இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மெஹந்தி பொதுவாக திருமணங்களின் போது மணப்பெண்களுக்கு வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. இன்ஸ்டன்ட் மெஹந்தி, ஆர்கானிக் மெஹந்தி, ரெட் மெஹந்தி, பிளாக் மெஹந்தி என பல வகைகள் இதில் இருந்தாலும், நம் எல்லோரின் விருப்பம் ஹெல்தியான ஆர்கானிக் மெஹந்தி போட வேண்டும் என்பதே ஆகும். மெஹந்தி முதன் முதலில் இந்தியாவுக்கு 4 ஆம் நூற்றாண்டில் வந்தது. மருதாணி இலைகளை அரைத்து கைகளில் வைப்பதால் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். எனவே திருமண நாளுக்கு முன்னாள் பெண்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடி, மன அழுத்தம், உடல் சூடு ஆகியவை குறையவே அந்த நாட்களில் மெஹந்தி வைப்பது ஒரு முறையாக செய்யப்பட்டு வருகின்றது. மெஹந்தி வைப்பதற்கென்றே விழா தனியாக திருமணத்திற்கு முதல் இரண்டு நாட்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வீட்டிலேயே ஆர்கானிக் மெஹந்தி கோன் தயாரிப்பது குறித்து சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் மெஹந்தி கலைஞர் திவ்யா.


ஃப்ரெஷ் மெஹந்தி மற்றும் 12 மணி நேரம் ஊறவைக்கப்பட்ட மெஹந்தி கலவை

மெஹந்தி செயல்முறை

முதலில் மருதாணி பொடி 20 கிராம் அளவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 8 கிராம் வெள்ளை சர்க்கரை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.

மருதாணி, சர்க்கரை கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்துக்கொள்ள வேண்டும். கட்டிகள் எதுவும் இல்லாதவாறு நன்கு கலந்து எடுத்து, அதை 10 முதல் 12 மணி நேரத்துக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். அதனுடன் தேவையான எண்ணெய்களை சேர்க்க வேண்டும்.


கோன்களில் நிரப்பப்பட்ட மெஹந்தி கலவை

மெஹந்தி போடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் லாவெண்டர் ஆயில், டீ ட்ரீ ஆயில், யூகலிப்டஸ் ஆயில் என ஏதாவது ஒன்றை, 10 மி.கி. சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மெஹந்தி ஸ்ட்ரிங் பதத்தில் இருந்தால், கைகளில் வரைவதற்கு ஏதுவாக இருக்கும். இந்த கலவையை ஒரு கோன் வடிவ கவரில் ஊற்றி மெஹந்தி கோன்களில் மாற்றி, பின் புறத்தை செல்லோடேப் வைத்து ஒட்டினால், கைகளில் போட மெஹந்தி கோன் ரெடி!


மணிக்கட்டு பகுதியில் தொடங்கி உள்ளங்கைக்கு மெஹந்தி போடும் முறை

மெஹந்தி போடுவதற்கு முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். இந்தியன் மெஹந்தி டிசைன்கள், ஃபிளவர்ஸ், ஹம்ஸ், லைன்ஸ் போன்று இருக்கும். மெஹந்தியில் நிறம் மிகவும் முக்கியமானது. டிசைன்கள் தனித்துவமாக இருக்க வேண்டும். மெஹந்தி டிசைன்கள் தங்களின் நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதே மணப்பெண்கள் விருப்பமாக இருக்கும். திருமணங்களுக்கு போடப்படும் மெஹந்தி டிசைன்களில், மணமகனின் பெயர், திருமண தேதி, ஜோடியாக இருப்பது போல படங்கள், முதல் முதலாக பார்த்த தேதி போன்ற நினைவுகளை டிசைனாக போடுவது வழக்கம் ஆகிவிட்டது. உடலில் மெலனின் அதிகம் இருப்பவர்களுக்கே மெஹந்தி நிறம் கூட்டி கொடுக்கும். வெள்ளையாக இருப்பவர்களுக்கு, சிவப்பு முதல் அடர் பிரவுன் நிறம் வரை மட்டுமே வரும்.


மெஹந்தி உதிர்ந்து விடாமல் இருக்க எலுமிச்சை சாறு அப்ளை செய்யும் காட்சி

மருதாணியில் சர்க்கரை சேர்ப்பதன் மூலம் கைகளில் வரைவதற்கு எளிமையாகவும், சுலபமாகவும் இருக்கும். மெஹந்தி போட்ட பிறகு கைகளில் சர்க்கரை தண்ணீர் வைத்தால் நிறம் நன்றாக வராது. இந்த முறை முற்றிலும் தவறு! மெஹந்தி டிசைன் முடித்த பிறகு எலுமிச்சை சாறு வைப்பது மெஹந்தி காய்ந்த பிறகு கொட்டாமல் இருப்பதற்கு மட்டும்தான் உதவியாக இருக்கும். இவ்வகையான மெஹந்தி போடுவது எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இவ்வாறு போடப்படும் ஆர்கானிக் மெஹந்தி, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை கைகளில் இருக்கும். மெஹந்தி போட்டு 4 முதல் 8 மணி நேரம்வரை காய விட வேண்டும். கைகள் முழுவதும் காய்ந்த பிறகு தேங்காய் எண்ணெய் வைத்து ஊற வைக்க வேண்டும்.


மெஹந்தி போட்டு முடிக்கப்பட்ட கைகள்

சிறிது நேரம் கழித்து கைகளில் இருக்கும் மெஹந்தியை தேய்த்து எடுத்து, இரண்டு மணி நேரங்களுக்கு கைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மெஹந்தி நீண்ட நாட்களுக்கு கைகளில் இருக்க வேண்டும் என்றால், கைகளை அடிக்கடி தண்ணீர் கொண்டு கழுவாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சோப்பு அடிக்கடி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, வழக்கமாக 7 நாட்கள் வரை இருக்கும் மெஹந்தி 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Updated On 1 July 2024 11:56 PM IST
content writer

content writer

Next Story