'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். பழங்காலந்தொட்டே அழகை பராமரிப்பதிலும், அதனை மேம்படுத்துவதிலும் ஆண், பெண் இருபாலருமே கவனம் செலுத்தி வந்துள்ளனர். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை உடலை அழகுபடுத்திக்கொள்ள புதுபுது அழகுசாதனப் பொருட்களும், அறுவைசிகிச்சை முறைகளும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. இதற்கென மருத்துவத்தில் தனிப்பிரிவே இருக்கிறது. அதை காஸ்மடாலஜி (அழகுசாதனவியல்) என்கின்றனர். இதுகுறித்து விரிவாக பேசுகிறார் காஸ்மடாலஜிஸ்ட் பினிலா பிளாட்பின்.
காஸ்மடாலஜி சிகிச்சை
காஸ்மடாலஜி சிகிச்சைமுறைகள் என்னென்ன?
அழகு என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லா பெண்களுமே தங்களது முகம் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இன்றைய காலத்தில் முகத்தில் முடி வளர்தலை பெண்கள் முக்கியமான பிரச்சினையாக பார்க்கின்றனர். முகத்தில் முடி வளர்வதை பெண்கள் விரும்புவதில்லை. முகம் மென்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.
முகத்தில் முடி வளர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஹார்மோன் சமநிலையின்மைதான். இருபது - முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகள் இருந்ததில்லை. ஆனால் தற்போது மாறிவரும் உணவுப்பழக்க வழக்கங்களும், அன்றாட வாழ்வியலில் ஏற்படும் மாற்றங்களுமே ஹார்மோன் சமநிலையின்மைக்கு முக்கியக் காரணமாக மாறியிருக்கிறது. இதனால், முகத்தில் தேவையற்ற முடி வளர்தல், கழுத்தில் கருமை படிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
லேசர் சிகிச்சை மூலம் முடி அகற்றுதல்
முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கு, வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ரேஸர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனாலேயே சருமம் மேலும் கருமையாகிறது. லேசர் சிகிச்சை மூலம் முடியை அகற்றினால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது. லேசர் மூலம் முடியை அகற்றும் முறையை `டையோடு லேசர்’ என்கின்றனர்.
டையோடு லேசர் சிகிச்சை என்றால் என்ன?
டையோடு லேசர் என்பது தேவையற்ற முடிகளை நீக்குவதற்கான ஒரு சிகிச்சை முறை. இதனால் வலி, எரிச்சல் ஏற்படுமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களால் இந்த லேசர் சிகிச்சை முறையானது குளுமையான உணர்வையே சருமத்திற்குத் தரும். இந்த சிகிச்சையை எத்தனை முறை எடுப்பது? வாழ்நாள் முழுவதும் எடுக்கவேண்டுமா? என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும்.
டையோடு சிகிச்சை
டையோடு சிகிச்சை கால அளவு
டையோடு சிகிச்சைக்கான கால அளவு என்பது முழுக்க முழுக்க தனி நபருக்கு வளரக்கூடிய முடியின் அடர்த்தியைப் பொருத்தது. உதாரணமாக, ரேஸர், வாக்ஸிங், த்ரெட்டிங் போன்ற எந்த முறையையும் பின்பற்றாதவர்களுக்கு முடியை அகற்ற 6 சிட்டிங் போதுமானது. ஒவ்வொரு சிட்டிங்கும் மூன்று வார இடைவெளியில் மேற்கொள்ளப்படும். இரண்டு சிட்டிங் முடியும்போதே முடியின் வளர்ச்சி குறைவது தெரியும். ரேஸரை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடியின் அடர்த்தியானது அதிகரிக்கும். ஆனால் லேசர் சிகிச்சையின் இறுதி பலனாக முடியின் வளர்ச்சியும், அதன் அடர்த்தியும் படிப்படியாகக் குறையும். அப்படியே முடி வளர்ந்தாலும் லேசர் சிகிச்சையால் அடர்த்தி மிகவும் குறைவதால் அவை கண்ணுக்குத் தெரியாது.
லேசர் சிகிச்சை குறித்த சந்தேகங்கள்
பக்கவிளைவுகள் வருமா?
தேவையற்ற முடி வளரும் இடங்களில் மட்டுமே லேசர் சிகிச்சை செயல்படுத்தப்படுவதால் நிச்சயமாக சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். மேலும், முடிவளர்ச்சியை குறைக்க இயற்கை தீர்வு முறை கிடையாது. உடலில் முடி வளர்ச்சியானது ஹார்மோன்களுடன் தொடர்புடையது. எனவே மகப்பேறு மருத்துவரை அணுகி, ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்தாலே அதீத முடி வளர்ச்சி தடுக்கப்படும்.
காஸ்மடாலஜி சிகிச்சை
சிலருக்கு மூக்கின் கோணம் இரண்டு புறங்களிலும் மாறுபட்டிருக்கும். சிலருக்கு குழியாக இருக்கும். இதனை, ‘ஃபில்லர்ஸ்’ என்ற காஸ்மடாலஜி மெட்டீரியல் கொண்டு சரிசெய்வர். இந்த சிகிச்சை முறையை 6 மாத இடைவெளிக்குள் ஒன்று அல்லது இருமுறை செய்யவேண்டி இருக்கும். இது ஊசிமூலம் செலுத்தப்படுகிறது. காஸ்மடாலஜி சிகிச்சைகளை பெரும்பாலும் பெண்களே மேற்கொள்கின்றனர்.
செயற்கையாக மச்சம் மற்றும் கன்னத்தில் குழி
நிறையப்பேருக்கு ஹார்மோன் சமநிலையின்மையால் எடை அதிகரித்து தாடை பருமனாக இருக்கும். அதனையும் ஆர்.எஃப். முறை மூலம் சில வாரங்களில் சரிசெய்யலாம். கன்னத்தில் குழிவிழுவதை விரும்புகிறவர்களுக்கும், Dimple creation procedure மூலம் குழி விழுதலை செயற்கையாக உருவாக்க முடியும்.
மச்சங்களை விரும்பாதவர்களுக்கு Q switch laser மூலம் 3 - 4 வாரங்களில் சரிசெய்யலாம். டாட்டூவும் இதேபோலத்தான் அழிக்கப்படும். ஆனால் ஒரே சிட்டிங்கில் இவற்றை அழிப்பது சாத்தியமில்லை. சிலருக்கு குறிப்பிட்ட இடத்தில் மச்சம் வேண்டும் என்று ஆசைப்படுவர். அவர்களுக்கு செயற்கையாக, micro-pigmentation முறை மூலம் உருவாக்கப்படும். புருவங்களையும் இந்த சிகிச்சைமுறை மூலம் சரிசெய்யலாம். எந்த ஒரு பாதிப்பாக இருந்தாலும் அதன் ஆரம்ப நிலையிலேயே இயற்கை மருத்துவத்தால் சரிசெய்ய முயற்சிப்பது நல்லது.
முகச்சுருக்கங்கள்
முகச்சுருக்கங்களை சரி செய்வது சாத்தியமா?
லேசர் சிகிச்சை செய்ய வயது வரம்பு எதுவும் இல்லை. ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடுவோருக்கு சுருக்கங்கள் ஏற்படும். பொதுவாகவே நாற்பது அல்லது அதற்குமேல் வயதுள்ளவர்களுக்கு முகச்சுருக்கங்கள் வருவது இயற்கையே. இதனை லேசர் சிகிச்சையில் பிராக்ஷனல் லேசர் சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம். முகச்சுருக்கங்களுக்கு மருத்துவத்தை விட இயற்கையான முறையில் வீட்டிலேயே அன்றாட கவனிப்பு அவசியம். மாய்ஸரைசர், சன்ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்துதல், கொலாஜன் எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றால் வயதான தோற்றத்தை தள்ளிப்போடலாம்.