இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நாம் சருமத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில் தலைமுடிக்கு கொடுக்கும் அக்கறை குறைவு என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். குறிப்பாக வெளியில் செல்லும்போது முகத்திற்கு கிரீம் போடுவதுடன் பலரும் துணியால் மூடிக்கொள்கின்றனர் ஆனால் தலைமுடிக்கு அதுபோல் எந்தவித பராமரிப்பும் கொடுப்பதில்லை. இப்படி பராமரிப்பின்றி இருப்பதால்தான் முடி கொட்டுதல், முடி வளராமல் இருத்தல், அடர்த்தி குறைதல், முடியில் வெடிப்பு ஏற்படுதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பாக முடி வளராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் முடி வெடிப்புதான். முடி வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? முடி வெடிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? முடி வெடிப்பு ஏற்பட்டால் அதை எப்படி அகற்ற வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.

முடி வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

  • முதலில் முடியின் வேர்க்கால்கள் பலவீனமடைவதாலும், அதனால் முடியின் நுனி இரண்டு மூன்றாக பிரிவதாலும் முடி வெடிப்பு ஏற்படுகிறது.
  • தலைக்கு குளிக்கும்போது வீரியமிக்க, அதிகமான ஷாம்பு பயன்படுத்தி அழுத்தி தேய்த்து தலைக்கு குளிப்பதாலும், தலைக்கு குளித்துவிட்டு டவலால் உலர்த்துவலாலும் முடியில் வெடிப்பு ஏற்படும்.

முடி வெடிப்புக்கான காரணங்கள்

  • அதேபோல் முடியில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டாலும், ஊட்டச்சத்து குறைப்பாட்டாலும்கூட வெடிப்பு ஏற்படும்.
  • சிலருக்கு முடி வெடிப்பானது பரம்பரை பரம்பரையாக வருவதும் உண்டு.
  • தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கும் முடி வெடிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
  • ஹேர் டிரையர், ஸ்ட்ரெய்ட்னெர் போன்ற முடி சம்பந்தப்பட்ட வெப்பம் தரக்கூடிய சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதாலும், ரசாயனங்களால் தயாரிக்கப்படும் ஹேர் டையை உபயோகிப்பதாலும் முடி வெடிப்பு ஏற்படுகின்றது.
  • தொடர்ந்து முடிக்கு எண்ணெய் தடவாமல் இருப்பதாலும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

வெடித்த நுனி முடியை அகற்றுதல்

முடி வெடிப்பை தவிர்ப்பது எப்படி?

  • தலைமுடியில் முடி வெடிப்பு ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக வெட்டி நீக்குவது மீதமுள்ள முடியை பாதுகாக்கும். எனவே நமது முடியை அடிக்கடி கவனித்து பார்ப்பது நல்லது.
  • அதேபோல் தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேங்காய் எண்ணெயோ அல்லது காய்ச்சிய நல்லெண்ணையோ தேய்த்து குளிப்பது சிறந்தது. இப்படி செய்வதன் மூலம் முடி வெடிப்பையும் தவிர்க்கலாம். முடியின் வளர்ச்சியும் சீராக இருக்கும். உடம்பு சூடும் தணியும். அடிக்கடி தலைக்கு குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • தலைக்கு குளித்தவுடன் ஏதேனும் ஒரு துண்டை எடுத்து துவட்டாமல் காட்டன் துணியை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதுவும் வேகமாக முடியை துவட்டாமல் மென்மையாக கையாள வேண்டும். குறைந்தபட்சம் 5 - 10 நிமிடங்களுக்கு துவட்ட வேண்டும். இதனால் முடி பாதிப்படைவதை தடுக்கலாம்.
  • அதீத வெயில், குளிர் அல்லது காற்று இருக்கும் பகுதிகளுக்கு செல்லும்போது முடியை ஸ்கார்ஃப் அல்லது தொப்பி கொண்டு மூடிக்கொள்ளலாம். அதிக வெயில் அதிக வெடிப்பை ஏற்படுத்தும்.

தயிர் - முட்டை வெள்ளைக்கரு பேக்

முடி வெடிப்புகளை நீக்கும் இயற்கை வழிகள்?

  • புரதச்சத்து நிறைந்த முட்டையின் வெள்ளைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பீட் செய்து முடியிலும், நுனிகளிலும் தடவலாம். இதை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலக்கி தடவிவர வெடிப்பு நீங்கும்.
  • வெறும் தயிர் அல்லது அதனுடன் முட்டையின் வெள்ளைப்பகுதியை மட்டும் சேர்த்தும் தடவிக் குளிக்கலாம்.
  • பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்துடன் தேன், எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தடவி குளிக்க வெடிப்பும் நீங்கும்; முடியும் நீளமாக வளரும்.
  • ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த தேனுடன் பால் அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது தேங்காய் எண்ணெய் என ஏதேனும் ஒன்றை கலந்து முடிவுக்கு தடவ வறட்சி நீங்கி வெடிப்பு மாறும்.

முடி வெடிப்பை நீக்கும் கேட்ஜெட்

வெடிப்புகளை நீக்க கேட்ஜெட் உண்டா?

முன்பெல்லாம் முடியில் வெடிப்பு இருந்தால் அதை மட்டும் உற்று நோக்கி அந்த முடியை மட்டும் வெட்டுவதுண்டு. ஆனால் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் முடிகென்று மட்டுமே பல உபகரணங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் வெடிப்பு முடிகளை நீக்குவதற்கான உபகரணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கியுள்ளார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

முதலில் தலைக்கு குளித்துவிட்டு தலையை உலரவைத்து பின்னர் முடி வெடிப்பு நீக்கும் கேட்ஜெட்டை பயன்படுத்தி ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதுபோல முடியின் மேலிருந்து கீழ்நோக்கியவாறு இழுக்க வேண்டும். முடியை பகுதி பகுதிகளாக பிரித்து இப்படி 2 முதல் 3 முறை செய்தால் வெடிப்பு முடிகள் நீங்கும். முடியில் வெடிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் அழகாகவும் வளரும். பொதுவாக தலைமுடியை பொறுத்தவரை வெடிப்பு என்பது முடியின் நுனியில் மட்டுமே ஏற்படாது, எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

Updated On 6 Nov 2023 6:56 PM GMT
ராணி

ராணி

Next Story