இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தலைமுடியை பராமரிப்பது என்பது சற்று சிரமமான விஷயம்தான். குறிப்பாக மழைக்காலத்தில் முடியை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இருப்பினும் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தலைமுடியை சிறப்பாக பராமரிக்க முடியும்.

தலைமுடி சுத்தம் வேண்டும்

மைல்டு ஷாம்பு தேய்த்து குளித்து தலைமுடியை சுத்தமாக வைத்திருக்கவும். இதனால் அதிக ஈரப்பதம் காரணமாக தலையில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகள் நீங்கும். தலைமுடியை சுத்தமாக வைத்திருந்தாலே முடி வறட்சி மற்றும் சிக்கு இல்லாமல் பாதுகாக்கலாம்.

கண்டிஷனர் அவசியம்

ஷாம்பு உபயோகித்து தலைமுடியை சுத்தம்செய்த பிறகு, தரமான கண்டிஷனரை பயன்படுத்தவும். இது முடியை மென்மையாக வைத்திருக்கவும், சிறப்பாக பராமரிக்கவும் உதவுகிறது. கண்டிஷனரை முடியின் வேர்ப்பகுதியில் தடவாமல் மேற்பகுதி மற்றும் முடி முழுவதும் தடவி, ஓரிரு நிமிடங்களில் சுத்தமாக கழுவ வேண்டும். கண்டிஷனர் தலைமுடியில் தங்கியிருந்தால் பொடுகு வரும் வாய்ப்புள்ளது.


ஸ்டைலிங் புராடக்ட்ஸ்

மழைக்காலங்களில் முடிக்கு அடர்த்தியான மற்றும் பிசுபிசுப்பான க்ரீம்களையோ அல்லது ஸ்பிரேக்களையோ பயன்படுத்தவேண்டாம். அதற்கு பதிலாக மென்மையான சீரம்களை பயன்படுத்தலாம். அப்படி இல்லாவிட்டாலும் கண்டிஷனர் மட்டுமே போதுமானது.

ஹீட் புராடக்ட்ஸ்

தலைமுடி அதிக சூடாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதிகப்படியான ஹீட் புராடக்ட்ஸ், முடி உதிர்வை அதிகரிப்பதுடன், மோசமாக சேதப்படுத்துகிறது. எனவே ஹேர் டிரையர்ஸ், ஸ்ட்ரெய்ட்னர் மற்றும் கர்லிங் போன்றவற்றின் பயன்பாட்டை குறைப்பது நல்லது. முடிந்தவரை இயற்கையாக தலைமுடியை உலரவிடுவது சிறந்தது.

தலைமுடியை விரித்துவிட வேண்டாம்

ஈரப்பதம் அதிகமுள்ள நாட்களில் பெண்கள் தலைமுடியை விரித்துபோடுவதை தவிர்த்து, லூசான கொண்டை, போனிடெய்ல் மற்றும் பின்னல் போட்டுக்கொள்ளலாம். இது முடி சிக்கு விழுவதை தடுப்பதுடன், முடி உதிர்வையும் குறைக்கும்.


ஆன்டி - ஃப்ரீஸ் ப்ராடக்ட்ஸ்

முடி சிக்கு விழுவது மற்றும் பிசுபிசுப்பாவதை தடுக்க, சீரம்கள், ஸ்ப்ரேக்கள் அல்லது க்ரீம்களை பயன்படுத்தலாம். எந்த ப்ராடக்டாக இருந்தாலும், குறைந்த அளவில் பயன்படுத்தலாம்; குறிப்பாக தலைமுடியின் நுனிகளில் பயன்படுத்துவது சிறந்தது.

அடிக்கடி ட்ரிம் செய்யவும்

6 - 8 வாரங்களுக்கு ஒருமுறை, தலைமுடி வளர்ச்சியைப் பொறுத்து, நுனியை வெட்டிவிடுவது, வெடித்த முடிகளை நீக்குவது முடி வளர்ச்சியைத் தூண்டி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது முடி மேலும் சேதமடையாமல் பாதுகாக்கும்.

மழையிலிருந்து பாதுகாப்பு

மழையில் நனையவேண்டிய சூழல் ஏற்பட்டால், தலைமுடி நனையாமல் இருக்க தொப்பி, குடை அல்லது ரெயின் கோட் போன்றவற்றை கையுடன் கொண்டுசெல்வது சிறந்தது. இதனால் தலைமுடி ஈரமாகி முடி உதிர்வு ஏற்படாமல் தடுக்க முடியும்.


ஆரோக்கியமான டயட் மற்றும் தண்ணீர் அவசியம்

தினசரி உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவது நல்லது. இது டயட்டை சமநிலையுடன் வைத்திருக்கவும், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலில் சேர்வதை உறுதிசெய்யவும் உதவுகிறது. இது சருமத்திற்கு மட்டுமல்லாமல் தலைமுடியையும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

நிபுணர்கள் அறிவுரை

மழைக்காலங்களில் தலைமுடி பிரச்சினைகள் வந்தால், நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம். ஒவ்வொருவரின் தலைமுடி மற்றும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு அதனை பராமரிக்க நிபுணர்கள் ஆலோசனை வழங்குவர்.

Updated On 1 Aug 2023 5:03 PM IST
ராணி

ராணி

Next Story