இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சருமத்தை பளிச்சென்று பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சரும வறட்சி, வெயிலில் சென்று வருவதால் ஏற்படும் கருமை, முகப்பரு பிரச்சினைகள் மற்றும் சரும முதிர்ச்சி போன்றவற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் விசேஷ நாட்களில் கூடுதல் பொலிவுடன் ஜொலிக்க, வீட்டில் செய்யக்கூடிய பியூட்டி ரெமடிஸ் பலன் தர சில காலம் எடுக்கும். உடனடி தீர்வு கிடைக்காது. இதனால் பார்லருக்கு சென்று தங்களை அழகு படுத்திக்கொள்ளும் விருப்பம் சிலருக்கு உண்டு. அந்த வகையில் ஸ்கின் பிரைட்டனிங் ஃபேஷியல் எப்படி செய்யலாம் என சொல்லி கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் சைலஜா.

செயல்முறை:

* முதலில் முகத்தில் இருக்கும் அழுக்கை அகற்ற காட்டன் வைத்து நன்கு துடைத்து எடுக்க வேண்டும். அடுத்ததாக க்ளென்சர் வைத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் முடிந்த பிறகு காட்டனை வைத்து க்ளென்சரை முழுவதும் துடைத்து எடுக்க வேண்டும். க்ளென்சிங் செய்யும்போது அழுக்கு, தூசி உள்ளிட்டவை நீங்கி விடும்.


க்ளென்சிங் செய்வதற்கு முன்பு முகத்தை காட்டனை வைத்து துடைத்து எடுத்தல்

* அடுத்ததாக டி-டான் அப்ளை பண்ண வேண்டும். இதன் மூலம் வெயிலால் ஏற்பட்ட முக கருமை குறையும். மேலும் டி-டான் போடுவது முகத்தை பிரைட்டாகவும், மிருதுவாகவும் இருக்க உதவுகிறது. 15 நிமிடங்களுக்கு பிறகு ஈரத்துணி வைத்து டி-டான் கிரீமை துடைத்து எடுக்க வேண்டும்.

* பின்னர் ஸ்க்ரப்பிங். ஸ்க்ரப் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியில் வந்து விடும். ஸ்க்ரப் பயன்படுத்துவதால் சீரற்ற தோலுக்கு நிவாரணம் கிடைக்கிறது. 2 நிமிடங்களுக்கு நன்கு ஸ்க்ரப் செய்து, அதனை துடைத்துவிட வேண்டும்.


முகத்தை க்ளென்சிங் செய்தபிறகு 2 நிமிடங்களுக்கு ஸ்க்ரப்பிங் செய்யும் காட்சி

* அடுத்ததாக முகத்திற்கு ஸ்ட்ரீம் கொடுக்க வேண்டும். ஸ்ட்ரீம் செய்வதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், இறந்த சரும செல்கள் உள்ளிட்டவற்றை எளிமையாக நீக்கலாம்.

* பிறகு ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து, மசாஜ் மெஷின் வைத்து நன்கு மசாஜ் கொடுக்க வேண்டும். அடுத்து, மசாஜ் கிரீமை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் கைகளை வைத்து மசாஜ் கொடுக்க வேண்டும். அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதேநேரம் பிரஷர் பாயிண்ட்களில் அழுத்தம் கொடுக்கும்போது சருமம் ரிலாக்சாக இருக்கும்.


மசாஜ் மெஷின் கொண்டு முகத்திற்கு நன்கு மசாஜ் கொடுப்பது

* பின்னர் மசாஜ் கிரீமை துடைத்துவிட்டு, ஃபேஸ்-பேக் போட வேண்டும். பேக் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு காய விட வேண்டும். அதன்பிறகு ஈரத்துணி வைத்து நன்கு துடைத்து எடுக்க வேண்டும். இறுதியாக சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும்.

ஃபேஷியல் செய்த பிறகு பின்பற்ற வேண்டியவை:

* ஃபேஷியல் செய்த பிறகு சன்ஸ்கீரின் அப்ளை பண்ண வேண்டும்.

* அடுத்த நான்கு மணி நேரத்திற்கு முகத்தில் தண்ணீர், சோப்பு வைத்து கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

* உடனடியாக மேக்கப் போடுவதை தவிர்த்துவிட வேண்டும்.

* அடிக்கடி உங்கள் முகத்தை தொட்டு பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

* மஞ்சள் மற்றும் இதர சரும பராமரிப்பு பொடிகளை பயன்படுத்தக் கூடாது.

* உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது மிகவும் அவசியம்.

Updated On 10 Jun 2024 6:24 PM GMT
ராணி

ராணி

Next Story