இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தினசரி புடவை உடுத்தினாலும் அல்லது என்றாவது ஒருநாள் புடவை உடுத்தினாலும் விசேஷ நாட்கள் என்றால் அதற்காக பிரத்யேகமாக தயாராக வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். குறிப்பாக, நிகழ்ச்சிகளுக்கு செல்ல சீக்கிரத்தில் ரெடியாக வேண்டும் என்றாலும் அல்லது வெளியூர்களுக்கு செல்லவேண்டி இருந்தாலும் புடவையை நேர்த்தியாக கட்ட வேண்டும் என்பது பெண்களுக்கு டாஸ்க்காகவே இருக்கிறது. குறிப்பாக மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டுப்புடவையை கசங்காமல் கட்டுவது என்பது மிகவும் சிரமம். எனவே முன்பே புடவையை ப்ளீட்ஸ் எடுத்து அழகாக மடித்து கொண்டு போய்விட்டால் எளிதில் நேர்த்தியாக தயாராகிவிடலாம். உடல் அமைப்புக்கு ஏற்றவாறு புடவைக்கு ப்ளீட்ஸ் எடுத்து மடிப்பது எப்படி என விளக்குகிறார் பியூட்டீஷியன் சத்யா.

மணப்பெண்ணின் புடவையை ப்ளீட்ஸ் செய்வதற்கு முன்பு அவருடைய தோள்பட்டை அகலம், ப்ளவுஸ் நீளம், இடுப்பளவு மற்றும் பின்புறம் தோள்பட்டையிலிருந்து முழங்காலுக்கு கீழ்வரை என 4 அளவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


முந்தியை ப்ளீட்ஸ் எடுத்து பின் வைத்து செட் செய்தல்

இந்த அளவுகளை பொருத்தவரை இடுப்பின் அளவைத்தான் துல்லியமாக எடுக்கவேண்டும். எப்போதும் இடுப்பை ஒரு சுற்றளவுடன் அரை சுற்றளவு சேர்த்து ஒன்றரை சுற்றளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். மணப்பெண் தவிர பிறருக்கு எடுக்கும்போது வேண்டுமானால் தோள்பட்டை அளவைவிட கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் புடவையின் முந்தியை 9 ப்ளீட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒல்லியான அல்லது குண்டான என எந்த உடல்வாகாக இருந்தாலும் 9 ப்ளீட்ஸ் எடுக்கலாம். முதல் 8 ப்ளீட்ஸ் அளவைவிட கடைசி ப்ளீட் அளவை சற்று சிறிதாகக்கூட வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு ப்ளீட்ஸையும் இரண்டு இன்ச் என கைவைத்து எடுத்தால் எளிதாக எடுக்கமுடியும்.

முதலில் முந்தியின் கீழ்ப்பகுதியில் 9 ப்ளீட்ஸ் எடுக்க முடியவில்லை என்றால் மேலிருந்து எடுத்து கடைசியாக கீழே எடுக்கலாம்.


இடுப்புப்பகுதி ப்ளீட்ஸ் எடுத்து பின் செய்தல்

முந்தி மற்றும் மேல்பகுதியை பின் செய்துவிட்டு, இடுப்புப்பகுதிக்கு செல்லவேண்டும். இடுப்புச் சுற்றளவின் அளவிற்கு புடவையில் அளந்து அதனை விட்டுவிட்டு கீழ்ப்பகுதி ப்ளீட்ஸை எடுக்கவேண்டும். முதல் இரண்டு ப்ளீட்ஸ் மட்டும் பெரிதாக வைத்துவிட்டு அளவை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.

ப்ளீட்ஸ் கையில் நிற்காவிட்டால் முதல் ப்ளீட்டில் பின் செய்துவைக்கலாம். மேலும் ப்ளீட்ஸை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்காமல் பக்கவாட்டில் சற்று இடைவெளிவிட்டு சேர்த்து பிடித்து பின் செய்யவேண்டும்.

பிறகு அதனை அப்படியே கீழ்ப்பகுதிவரை அரேஞ்ச் செய்யவும். நடுப்பகுதியில் ஒரு பின்னும் கீழ்ப்பகுதியில் ஒரு பின்னும் வைத்து செட் செய்துவிட்டால் அரேஞ்ச் செய்வது எளிதாக இருக்கும்.

அடுத்து மணப்பெண்ணின் உயரத்திற்கு ஏற்ப தோள்பட்டையிலிருந்து முழங்கால் வரை எடுத்த அளவிற்கு, புடவையின் முந்தி பகுதியில் அளவெடுத்து அதனை ஸ்டீம் அயர்ன் செய்யவேண்டும். ஸ்டீம் அயர்ன் செய்தால் பட்டுப்புடவைகள் எளிதில் சேதமடையாது.


மேற்பகுதி ப்ளீட்ஸை உடலமைப்புக்கு ஏற்றவாறு செட் செய்து அயர்ன் செய்தல்

முந்தியை அயர்ன் செய்தபிறகு உடலின் மேற்பகுதியில் எந்த மாதிரி புடவையை செட் செய்யவேண்டுமோ அப்படி அயர்ன் செய்துகொள்ளலாம். ப்ளீட்ஸை அடுக்கடுக்காக விரித்து வைத்து ப்ளவுஸின் நீளம் எவ்வளவோ அந்த அளவிற்கு புடவையிலும் அளவெடுத்து அங்கு தோள்பட்டையின் அகலம் எவ்வளவோ அந்த அளவைவிட பக்கவாட்டில் மறைப்பதற்கு ஏற்ப ஒரு இன்ச் சேர்த்து விட்டு, புடவையின் ப்ளீட்ஸை அயர்ன் செய்யவும்.

உதாரணத்திற்கு தோள்பட்டையின் அகலம் 14 இன்ச், ப்ளவுஸின் நீளம் 13 இன்ச் என்றால், முந்தி பகுதிக்கு அடுத்து 13 இன்ச் நீளத்திற்கு புடவையின் ப்ளீட்ஸை, 15 இன்ச் அளவிற்கு அடுக்கடுக்காக விரித்து வைத்து அதனை அயர்ன் செய்யவும். வேண்டுமானால் இடுப்புவரைகூட ப்ளீட்ஸை கொஞ்சம் கொஞ்சமாக விரித்தே அயர்ன் செய்யலாம். இதனால் பின்புறமும் புடவையின் மடிப்பு கலையாமல் நீட்டாக இருக்கும். மீண்டும் ஒருமுறை கீழ்ப்புற ப்ளீட்ஸை அயர்ன் செய்துகொள்ளலாம்.

அயர்னிங் முடித்தபிறகு மடிப்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும். எப்போதும் மடிக்கும்போது புடவையை உள்புறம் வெளியே இருக்குமாறு திருப்பிக்கொள்ள வேண்டும்.


அயர்ன் செய்த புடவையை பாக்ஸ் ஃபோல்டிங் செய்தல்

முந்தியின் உள்புறம் வெளியே இருக்குமாறு தோளில் போட்டுக்கொண்டு, புடவையின் அடிப்பகுதியை அயர்ன் செய்து வைத்திருக்கும் இடுப்பு ப்ளீட்ஸின் மீது வைக்கவேண்டும். அப்படி வைக்கும்போது 4 இன்ச் முன்பாக வைத்தால்தான் மடிக்கும்போது சரியாக இருக்கும்.

சாதாரணமாக புடவை மடிப்பதைப்போன்றே மீதமுள்ள புடவையை இடுப்பு ப்ளீட்ஸ்வரை மடித்து, மேல்பகுதி எந்த அளவிற்கு இருக்கவேண்டுமோ அந்த அளவை விட்டுவிட்டு மீதமுள்ள பகுதியை மடிப்பு கலையாமல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து மடிக்கவும்.

முந்தி பகுதியை வலதுபக்கத்தில் வெளியே விட்டு மீதமுள்ள பகுதியை பாக்ஸில் வைப்பதற்கு ஏற்ப மடிக்கவும். இதனை அப்படியே திருப்பி மேல்பகுகுதியை செட் செய்து, ப்ளீட்ஸை மடிப்பின் ஓரத்திற்கு கொண்டு வந்து முந்தியை உள்ளாக சொருகி பின் செய்யவும்.

இதுபோன்று பாக்ஸ் ஃபோல்டிங் செய்து வைத்துக்கொண்டால் எளிதில், அதேசமயம் நேர்த்தியாக தயாராகிவிடலாம்.

Updated On 18 March 2024 6:22 PM GMT
ராணி

ராணி

Next Story