இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெண்கள் ஷாப்பிங்கை அடுத்து அதிக நேரம் செலவிடுவது ஒப்பனையில்தான். அதுவும் திருமண நாளில் உறவினர்கள் ஒருபக்கம் பரபரப்பாக இருக்க, ஐயர் ஒருபுறம் மணப்பெண் ரெடியா என்று கத்த, மணப்பெண்ணோ அவசர அவசரமாக, போட்ட மேக்கப் சரியாக பொருத்தமாக இருக்கிறதா என்பதை கூட கவனிக்க நேரமில்லாமல் அரக்க பறக்க மணமேடைக்கு ஓடுவாள். அப்படி அரக்க பறக்க மேக்கப் போடும் மணப்பெண்ணுக்கு வெறும் அரை மணி நேரத்தில் முழு பிரைடல் மேக்கப் போடுவதெப்படி என்பதை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணரும், ஒப்பனை கலைஞருமான சத்யா.

மேக்கப் செய்ய தொடங்குவதற்கு முன் முதலில் ஈர துணி அல்லது ஈர டிஷ்யூ பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்து பகுதியை முழுவதுமாக துடைக்க வேண்டும்.

ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்யாதவர்களுக்கு ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்ததை போல் காண்பிக்க முதலில் ஐ-ப்ரோ பகுதியின் மேல் மற்றும் கீழ் பகுதியை ஃபவுண்டேஷன் கொண்டு டிஃபைன் செய்ய வேண்டும். பின்னர் மணப்பெண்ணின் புருவ வடிவத்திற்கேற்ப ஸ்பான்ஜ் கொண்டு ஃபவுண்டேஷனை தடவ வேண்டும். குறிப்பாக புருவத்தின் கீழ் ஃபவுண்டேஷன் தடவும்போது புருவத்தை தூக்கியவாறு தடவினால் கண்களில் சுருக்கம் இல்லாமல் ஃபவுண்டேஷனானது கண் பகுதியில் நன்றாக செட் ஆகும். அடுத்ததாக ஃபவுண்டேஷன் அப்ளை செய்த கண்களில் ஒரு பிரஷ் கொண்டு லூஸ் பவுடர் அல்லது காம்பெக்ட் பவுடரை தடவ வேண்டும்.

அடுத்து மணப்பெண்ணின் புடவை நிறத்திற்கேற்ப சரியான ஐ-ஷேடோவை தேர்ந்தெடுத்து தடவிக் கொள்ளலாம். ஐ-ஷேடோ தேர்ந்தெடுக்கும் போது எப்போதும் புடவையின் நிறத்தை உள்ஷேடாகவும் புடவையின் பார்டரை வெளிஷேடாகவும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஐ-ஷேடோ தடவும் போதும் புருவத்தை தூக்கியபடியே தடவ வேண்டும்.


மேக்கப் மூலம் புருவங்களை சரிசெய்தல்

ஐ-ஷேட் கோட்டிங் முடிந்த பின்னர் கண்களில் ஐ-லைனர் மற்றும் மஸ்காரா தடவ வேண்டும். இவற்றில் மஸ்காரா எப்போது பயன்படுத்தினாலும் முதலில் இமைகளின் மேல்புறத்திலும் பின்னர் இமைகளின் கீழ்ப்புறத்திலும் தடவ வேண்டும். கண் இமைகள் அழகாக விரிந்து தெரிய மஸ்காரா தடவிய 2 நிமிடத்தில் மீண்டும் அதன் மேல் இன்னொரு கோட்டிங் தடவ வேண்டும். ஐ-லாஷஸ் பயன்படுத்த விரும்புபவர்கள் ஐ-லாஷஸை பொருத்தி கொள்ளலாம்.

ஐ-மேக்கப் அனைத்தும் முடிந்தவுடன் இறுதியாக ஐ-ப்ரோ பென்சில் பயன்படுத்தி ஐ-ப்ரோவின் முன் பகுதியை விட்டுவிட்டு ஐ-ப்ரோவின் நடுப்பகுதியிலிருந்து வரைய தொடங்கி ஐ-ப்ரோவின் இறுதிவரை வரைந்து பின்னர் கோம்ப் செய்ய வேண்டும்.

ஐ-மேக்கப் முடிந்த நிலையில் ஒரு ஈர துணி அல்லது ஈர டிஷ்யூ பயன்படுத்தி கண்களின் கீழ் மற்றும் மேல் பகுதியில் எக்ஸ்ட்ரா கிரீம் அல்லது மஸ்காரா ஏதேனும் படிந்திருந்தால் அதை அழுத்தி துடைத்து கொள்ளலாம்.

ஐ-மேக்கப்பை முடித்துவிட்டு முக மேக்கப்பை தொடங்கலாம். ஃபேஸ் மேக்கப் தொடங்குவதற்கு முன்னர் முதலில் காட்டன் பயன்படுத்தி டோனர் அப்ளை செய்ய வேண்டும். இந்த டோனர் சருமத்திற்கு ஈர தன்மையை தருவதோடு மேக்கப் அழியாமல் இருக்க பெரிதும் உதவும். டோனர் அப்ளை செய்த ஒரு நிமிடம் கழித்து கரெக்டர் பயன்படுத்தி கருவளையம், கரும்புள்ளிகள் மற்றும் உதட்டின் மேல் கீழ் பகுதிகளில் சருமத்திற்கு ஏற்ற கரெக்டரை தேர்ந்தெடுத்து கரெக்ட் செய்ய வேண்டும்.

அடுத்து கரெக்டர் மேல் ஃபவுண்டேஷன் போட வேண்டும். ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் போது அதை டேப் செய்தவாறு மட்டுமே பயன்படுத்த வேண்டும். டேப் செய்து பயன்படுத்தினால்தான் அது கரெக்டரோடு சரியாக பொருந்தும். தடவியபடி செய்தால் கரெக்டர் அழிந்து மீண்டும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் எல்லாம் அப்பட்டமாக தெரியும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் அப்ளை செய்துவிட்டு அடுத்து வெட் ப்ளெண்டர் பயன்படுத்தி மீண்டும் நன்றாக டேப் செய்ய வேண்டும்.


கண்களை சுற்றிய கருவளையத்தை மேக்கப் மூலம் மறைத்தல் - உதடு வடித்தல்

நாம் எந்த அளவிற்கு ப்ளெண்ட் செய்கிறோமோ அந்த அளவிற்கு ஃபவுண்டேஷன் சருமத்தில் பொருந்தி முகத்திற்கு க்ளோ கொடுக்கும். குறிப்பாக உதடு, கண், மூக்கின் கார்னர் பகுதியில் நன்றாக டேப் செய்ய வேண்டும். அதேபோல கண் பகுதியில் டேப் செய்யும்போது எப்போதும் எதிர் திசையில் டேப் செய்ய வேண்டும்.

இது முடிந்த பின்னர் சருமத்திற்கேற்ற காம்பெக்ட் தடவி பேக் செய்ய வேண்டும். காம்பெக்ட் பயன்படுத்தும் போது முகத்தின் எல்லா பகுதியிலும் குறிப்பாக உதட்டிலும் தடவலாம். ஃபவுண்டேஷன் மற்றும் காம்பெக்ட் உதட்டில் தடுவுவதன் மூலம் நாம் நம் உதட்டின் வடிவத்தை ஏற்ற வடிவில் சுலபமாக வரைந்து கொள்ள முடியும்.

இது அரை மணி நேர பிரைடல் மேக்கப் என்பதால் நேரடியாகவே காண்டோர் பவுடரை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த காண்டோரானது முகத்திற்கு வடிவத்தை கொடுக்க பயன்படுகிறது. முகத்தை அடுத்து மூக்கு பகுதியிலும் காண்டோர் தடவி ஏற்ற வடிவம் பெறலாம்.

காண்டோருக்கு பிறகு மீண்டும் லூஸ் பவுடர் பயன்படுத்தி மேக்கப்பை பேக் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக உடையின் நிறத்திற்கேற்ற ப்ளஷ் தேர்ந்தெடுத்து லைட்டாக தடவ வேண்டும். அடுத்து கன்னம், மூக்கு, தாடை மற்றும் நெற்றியில் ஹைலைட்டர் பயன்படுத்தி ஹைலைட் செய்ய வேண்டும். ஹைலைட் செய்ததை தொடர்ந்து கண்களில் காஜல் தடவி இறுதியாக ஒரு பிரஷ் பயன்படுத்தி முகம் முழுவதும் தட்டி கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் அதிக பவுடர் எல்லாம் நீங்கி மேக்கப்பானது சரியாக செட் ஆகும்.

கடைசியாக உதட்டில் அவுட்லைன் வரைந்து பின்னர் உடைக்கேற்ற லிப்ஸ்டிக் தடவி பொட்டு வைத்தால் வெறும் அரை மணி நேரத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் ரெடி!

Updated On 8 Jan 2024 10:58 AM IST
ராணி

ராணி

Next Story