கல்யாணம், வளைகாப்பு, ஊர் திருவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என எல்லா சந்தோஷமான தருணத்திற்கும் தயாராவது சாதாரண விஷயமே அல்ல. புதுசு புதுசா ஆடையும், அலங்கார பொருளும் பெண்கள் பார்த்து பார்த்து, 10 கடை ஏறி, இறங்கி வாங்கி வருவதில் இருக்கும் ஆனந்தம் அளப்பரியது. அந்த வகையில் பாரம்பரிய பண்டிகை நாட்களில் கை நிறைய மருதாணி வைப்பது வழக்கம். அந்த மருதாணியும் காலத்திற்கேற்ப வடிவங்களில் மாற்றம் பெற்றுள்ள நிலையில், உடலுக்கு குளிர்ச்சி தரும் மருதாணியின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகளை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் மெஹந்தி கலைஞர் பாத்திமா சப்ரின்
இந்திய பாரம்பரிய மெஹந்தி டிசைன்
மெஹந்தியின் வரலாறு மற்றும் பயன்பாடு என்ன?
பண்டைய எகிப்து பாரம்பரியம் என அழைக்கப்படும் மெஹந்தி, நான்காம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது. இதை முதலில் உடல்களில் வரையவும், தலைக்கு டை ஆகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். இதன் பூக்களை உலர்த்தி தலையணையின் கீழ் வைத்து படுத்தால் தூக்கம் நன்றாக வரும். தூக்கமின்மையால் அவதிப்படும் எல்லோரும் இதை ஒரு முறை செய்து பார்க்கலாம். கருப்பான கூந்தலுக்கு இது பெரிதும் உதவுகிறது.
மெஹந்தியின் சிறப்பு
இந்தியாவில் ராஜஸ்தானி டிசைன் மிகவும் பாரம்பரியமானது என சொல்லப்படுகிறது. இதில் பல சிறப்புகள் உண்டு. திருமணத்திற்கு முதல் நாள் போடுவதைவிட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே மெஹந்தி வைப்பது நல்லது. மெஹந்தியின் நிறம் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் நன்றாக இருக்கும். பெண்கள் தங்களை அழகு படுத்த மெஹந்தியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
இந்திய டிசைனில் மயில் உள்ளிட்ட உருவங்கள் வரையப்படும்
மெஹந்தி போடுவதற்கு முன், பின் செய்ய வேண்டியவை?
மெஹந்தி போடுவதற்கு முன் கை, கால்களில் உள்ள முடிகளை நீக்கிவிட வேண்டும். கைகளை நன்கு கழுவிவிட வேண்டும், அதன் பிறகு மெஹந்தி வைக்க தொடங்க வேண்டும். இப்படி போடும்போது கைகளில் மெஹந்தி நன்கு ஒட்டிக்கொள்ளும். எதிர்பார்க்கும் நிறம் கிடைக்கும். கைகள் அழகாக இருக்க நிறைய பேருக்கு ஆசை இருக்கும். மெஹந்தி வைத்தால் ஆயுளும் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. மெஹந்தி போட்ட பிறகு குறைந்தது 4 முதல் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை கைகளில் வைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் நிறம் கிடைக்கும். மனநலத்தை சீராக்க மெஹந்தி உதவியாக இருக்கிறது. மெஹந்தியை தண்ணீர் வைத்து கழுவாமல், தேங்காய் எண்ணெய் வைத்து நீக்க வேண்டும். இதன் மூலம் மெஹந்தி நிறம் பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.
மெஹந்தி நன்கு சிவக்க என்ன செய்ய வேண்டும்?
மெஹந்தியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கொள்ளவும், அதனுடன் எசென்ஷியல் எண்ணெய்கள் சேர்த்து மெஹந்தி போட்டால் நன்றாக இருக்கும். மெஹந்தி போட்ட பிறகு அதன்மேல், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு தடவினால் நல்ல நிறம் கிடைக்கும். தண்ணீர் அதிகம் கைகளில் படாமல் பார்த்துக் கொள்வதால் நிறம் விரைவில் அழியாமல் இருக்கும்.
ஒரு கையில் இந்திய பாரம்பரிய டிசைன் - மற்றொரு கையில் அரபிக் டிசைன்
மெஹந்தி டிசைன்கள்
நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு போன்ற தருணங்களில் மெஹந்தி போடுவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அரபிக் டிசைன், இந்தியன் மெஹந்தி டிசைன், மினிமலிஸ்ட் மெஹந்தி டிசைன் என இதில் பல்வேறு டிசைன்கள் உள்ளன. எந்த தருணத்திற்கு எந்த டிசைன் என தேர்வு செய்து போட வேண்டும். இந்த மாதிரியான விழாக்காலங்களில் பல்வேறு டென்ஷன் இருக்கும். ஒருவகை பதட்டம் இருக்கும். அவற்றில் இருந்து விடுபட மெஹந்தி போட்டுக்கொள்வது நல்லது.
பிளாக் ஹென்னா என்றால் என்ன?
பிளாக் ஹென்னா இன்றளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. நகங்களிலும், ஹேர் டை போன்றவற்றிக்கும் பிளாக் ஹென்னா அதிகம் உதவி செய்கிறது. இது உடனடி பலன் இல்லை என்றாலும் 24 மணி நேரத்தில் இதன் நிறம் எதிர்பார்த்ததை விட அருமையாக இருக்கும். உடல்களில் டாட்டூ போட இவ்வகை ஹென்னா உதவுகிறது. இதன் ஆயுள் சிறிது நாட்களுக்கு மட்டுமே என்றாலும் இதனால் உடலுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.