இந்த தலைமுறையில் ஆணும், பெண்ணும் தங்களின் சரும பராமரிப்பில் அதிக கவனம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கெமிக்கல் நிறைந்த பொருட்களின் பயன்பாட்டினால் நாளடைவில் இதர பக்க விளைவுகள் வருகின்றன. ஆனால் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நம்மால் நமது சருமத்தை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும். வெளிப்புற பராமரிப்பையும் தாண்டி உணவு பழக்கம் சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. உலர்ந்த சருமம், எண்ணெய் சருமம், காம்பினேஷன் சருமம், முகப்பரு, ஹைப்பர் பிக்மென்டேஷன், கருவளையங்கள் என முகம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய சில நாட்டு மருந்துகள் பற்றி நமக்கு இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறார் பல்துறை வல்லுநர் தாமரை செல்வி.
வேறுபட்ட சருமத்தை உடையவர்கள் அவர்கள் சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்?
சருமம் மூன்று விதமாக உள்ளது அதை உலர்ந்த சருமம், எண்ணெய் சருமம், காம்பினேஷன் சருமம் என சொல்லலாம். அவற்றை பராமரிக்க சில வழிகள் உள்ளன. பச்சை பயறு 1 கிலோ, பூலாங்கிழங்கு 50 கிராம், கிச்சிலி கிழங்கு 50 கிராம், ஜடா மஞ்சள் 50 கிராம் அரைத்து கூடவே கடலை மாவு 1/4 கிலோ தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் இந்த பொடியுடன் பால் கலந்து தேய்க்கலாம். எண்ணெய் சருமம், காம்பினேஷன் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் கலந்து தேய்க்கலாம். இவ்வாறு செய்யும்போது கரும்புள்ளி, முகப்பரு, சருமம் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
ஜடா மஞ்சள் என்றால் என்ன? அதன் பயன்பாடுகளை பற்றி சிறு விளக்கம் சொல்லுங்கள்…
ஜடா மஞ்சள் ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்த உகந்தது. ஆண்களை பொறுத்தவரை மஞ்சள் பெரும்பாலும் பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது வழக்கம். மஞ்சள் பயன்படுத்தினால் தாடி, மீசை வளராமல் போய்விடும் என்ற பயம் இருக்கும். ஜடா மஞ்சள் சிறந்த டீடாக்ஸ் சருமத்திற்கு உள்ளே சென்று தேவையற்ற அழுக்குகளை வெளியேற்ற உதவியாக இருக்கும். கார்போக அரிசி பாலில் கலந்து அல்லது தண்ணீர் கலந்து முகம் மற்றும் உடல் முழுவதும் வாரத்துக்கு ஒருமுறையேனும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல பளபளவென சருமம் பெற முடியும்.
சிவப்பான சரும நிறம் பெற செய்ய வேண்டியவை என்னென்ன?
எல்லோருக்கும் தான் பார்க்க சிவப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அல்லது சீரான சரும நிறம் இருந்தால் போதும் என்றும் நினைப்பதுண்டு. அப்படி இருக்கும்பட்சத்தில் பீட்ரூட் சாறு எடுத்து கெட்டிப்பால் ஏடு சேர்த்து அதனுடன் கார்போக அரிசி, ஜடா மஞ்சள், பூலாங்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, பச்சரிசி அனைத்திலும் ஒவ்வொரு தேக்கரண்டி சேர்த்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கண்ணை சுற்றி உள்ள கருமை, முகப்பருவால் ஏற்பட்ட கருமை என அனைத்தும் நீங்கி விடும். அதனுடன் ஜூஸ், பழங்கள், காய்கறி, கீரை வகைகளை சேர்த்து சாப்பிட வேண்டும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்?
தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். செம்பருத்தி இலை அரைத்து வைத்து முகத்தை கழுவ வேண்டும். அதன் பிறகு ஏற்கனவே கூறியது போல ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம் அல்லது முல்தானி மெட்டி பால் அல்லது தண்ணீருடன் கலந்து தடவிவர நன்றாக இருக்கும். மேலும் இதனுடன் உருளைக்கிழங்கு சாறு, தாக்களிப்பழ சாறு சேர்த்துக்கூட பயன்படுத்தலாம்.
கருவளையத்திற்கு ஏற்ற ரெமிடி ஏதாவது சொல்லுங்கள்…
கருவளையம் வருவதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை, கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பது என நிறைய உண்டு. ஒரு டம்ளர் தண்ணீரில் வெறும் டீ பொடி சேர்த்து கொதிக்க வைத்து ஆறியதும் ஒரு காட்டன் துணியில் அதை நனைத்து அடிக்கடி கண்ணை சுற்றி வைத்தால் விரைவில் குணமாகும். அதே நேரம் உடலுக்கு உள்ளே தேவையான ஊட்டச்சத்துகள் எடுத்து கொள்வது அவசியம்.