இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திருமணத்தில் முக்கியப்பங்கு மேக்கப்பிற்கு இருக்கிறது. ரிசப்ஷன், முகூர்த்தம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மேக்கப் போடுவது தற்போது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் பெரும்பாலான திருமணங்களில் இரண்டிற்குமான இடைவெளி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டிருக்கும் மேக்கப் முழுவதையும் அழித்துவிட்டு மீண்டும் ஒரு புதிய மேக்கப் போடவேண்டும். ஆனால் திருமணங்களில் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் பெரும்பாலானவை சிலிக்கான் பேஸ்டு மற்றும் வாட்டர் ப்ரூஃப் ப்ராடக்ட்ஸ்தான். இரவு ரிசப்ஷன் முடித்துவிட்டு, அடுத்த நாள் காலை 4 மணிக்கு முகூர்த்தம் நேரத்திற்குள் மேக்கப் போடவேண்டிய சூழல்தான் பெரும்பாலான திருமணங்களில் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே எளிமையாக மேக்கப்பை நீக்குவது எப்படி என்று விளக்குகிறார் பியூட்டீஷியன் சத்யா.

பொதுவாகவே பெண்களுக்கு மாய்ச்சுரைசர், கன்சீலர், ப்ரைமர், ஃபவுண்டேஷன், காம்பேக்ட், ஹைலைட்டர், காண்டோர், ப்ளஷ் என பல கோட்டிங் முகத்தில் பூசப்படும். அதன்பிறகு கண்களுக்கு ஐஷேடோ, ஐலைனர், காஜல் மற்றும் மஸ்காரா என்றும், உதட்டிற்கு லிப் லைனர், லிப்ஸ்டிக் என மேக்கப் கோட்டிங்குகள் ஏறிக்கொண்டே போகும். இப்படி மேக்கப் போடும்போதுதான் முகம் பளிச்சென தெரிவதுடன், 5 முதல் 6 மணிநேரத்திற்கு கலையாமலும் இருக்கும்.


ஆபரணங்களை கழற்றுதல் - தேங்காய் எண்ணெயை காட்டன் துணியால் தொட்டு முகத்தில் தேய்த்தல்

அதேசமயம் தினசரி மேக்கப் என்றாலும், விசேஷங்களுக்கு போடும் மேக்கப் என்றாலும் அதனை முழுமையாக நீக்கிவிட்டுத்தான் தூங்க செல்லவேண்டும். இல்லாவிட்டால் சரும துளைகள் மூடி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக, திருமணத்திற்கு போடப்படும் மேக்கப்பை நிகழ்ச்சி முடிந்ததும் கட்டாயம் நீக்கிவிட வேண்டும்.

மேக்கப்பை நீக்குவதற்கென்றே மைசெல்லர் வாட்டர் மற்றும் க்ளென்சிங் மில்க்குகள் விற்கப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பொருட்களை ஒருநாள் தேவைக்காக அதிக விலைகொடுத்து வாங்குவதை பலரும் விரும்பமாட்டார்கள். அவர்கள் வீட்டிலிருக்கும் தேங்காய் எண்ணெயைக்கொண்டே எளிதில் மேக்கப்பை அகற்றிவிடலாம்.

மேக்கப்பை நீக்குவதற்கு முன்பு, முதலில் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றவேண்டும்.

தேங்காய் எண்ணெயை ஒரு பவுலில் ஊற்றி, பஞ்சால் தொட்டு முகத்தை துடைக்கவேண்டும்.

பிறகு கண்களுக்கு மேலும், உதட்டையும் மெதுவாக துடைத்து எடுக்கவேண்டும்.


கண்களை சுற்றி மேக்கப்பை நீக்குதல் - தேங்காய் எண்ணெயை கைகளால் தொட்டு முகத்தில் தேய்த்தல்

முகம் முழுவதும் எண்ணெய் பரவியபிறகு, கைகளால் நன்றாக தேய்க்கவேண்டும். குறிப்பாக, கண்களை சுற்றியுள்ள மேக்கப்பை நீக்கும்போது மேல்நோக்கி பார்த்து கீழ்ப்பகுதியிலிருக்கும் காஜலை நீக்க வேண்டும். கண்களுக்கு மேலிருக்கும் மேக்கப்பை கண்களை மூடியவாறு மென்மையாக தேய்க்கவேண்டும்.

மேக்கப் அனைத்தும் கலைந்தபின்பு, மீண்டும் காட்டனால் துடைக்க முழுமையாக நீங்கிவிடும். இதற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆகும்.

மேக்கப்பை துடைத்துவிட்டு மீண்டும் சிறிது தேங்காய் எண்ணெயை கையால் தொட்டு முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு, டிஷ்யூ பேப்பரால் துடைத்து எடுத்தால் முழுமையாக நீங்கிவிடும்.

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயைக்கூட பயன்படுத்தலாம்.

எண்ணெயை பயன்படுத்த விரும்பாதவர்கள் மாய்ச்சுரைசர் பயன்படுத்தினாலும் மேக்கப் நீங்கிவிடும்.

Updated On 4 March 2024 6:21 PM GMT
ராணி

ராணி

Next Story