✕
x
இப்போது மேக்கப் விரும்பாத பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஓவர் மேக்கப் இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச மேக்கப்பாவது போட்டுக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக, சிறுசிறு கொண்டாட்டங்கள் மற்றும் விசேஷங்களுக்குக்கூட சிம்பிளாகவும், அதேசமயம் அழகாகவும் தெரியவே ஆசைப்படுகின்றனர். ஃபவுண்டேஷன் விரும்பாதவர்களுக்கு இந்த மேக்கப் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். வீட்டிலேயே சில நிமிடங்களில் மேக்கப் மற்றும் வித்தியாசமான லுக்கில் புடவை கட்டுவது எப்படி என்று டிப்ஸ் கொடுக்கிறார் அழகுக்கலை நிபுணர் அபிராமி.
- எந்த மேக்கப் போட்டாலும் முகம் சுத்தமாக இருக்கவேண்டும். எனவே முதலில் க்ளென்சர் கொண்டு முகத்தைத் துடைத்து சுத்தம் செய்யவேண்டும். கூடவே கண்கள் மற்றும் உதட்டையும் சுத்தப்படுத்த வேண்டும்.
- பிறகு மாய்சரைஸர் தடவி, சில நொடிகள் இடைவெளி விடவும். ப்ரைமர் பயன்படுத்துபவர்களும் இதனை பின்பற்றவும். நோ ஃபவுண்டேஷன் மேக்கப் என்பதால் சில கரெக்ஷன்ஸ் மட்டுமே செய்வது போதுமானது.
சருமத்தின் நிறத்திற்கு ஏற்றாற்போல் கரெக்டர் பயன்படுத்துதல்
- ஆரஞ்சு கரெக்டரை பிரஷ்ஷில் எடுத்து முதலில் கையில் தடவி சரிசமமாக பரவியிருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு முகத்தில் எங்கு கருமை இருக்கிறதோ அங்கெல்லாம் போடவேண்டும். பெரும்பாலும் கண்களுக்கு கீழ் மற்றும் நெற்றியில்தான் கருமை இருக்கும்.
- சருமத்தின் நிறம் மற்றும் டோனிற்கு ஏற்றாற்போல், மற்றொரு கரெக்டரை எடுத்து அதையும் கையில் ஒரே மாதிரியாக தடவி, அதையும் ஆரஞ்சு கரெக்டர் பயன்படுத்திய இடங்களில் தடவ வேண்டும். இதுபோன்ற கரெக்ஷன்களை செய்யும்போது முகத்தை சிரித்தவாறு வைத்து செய்தால், மேக்கப் முகம் முழுக்க ஒரே மாதிரியாக இருக்கும்.
- அடுத்து காம்பேக்ட் பவுடரை பிரஷ்ஷால் எடுத்து அதனை முகம் முழுக்க ஒரே மாதிரியாக பூசவேண்டும்.
கண்களுக்கு மேல் மற்றும் கீழ் ஐஷேடோ போடுதல்
- ஐஷேடோ பேலட்டை எடுத்து அதில் லைட்டர் கலரால் பேஸ் தடவ வேண்டும். இதுமட்டுமே போதுமானால் இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் அல்லது வேறு கலர் பயன்படுத்த விரும்பினால் பிரஷ்ஷில் எடுத்து கண்களின் வெளிப்புறமிருந்து உள்பகுதிக்கு தடவ வேண்டும். ஐஷேடோவைப் பொருத்தவரை வெளிப்புறம் அடர்நிறமாகவும், உள்புறம் லைட்டாகவும் இருப்பது அவசியம்.
- அடுத்து காஜலை கண்ணிமைகளை ஒட்டி லைட்டாக தடவி அதை ஸ்மஜ் செய்யவும். இப்படி செய்வதால் சிறிய கண்கள் இருப்பவர்களும்கூட கண்களை பெரிதாக்கிக் காட்டலாம். மேலும் கண்களின்கீழ் வாட்டர்லைனில் காஜலை தீட்டாமல் அதற்கும் சற்றுகீழ் தீட்ட கண்கள் பெரியதுபோன்ற தோற்றமளிக்கும்.
- பிறகு கண்களுக்கு மேல் என்ன கலர் ஐஷேடோ பயன்படுத்தினோமோ அதே கலர் கொண்டு கீழும் ஸ்மஜ் செய்யவேண்டும்.
- ஸ்பூலி பிரஷ் கொண்டு புருவங்களிலுள்ள இடைவெளியை நிரப்பவேண்டும். அதற்கு ப்ரவுன் கலர் பயன்படுத்துவது சிறந்தது. கருப்பு நிறம் பயன்படுத்தினால் வரைந்தது போன்று தோற்றமளிக்கும்.
உதட்டை ஹைலைட் செய்ய லிப் லைனர் பயன்படுத்துதல்
- அடுத்து லிப் லைனரால் உதட்டின் ஓரங்களில் வரைந்து, பிறகு லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் உதட்டின் வடிவம் நன்றாக இருக்கும். எப்போதும் டார்க் லைனர் பயன்படுத்தி லைட் லிப்ஸ்டிக் போட்டால் அழகாக இருக்கும்.
- கடைசியாக மஸ்காரா கொண்டு கண்ணிமைகளை அடர்த்தியாக காட்டலாம். இந்த லுக் சிம்பிளாகவும், அழகாகவும் காட்ட உதவும்.
- புடவை கட்டுதல்:
- வீட்டிலேயே கொண்டாடும் விழாக்கள் மற்றும் விசேஷங்களில் சிம்பிளாகவும், அழகாகவும் தெரிய வேண்டும் என ஆசைப்படுபவர்கள், மேற்கூறிய மேக்கப்பை போட்டு, வித்தியாசமாக புடவை கட்டலாம். குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்காக அதிக செலவு செய்து லெஹங்கா வாங்கவேண்டாம் என நினைப்பவர்கள் வீட்டிலிருக்கும் பட்டு புடவையையே லெஹங்கா போன்று மாற்றியமைத்து அணிந்துகொள்ளலாம்.
- முதலில் எப்போதும்போல புடவையின் உள்பகுதியை முதலில் சொருகி, பிறகு ஒவ்வொரு மடிப்பாக எடுத்து சுற்றிலும் அடுத்தடுத்து வரிசையாக சொருகவேண்டும். இது பார்ப்பதற்கு மடிப்புகள் நிறைந்த லெஹங்கா அல்லது பாவாடை போன்று தோற்றமளிக்கும்.
லெஹங்கா போன்று புடவை கட்டுதல்
- பிறகு புடவையின் முந்தானையின் நுனிப்பகுதியை மேற்புறமாக கொண்டுவந்து புடவை பின்செய்வதுபோலவே பின் செய்யவேண்டும். முந்தானையின் மற்றொரு நுனிப்பகுதியை தாவணிபோல கீழாக கொண்டுவந்து இடுப்பில் சொருகவேண்டும். நடுவே மீதியுள்ள பகுதியை உள்ளாக சொருக, பாவடைப் போன்ற தோற்றம் உருவாகிவிடும்.
- கடைசியாக, ஒட்டியாணம் கொண்டு இந்த லுக்கை செட் செய்துவிடலாம்.
- மற்றொரு முறையில் இரண்டு புடவைகளை பயன்படுத்தலாம். இதற்கு இரண்டு வித்தியாசமான கலர் புடவைகளும் அவை இரண்டுக்கும் ஏற்றாற்போன்ற பிளவுஸும் தேவை.
- முதலில் ஒரு புடவையை எடுத்து, முழுவதையும் மடிப்பு மடிப்புகளாக இடுப்பை சுற்றிலும் பாவாடை போன்று சொருகவேண்டும். முந்தானை முன்பகுதியில் வருமாறு சொருக வேண்டும்.
- மற்றொரு புடவையை எடுத்து சாதாரணமாக கட்டுவது போன்றே, மேற்பகுதியில் மடிப்பு எடுத்து கட்டவேண்டும். புடவையை இடுப்பைச் சுற்றி கீழாகக் கொண்டு வந்து கீழ்ப்பகுதியை மடிப்புகள் எடுத்து சொருக வேண்டும். மீதமுள்ள நடுப்பகுதியை தாவணி சொருகுவதுபோல சொருகி, ஒட்டியாணம் போட சூப்பர் லுக் ரெடி!
ராணி
Next Story