இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் பரபரப்பு செய்திகளுக்கும், கிசு சிசுக்களுக்கும் எப்போதுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில், 2025 புதிய ஆண்டின் தொடக்கமாக இந்த ஆண்டில் வெளியாக உள்ள புதிய படங்கள் குறித்த அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கியுள்ளன. அதிலும், ஜனவரி முதல் மாதத்தில் பண்டிகைகள் வரிசைகட்டி நிற்க, அதையொட்டி தமிழ் திரையுலகத்தினரும் தங்கள் படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், 2025 ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அந்த ரேஸில் என்னென்ன திரைப்படங்கள் இணைந்துள்ளன? திரைக்கு வர இருந்தும் தள்ளிப்போன படங்கள் என்னென்ன? அண்மையில் திரையுலக பிரபலங்கள் குறித்து வெளிவந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்னென்ன? போன்ற பல துணுக்கு செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

விஷாலின் ‘மத கஜ ராஜா’


'மத கஜ ராஜா' திரைப்படத்தின் போஸ்டர்

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் கடந்த 2012-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘மத கஜ ராஜா’ திரைப்படம். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் மட்டுமின்றி மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்த இந்த படத்தில் நடிகை சதாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி சிறப்பித்துள்ளார். மேலும் நடிகர் ஆர்யாவும் சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்துள்ளார். இந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் ஏனோ சில காரணங்களால் வெளிவராமல் தள்ளிப்போனது. பிறகு அது பற்றி எந்த தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது இப்படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மத கஜ ராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாவதாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் சந்தானம் அறிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியிலும், விஷால் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி-யின் படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்த படம் கண்டிப்பாக ஒரு பொழுதுபோக்கு நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

தள்ளிப்போகும் ‘விடாமுயற்சி’


'விடாமுயற்சி' படத்தின் பாடல் காட்சி ஒன்றில் அஜித் - திரிஷா

மகிழ் திருமேனி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடித்து முடித்துள்ள திரைப்படம்தான் ‘விடாமுயற்சி’. பல தடைகள் மற்றும் குழப்பங்களை கடந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தொடங்கியிருந்தாலும், பல்வேறு காரணங்களால் அது தொடர்ந்து தாமதமாக்கப்பட்டு வந்தததால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் எப்படியும் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தபோதுதான் அவர்களுக்கு பட்டாசையும், சுவீட்டையும் ஒன்றாக சேர்த்து கொடுப்பது போல் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முட்டி மோதி விறுவிறுப்பாக நடத்தி முடித்து அப்படத்தை 2025 பொங்கலுக்கு ரீலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. அதையொட்டி படத்தின் டீசரும் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியும் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி படத்தை சிறப்பாக முடித்து கொடுத்ததற்காக அஜித்துக்கு நன்றி தெரிவித்து பதிவையும் வெளியிட்டிருந்தார். இப்படி எல்லாம் பாசிட்டிவான இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென அஜித், மகிழின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. காரணம், படத்தின் டப்பிங், ரீ- ரெக்கார்டிங், சென்சார் உள்ளிட்ட பணிகள் தாமதம் ஆவதாலேயேதான் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ‘விடாமுயற்சி’ படம் வெளியாக இருந்ததால், பாலாவின் ‘வணங்கான்’ படம் தவிர மற்ற படங்கள் எதுவும் பொங்கல் ரேஸில் பங்கேற்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகுபலியை மிஞ்சுமா ‘புஷ்பா - 2’


'புஷ்பா - 2' பாடல் காட்சி ஒன்றில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா

திரையுலகில் எந்த படம் பாக்ஸ் ஆஃபிசில் அதிக வசூலை தந்தது என்ற பேச்சு எப்போதுமே பரவலாக இருக்கும். இது 1980 தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. அதிலும், இன்றைய சூழலில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்தாலே எந்த படம் அதிக வசூல் சாதனை செய்தது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும், பேசுபொருளாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி படம் வெளியாகி வெறும் 28 நாட்களில் உலக அளவில் இதுவரை 1799 கோடி வசூலை பெற்றுள்ளது அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’, ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் மட்டுமே ஆயிரத்து 500 கோடி வசூலை தாண்டியிருக்கிறதாம். அதிலும் குறிப்பாக ‘பாகுபலி 2’ திரைப்படம் மட்டும்தான் தென்னிந்திய திரைப்படங்களிலேயே ஆயிரத்து 810 கோடி வசூல் செய்த ஒரே படமாக இருந்து வந்தது. இந்த நிலையில், பாகுபலியின் இந்த வசூலை ‘புஷ்பா 2’ முறியடிக்க இன்னும் ரூ.10 கோடி மட்டுமே உள்ள நிலையில் அதையும் முறியடித்து சாதித்து விடும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

மீண்டும் ‘படையப்பா’


'படையப்பா' திரைப்படத்தில் ரஜினியுடன் நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் ஒரு நடிகராக திரையுலகில் காலடி எடுத்து வைத்து இந்த ஆண்டோடு 50-ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 1975-ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரால் அவரின் ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமான ரஜினி, பல தடைகளை, அவமானங்களை தாண்டி தொடர்ந்து தன் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் மெல்ல மெல்ல உயர்ந்து இன்று சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்துள்ளார் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியமானது. இன்றும் 73 வயதை கடந்து பல படங்களில் இன்றைய தலைமுறை ஹீரோக்களும் பார்த்து பொறாமைப்படும் ஒரு ஹீரோவாக நடித்து வரும் ரஜினிகாந்த் பலருக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரின் 50 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் விதமாக சிவாஜி கணேசனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமான ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் பிரம்மாண்டமாக ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அப்படத்தின் இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு வெளியான இப்படம் அன்றைய 90ஸ் கிட்ஸ்களால் இன்றும் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது. அதிலும் ரஜினியுடன் சேர்ந்து நீலாம்பரியாக கலக்கியிருந்த ரம்யா கிருஷ்ணனையும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ‘படையப்பா’ படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம்தான்.

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’


இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் வெளிவரவுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்பட போஸ்டர்

இயக்குநர் ஷங்கரின் படைப்புகள் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், 1993-ஆம் ஆண்டு வெளியான அர்ஜுனின் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ஆரம்பித்து கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ வரையுமே அனைத்தும் அவரின் ரசிகர்களை பிரம்மிப்பூட்டிய திரைப்படங்கள்தான். இந்நிலையில், தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து அவர் இயக்கி முடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படமும் மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்து ரசிகர்களை குதூகலப்படுத்த காத்திருக்கிறது. ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தில் ராம் சரண் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அப்பாவாக வரும் ராம் சரணுக்கு நடிகை அஞ்சலியும், மகனாக வரும் ராம் சரணுக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும் ஜோடியாக நடித்துள்ளார்கள். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் படத்தில் வரும் நான்கு பாடல்களுக்கு ரூ. 75 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர். இதற்கான நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைப்பெற்றுது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலி கலந்துக் கொண்டார். இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On 7 Jan 2025 9:03 AM IST
ராணி

ராணி

Next Story