இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தலை முடியை பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல. வெயில், வியர்வை, வாகனப் புகை, தூசி என பல விதங்களில் நம் தலைமுடி பாதிக்கப்படுகிறது. தலையை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பொடுகு எளிதில் தலையில் வந்துவிடும். எனவே தலையை முறையாக பராமரிப்பது அவசியமான ஒன்று. பொடுகை சரியாக கையாளவில்லை என்றால், அது பேன், ஈறு போன்ற ஒட்டுண்ணிகள் வர காரணமாகிவிடும். மேலும், முடி உதிர்வு, புழுவெட்டு, பொடுகு, இளநரை, நுனி முடி வெடித்தல் போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க, முடி பராமரிப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது. தூக்கமின்மையாலும், தண்ணீர் சரியாக குடிக்காமல் இருப்பதாலும் முடி வலிமை இழந்து அதிக அளவில் உதிர ஆரம்பிக்கும். எண்ணெய் அதிக அளவில் தலையில் சுரந்தால், அது நாளடைவில் பொடுகாக மாறிவிடும். இந்நிலையில், முடியை ஹெல்தியாக மற்றும் மிருதுவாக பராமரிப்பது எப்படி என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் ஈவ்லின்.

செயல்முறை :

* முதலில் டான்ட்ரஃப் சீரம் பயன்படுத்தி தலையை வாஷ் செய்ய வேண்டும். இப்படி டான்ட்ரஃப் சீரம் பயன்படுத்துவதன் மூலம் டான்ட்ரஃப் குறையும். இதை கவனிக்காமல் விட்டால் முகப்பரு மற்றும் பிற சருமம் தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும்.


ஹேர் ஸ்பா கிரீம் அப்ளை செய்து மசாஜ் செய்யும் முறை

* அடுத்ததாக ஈரமான முடியில் ஸ்பா கிரீம் அப்ளை செய்ய வேண்டும். இதை அப்ளை செய்வதன் மூலம் வறண்டு இருக்கும் முடிகள் புத்துயிர் பெறும். மேலும் முடி உடைதல், வறண்டு போகும் பிரச்சினை உள்ளிட்டவை சரியாகும்.

* தலை முடியில் ஸ்பா கிரீம் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும்போது மன அழுத்தம், ஒர்க் பிரஷர், ஸ்ட்ரெஸ் போன்றவை குறைந்து, மன அமைதி கிடைக்கும்.

* ஸ்பா கிரீம் தலையில் நன்கு ஊற வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலை முடியை சாதாரண நீர் கொண்டு வாஷ் செய்ய வேண்டும்.


ஹேர் வாஷ் செய்து ப்ளோ ட்ரை செய்யும் காட்சி

* வாஷ் செய்த பிறகு முடிந்த அளவிற்கு தலையில் இருக்கும் நீரை துணியால் துவட்ட வேண்டும். 70% நீரை துடைத்த பிறகு, ப்ளோ ட்ரையர் பயன்படுத்தி முடியை உலர்த்தி செட் செய்தால் அழகான, மிருதுவான, ஆரோக்கியமான தலைமுடியை காணலாம்.


ஹேர் ஸ்பா செய்துமுடித்த பின்பு

கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்டியவை:

* ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மிகவும் அவசியமான ஒன்று. உதாரணத்திற்கு நிலக்கடலை, முருங்கை கீரை, நெல்லிக்காய், பாசிப்பயறு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் கூந்தலுக்கும் நல்ல ஊட்டமாக இருக்கும். புரதம், இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

* தலையில் அதிகமான அளவில் எண்ணெய் வைத்தால் நாளடைவில் பொடுகு வர வழிவகுக்கும். எனவே வாரத்திற்கு 3 முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் முடி வளர்ச்சியை தூண்டும்.

* முடியின் நுனியை அடிக்கடி வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வது முடியின் வளர்ச்சியை தூண்டும்.

* தலை முடி மற்றும் முகம் எப்போதும் பளிச் என இருக்க, தலையணையை அடிக்கடி துவைத்து பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது பெட்ஷீட் மற்றும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.

Updated On 22 July 2024 10:51 PM IST
ராணி

ராணி

Next Story