இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நாம் எங்கு சென்றாலும் முதலில் கவனிக்கப்படுபவைகளில் பாதங்களும் ஒன்று. கால்கள் மற்றும் நாம் அணியும் செருப்பு போன்றவை சுத்தமாக இருப்பது அவசியம். குறிப்பாக, வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களும், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களும் கட்டாயம் பாதங்களை ரிலாக்ஸ் செய்யவேண்டும். கால்கள் மற்றும் பாதங்களுக்கு அடிக்கடி மசாஜ் கொடுப்பது காலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு சிறந்த வழி பெடிக்கியூர். பலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பெடிக்கியூர் செய்துகொள்வார்கள். நமக்கு நாமே செய்துகொள்வதைவிட வேறு ஒருவர் செய்யும்போது பாதங்கள் ரிலாக்ஸ் ஆவதுடன் நன்கு சுத்தமாகும் என்கிறார் பியூட்டீஷியன் சித்ரா. பார்லர்களில் பெடிக்கியூர் செய்யும்போது பாதங்கள் அழகுபெறுவதுடன் வலி, கருமை போன்றவையும் நீங்கும். பெடிக்கியூர் வகைகளில் ஒன்றான ஸ்பா பெடிக்கியூர் செய்வதால் பாதங்களிலிருக்கும் இறந்த செல்கள் நீங்கி மிருதுவாகும் என்கிறார் அவர்.


கிறிஸ்டல் சால்ட் கலந்த தண்ணீரில் பாதங்களை ஊறவைத்தல்

முதலில் தண்ணீரில் கிறிஸ்டல் சால்ட்டை போட்டு அதில் காலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். அதன்பிறகு ப்ரஷ்ஷால் காலை நன்றாக தேய்க்கவும். அதன்பிறகு பியூமிக் ஸ்டோனால் நன்கு தேய்த்தால் காலிலிருக்கும் வறட்சி நீங்கும்.

அடுத்து ஸ்டீல் ஸ்க்ரப்பரில் லிக்விடை சில துளிகள் விட்டு பாதத்தின் அடிப்பகுதியை நன்கு தேய்க்கவேண்டும். இதனால் வெடிப்புகள் நீங்கும். அடுத்து காலின் மேற்பகுதிவரை ஸ்க்ரப் கொண்டு நன்கு தேய்த்து மசாஜ் கொடுக்கவேண்டும். இப்படி இரண்டு கால்களுக்கும் செய்யவேண்டும்.


பாதங்களிலிருக்கும் கருமையை நீக்க பேக் போடுதல்

அதற்கடுத்து ட்ரை ஸ்கரப் கொண்டு தேய்த்துவிட்டு நகங்களை வெட்டி ஷேப் செய்யவேண்டும்.

அடுத்து விரல்களில் கியூட்டிக்கல் க்ரீமை தடவி, சிறிதுநேரம் வைத்து அதிலிருக்கும் அழுக்குகளை நீக்கவேண்டும். இதனால் நகங்களின் இடுக்குகளில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் உள்நோக்கி வளர்ந்த நகம் போன்றவை முற்றிலும் நீங்கிவிடும்.


ரிலாக்ஸிற்காக க்ரீம் தடவி மசாஜ் கொடுத்தல்

கியூட்டிக்கல் க்ரீமை துடைத்து எடுத்தபிறகு பாதம் முழுவதும் பேக் போடவேண்டும். இதனை 15 நிமிடங்கள் வைத்து, சுத்தமாக கழுவி துடைத்தபிறகு, க்ரீம் தடவி மசாஜ் கொடுக்கவேண்டும். கடைசியாக விரல்களுக்கு நெயில் பாலிஷ் போட்டால் ஸ்பா பெடிக்கியூர் முடிந்துவிடும்.

இதனை மாதத்திற்கு ஒருமுறை செய்தால் கால் தசைகள் நன்கு ரிலாக்ஸாகி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பார்லருக்கு செல்லமுடியாத சமயங்களில் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பும் எலுமிச்சையும் சேர்த்து பாதங்களை வைத்து எடுக்கலாம்.


நகங்களை ஷேப் செய்து நெயில் பாலிஷ் போடுதல்

நார்மல், டீலக்ஸ், ஸ்பா மற்றும் பாரஃபின் என பலவகை பெடிக்கியூர்கள் பார்லர்களில் செய்யப்படுகின்றன. முதலில் ப்ளீச் செய்துவிட்டு அதன்பிறகு பெடிக்கியூர் செய்வது டீலக்ஸ் பெடிக்கியூர். பாதங்கள் மட்டும் கருப்பாக இருந்தால் அதனை நீக்க ஸ்பா பெடிக்கியூர் செய்யலாம். இதனால் கருமை நீங்கி பாதங்கள் அழகாக இருக்கும். பாத வலி இருப்பவர்களுக்கு வேக்ஸ் பயன்படுத்தும்போது வலி நீங்கி ரிலாக்ஸாக இருக்கும்.

Updated On 24 Jun 2024 6:07 PM GMT
ராணி

ராணி

Next Story