திருமணத்தின்போது அணியும் ஸ்பெஷலான உடைக்கு ஏற்ப அழகாக தெரியவேண்டும் என்பது அனைத்து பெண்களின் கனவு. அதேபோல் முக அமைப்பிற்கும், மேக்கப்பிற்கும், உடைக்கும் ஏற்ப ஹேர்ஸ்டைல் செய்வதும் மிகவும் அவசியம். அப்போதுதான் ப்ரைடல் லுக் முழுமை பெறும். ஆனால் இப்போதுள்ள பெரும்பாலான பெண்களுக்கு முடி நீளம் மற்றும் அடர்த்தி குறைந்ததாகவே காணப்படுகிறது. இதனால் விசேஷ நாட்களில்கூட அவர்களால் விரும்பிய ஹேர்ஸ்டைல்களை செய்துகொள்ள முடியாமல் போகிறது. இதுபோன்ற அடர்த்தி குறைவான முடி கொண்ட பெண்களுக்கு எப்படி ப்ரைடல் ஹேர்ஸ்டைல் செய்வது என்று விளக்குகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் லலிதா.
மென்மையான, நீளம் மற்றும் அடர்த்தி குறைவான முடியில் ஹேர்ஸ்டைல் செய்வதற்கு முதலில் முன்புறம், பின்புறம் என முடியை பிரித்துக்கொள்ள வேண்டும். மேல்பகுதி முடியை காதுவரை பிரித்து க்ரம்ப்ளிங் செய்து பிறகு வேவி (Wavy) செய்தால் ஹேர்ஸ்டைல் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
தலைமுடியை பகுதிகளாக பிரித்தல் - பேக் கோம்ப் செய்து ஸ்ப்ரே அடித்தல் - எக்ஸ்டன்ஷன் பொருத்துதல்
பின்பகுதிக்கு எக்ஸ்டன்ஷன் வைக்கவேண்டும். அதற்கு அடுக்கடுக்காக முடியை பிரிக்கவேண்டும். அடர்த்தி குறைவான முடியில் எக்ஸ்டன்ஷன் வைக்கும்போது அது விழாமல் இருக்க பேக் கோம்ப் (back comb) செய்துகொள்ள வேண்டும். கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பேக் கோம்ப் செய்துவிட்டு அதன்மீது ஃபிக்ஸிங் ஸ்ப்ரே அடித்து ரப்பர் பேண்ட் போடவேண்டும்.
அந்த பகுதிக்கு எக்ஸ்டன்ஷன் வைத்து ஹேர்பின்னால் விழாமல் செட் செய்யவேண்டும். அதேபோல் மீதமுள்ள முடிக்கும் பேக் கோம்ப் செய்து, ஸ்ப்ரே அடித்து தலையின் நடுப்பகுதியிலிருக்கும் முடியை சற்று வெளியே இழுத்து பஃப் போல கொண்டுவர வேண்டும். பிறகு எக்ஸ்டன்ஷனை மீதமுள்ள முடி முழுவதும் மறையுமாறு ஃபிக்ஸ் செய்யவேண்டும்.
எக்ஸ்டன்ஷன் பொருத்தி, ஃபிக்ஸ் செய்தல் - முன்பகுதி செட் செய்தல் - பூ அலங்காரம்
இப்போது முன்பகுதி முடியை செட் செய்யலாம். நடுவில் வகிடு எடுத்து அதில் நெத்திச்சுட்டியை வைத்து, வேவி செய்த முடியை கீழே ட்விஸ்ட் செய்து ஹேர்பின்னால் செட் செய்யவேண்டும். பிறகு லேசாக முன்பக்கமாக முடியை கையால் இழுத்துவிட்டு செட்டிங் ஸ்ப்ரே அடிக்கவேண்டும்.
முன்பக்க முடியின் நுனிப்பகுதியை ட்விஸ்ட் செய்து நடுவில் ஹேர்பின்னால் குத்திவிட்டு, அதன்மீது உடையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் செயற்கை பூக்களை வைக்கவேண்டும்.
அடர்த்தி குறைந்த முடிக்கு அலங்காரம் செய்ய சிலர் மெஷின்களை பயன்படுத்துவார்கள். இதனால் முடி சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே எக்ஸ்டன்ஷன் மட்டும் பயன்படுத்தி விருப்பமான ஹேர்ஸ்டைல்களை செய்துகொள்ளலாம்.