாத மற்றும் கேட்க முடியாத நிலையிலும், சைகை மொழியின் மூலம் தனது கதாபாத்திரங்களை உணர்ந்து, தனது நடிப்புத் திறனை முதல் படத்திலேயே வெளிப்படுத்திய இவர், தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். நாடோடிகள் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த அபிநயா, தமிழிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதன்படி 2010ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்‘ திரைப்படத்தில் சோழ இளவரசியாக நடித்து பாராட்டைப் பெற்றார். அதே வருடம், சசிகுமார் இயக்கிய ‘ஈசன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு 2011ஆம் ஆண்டு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘7ஆம் அறிவு’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவர், 2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கிய ‘வீரம்’ திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் தொடர்ச்சியாக, ஹரி இயக்கிய ‘பூஜை’ (2014), மோகன் ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’ (2015) ஆகிய திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.


குற்றம் 23-ல் அமித் பார்கவுடன் அபிநயா

தமிழைத் தவிர, ஹிந்தித் திரையுலகிலும் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து ஆர். பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ (2015) திரைப்படத்தில் தனுஷ், அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து நடித்த அபிநயா, இதன் மூலம் தேசிய அளவிலும் கவனம் பெற்றார். அதேபோல், 2017 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கிய ‘குற்றம் 23’ படத்தில் அருண் விஜய்யின் அண்ணியாக ‘ஸ்ரீ அபிநயா’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் பலரது உள்ளங்களையும் கலங்க வைத்திருப்பார். குழந்தை இல்லாத தம்பதிகளின் வேதனையை மிக உணர்வுபூர்வமாகக் காட்டும் இந்தக் கதாபாத்திரம், ஒரு பெரிய மருத்துவ மாஃபியாவின் கொடூர உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, உணர்ச்சி மிகுந்தக் காட்சிகளில் அபிநயா காட்டிய மிகைப்படையான நடிப்பு, திரைப் பார்வையாளர்களின் மனதை நெகிழச் செய்தது. பிறகு 2023ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் ‘வேதவள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் ஆண்டனியின் மனைவியாகவும், மார்கின் தாயாகவும் வந்த அபிநயா, வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்.

காதலில் அபிநயா


‘பானி’ திரைப்பட ஸ்டில்ஸ்

தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் கவனிக்கப்பட கூடிய நடிகையாக வலம் வரும் அபிநயா, தொடர்ந்து பல வெற்றி படங்களில் அங்கு நடித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் வெளியான ‘பானி’ திரைப்படம் இவருக்கு பெரும் கவனத்தை அங்கு பெற்றுத்தந்துள்ளது. இயக்குநர் ஜோஜூ ஜார்ஜ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்த இப்படத்தில், அபிநயா ஹீரோவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு பெரிய ரவுடிக்கும் பணத்திற்காக கொலை செய்யும் இரண்டு இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும், ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் படத்தில் அபிநயா பலாத்காரம் செய்யப்படுவது போல் வரும் காட்சி மிகவும் ஆபாசமாக படம் பிடிக்கபட்டிருப்பதாக கூறி மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து அபிநயா ஒரு பேட்டியில் தனது கருத்தைத் தெரிவித்தார். சைகை மொழியில் அவர் அளித்த விளக்கத்தில், "அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும், அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுக்க முழுக்க இயக்குநரின் முடிவு" என்று கூறியிருந்தார்.


நடிகர் விஷாலுடன்...

இந்த நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக நடிகர் விஷாலை அபிநயா காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பானது. ஏற்கனவே ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்ததால் ரசிகர்கள் சிலர் இந்த தகவலை உறுதி என்றே நம்பி இருந்தனர். இந்த நேரத்தில்தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அபிநயா. அதில் கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை பருவ நண்பருடன் தான் உறவில் இருப்பதாகவும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாகவும் கூறிய அவர், இனிமேல் இது போன்ற விஷயங்களை பரப்ப வேண்டாம் என்று கூறி, விஷால் உடனான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் தன் காதலருடன் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் தான் பகிர்ந்து கொள்வேன் என்றும், அவருடன் பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள அபிநயா. திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இப்போதைக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை, இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அபிநயாவின் இந்த பதில், ரசிகர்கள் மத்தியில் ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story